வேலியும் போலியும்
Feb 2021
உலகில் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழும்படியாக மாத்திரமல்ல (ரோமர் 1:1), பரலோகத்திற்கும் அத்துடன் பிறருக்கும் பிரயோஜனமான வாழ்க்கை வாழும்படியாகவும் (1 கொரி. 10:24) நம்மை அழைத்து, முன்குறித்து, தெரிந்தெடுத்து, அவருடைய அடிச்சுவடுகளில் அனுதினமும் நம்மை வழிநடத்திவருகின்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். பிதாவிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும்? (மத். 19:27) என்றல்ல, நம்மிடத்திலிருந்து பிதாவுக்கு என்ன கிடைக்கும்? என்ற கேள்வி நம்மில் மிகுந்திருந்தால், ஒவ்வொரு நாளையும் அவருக்காகவே செலவிடவேண்டும் என்ற சிந்தை நம்மை நிறைத்துவிடும்.
வலிகள் நிறைந்த பாதைகளில் முழு உலகமும் தத்தளிக்கின்ற வேளையிலும், தம் ஜனத்தை வனாந்தரத்தில் போஷித்ததுபோலவும் (யாத். 16:15), செங்கடலையும் மற்றும் யோர்தானையும் பிளந்து வழிநடத்தியதுபோலவும் (யாத். 14:21; யோசுவா 3:17), வழிகளை உருவாக்கி நம்மை வழிநடத்துகின்ற அவருக்கே துதியும், கனமும், மகிமையும் உண்டாவதாக!
'முடிந்தது' (யோவான் 19:30) என்று சிலுவையில் இயேசு கிறிஸ்து மொழிந்த வார்த்தை, பிதா நியமித்தவைகளை அவர் நிறைவேற்றி முடித்ததை நினைவுபடுத்துவதோடு மாத்திரமல்லாமல் (யோவான் 17:4), சத்துரு இனி அவரைத் தொடர இயலாத ஓர் வலிமையான நிலைக்கு அவர் உயர்ந்துவிட்டதின் தொடக்கத்தையும் நமக்கு உணர்த்துகின்றது. இயேசு கிறிஸ்துவின் தலை சிலுவையில் உயர்த்தப்பட்டபோது (யோவான் 3:14,15), சத்துருவின் தலையோ கீழே, தரையிலே நசுக்கப்பட்ட வேளை அல்லவோ அது (ஆதி. 3:15). பாடுகளின் வழியாகப் பயணிக்கும் நமது வாழ்க்கையிலும், இத்தகைய வெற்றி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைக்குங்கால் ஆனந்தமே! எனினும், இக்கட்டுகளும், இன்னல்களும் நிறைந்திருக்கும் இத்தகைய இறுதிக் காலத்தில், சத்துருவின் ஆளுகையில் நாம் வீழ்ந்துவிடாமல், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் காத்துக்கொள்ளும்படியான சில ஆலோசனைகளை இந்த மடலில் எழுதி உணர்த்த விரும்புகிறேன்.
இது கடைசி காலம் என்பதை மாத்திரமே நாம் கவனத்தில் கொள்ளாமல், கடைசி காலத்தில் ஆண்டவர் செய்யவிருக்கும் அறுவடைக்கு நாம் ஆயத்தமா? என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம். 'அறுப்பு' என்றதும், 'அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்' (மத். 9:37,38) என்ற வசனமே நமது ஞாபகத்திற்கு வரலாம்; நம்முடைய கரங்களில் அரிவாளைக் கொடுத்து, ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொண்டு வா என்று அவர் சொல்லுவதையே நாம் நினைத்துக்கொண்டிருக்கலாம்; என்றாலும், 'வேலைக்காரர்களாகிய நம்முடைய வாழ்க்கை இன்று அறுக்கப்படுமென்றால், நாம் ஆயத்தமா?' நாம் சந்தோஷப்பட்டு களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் (வெளி. 19:7) என்று சொல்லுமளவிற்கு, எப்பொழுதும் நாம் ஆயத்தமா? மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நாம்தானே ஆகாதவர்களாகப் போய்விடக்கூடாதே. (1 கொரி. 9:27)
மணவாட்டிகளை அழைக்க தூதர்களை அனுப்பும்போது, அந்த அறுவடையிலே, அவரோடு நாம் அமர்ந்திருப்போமா? கர்த்தருடைய பிள்ளைகள் என்றும், கிறிஸ்தவர்கள் என்றும் இவ்வுலகத்தாரால் நாம் அழைக்கப்பட்டாலும், 'விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள் நாம்' என்று அழுத்தமாக வேதம் எடுத்துச் சொன்னாலும், கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மை களைகளாகவே வைத்துவிடவேண்டும் என்றும், மணவாளனது வருகையிலே நாம் மண்ணிலேயே இருந்துவிடவேண்டும் என்றும், பிள்ளைகளாக அல்ல பிழைகளாகவே நாம் வாழவேண்டும் என்றுமே பிசாசு விரும்புகின்றான். கலியாண வஸ்திரத்தைக்கூட ஜனங்களை அவன் தரிக்கவிடுகிறதில்லை; இரட்சிப்பின் செய்தியைக்கூட காதுகளில் நுழைய விடுகிறதில்லை; மனம் திரும்புங்கள் என்ற வார்த்தைகளால்கூட இருதயங்களை உணர்வடையவிடுகிறதில்லை; வழியருகிலேயே அநேக ஜனங்களை இன்னும் சத்துரு நிறுத்திவைத்திருக்கிறான், பறவைகள் பறந்துகொண்டிருக்கும் பாதையில்தான் இன்றும் அவர்களை நிற்கச்செய்துகொண்டிருக்கின்றான், விதைக்கப்படும் வசனங்களை உடனே பொறுக்கி வீசிவிடும் வேலையினையே அவன் செய்துகொண்டிருக்கின்றான். உலகமும் அவர்களும் ஒன்றாயிருக்கவேண்டும், உலகத்தோடு ஒட்டியே வாழவேண்டும் என்று, அநேக காரியங்களை காணும்படியாகவும், கேட்கும்படியாகவும் செய்து, உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கவே போதனை செய்கிறான்.
சத்துருவின் தந்திரத்திற்கு தன்னை விற்றுப்போட்டுவிட்ட ஒரு கூட்டம், ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்தையே மறந்துபோய்விட்டது. மணவாட்டி என்பதை மறந்து, மண்ணோடு ஒட்டியே வாழ்ந்துகொண்டிருக்கின்றது. நம்முடைய வாழ்க்கை இந்த உலகத்தை விட்டு இன்று அறுக்கப்படுமென்றால், நம்முடைய நிலை என்ன? மணவாளனாகிய அவரை மணவாட்டியாக சந்திக்க நாம் ஆயத்தமா? ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்தில் நம்முடைய கால்கள் அடியெடுத்துவைக்க முடியுமா? தேவ ஜனத்தோடுகூட, தேவனுடைய தோட்டத்தில்தான் நான் இருக்கிறேன், தேவ ஊழியர்கள் வாழும் இடத்திலேதான் நானும் வாழுகின்றேன், என்னைச் சுற்றிலும் அவருடைய வேலி இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு, கனியற்றவர்களாக கவலையின்றி, களைகளாக இன்னும் நாம் வாழ்ந்துகொண்டிருந்தால், அறுவடையின் நாட்களில் தேவ ஜனத்திலிருந்து நாம் பிரிக்கப்படுவதும், அக்கினியிலே எரிக்கப்படுவதும் நிச்சயம் என்ற உண்மையினை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அறுவடையின் நாட்களிலே, களைகளாக நாம் காணப்பட்டுவிடக்கூடாது என்றால், ஆண்டவர் கற்றுத்தந்திருக்கிற காரியங்களை நாம் கடைபிடிக்கவேண்டியது அவசியம். முதலாவது, நாம் கன்னிகைகளோடு கலந்திருந்தால் மாத்திரம் போதாது; நமது கையில் எண்ணெய் இருக்கவேண்டும்.
மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறும்போது, புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள் (மத் 25:3,4) என்று சொல்லுகின்றார். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளவேண்டியவர்கள் நாம் (சங் 116:13); என்றபோதிலும், புத்தியில்லாத ஜனங்களை, இரட்சிப்பின் பாதையிலிருந்து தூரமாக சத்துரு வழிவிலகச் செய்வதை இந்த உலகத்திலே நாம் காணமுடியும். அப்படிப்பட்டவர்கள், தங்கள் பாத்திரங்களில் எண்ணெய் இல்லாமல் தேவனுடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பார்கள்; இரட்சிக்கப்படாதவர்களாகவே ஆராதனையில் பங்கெடுப்பார்கள்; பாவமன்னிப்பு என்றால் என்ன? என்பதை அறியாமலோ அல்லது அறிந்தும் தங்களை அர்ப்பணிக்காமலோ ஆலயத்தில் அமர்ந்திருப்பார்கள். இவர்கள் கன்னிகைகளோடுகூட கலந்திருக்கலாம், உலகத்தாரால் அடையாளங்காணக்கூடாதவர்களாகக்கூட காணப்படலாம். என்றாலும், 'தேவன் இருதயத்தின் அந்தரங்கங்களை அறிந்திருக்கிறாரே' (சங். 44:21), அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறதே (எபி 4:13); அப்படியிருக்க அவருக்கு முன்னே நம்மை மறைத்துக்கொள்வது கூடாதே.
இரட்சிக்கப்பட்ட மனிதனோடுகூட வயலிலிருந்தாலும், எந்திரம் அரைத்துக்கொண்டிருந்தாலும் (மத். 24:40,41), மனந்திரும்புதலும், மறுபிறப்பும் இல்லையென்றால், மணவாட்டியாக பரலோகம் ஏற்றுக்கொள்ளாதே. ஐயோ! இந்த மனந்திரும்பாத மனிதன், மனந்திரும்பின மனிதனோடு எத்தனையாய் கஷ்டப்பட்டு எந்திரம் அரைக்கிறான், எத்தனையாய் வயலில் வேலை செய்கிறான், எத்தனையாய் உதவி செய்கிறான், ஊழியர்களை எத்தனையாய் தாங்குகிறான், சத்துருவின் தோட்டத்திலும் வேலிக்குள்ளும் அல்ல, என்னுடைய தோட்டத்திலேதானே வேலை செய்கிறான் என்று உழைப்பை மாத்திரம் கணக்கில் கொண்டு, பரலோகத்தின் உள்ளே அவர்களை விட்டுவிடுவதில்லை. தேவ மனிதர்களோடுகூட சேர்ந்து இருந்தாலும், இணைந்து வேலை செய்தாலும், வேலை ஒருபோதும் நம்மை பரலோகம் கொண்டுசெல்லாது. இரட்சிக்கப்பட்டவர்கள், இரட்சிக்கப்படாதவர்கள் ஆகிய இரண்டு கூட்டத்தாரும் வயலில் இருப்பார்கள்; எனினும், நாம் எந்தக் கூட்டத்தில் இருக்கின்றோம்? 'கன்னிகைகள்' என்ற பெயரில் மாற்றமில்லை; எனினும், எண்ணெயில்லையென்றால் நாம் களைகளே.
அவருக்காக வேலை செய்திருக்கலாம், அநேக காரியங்களை இழந்திருக்கலாம், ஆஸ்திகளையும் தேவ மனிதர்களுக்காக கொடுத்திருக்கலாம், வாழ்க்கையையே தேவமனிதர்களோடுகூட செலவழித்திருக்கலாம்; எனினும், மனந்திரும்பாவிட்டால், அனைத்து மண்ணோடு போய்விடுமே, தேவனுடைய வயலிலே செய்த வேலையும் வீணாகவே எண்ணப்பட்டுவிடுமே.
எனவே சாலொமோன், பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படி செய்துவந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள் (பிர. 8:10) என்று எழுதிவைத்திருக்கிறான். மேலும், இயேசு கிறிஸ்துவின் நாட்களில், பிதாவின் வீட்டை வியாபார வீடாக ஜனங்கள் மாற்றியிருந்தார்கள் (யோவான் 2:16) என்பதையும் வேதத்தில் நாம் வாசிக்கின்றோமே. அதுமாத்திரமல்ல, அவர் எசேக்கியேலை நோக்கி: 'மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? (எசே 8:6) என்று கூறுவது எத்தனை வேதனையான காரியம். கொஞ்சம் கொஞ்சமாக சத்துரு நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்கும்போது, நம்முடைய வாழ்க்கையும் இப்படி மாறிவிடக்கூடும். துன்மார்க்கத்திற்கு இடங்கொடுத்து, ஆலயத்தைக் குறித்த பக்தியற்றவர்களாக அதனை வியாபார ஸ்தலமாக்கும்போது, அவரையே அங்கிருந்து வெளியேற்றிவிடுகின்றோம் நாம். அவருக்குப் பிரியமில்லாதவைகளை நாம் செய்யும்போது, ஆண்டவர் வெளியேறிவிடுவதால், ஆலயங்களையும் ஆக்கிரமித்துக்கொள்வது சத்துருவுக்கு எளிதானதே.
ஒரு கூட்ட ஜனங்கள், பாதையில் காயப்பட்டுக் கிடக்கிற மனிதர்களையும் காணாமல் பரிசுத்த ஸ்தலத்திற்கு போய்க்கொண்டிருக்கிறார்கள் (லூக். 10:31,32), தேவையுள்ள ஜனங்களைப் பாராமலேயே தேவாலயத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள், தேவாலயத்திலும் பெரியவர் எங்கே இருக்கிறார்? என்பதை அறிந்துகொள்ள முடியாமலேயே தேவாலயத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். தேவன் அல்ல, தேவாலயமே அவர்களுக்கு பெரிதாகத் தென்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், இன்றும் தேவாலயத்தில் தேவனை ஆராதிக்க வரும் மக்கள் உண்டே; இத்தகைய கூட்டத்தில் நாம் காணப்பட்டுவிடக்கூடாது.
இரண்டாவதாக, கதிர்களுக்குள்ளே நாம் வளர்ந்துகொண்டிருக்கலாம்; ஆனால், நாம் களைகளாயிருந்துவிடக்கூடாது. தேவனது தோட்டம்தானே, விதைத்தவரும் எஜமானனாகிய அவர்தானே; அப்படியிருக்க களைகள் எங்கே இருந்து வந்தன? தோட்டக்காரர்கள் தூங்கினதால் அல்லவோ! எஜமானால் கோதுமைதான் விதைக்கப்பட்டிருந்தது; எனினும், தோட்டக்காரர்களின் நித்திரை சத்துருவை வேலிக்கு உள்ளே வரவிட்டதோடு மாத்திரமல்ல, விதைக்கவும் வழிவகுத்துவிட்டது. ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் செய்யும் நித்திரை, சத்துரு நுழைய வழிவகுத்துவிடும். கைபேசியோ, தொலைக்காட்சியோ, புத்தகமோ, பேசும் நபர்களோ, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் நித்திரை சத்துருவுக்கு வழியைத் திறந்துவிடும் என்பதால் நாம் கவனமாயிருக்கவேண்டும்.
சத்துரு களைகளை விதைத்தபோது வேலைக்காரர்களோ நித்திரைசெய்துகொண்டிருந்தார்கள், அதை அறியாதிருந்தார்கள்; மண்ணுக்குக் கீழே இருந்த அவைகள், கண்ணுக்கும் தெரியாமலிருந்தது; எனினும், வளரத்தொடங்கி, களைகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை வெளிக்காட்டத் தொடங்கினபோதோ, அவைகளை அடையாளம் கண்டுகொண்டார்கள். இன்றும், நித்திரை செய்யும் நேரத்தில், களைகளான மனிதர்களை தோட்டத்திற்குள் சத்துரு விதைத்துவிடுகின்றானே. அதனைக் காணும் வேலைக்காரர், இது என் எஜமானின் தோட்டமல்லவா, இவர்களை இங்கே விதைத்தது யார்? ஐயோ! கொஞ்சம் கொஞ்சமாக களைகள் தங்கள் வேலைகளைத் காட்டத் தொடங்குகின்றார்களே, குணத்தை வெளிப்படுத்துகின்றார்களே, வார்த்தைகளில் மாறுபடாய் பேசுகிறார்களே, கதிர்களுக்கும் களைகளுக்கும் வித்தியாசத்தை வெளிப்படுத்துகின்றார்களே என்று புலம்பத் தொடங்குகின்றார்கள். ஆம், நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்க மாட்டாதே (மத். 7:18), அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் (மத். 7:16) என்றும் வாசிக்கின்றோமே. எஜமான் விதைத்தவைகள் களைகளாக மாறவில்லை; களைகள் சத்துரு கரங்களால் விதைக்கப்பட்டவைகளே.
