உண்மையில்லாதவர்களோடே பங்கு
என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான். (லூக் 12:46)
இயேசுவின் வருகை தாமதமாகிக்கொண்டேயிருக்கின்றது, என்றபோதிலும், இன்றோ, என்றோ, எப்போது வந்தாலும் ஆயத்தமாயிருக்கவேண்டும் என்று வசனம் நம்மை நினைப்பூட்டிக்கொண்டேயிருக்கின்றது. காலதாமதமாகும் வருகைக்காக காத்திருக்கும் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதனை அறிந்துகொள்வது அவசியம். 'எஜமானனே, என் இயேசு ராஜனே' என்று உதட்டளவில் பாடிவிட்டு, உடனிருப்போரை உபத்திரவப்படுத்துகிறவர்களாக நாம் காணப்படக்கூடாது. இயேசுவை அறிந்துகொண்டோராய், சக மனிதர்களைப் புரிந்துகொள்ளாமல் வாழும் மக்கள் ஏராளம் ஏராளம். இத்தகையோர் உன்னதரோடு ஒட்டியும், உடனிருப்பவர்களோடு உரசிக்கொண்டேயும் தங்கள் வாழ்நாட்களைக் கழிக்கின்றனர். நம்முடைய எஜமானுக்கு முன்பாக நாம் எப்படிக் காணப்படவேண்டும், எஜமான் நம்மிடத்தில் கொடுத்தவர்களை கொடுமைப்படுத்தினால் என்ன விளைவினைச் சந்திக்க நேரிடும் என்பதை இயேசு உவமையின் மூலமாக விளக்கிக் கூறினார். வீட்டிலிருந்து வெளியே கலியாணத்திற்குச் சென்ற ஓர் எஜமானன், தான் திரும்பி வரும் வரை வீட்டில் உள்ளவைகளையும், உள்ளவர்களையும் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளும்படியாக ஒரு ஊழியக்காரனை நியமித்தான். எஜமான் உடன் இருக்கும்வரை அவன் அடகத்துடன், அமைதியாக மற்ற வேலைக்காரர்களுள் ஒருவனைப் போல வீட்டில் இருந்திருப்பான்; ஆனால், எஜமான் வெளியிலே சென்றுவிட்டபோதோ, இவன் தன் குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டான். இன்று அநேகரின் நிலை இதுவே, கொஞ்சம் அதிகாரம் கிடைத்தவுடன், தனக்குக் கீழ் இருப்போரை கொன்றுவிடுவார்கள், அடிமைகளைப் போல நடத்துவார்கள், தனது அதிகாரத்தையே அவ்வப்போது வெளிக்காட்டிக்கொண்டிருப்பார்கள். தான் தான் எல்லாம் என்பது எல்லோருக்கும் தெரியவேண்டும் என்றே அவர்களது அத்தனை செயல்களும் அமையும்.
இத்தகையோருக்கு யோசேப்பு ஓர் முன் மாதிரி. யோசேப்பு பதவியை அல்ல, தேவனையே எப்போதும் பார்க்கிறவனாயிருந்தான். பார்வோனுடைய பிரதானியும், தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தானுடைய வீட்டில் யோசேப்பு வேலை செய்துகொண்டிருந்தான். அவன் தனக்கு உண்டான எல்லாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்திருந்தான் (ஆதி. 39:1,4). என்றபோதிலும், யோசேப்பு தனது பிரதானமான எஜமானாக தேவனையே சார்ந்துகொண்டிருந்தான். உலகப்பிரகாரமான பதவியை அவன் ஒரு பொருட்டாக எண்ணவில்லை, வஸ்திரத்தைப் போல உதறவும் ஆயத்தமாயிருந்தானே. ஆனால், இன்றோ, ஏதாவது பதவியோ, அதிகாரமோ கிடைத்துவிட்டால், தேவனையே மறந்துவிடுகின்றனர் பலர்; இதுவே மனிதர்களை அவர்கள் மதிக்காததற்குக் காரணம். போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் கண்சாடையாயிருந்து, நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை (ஆதி 39:10); காரணம், யோசேப்பின் எஜமான் தேவனல்லவா! ஆனால், ஆமானோ, அது ராஜாத்தியின் படுக்கை என்பதைக் கூட கவனத்தில் கொள்ளாமல், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் விழுந்துகிடந்தான் (எஸ்தர் 7:8). யோசேப்பு உயர்த்தப்பட்டான், ஆமான் உயிரைவிட்டான். நமக்கு உயர்ந்த ஸ்தானங்கள் கிடைக்கும்போது எப்படி நடந்துகொள்கின்றோம்?
