தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. (லூக். 1:13)
நம்முடைய வாழ்க்கையின் குறைவுகளைப் பார்த்துப் பார்த்து குன்றிப்போக அல்ல, விட்டுவிடப்பட்டிருக்கும் தேவனுடைய ராஜ்யத்தின் எஞ்சியப் பணியினை விரைந்து நிறைவாக்குவதற்காகவே அழைக்கப்பட்டவர்கள் நாம். இச்செய்தியைச் சுமந்துவரும், ஆசாரியனாகிய சகரியா மற்றும் அவனது மனைவியாகிய எலிசபெத்து ஆகியோரின் இல்லற வாழ்க்கை நமக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள் (லூக். 1:6); என்றபோதிலும், அவர்களுடைய குடும்ப வாழ்வில் குறைவு காணப்பட்டது; அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; ஆபிரகாம் - சாராள் தம்பதியினரைப் போல, இவர்களும் வயது சென்றவர்களாயிருந்தபடியினால், தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இல்லாதிருந்தது. குழந்தை இல்லாத நிலையிலும், சகரியா மற்றும் எலிசபெத்து ஆகியோரின் குடும்ப வாழ்க்கை சரிந்துவிடவில்லை; எவ்வழியிலாகிலும் குறைவினை நிறைவாக்கிவிடவேண்டும் என்ற எண்ணத்தில், இடையிலே 'ஆகார்' நுழைவதற்கு அவர்கள் இடமளிக்கவுமில்லை. முதிர்வயது வரையிலும் ஒன்றாகவே வாழ்ந்துவந்தனர்.
பிரியமானவர்களே, குறைவுகளோடு காணப்பட்டபோதிலும், குடும்ப வாழ்க்கையை நிறைவோடு நடத்தியவன் சகரியா. தேவனுக்கு முன்பாக நாம் உண்மையுள்ளவர்களாகவும், உத்தமமானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் வாழ்ந்துகொண்டிருந்தாலும், நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகின்ற குறைகள் நமக்கு வலியினை உண்டாக்கிவிடுகிவிடுகின்றன; அத்தகைய வலிகள் குடும்பத்திற்குள் ஊடுருவி, பிரச்சனைகள் உண்டாகவும் மற்றும் ஒருவரை விட்டு ஒருவர் பிரித்துவிடுகின்றன. அதுமாத்திரமல்ல, கர்த்தருடைய காலத்திற்குக் காத்திருக்காமல், நம்முடைய கால்களை சில நேரங்களில் வழிவிலகச் செய்துவிடுகின்றன. இவர்கள் இல்லாதிருந்தால், நான் நிறைவாயிருப்பேன் என்று தேவன் தந்த சிலரை நம்முடைய வாழ்க்கையிலிருந்து அகற்றிவிடுகின்றன; அல்லது, இவர்கள் இருந்தால் என்னுடைய வாழ்க்கை நிறைவாகிவிடும் என்று 'ஆகாரைப் போல' தேவனுக்குப் பிரியமில்லாமல் இன்னொருவரை நம்முடைய வாழ்க்கையோடு இணைத்துவிடுகின்றன; அல்லது தவறானவர்களோடு எனது வாழ்க்கையைத் தொடருகின்றேனோ என்ற எண்ணத்தில் மாம்சத்தில் முடிவெடுக்க நமது மனதை நெருக்கி ஏவிவிடுகின்றன. அதன் விளைவாக, தேவ சித்தத்திற்கு விரோதமான காரியங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை அவைகள் நம்முடைய வாழ்க்கையில் உருவாக்கிவிடுகின்றன. 'அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்' (ரோம. 8:28) என்ற வசனத்தை மனதில் நிறுத்தினவர்களாக, மாம்சீகக் கண்கள் மண்ணுக்கடுத்த பல குறைகளை நமது கண்களுக்கு முன் நிறுத்தினாலும், தேவன் வைத்திருக்கும் நிலையிலும், தேவன் விரும்பும் நிலையிலும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையினைத் தெடர நம்மை அர்ப்பணிப்போம். வாழ்க்கையில் காணப்படும் குறைவுகளையே பார்த்துக்கொண்டிருப்போமென்றால், அந்தக் குழியிலிருந்து வெளியேறுவது கூடாததாகிவிடும்.