வேலைக்காரர்களாகிய தாங்கள் தூங்கினதும், காவாமல் போனதும் உண்மைதான்; என்றாலும், சத்துரு வந்துவிட்ட செய்தியையும், விதைத்துவிட்ட செய்தியையும் அவர்கள் அறிந்தபோதோ, அதனை பொறுத்துக்கொள்ள அவர்களுக்கு மனதில்லை. எஜமானின் தோட்டத்திற்குள் எதிரி உலாவுவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களுடைய விழிகளெல்லாம், சத்துருவின் வழிகளின் மேலேயே இருக்கின்றன. ஐயோ! கதிர்களுக்கு மத்தியில் களையாக இவன் எப்படி வந்தான், தேவனுடைய தோட்டத்திலே சத்துருவின் திட்டம் தீட்டப்படுகின்றதே, என் எஜமான் வந்தால் நான் என்ன பதில் சொல்லுவேன்? என்றே அவர்கள் கலங்கிக்கொண்டிருந்தார்கள்.
விதைக்கும்படியாக சத்துரு உள்ளே வந்தபோது, வேலைக்காரர்கள் தூக்கத்திலிருந்தார்கள்; ஆனால், சத்துரு களைகளை விதைத்துவிட்டுச் சென்றபின்போ, வேலைக்காரர்களுக்கு தூக்கமே தூரமாகிப்போனது. எஜமானே! நீர் தெரிந்தெடுத்துக் கொண்டுவந்த நல்ல விதையைத்தானே உமது நிலத்தில் விதைத்தீர் என்று களைகளைக் குறித்தே கவலை கொண்டவர்களாக, களைகள் பிடுங்கப்படவேண்டும் என்ற கதறுதலோடு, எஜமானை நோக்கி, 'நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டபோது, எஜமானோ, வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். (மத் 13:28-30)
வேலைக்காரர்கள்தானே, களைகளையும் அடையாளம் கண்டுகொண்டவர்கள்தானே, பிடுங்கிப்போடட்டுமா? என்றும் பாரத்துடன் கேட்கின்றார்களே; அப்படியிருக்க, எஜமான் அவர்களை ஏன் தடுக்கவேண்டும் என்ற கேள்வி நமக்குள் உண்டாகக்கூடும். எனினும், சில களைகளின் வேர், சில கோதுமைகளின் வேரோடு மண்ணுக்கு அடியில் நமது கண்களுக்கும் மறைவாக பின்னியிருக்கிறது; களைகளைப் பிடுங்கினால், கூடவே கோதுமைகளையும் அது இழுத்துக்கொண்டுவரும், களைகளாகிய மனிதர்களை அகற்றினால், கோதுமைகளாகிய மனிதர்களையும் இழுத்துக்கொண்டு செல்பவர்கள் அவர்கள், களையாகிய அவர்கள் மீது கரம் வைத்தால், தோட்டத்தின் விளைச்சலின் மேலேயே விரல்நீட்டுபவர்கள் அவர்கள் என்பதே அதற்குக் காரணம். வீரமுடன் வேலைக்காரர்கள் கேட்டபோதிலும், வேண்டாம் என்று தடுத்து, தூதர்களிடமே அதை விட்டுவிட்டதின் காரணம் இதுவே (மத். 13:39,49). நமது நித்திரையினால் களைகள் உள்ளே வந்துவிட்டாலும், அறுக்கும் பொறுப்பினையோ அவரது கரங்களிலேயே விட்டுவிடுவோம். சத்துரு விதைத்தது போகட்டும், இனி கொண்டுவருகிறதையாவது தடுக்க தீவிரிப்போம். கோதுமைகளாக இல்லாவிடில் கொளுத்தப்படுவது நிச்சயம். நம்முடைய மாம்ச பெலத்தை பிரயோகிப்போமென்றால், நீதிமான்களையும் இழக்க நேரிடும். நாம் கொஞ்சம் தூங்கிவிட்டாலும், இறுதிவரை களைகளோடுதான் வாழ்ந்துகொண்டிருக்க நேரிடும்; அத்துடன், கதிர்களை மாத்திரமல்ல, களைகளையும் வேலிக்குள்ளேயே வைத்து தினம் தினம் பராமரிக்கும் சூழ்நிலையும் நேரிட்டுவிடும். கதிர்களின் வேலிக்குள் களைகள் வந்துவிட்டால், கதிர்களின் வேருக்கும் அனுதினமும் அது ஆபத்துதானே; எனவே, எச்சரிக்கை.
மூன்றாவதாக, நாம் பசுமையாக இருந்தால் மாத்திரம் போதாது; பிறரது பசி தீர்க்கவேண்டும். நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே (சங் 50:12) என்று சொல்லுபவர்தான் நம்முடைய தேவன்; இல்லாதவைகளையும் இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவர் அவர் (ரோமர் 4:17); 'உண்டாகக்கடவது' (ஆதி. 1:3) என்ற ஒரு வார்த்தையே அதற்குப் போதுமானது; அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் (சங் 33:9) என்பதே வேதத்தின் சத்தியம். அப்படியிருக்க, தான் பசியாயிருப்பதை பிறரிடத்தில் சொல்லவேண்டியதோ அல்லது தன்னுடைய பசியைத் தீர்க்கும்படியாக பிறரைத் தேடவேண்டியதோ அவருக்கு அவசியமில்லாதது என்று ஒருவேளை நமக்குத் தோன்றலாம். ஆனால், தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வல்லமை பிறரது பிரயோஜனத்திற்காகவே என்பதை வெளிப்படுத்தும்படியாகவே, இத்தகைய மாதிரியை தனது வாழ்க்கையின் மூலம் அவர் வெளிப்படுத்தினார். நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் தாலந்துகளையோ, வரங்களையோ, ஆஸ்திகளையோ கொண்டு நம்முடைய வாழ்க்கையையே திருப்திப்படுத்த நாம் முயற்சிக்காமல், பிறருக்காகவே பயணிப்போமென்றால் அதன் பலனை பரலோகத்தில் நாம் காண்பது நிச்சயம்.
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: 'நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்' என்று அவருடைய வல்லமையைக் கொண்டே வழியில் மறித்து, அவரை திசை திருப்ப முயற்சித்த போதிலும், தன்னுடைய வல்லமை வெளிப்படும் வார்த்தையை தனக்கென அவர் பயன்படுத்தவில்லையே. மாறாக, மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (மத் 4:2-4) என்று சொன்னவராக, பிசாசின் ஆலோசனையினை புறந்தள்ளினாரே.
எனினும், பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா? என்று பின்வாங்கிப்போன தனது சீஷர்களிடத்தில் அவர் கேட்டபோது, 'ஒன்றுமில்லை' என்று அவர்களிடமிருந்து வந்த பதிலைக் கேட்டபோதிலும், தன்னிடத்திலிருந்தவைகளை தானே புசித்துவிட்டு புறப்பட்டுப் போய்விடவில்லையே; அத்துடன், கடலிலிருந்து வெறுமையாகவும் உடனே சீஷர்களை வெளியே அழைத்துவிடவில்லையே; மாறாக, அவர்களது வலையை நிரப்பியதுடன், தான் ஆயத்தம்பண்ணிவைத்திருந்த அப்பத்தையும், மீனையும் அவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து அவர்களது பசியைத் தீர்த்தாரே (யோவான் 21:5-9). வெறுமையாய் கடலிலிருந்த அவர்களது பசியில் அவருக்குத்தான் எத்தனை அக்கறை!
என்றபோதிலும், சீஷர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்படியாக, பெத்தானியாவிலிருந்து அவர் புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டானபோது, அவர்களிடத்தில் எதுவும் கேட்காமல், இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள் (மாற் 11:12-14) என்று வாசிக்கின்றோமே. மற்றவர்களைப் போஷpக்க நீங்கள் 'எல்லாக் காலத்திலும்' ஆயத்தமாயிருக்கவேண்டும் என்ற பாடத்தையே இயேசு கிறிஸ்துவின் இந்த செயல் சீஷர்களுக்குப் போதித்தது.