எஜமான் திரும்பி தனது வீட்டிற்கு வரும் முன்னர், வீட்டிற்கு பொறுப்பாக வைக்கப்பட்டிருந்த ஊழியக்காரன் கலவரத்தையே ஏற்படுத்திவிட்டான். வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டான் (லூக். 12:46). தேவனால் நியமிக்கப்பட்ட மனிதர்கள், தங்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டுள்ள மனிதர்களிடத்தில் நடந்துகொள்ளும் விதத்தை அறிந்துகொள்ளவும், வரும் நாட்களில் புரிந்து செயல்படவுமே இயேசு இதனைப் போதித்தார். அதிகார வர்க்கத்தில் அமர்த்தப்பட்டிருக்கிற ஒவ்வொருவரும், அதிகாரத்தைப் பெற்றிருக்கிற ஒவ்வொருவரும், அதிகாரத்தை விரும்புகின்ற ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இது. அநேக வேலைக்காரர்கள் தங்கள் அதிகாரிகளைக் குறித்து நற்சாட்சி சொல்லக்கூடாதவர்களாகவே இருக்கின்றனர்; காரணம் வேலைக்காரர்களிடத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் விதமே. நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட் ஜனங்களை நாம் எப்படி நடத்துகின்றோம்? எப்படி நேசிக்கின்றோம்? அவர்களிடத்தில் நமது அன்பை வெளிக்காட்டுகின்றோமா அல்லது அதிகாரத்தை வெளிக்காட்டுகின்றோமா? இது நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் செயல். எஜமானுடைய வீட்டிலே அதிகாரியாக வைக்கப்பட்டிருக்க ஓர் மனிதன், வீட்டிலுள்ள சக மனிதர்களைச் சங்கடப்படுத்தும்படி நடந்துகொண்டதால், வீட்டிலிருந்து தூக்கி எறியப்பட்டான். 'என் எஜமான்' என்று அவன் சொன்னபோதிலும், அதே எஜமானை 'என் எஜமான்' என்று சொல்லக்கூடிய மற்ற வேலையாட்களை அவன் மதிக்கவில்லையே. தன் எஜமானின் விருப்பப்படி அவனது செயல்கள் அமையவில்லையே. இயேசுவின் வருகை தாமதிக்கும் நாட்களில், மற்றோரை நாம் எப்படி மதிக்கிறோம்.
ஒரு ராஜா கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான் (மத். 18:24,26). கடனைக் கொடுக்கும்படியாகக் கேட்டபோது, 'கடனை மன்னித்துவிடும்' என்று அந்த ஊழியக்காரன் ராஜாவினிடத்தில் மன்றாடவில்லை; 'கொடுத்துத் தீர்க்கிறேன்' என்றுதான் சொன்னான். கொடுத்துத் தீர்க்கிறேன் என்று சொன்னவனுக்கு மன்னிப்பு கிடைத்தது. நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் இத்தகைய கிருபையை நாம் அனுவித்திருப்போம், நான் செய்தது தவறுதான், அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொள்கிறேன் ஆண்டவNர் என்று தண்டனையைப் பெற நாம் ஆயத்தமாயிருக்கும்போது, ஆண்டவர் தனது அன்பைக் காட்டி அனைத்தையும் மன்னித்துவிட்டதை எச்சூழ்நிலையிலும் மறந்துவிடலாகுமோ? கர்த்தருக்கு விரோதமாக நாம் செய்த காரியங்களுக்கெல்லாம், மன்னிக்கப்படாமல் கணக்குக் கேட்கப்பட்டால், கொடுத்துத் தீர்க்கும் தகுதி நம்மிடத்தில் உண்டோ? பல நேரங்களில், நமது செயல்களாலும், சிந்தையினாலும், வார்த்தைகளினாலும் நாம் அவரை சிலுவையில் அறையும் போது, 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' என்ற வார்த்தை இன்றும் அவரது வாயிலிருந்து நமக்காக வந்துகொண்டிருக்கிறதல்லவா! பரிந்துபேசுகிறவர் இல்லையென்றால், நம்முடைய நிலை பரிதாபம்தானே! நம்முடைய முடிவு பாதாளம்தானே! இத்தனை அன்புள்ள இயேசுவினாலேயே நாம் நியமிக்கப்பட்டிருக்கின்றோம். யோவான் தன்னுடைய நிருபத்தில், 'என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்' (1யோவா 2:1) என்று எழுதுகின்றார்; இதன் அர்த்தம் என்ன? நாம் பாவம் செய்யும்போது, இயேசு பிதாவினிடத்தில் நமக்காக பரிந்துபேசுகின்றார்; எனவே, இயேசுவின் வேலையை அதிகரிக்கச் செய்யாதிருங்கள்; சிலுவையில் நமக்காக ஜீவனைக் கொடுத்த அவரை பரத்திலாவது இளைப்பாறவிடுங்கள். 'பிள்ளைகளே, தயவு செய்து பாவம் செய்யாதிங்க, நீங்க பாவம் செய்தா, இயேசுதான் தினம் தினம் பிதாவினிடத்தில போய் நிற்கனும்' என்று யோவான் புரியவைக்கிறார். இயேசுவின் அனுதின பணியினைக் கூட்டுகிறவர்களா நாம்?