மற்றும் ஒரு காரியத்தை ஆசாரியனாகிய சகரியாவின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். தன்னுடைய வாழ்வில் குறைவு காணப்பட்டபோதிலும், அதிலே அதிருப்தி அடைந்துவிடாமல், தேவனுடைய ஊழியத்தை திருப்தியாக தொடர்ந்து செய்துவந்தான் சகரியா. ஆசாரியன் என்பவன் மனிதர்களுக்காக தேவசமுகத்தில் பிரவேசிப்பவன். மனிதர்களுக்காக, பாவ நிவிர்த்தி செய்பவன், பலி செலுத்துபவன், பரிந்து பேசுபவன். தன்னுடைய வாழ்க்கையை ஜனங்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டவன். தன்னுடைய தேவைகள் எத்தனை பெரியதாயிருந்தாலும், ஜனங்களுடைய தேவையினையே பூர்த்தி செய்யும் மனதைக் கொண்டவன். குறைவுகளோடு வாழ்ந்தாலும், ஜனங்களின் நிறைவுகளுக்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளுபவன். பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் இச்சத்தியத்தைத்தானே நமக்கு வெளிப்படுத்துகின்றது. ஆசாரியனான அவர், ஜனங்களிடத்தில் அன்புகூருவதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனது அன்பினை வெளிக்காட்டுவதின் உச்சநிலையாக தன்னுடைய ஜீவனையே ஜனங்களுக்காகச் சிலுவையில் கொடுத்தாரே.
பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையில் உண்டாகின்ற குறைவுகள், பிரச்சனைகள், தேவைகள் சில நேரங்களில் நாம் செய்யும் தேவனுடைய ஊழியத்தில் எதிரொலித்துவிடுகின்றன. எத்தனையோ பேருக்காக நாம் ஜெபிக்கும் ஜெபத்தை தேவன் கேட்டு பதிலளிக்கின்றாரே, என்னுடைய குறையோ இன்னும் குறையாகவே விடப்பட்டிருக்கின்றதே என்ற கேள்வி அநேக நேரங்களில் நம்முடைய உள்ளத்தில் தொடர்ந்து ஒலித்துகொண்டேயிருக்கக்கூடும். இத்தகைய குறைவுகளின் குரல்களுக்கு நாம் நமது செவியைச் சாய்த்துக்கொண்டேயிருப்போமென்றால், ஊழியத்தின் குரல்வளையை அது நெரித்துவிடக்கூடும். தேவனுடைய ஊழியத்தில் நாம் காட்டும் வேகத்தினைத் தடுக்கும் ஆயுதமாக, குறைவுகளைக் குறித்த நினைவுகளை சத்துரு பயன்படுத்திவிடாதபடி நாம் கவனமாயிருப்போம்.
மேலும் ஒரு காரியத்தினை ஆசாரியனாகிய சகரியாவின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். ஆசாரிய ஊழியம் என்பது தேவனுக்கும் மக்களுக்கும் இடையிலே பாலமாக செய்யப்படவேண்டியதோர் பிரதானமானப் பணி. தேவனை மக்களோடும், மக்களை தேவனோடும் தொடர்புகொள்ளச் செய்யும் பாலமாக விளங்குபவனே ஆசாரியன். இப்படிப்பட்ட நிலையில் காணப்படும் ஆசாரியனாகிய சகரியா, ஊமையாகிவிட்டால் என்னவாகும்? தேவ செய்தியை மக்களுக்கும், மக்களுடைய செய்தியை தேவனுக்கும் கடத்துவது எப்படி சாத்தியம்? அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான் (லூக் 1:23) என்றே வேதத்தில் வாசிக்கின்றோம். அப்படியென்றால், ஊமையாயிருந்தாலும், ஊழியத்தை நிறைவேற்றுவதிலிருந்து சகரியா விலகிவிடவில்லை என்பதுதானே அர்த்தம்.
'ஊமையாகவே எப்படி சகரியா ஆசாரிய ஊழியத்தை நிறைவேற்றியிருப்பான்?' என்ற கேள்வி நம்முடைய இருதயத்தில் எழக்கூடும். அவனால் ஜனங்களிடத்திலும் பேச முடியாது, தேவனிடத்திலும் பேச முடியாது; என்றபோதிலும், ஜனங்கள் சொல்லுவதைக் கேட்கக்கூடியவனாகவும், தேவன் சொல்லுவதைக் கேட்கக்கூடியவனாகவும் சகரியா இருந்தான் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டியது அவசியம். ஜனங்கள் சொல்லுவது எல்லாவற்றையும் கேட்டு சிந்தையில் ஏற்றிக்கொண்டு, தேவனிடத்தில் சேர்ப்பது சகரியாவுக்கு எளிதானதே; ஏனெனில், நமது இருதயத்தில் உள்ளவைகளை, நமது நாவில் சொல் பிறவாததற்கு முன்னே அறிகிறவர் நமது ஆண்டவர். எனவே, சகரியாவின் இருதயத்திலிருப்பவைகளை ஆண்டவர் அறிந்துகொள்ளக்கூடும். ஆனால், தேவன் பேசியவைகளைக் கேட்டு ஜனங்களிடத்தில் சேர்ப்பதோ சகரியாவுக்குச் சற்று கடினமானதாகவே காணப்பட்டிருக்கும். சைகை மொழியிலேயே ஜனங்களோடு சகரியா பேசிவந்தான் சகரியா (லூக். 1:22); என்றபோதிலும், 'ஊமையாகிவிட்டதினால், ஊழியத்திலிருந்து அவன் இடைநீக்கம் செய்யப்பட்டுவிடவில்லை; ஜனங்களால் ஒதுக்கப்பட்டுவிடவுமில்லை, அவனது நாட்கள் நிறைவேறும் வரையிலும் தேவ சமுகத்தில் ஆசாரிய ஊழியத்தை நிறைவேற்றினான்'. ஊமையாக இருந்தாலும், சகரியாவை ஊழியனாக ஏற்றுக்கொண்டார்கள் ஜனங்கள். என்றபோதிலும், தன்னிடத்தில் காணப்பட்ட விசுவாசக் குறைச்சலினால் ஜனங்களிடத்தில் பேசும் வாய்ப்பினை ஆசாரியனாகிய சகரியா இழந்து நின்றானே; ஆம், பிரியமானவர்களே, நம்முடைய விசுவாசக் குறைச்சல், ஊழியத்தின் பாதையில், இத்தகைய வார்த்தையற்ற நிலைக்கு நம்மை கொண்டுசென்றுவிடமுடியும். எனவே, ஜனங்களுக்காக தேவனிடத்தில் பிரவேசிக்கும் நம்மிடத்தில் விசுவாச குறைச்சல் காணப்படாதபடிக்குக் காத்துக்கொள்ளுவோம். சகரியாவின் வாழ்க்கையிலிருந்த விசுவாசக் குறைச்சலைச் சுட்டிக்காட்டுவதற்காகவும், இந்தக் குறைவு அவனுடைய குடும்ப வாழ்க்கையில் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடும்.
என்றாலும், அநேக நேரங்களில், ஊழியர்களுடைய வாழ்க்கையில் ஏதாகிலும் நடந்துவிட்டால், அவர்களை ஏற்றுக்கொள்ள நாம் தயங்குகின்றோம், துணிந்து தவறாகப் பேசிவிடுகின்றோம். நமக்கும் தேவனுக்கும் இடையில் அவர்கள் செய்துவரும் ஆசாரியப் பணியினையும் தகர்த்துவிடுகின்றோம். 'என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்' என்று ஆண்டவர் அளித்த வாக்கும்; 'ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்' (2கொரி 12:9) என்ற அர்ப்பணிப்பும் அத்தகைய ஊழியர்களுக்குள் இருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ள மறந்துவிடுகின்றோம்.
மேலும், தரிசனம் கிடைத்தவுடன், எலிசபெத்து கர்ப்பவதியாகிவிடவில்லை; அவன் ஆசாரிய ஊழியத்தை நிறைவேற்றி முடித்த பின்புதான், மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியானாள் (லூக். 1:24); 'அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி' என்றே வேதத்தில் வாசிக்கின்றோம். ஆசாரியனாக சகரியா பணி செய்யும் ஒவ்வொரு நாளும் தூதனால் சொல்லப்பட்ட வார்த்தையை அவன் விசுவாசிக்கவேண்டியதிருந்தது. ஆசாரியப் பணியின் நாட்கள் நிறைவேறியபோது, விசுவாசக் குறைவு மாத்திரமல்ல, குடும்ப வாழ்வின் குறைவும் நிவிர்த்தியானது. ஆம், பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கப்படும் குறைவுகள் நம்மை பூரணப்படுத்துவதற்காகவே. நாம் அவருக்குச் செய்யவேண்டியதைச் செய்தால், அவர் நமக்குச் செய்யவேண்டியதை செய்துமுடிப்பது நிச்சயம். நம்முடைய வேண்டுதல் நிச்சயம் கேட்கப்படும்.
Comments
Post a Comment