ஆதாமும், ஏவாளும் தங்களது நிர்வாணத்தை மறைக்க அத்திமரத்தில் இலைகளைத் தேடினார்கள்; புசிக்கவேண்டாம் என்று சொல்லப்பட்ட மரத்தின் கனியைப் புசித்துவிட்டு, புசிக்கும்படியான கனிகளைக் கொடுக்கும் அத்திமரத்திலோ இலைகளைப் பறித்து அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள் (ஆதி. 3:7). ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தேவை அத்திமரத்தின் இலைகளல்ல, கனிகளே.
அவரது தோட்டத்திற்குள் இருக்கிறேன்; அவரது தோட்டத்தின் பலனையே தினம் தினம் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்; மற்ற மரங்களைக் காட்டிலும் பச்சைப் பசேலென இருக்கிறேன் என்று ஒருவேளை நம்மை நாமே பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கலாம்; எனினும், கனியில்லையெனில், அவரது கரத்தினாலேயே நாம் அகற்றப்படுவோம் என்பது நிச்சயம். நிலத்தைக் கெடுக்கும் அத்திமரமாக அவரது வேலிக்குள் நாம் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடாதே (லூக். 13:6-9); செத்த ஈக்களாக தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறப்பண்ணிவிடக்கூடாதே (பிர. 10:1). கயிற்றினால் சவுக்கை உண்டுபண்ணி தனது ஆலயத்தைச் சுத்திகரிப்பதற்கு முன் (யோவான் 2:15), கனிகளால் நம்முடைய வாழ்க்கையை நிறைத்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளுவோம்.
ஆளும் பதவிகளையே தேடித் தேடி, ஆவிக்குரிய கனிகள் அற்றவர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். அதிகாரத்தையே விரும்பி விரும்பி தங்கள் மதுரத்தை விட்டுவிட்டவர்கள் பலர். இவர்கள் பதவிகளிலே பசுமையாக இருந்தாலும், பரலோகத்தின் பார்வையிலோ கனியற்ற பட்டுப்போன விருட்சங்களே. நமது மதுரத்தையும், நற்கனியையும் விட்டு விட்டு மற்றவர்களை நாம் அரசாளச் சென்றுவிடக்கூடாதே (நியா. 9:11). லாசருவைப்போல வாசலில் கிடந்தாலும் (லூக். 16:20), நித்தியத்தில் ஆபிரகாமின் மடியிலேயே தலைசாய்க்கவேண்டும் (லூக். 16:23) என்பதே நித்தமும் நமது நினைவாகட்டும். மொர்தெகாயைப் போல அரமனை வாசலில் அமர்ந்திருந்தாலும் (எஸ்தர் 2:19) தேவ ஜனங்களின் அழிவினைத் தடுத்து நிறுத்தும் சிந்தையே நமது எண்ணங்களில் இன்றும் என்றும் உயர்ந்து நிற்கட்டும்.
விலைகொடுத்து வாங்கியவரின் தோட்டத்திற்குள்
களைகளாக உலாவும் மனிதர்களா!
கைகளில் எண்ணெயோடு கன்னிகைகள் புறப்பட
காலியான பாத்திரங்களோடு போலிகளா!
கணப்பொழுது நித்திரையும் சத்துருவுக்கு வழிதருமே
வேலியின் வாசலுக்குள் போலிகளும் ஊடுருவுமே
வேலிக்குள் வளர்ந்தபின் வேரோடு பிடுங்கினால்
கதிர்களும் களைகளோடு காணாமற்போய்விடுமே
அவசரமாய் தோட்டத்தில் அரிவாளை நீட்டாமல்
விளைச்சலின் இடையிலே குலைச்சலைக் காட்டாமல்
விட்டுவிடு வளரட்டும் வருகையின் நாள் மட்டும்
அறுவடை அவருடையது அன்றவை எரிபடட்டும்
பாதையில் பசுமையாய் பார்வைக்கு நில்லாமல்
பயணமாய் வருவோரின் பசியினைத் தீர்த்திடுவோம்
நிலத்தினைக் கெடுக்கும் விருட்சமாய் வளராமல்
நித்தியம் மகிழும் கனிகளைக் கொடுத்திடுவோம்
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோதரன் P.J. கிருபாகரன்