குற்றம் செய்துவிட்ட ஓர் மனிதன் காவல்துறையினரால் பிடிக்கப்படுகின்றான்; கைதுசெய்யப்படுகின்றான்; குற்றம் நிரூபிக்கப்படும்போது சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனையை அனுபவிக்கும்படி தள்ளப்படுகின்றான்; பின்னர், வக்கீல் மூலமாக ஜாமீனில் வெளியே எடுக்கப்பட்டு வீதியில் உலாவுகின்றான்; இது உலக நியதி. இதைப்போன்றதுதானே நம்முடைய நிலையும், தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களைச் செய்யும்போது, தேவனால் பிடிக்கப்படுகின்றோம், இதைக் காணும் இயேசுவோ உடனே பிதாவினிடத்தில் ஓடிச் சென்று பரிதபித்தவராக நமக்காகப் பரிந்துபேசி, பிதாவே விட்டுவிடும் என்னுடைய இரத்தத்தினால் அவனை நான் கழுவிவிடுகின்றேன் என்று விடுவிக்கின்றாரே. ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும், நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன் (லூக். 13:8) என்று மேலும் தன்னுடைய வேலையை தோட்டக்காரனாகக் கூட்டிக்கொள்கின்றாரே. இப்படிப்பட்ட இயேசுவினால் விடுவிக்கப்பட்டவர்களல்லவா நாம்.
ஆனால், தனது எஜமானிடத்தில் அத்தனை கடனுக்கும் மன்னிப்பினைப் பெற்றிருந்த அவன், புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன் பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான் (மத் 18:28-30).
இதுNவே, இன்று அநேகர் சிறை வாழ்வை அனுபவிப்பதற்குக் காரணம். தேவனிடத்தில் மன்னிப்பைப் பெற்றிருந்தும், மனிதர்களை மன்னிக்கத் தெரியாதவர்கள் இவர்கள், தேவன் தன்னை தூக்கு மேடையிலிருந்து தப்புவித்திருக்க, மற்றவர்களை தூக்கு மேடைக்கு ஏற்றுகிறவர்கள். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் (மத் 6:12) என்று ஜெபம்பண்ணக் கற்றுக்கொடுத்தாரே இயேசு. ஆனால், கற்றுக்கொண்ட பாடம் அநேகருக்கு காற்றோடு போய்விட்டது. நம்முடைய ஊழியத்தில் இருக்கும் உடன் சகோதரர்களிடத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், ஊழியத்தில் நம்முடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கும் வேலைக்காரர்களிடத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம். 'என் எஜமானாகிய இயேசு எனக்கு மன்னிப்பார், ஆனால், உன் எஜமானாகிய நான் உனக்கு மன்னிக்கமாட்டேன்' என்பதுதான் நமது நிலையேர் மனம் திரும்பவில்லையென்றால், மரணம்தான்; ஆம், அதுதானே பாவத்தின் சம்பளம். குடும்பத்தில், தனி வாழ்வில், ஊழியங்களில், அலுவலகங்களில், உறவினர்கள் மத்தியில் இன்னும் நமக்கு பிரச்சனைகள் தொடருகின்றனவா? தேவனால் விடுவிக்கப்பட்டிருந்தும், இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டிருந்தும், அபிஷேகம் பெற்றிருந்தும், அந்நியபாஷையைப் பேசிக்கொண்டிருந்தும், தாலந்துகள் பலவற்றைச் சுமந்துகொண்டிருந்தும், கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்துகொண்டிருந்தும் நம்முடைய வாழ்க்கையில் சிறை அனுபவமா? நல்ல பங்கை நாம் தெரிந்துகொண்டிருந்தாலும், நமக்கு பங்கு உண்மையில்லாதவர்கள் மத்தியில் நியமிக்கபடுகின்றதா? நம்முடைய செயல்களை மாற்றிக்கொள்ளுவோம், அன்பை அணிந்துகொள்ளுவோம், நம்மால் நெருக்கப்படும் மக்களும் நாம் ஜெபிக்கும் தேவனிடத்திலேயே சென்று முறையிடுவார்கள் என்ற புரிந்துணர்வு வாழ்கையில் உருவாகட்டும். தீர்வு தேவனிடத்திலிருந்து வெளிப்படும் முன் திருத்திக்கொள்ளுவோம் நம்மை.
Comments
Post a Comment