உயிரைக் காக்கும் உயிர்கள்
'ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை' (யோவா 15:13) என்றார் இயேசு கிறிஸ்து. இத்தகைய ஜீவனைக் கொடுக்கும் அன்புள்ள மனிதர்களை அடையாளம் கண்டுகொள்வது அவசியம். யாக்கோபு தன் தகப்பன் வீட்டிலிருந்து, லாபானின் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றபோது, யாரும் உடன் செல்லவில்லை. ராகேலை விவாகம் செய்துகொண்டபின், ஏறக்குறைய தொன்னூற்றோரு வயதாயிருக்கும்போது, யோசேப்பை ராகேலினிடத்தில் பெற்றெடுத்தான் யாக்கோபு. அந்நேரத்திலேயே, யாக்கோபின் தாயாகிய ரெபெக்காள், தனது தாதியாகிய தெபொராளையும் மற்றும் இரண்டு ஈசாக்கின் வேலைக்காரர்களையும் யாக்கோபினிடத்திற்கு அனுப்பிவைத்தாள் என்பது வரலாறு. யாக்கோபுக்கும், ராகேலுக்கும் செய்யவேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்து முடித்த ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் யாக்கோபுக்கும் ராகேலுக்கும் செய்யவேண்டிய கடமைகளையும் செய்து, பின்பு மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு 'அல்லோன்பாகூத்' 'the oak of weeping" என்னும் பேர் உண்டாயிற்று (ஆதி 35:8). தாதியாகிய தெபொராளின் மரணம், யாக்கோபின் குடும்பத்தை வெகுவாகப் பாதித்தது. ஆபிரகாமின் வேலைக்காரன், ஈசாக்கிற்கு பெண்பார்க்கச் சென்று, பெத்துவேலின் மகளாகிய ரெபெக்காளை அழைத்துக்கொண்டுவந்தபோது, ரெபெக்காளோடுகூட அவள் தாதியையும் அவர்கள் உடன் அனுப்பியிருந்தார்கள் (ஆதி 24:59). ரெபெக்காளோடு கூட அனுப்பப்பட்ட இந்த தாதியையே, ரெபெக்காள் தான் அதிகம் நேசித்த குமாரனாகிய யாக்கோபினிடத்திற்கு அனுப்பியிருக்கக்கூடும். இரண்டு தலைமுறைகளாக எஜமான்களுக்கு ஊழியம் செய்தே உயிரை விட்ட தாதி, நமது ஊழியத்திற்கும் ஓர் மாதிரியே.
அவ்வாறே, அபிகாயிலை விவாகம்பண்ண மனதாய், தாவீது தன் ஊழியக்காரரை அனப்பியபோது (1சாமு. 25:40), அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப் பெண்களைக் கூட்டிக்கொண்டு, தாவீதின் ஸ்தானாதிபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள் (1சாமு. 25:42). எப்போதும், எங்கேயும் உடன்செல்ல ஆயத்மாயிருப்பவர்கள் இந்த தாதிகள்.
பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தபோது, உடன் வந்த அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவிக்கொண்டிருந்தார்கள். ஒருவேளை பார்வோனின் குமாரத்தியைக் காக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்திருக்கக்கூடும். நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியை பார்வோனுடைய குமாரத்தி கண்டபோது, தான் சென்று உடனே எடுத்துவிடவில்லை, தன் தாதியை அனுப்பியே அதைக் கொண்டுவரும்படி செய்தாள் (யாத் 2:5). எஜமாட்டிகளின் கட்டளையே தாதிகளின் வாழ்க்கையில் இறுதியானது.
சவுலின் குமாரனான யோனத்தானுடைய மகன் மேவிபோசேத், ஐந்து வயதாயிருந்தபோது, அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போகிற அவசரத்தில், அவன் விழுந்து முடவனானான் (2சாமு. 4:4). மேலும், யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்;கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளி அறையில் ஒளித்துவைத்தார்களே (2 இரா. 11:2) தங்களிடம் ஒப்புவிக்கப்பட்டதை எப்படியாகிலும் தப்புவித்துவிடவேண்டும் என்ற குணம் தாதிமார்களிடத்தில் காணப்பட்டதே. தாதிமார்கள் வேலைக்காரர்களாக மாத்திரம் வைக்கப்படவேண்டியவர்கள் அல்ல; மாறாக, தேவசமுகத்திற்கும் நம்மோடு கூட வரவேண்டியவர்கள். (எஸ்தர் 4:16)
அதுமாத்திரமல்ல, ராஜாவைச் சந்திக்கும் முன் எஸ்தரை ஆயத்தப்படுத்தினது தாதிமார்களே. அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமiனியிலிருந்த ஏழு தாதிமார்கள் எஸ்தருக்காக நியமிக்கப்பட்டிருந்தார்கள் (எஸ்தர் 2:9). நம்முடைய வாழ்க்கையின் நிலை, இத்தகையதாய் உயரவேண்டுமே. மற்றவர்களை பரலோக ராஜாவுக்கு முன் நிறுத்தும்படியான பெரிதானதோர் பணி நம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றதே. இதனை எத்தனை தியாக உணர்வோடு செய்யவேண்டும். தங்கள் எஜமான்கள் சிறையாகும்போது, மார்பிலே அடித்துக்கொண்டு அழுது புலம்பின தாதிகளைப்போல (நாகூம் 2:7) மனந்திரும்பாதவர்களுக்காக நாமும் அழுது புலம்புவோம்.
Comments
Post a Comment