Skip to main content

இவர்களே இடறல்கள்

இவர்களே இடறல்கள்

 

பயணத்தின் முதற்படி: இயேசுவோடுகூட ஒரு மனிதனுக்கு உண்டாகும் தொடர்பினைக் காணும் சத்துருவின் கூட்டத்தார், அதனை முறித்துவிடவே வகை தேடுவர். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் மத்தியஸ்தராக வந்து பிதாவோடு நேரடியாகப் பேசும்படி நம்மை இணைத்தவர் இயேசு ஒருவரே (எபி. 8:6, 9:15, 12:24). தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே (1தீமோ. 2:5). இந்த மத்தியஸ்தரைக் காணமுடியாதபடி, மத்தியஸ்தருக்கும் நமக்கும் இடையில் மறித்து நிற்கும் மனிதர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். பிதாவைப் பார்க்கும்படியாக பாதையினை உண்டாக்கியவர் இயேசு, பாதையானவர் இயேசு, ஆனால், இந்தப் பாதையைப் பார்க்கவிடாமல் நமது பார்வையினை இழக்கச் செய்யும் பாவங்களைச் செய்யத் தூண்டும் மனிதர்களைக் குறித்து கவனமாயிருக்கவேண்டும். அவர்கள் சத்துருவின் தோழர்களே. இப்படிப்பட்ட மனிதர்களை சத்துரு அனுப்பும்போது, அதனை நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். வந்துபோகும் மனிதர்கள் ஒவ்வொருவரைக்குறித்தும், கடந்துபோவோரைக் குறித்தும் ஒவ்வொரு நாளும் நாம் எச்சரிக்கையுடன் காணப்படவேண்டும். சிலுவையின் மரணத்தினால் இயேசு திறந்த வாசலுக்குள் நாம் நுழைந்துவிடாதபடி அடைத்து நிற்கும் மனிதர்களை அகற்றுவதும், அப்படிப்பட்டோரை விட்டு அகன்று போவதுமே நமது பயணத்தின் முதற்பணியாகட்டும். இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் இவர்களைக் குறித்த எச்சரிக்கை தேவை. நம்மோடு உரையாடும் மனிதர்கள், தேவனுடனான உறவை உடைத்துவிடக்கூடாதே, தேவன் நம்மை அனுப்பிய திட்டத்தினின்று நம்மை திசைதிருப்பிவிடக்கூடாதே; நம்மோடு உரையாடும் மனிதர்கள் தரிசனத்திலிருந்து நம்மை தடம்புரளச் செய்துவிடக்கூடாதே; எனவே, வழியில் சந்திப்பது எவராக இருந்தாலும், விழியினை தேவன் மேலேயே வைத்து வாழ்வதே நமது ஓட்டத்தைக் காக்கும், முடிவைத் அடையச்செய்யும் என்பது நிச்சயம்.

யாக்கோபு முதிர்வயதானபோது, தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன் என்றான் (ஆதி. 49:1). ஒவ்வொரு குமாரரைக் குறித்தும் வௌ;வேறு விதமான காரியங்களை யாக்கோபு சொல்லிக்கொண்டேவந்தபோது, தாணைக் குறித்து: 'தாண், இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான் என்றும், தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப் போலவும் இருப்பான் (ஆதி. 49:17) என்றான். ஓடுகிறவனை விழத்தள்ளுகிறவன் இந்த தாண், ஓடுகிறவனுக்குக் குறுக்கே நிற்பவன் அவன், ஓடிக்கொண்டிருக்கின்றவர்களை மறித்து நிற்பவன், மல்லாந்து விழும்படிச் செய்பவன். தாணைத் தொட்டுவிடாமல் தாண்டிச் செல்லாததினாலேயே, பலருடைய வாழ்க்கை தரையில் புதைக்கப்பட்டுவிட்டது. தாணைப் போல வாழும் மனிதர்களைக் குறித்து நாம் கவனமாயிருக்கவேண்டுமே. தரிசனத்தைப் பெற்று, அதனைச் செய்து முடிக்கும்படி விரமாகவும், வைராக்கியத்துடனும் புறப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் நமது கால்களை இத்தகையோர் கடித்துவிடக்கூடாது. உங்கள் ஓட்டத்தைக் குறித்தும், உங்கள் உடனிருப்போரைக் குறித்தும் கவனமாயிருங்கள்; அவர்கள் உங்களோடு கூட ஓடுகிறவர்களா அல்லது உங்கள் கால்களைக் கடிக்கிறவர்களா? உங்களோடுகூட மல்யுத்தம் செய்பவர்களா அல்லது உங்களை மல்லாந்து விழச்செய்பவர்களா? இந்த தாணின் செயல்பாடுகள் பல்வேறு விதங்களில் நமது வாழ்க்கையின் குறுக்கே வரலாம்.

எதிரே நிற்கும் எதிர்பால்: எதிர்பாலரின் எதிர்ப்பால் வீழ்ந்துபோனவர்கள் அநேகர் உண்டு. எப்படிப் பேசவேண்டும், எப்படிப் பழகவேண்டும், எந்நிலைவரை தொடர்பினை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அறியாதவர்கள் அதன் எதிர்பாலரின் எதிர்ப்பால் விழுந்துபோகின்றனர். புத்தியீன வாலிபன் ஒருவனின் பயணத்தின்போது, வேசியான ஒரு ஸ்திரீ எதிர்ப்பட்டாள் (நீதி. 7:10). அவள் அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணியவள், பலவான்கள் அநேகரைக் கொலை செய்தவள். அவளுடைய குணத்தையோ, அவளால் உண்டாகப்போகும் ஆபத்தையோ அந்த வாலிபன் முன்னறியவில்லை. அவள் அந்த வாலிபனை நோக்கி: வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம் (நீதி 7:18) என்று சொல்லி அவனை அவனை அழைத்துக்கொண்டுபோனாள். இன்னொருவனுடைய மனைவி தன்னை அழைக்கிறாளே, இது நியாயமா? தவறல்லவா? பாவமல்லவா? வேண்டாம் என்று விலகிச் செல்லவில்லை அந்த வாலிபன். இன்பம் என்றவுடன் அவள் வார்த்தைக்கு இணங்கிவிட்டான். ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது (நீதி. 7:23). வாலிப நாட்களில் இத்தகைய செயல்களால் வாலிபத்தைக் கறையாக்கிக்கொண்ட வாலிபர்கள் அநேகர். வாலிபராகவோ அல்லது திருமணமானவராவோ இருந்தாலும், அலுவலகத்தில் உடன் பணிசெய்வோரானாலும், கல்லூரியில் உடன் பயிலுவோரானாலும், ஒரே சபைக்கு வருவோரானாலும் எதிர்பாலினரோடு வேலியைத் தாண்டிய தொடர்பும், வேலியைத் தாண்டிய உறவும் வேண்டாம். எதிரே வருவது யார்? உன் ஆவிக்குரிய கண்களைத் திறந்து பார். தேவன் நடத்திக்கொண்டிருக்கும் பாதையில் இடைமறித்த போத்திப்பாரின் மனைவியிடம் சிக்கிக்கொள்ளாமல் ஓடியதால் அல்லவோ சிங்காசனத்தை அடைந்தான் யோசேப்பு. சிம்சோனோ தோல்வியடைந்தான்.

எதிரியாய் நிற்கும் உடன் ஊழியர்கள்: ஊழியர்களாகிய நாம், ஊழியர்கள் என்ற போர்வையில் இருக்கும் மற்றவர்களால் புதைக்கப்பட்டுவிடக்கூடாது. பாதையில் வரும் போலியானவர்களை அடையாளம் கண்டுகொண்டு, ஆண்டவர் கட்டளையிட்டதையோ நோக்கிப் பயணிக்கும் கால்கள் நமக்குத் தேவை. தேவனால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டபோதிலும், கிழட்டுத் தீர்க்கதரிசியினால் வீழ்த்தப்பட்டான் தேவமனுஷன். ராஜாவாகிய யெரோபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, அந்த பலிபீடத்துக்கு நடக்கவிருக்கும் காரியங்களை தீர்க்கதரிசனமாக அறிவித்தான். 'இதோ இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்' (1இராஜா. 13:9) இதுவே அடையாளம் என்றான். அந்த தேவனுடைய மனிதனுக்கு விரோதமாக ராஜாவாகிய யெரொபெயாம் கரத்தை நீட்டியபோது, தேவனால்கூட அதனைப் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை; இராஜாவின் கரத்தை மரத்துப்போகச் செய்தார் (வச.4). மரத்துப்போன கையோடு இராஜா நின்றுகொண்டிருந்த அந்த தேவனுடைய மனுஷனின் வேண்டுதலைக் கேட்டே தேவன் சுகத்தையும் கொடுத்ததார். இத்தனை வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட அவனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்று (1இரா 13:7) இராஜா சொன்னபோது, தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை; இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை. ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வர்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி, அவன் பெத்தேலுக்கு வந்தவழியாய்த் திரும்பாமல், வேறுவழியாய்ப் போய்விட்டான் (1இரா 13:8-10). 'நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போனவழியாய்த் திரும்பிவராமலும் இரு' (1இராஜா. 13:17) என்று கர்த்தர் அவனிடம் சொல்லியிருந்தார்.

ராஜாவிடம் தேவமனுஷன் சொன்ன வார்த்தைகளை அங்கிருந்த அநேகர் கேட்டிருக்கக்கூடும்; அவர்களுள், கிழட்டுத் தீர்க்கதரிசியின் குமாரர்கள் அடங்குவர். அவர்கள் தேவனுடைய மனுஷன் அன்றைய தினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள் (1இரா 13:11). சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று பாடியதால் சவுலுக்கு உண்டான கோபத்தைப் போல, குமாரர்களின் வாயிலாக தேவமனுஷன் செய்தவைகளைக் கேட்ட தீர்க்கதரிசியாகிய அவர்களது தந்தை கோபமடைந்தான்; குமாரர்கள் அறிவித்த தேவமனுஷனை அழிக்கும்படி புறப்பட்டான். 'குமாரர்கள் அறிவித்ததின் மூலம், எப்படி வீழ்த்தலாம் என்பதை அறிந்திருந்தான் கிழட்டுத் தீர்க்கதரிசி.' கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமற்பண்ணி, கல்லறைக்கு அனுப்பிவிடவேண்டும் என்பதுதான் அவனது திட்டமாயிருந்தது. அதை நிறைவேற்றும்படியாகத் தீவிரித்தான். கர்வாலி மரத்தின் கீழ் இளைப்பாறிக்கொண்டிருந்த தேவமனுஷனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான். உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய்சொன்னான் (1இரா 13:15,18). அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக்கொண்டு வந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதினால், அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி, அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்துக்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (1இரா 13:20-22). விழவைக்கவேண்டும் என்பதற்காகவே விருந்துகொடுத்தான் கிழட்டுத்தீர்க்கதரிசி. அடுத்த தீர்க்கதரிசியை விழத்தள்ளுவதில் ஆனந்தம் கொள்பவன் அவன். எனவே, பாதையில் குறுக்கிட்டு, தேவமனுஷனை மரணத்தையே சந்திக்கும்படிச் செய்துவிட்டான். தேவமனுஷன் அதைச் செய்யக்கூடாது என்பதை அறிந்திருந்தபோதிலும், தீர்க்கதரிசி என்ற பேர்ர்வையைப் போர்த்திக்கொண்டவனாக தேவமனுஷனைச் செய்யும்படி வற்புறுத்தினான். ஊழியர்கள் என்ற பெயரில் வருவோரோடு பேசும்போதும் கவனம் தேவை என்பதைத்தானே இச்சம்பவம் உணர்த்துகின்றது. என்னைப் போல அவரும் ஒரு அப்போஸ்தலன் எனவே அவர் சொன்னைக் கேட்டு இப்படிச் செய்தேன், என்னைப்போல அவரும் ஒரு போதகர் எனவே அவர் சொல்வதைக் கேட்டு இப்படிச் செய்தேன், என்னைப் போல அவரும் ஒரு வரம்பெற்ற ஊழியர் எனவே அவர் சொன்னதைக் கேட்டு இப்படிச் செய்தேன், என்னைப்போல அவரும் ஒரு தீர்க்கதரிசி எனவே அவர் சொன்னதைக் கேட்டு இப்படிச் செய்தேன் என்று செய்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். நமக்கு தேவன் சொன்ன காரியங்களை விட்டு யாரும் நம்மை விலக்கிவிடக்கூடாதே.

பிற ஊழியரை எப்படி வீழ்த்துவது, பிற ஊழியங்களை எப்படி கவிழ்ப்பது, பிற ஊழியங்களுக்கு ஜனங்கள் மத்தியில் இருக்கும் மரியாதையை எப்படி அழிப்பது என்ற எண்ணத்தோடு, பயணத்தின் குறுக்கே வருவோரைக் குறித்து எச்சரிக்கையாயிருப்போம். அவர்களது சாதகமான ஆலோசனைகள், நம்மை சத்தியத்தை விட்டு விலகச் செய்துவிடும்.  

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...