Skip to main content

வெற்றிடமும் வெற்றியும்

 வெற்றிடமும் வெற்றியும்




தேவையோடிருக்கும் நாம் மீண்டும் தேவைகள் நிறைந்த இடத்திற்கே வழிநடத்தப்படுவது, தேவ கரம் வெளிப்படுவதற்காகவே. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் (சங். 23:5,6) என்பதைப் போன்ற ஆவிக்குரிய நிறைவான ஆசீர்வாதங்களை நம்முடைய வாழ்க்கையில் அனுபவித்துக்கொண்டிருந்தாலும், குறைவோடிருப்பவர்களோடு கூட இருந்தால், அவர்களையும் நாம் நிறைவாக்கிவிடமுடியும். 

ஆகாப் அரசனுக்கு மறைவாக, கேரீத் ஆற்றண்டையில் எலியா ஒளிந்திருந்தபோது, சில நாட்கள் அங்கு ஆகாரம் கிடைத்தது; எனினும், அவ்விடத்திலும் ஆதாரம் அற்றுப்போனபோது (1இரா 17:7), ஆகாரம் நிறைவாயிருக்கும் இடத்திற்கு எலியா அனுப்பப்படவில்லை. மாறாக, அடுத்த வேளை உணவிற்கே கேள்விக்குரியாயிருந்த சாறிபாத் விதவையின் வீட்டிற்கே அனுப்பப்பட்டான். குறைவான இடத்திலிருந்து மீண்டும் குறைவான இடத்தை நோக்கியே அனுப்பப்படுகிறான் எலியா. நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் (1இரா 17:9) என்று சொன்ன கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு, சாறிபாத் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு எலியா வந்தபோது, விதவையும் அங்கே விறகு பொறுக்கிக்கொண்டிருந்தது, இருவரையும் இணைக்கும்படியாக தேவன் கிரியை செய்துகொண்டிருந்ததையே வெளிப்படுத்துகின்றது. 

தன்னை போஷிக்கும்படியாக கர்த்தர் சொன்ன விதவை அவள்தான் என்பதை அறியாதவனாக, தாகத்திற்குத் தண்ணீரை மட்டுமே முதலில் கேட்டான் எலியா. தண்ணீர் ஒருவேளை அவளுடைய வீட்டில் தாராளமாயிருந்திருக்கக்கூடும்; எனவே, எலியா கேட்டதும் தாமதிக்காமல் தண்ணீர் கொண்டுவரச் சென்றாள் அவள். எனினும், 'கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா' (1 இரா. 17:13) என்ற எலியாவின் தொடர் வார்த்தைகள் அவளது வேகத்தைத் தொய்ந்துபோகச் செய்தது. அப்போது, பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்று உள்ளான நிலையை உச்சரித்தது அவளது உதடுகள் (1 இரா 17:12). வீட்டில் தாராளமாயிருப்பதைக் கேட்டால் தர ஆயத்தம்; ஆனால், நீரோ ஜீவனுக்குள்ளதையே கேட்கிறீரே என்ற உள்ளர்த்தத்தைப் பொதிந்திருந்தது அவளது வார்த்தைகள். நம்முடைய மனதும் இப்படிப்பட்ட நிலையில் ஒருவேளை காணப்படக்கூடும். மிகுதியாயிருப்பதை யாராவது கேட்டால் கொடுத்துவிட ஆயத்தமாயிருப்போம்; ஆனால், நம்முடைய ஜீவனுக்கு ஆதாரமாயிருப்பவைகளையும், குறைவாயிருப்பவைகளையும்கூட ஆண்டவருக்காகக் கொடுத்துவிட நாம் ஆயத்தமா? 

எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் (1இரா 17:13,14) என்று சொன்னபோது, முதலில் ஒரு அடையைப் பண்ணி எலியாவுக்குக் கொண்டுவந்துக் கொடுத்தபோது, ஒரு அடையும் இல்லையென்று சொன்னவளின் வீடு ஆசீர்வதிக்கப்பட்டது. சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 10:42) என்று இயேசு கிறிஸ்து சொன்னாரே. இந்த பலனுக்கு சாறிபாத் விதவையின் வீடு பாத்திரமாயிற்று. 

சில வேளைகளில், சிலருடைய வாழ்க்கையில் தாராளமாயிருப்பவைகளிலிருந்து நாம் பெற்றுக்கொண்டு, காலியாயிருக்கும் அவர்களது மறுபக்கத்தையோ நாம் காணாமற்போய்விடுகின்றோம். அநேகருடைய பாத்திரங்கள் இன்னும் காலியாகவே இருப்பது, இவர்களிடத்தில் என்ன கிடைக்கும் என்ற எண்ணத்தோடு நாம் கடந்துசென்றுவிட்டதே. வாழ்க்கையில் குறைவுள்ள நிலையில் நாம் காணப்படும்போது, நிறைவான இடத்தை நோக்கியே பயணிக்க விரும்புகின்றோம்;ஆனால், தேவையுள்ள மனிதனான எலியா, மீண்டும் தேவையுள்ள வீட்டை நோக்கியே அனுப்பப்படுகின்றான். நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட நிலை உண்டாகக்கூடும். தேவையான நிலையிலிருக்கும் நாம் மீண்டும் தேவை நிறைந்த இடத்திற்கு அனுப்பப்படுவதற்குக் காரணம், அற்பமாக எண்ணப்படுவோர் வாழ்க்கையில் அற்புதம் நிகழவே. 

அப்படியே, தீர்க்கதரிசியாகிய எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனைப் போஜனம்பண்ண வருந்திக்கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான் (2 இரா. 4:8). கனம்பொருந்தியவளாயிருந்தாலும், அவளுடைய வாழ்க்கையோ காலியான பாத்திரமாகவே இருந்தது. எலிசா கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்று சொன்னபோது, அவள் பிரதியுத்தரமாக, என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள். அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான் (2 இரா 4:13,14). உச்சிதமானவைகளால் நாம் உபசரிக்கப்படும்போது, உபசரிப்போரின் உள்ளான காலியிடங்களை நாம் காணாமற்போய்விடக்கூடும். நம்முடைய தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டுக் கொண்டிருக்கும்போது, பிறருடைய வாழ்க்கையின் காலியிடங்கள் நமது கண்களில் தென்படுவது கடினமே. 

தனக்குத் தேவையான தங்குமிடமும் போஜனமும் தவறாமல் கிடைத்துக்கொண்டிருந்தபோதிலும், அவளுடைய வாழ்க்கையில் காலியான பகுதியினை ஆராய முற்பட்டான் எலிசா. அறிந்துகொண்டபோது, ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். எலிசாவின் வார்த்தையின்படியே அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனைப் பெற்றாள் (2 இரா. 4:16,17). தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுடைய மனைவியை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்று எலிசா கேட்டபோது, அவளோ, ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள் (2 இரா 4:2). என்றபோதிலும், தீர்க்கதரிசியான எலிசாவுடனான சந்திப்பு, அவளுடைய வெற்றிடத்தை நிரப்பிற்று. 

அவ்வாறே, தேவனுடைய ராஜ்யத்திற்காகவும், கிறிஸ்துவுக்காகவும் தங்களையே காலியாக்கிக்கொண்டவர்களும் உண்டு. இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள். ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெ டுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார் (மாற் 12:41-44). 

ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததையெல்லாம் போட்டுவிடும்படி யாரும் இவளிடத்தில் சொல்லவில்லை; எல்லாவற்றையும் போட்டுவிட்டால், எனக்கு மீதம் என்ன இருக்கும்? என்ற கேள்விக்கு அவளிடத்தில் விடை இல்லை; என்றாலும், கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்ற விசுவாசத்தோடு எல்லாவற்றையும் போட்டுவிட்டாள். அவளுடைய வீடு எப்படி ஆசீர்வதிக்கப்பட்டது என்பது வேதத்தில் விவரிக்கப்பட்டிருக்காவிட்டாலும், தேவாலத்திலிருந்து வீடு செல்லும்போது ஆசீர்வாதத்தோடுதான் சென்றிருப்பாள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நம்முடைய வாழ்க்கையும் இப்படிப்பட்ட நிலைக்கு உயரவேண்டுமென்றே கர்த்தர் விரும்புகின்றார். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் (1யோவா 3:16) என்ற வெளிப்பாட்டின் மறுவடிவம் இதுவே. 

உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா (லூக் 18:22) என்று சொன்னபோது, கர்த்தருக்காக தன்னை காலியாக்கிக்கொள்ள அவன் ஆயத்தமாயில்லை. அவனுடைய பரலோக பொக்கிஷம் வெறுமையாகிப்போனது. 


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி