வனாந்தரம் வலையாகட்டும்
அவனோ புறப்பட்டுப் போய், இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். (மாற் 1:45)
நம்மை வடிவமைப்பதுடன், பிறரையும் வடிவமைப்பதற்காகவே வனாந்தரம் நமது வாழ்க்கையில் அனுமதிக்கப்படுகின்றது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தர வழியாக வந்ததைப் போல, இவ்வுலகத்தில் வாழ்க்கையைத் தொடரும் மனிதர்களின் பாதங்களும் வனாந்தரம் என்னும் பாதையின் வழியாக பயணிக்கவேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனினும், எதற்காக வனாந்தரத்தில் நாம் விடப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்வது அவசியம். இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார் (மத் 4:1). அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள் (மாற் 1:13).
சோதனையின் ஒருபுறத்தை மாத்திரமே நாம் பார்ப்பதினால், மறுபுறத்திற்கு நாம் தூரமாகிவிடுகின்றோம். நாம் சோதிக்கப்படுகின்ற வேளையிலும், உன்னதத்திலிருந்து நமக்கு பெலன் வருகின்றது என்பதே உண்மை. எனினும், பல நேரங்களில் சோதனையின் மேலேயே கண்களை வைத்தவர்களாக, சோதனையைக் குறித்தே அதிகம் விவரிக்கிறவர்களாக, பிசாசையே பெரிதுபடுத்திப் பேசுகிறவர்களாக வாழ்வதினால், உன்னதத்திலிருந்து வரும் பெலனைக் காணக்கூடாதவர்களாகிவிடுவின்றோம். கெத்சமெனே தோட்டத்தில், பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று இயேசு கிறிஸ்து ஜெபம்பண்ணினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான் (லூக் 22:42,43) என்று வாசிக்கின்றோமே. எல்லாரும் ஓடிவிடக்கூடிய பாத்திரத்தைச் சுமக்கும் வேளை; என்றாலும், பரலோகம் அவரைக் கைவிடவில்லை; நம்முடைய வாழ்க்கைக்கும் இது பாடமாகட்டும்.
வனாந்தரத்தில் இயேசு கிறிஸ்து சோதிக்கப்பட்டார்; என்றபோதிலும், ஊழியத்தின் நாட்களில் வனாந்தரத்தில் அவர் இருந்தபோது ஜனங்கள் அவரைத் தேடிவந்தார்கள். அவர் வனாந்தரத்தில் தங்கியிருக்கிறார் (மாற். 1:45) என்பதை அறிந்தபோதிலும்கூட, ஜனங்கள் அவரை தேடிச் சென்றார்களே. இப்படிப்பட்ட நிலை நம்முடைய வாழ்க்கையிலும் உருவாகவேண்டும். நம்முடைய வாழ்க்கை வனாந்தரமான சூழ்நிலையில் இருந்தாலும், வசனத்தைக் கேட்கும்படியாக ஜனங்கள் நம்மைத் தேடிவரவேண்டும்.
வனாந்தரமான சூழ்நிலைகளில் நாம் காணப்படும்போது, வனாந்தரத்தை விட்டு நாம் விரைவில் வெளியேறிவிடவே நினைக்கிறோம்; ஆனால், ஆண்டவரோ, வனாந்தரத்திலேயும் ஜனங்களை நம்மண்டை கூட்டிச் சேர்க்கிறார். என்றபோதிலும், நம்மைப் பார்க்கவரும் ஜனங்களுடைய வார்த்தைகளை மட்டுமே நாம் கேட்டு கேட்டு, நாம் அவர்களிடத்தில் பேசவேண்டியது என்ன என்பதையோ மறந்துவிடுகின்றோம். நம்முடைய வியாதியைக் குறித்தே, பாடுகளைக் குறித்தே, பிரச்சனைகளைக் குறித்தே பேசி பேசி அவர்களுடைய ஆத்துமாவையோ விசாரிக்காமல் அனுப்பிவிடுகின்றோம். நாம் வனாந்தரத்தில் இருக்கும்போது, ஜீவ அப்பத்தை அறியாதவர்கள், ஜீவத் தண்ணீரைப் பருகாதவர்கள், கிறிஸ்துவுக்கு அந்நியராயிருப்பவர்கள், இரட்சிப்பின் வஸ்திரமில்லாதவர்கள், பாவத்தினால் வியாதியோடிருப்பவர்கள் மற்றும் பிசாசினால் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் நம்மைப் பார்க்கவரக்கூடுமே; அப்படிப்பட்டவர்களிடத்திலிருந்து விசாரிப்பை மட்டும் பெற்றுக்கொண்டு, சுவிசேஷத்தை அறிவியாமற்போவோமென்றால், அவர்கள் சுகமாகத் திரும்பிச் செல்ல இயலாதே. மற்றவர்களைப் பிடிப்பதற்காக வனாந்தரம் நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாமே. கடலில் இருக்கும் மீன் தரையில் இருக்கும்மனிதனை விசாரிக்கவரும்போது, வலைவீசவேண்டிய அவசியமிருக்காது; கைகளாலேயே பிடித்துவிட முடியுமே. நம்முடைய வனாந்தரம் மற்றொரு ஆத்துமாவுக்கு வலையாகக்கூடும்.
மேலும், அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது எனறு பிரசங்கம் பண்ணினான். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே (மத். 3:1-3). அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள் (மத் 3:5,6).
விசாரிக்கப்படுவதற்கு மாத்திரமல்ல, யோவானைப் போல பிரசங்கிப்பதற்கும், மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் கொடுக்கிறதற்கும் நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். இஸ்ரவேல் ஜனங்களைப் போல வனாந்தரத்தில் முறுமுறுத்துக்கொண்டிருந்தால், வனாந்தரத்தில் எதற்காக வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற காரணத்தையும், பிறரோடு என்ன பேசவேண்டும் என்பதையும் மறந்துவிடுவோம், அத்துடன் பின்னிட்டு திரும்பிப் பார்க்கும் நிலைக்கும் நாம் ஆளாகிவிடுவோம்.
பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை (மத் 25:42,43) என்றாரே. வனாந்தரத்தில் இருப்போரைச் சென்று பார்ப்பதினாலோ, உதவிசெய்வதினாலோ மாத்திரம் நித்திய ஜீவனுக்கு உள்ளே நுழைந்துவிடமுடியாது. 'என்' 'என்னை' 'எனக்கு' 'எனக்கே' (மத். 25:35,36,40,42,43,45) என்பது அவரை அறிந்தவர்களாக உதவி செய்ததையும், அறியாதவர்களாக உதவி செய்ததையுமே சுட்டிக்காட்டுகின்றது. உதவிசெய்தபோது 'அவருக்கே செய்கிறோம்' என்ற உணர்வோடு செய்ததினால், அவரோடு உண்டான உறவினாலேயே நித்திய ஜீவனுக்கு உள்ளே பிரவேசித்தார்கள் (மத். 25:46). வாழ்க்கையோடு அவருடன் உண்டாகும் உறவே பரலோகத்தின் உள்ளே நம்மை நுழையச் செய்யும்; தேவனை அறியாமல், மனுஷர் பார்க்கும்படியாக மட்டுமே செய்தால் 'அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்தது' (மத். 6:5) என்ற நிலைக்கே ஆளாவோம்.
பவுல் சிறையில் அடைக்கப்பட்டபோது, ஒநேசிமுவைப் பெற்றெடுத்தார். தனது கட்டுகளைப் பார்த்து பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கவில்லை. அங்கேயும், ஆதாயம்பண்ணிக்கொள்வதற்காக ஓர் ஆத்துமா அவருக்கு இருந்ததே. ஒநேசிமு என்ற ஒரு மனிதனுக்காக சிறைவாசம் பவுல் வாழ்க்கையில் அனுமதிக்கப்பட்டதே. கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன். முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன் (பிலே. 1:10,11) என்று தனது நிருபத்தில் எழுதுகின்றாரே.
பவுல் தீரு பட்டணத்தில் தங்கியிருந்தபோது, அவ்விடத்திலுள்ள சீஷர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள் (அப் 21:4). அப்போது, அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து; வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்று சொன்னான்; இவைகளை உடனிருந்தவர்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, அவனை வேண்டிக்கொண்டார்கள். அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான். (அப் 21:11-13)
பிறருடைய அழுகை வனாந்தரத்திற்குள் பிரவேசிக்கவிடாதபடி நம்மை தடுக்கக்கூடும்; என்றாலும், கிறிஸ்துவுக்காக தன்னை அர்ப்பணித்தோரின் பயணமோ வனாந்தரமான நிலையிலும் நிற்காமலேயே தொடரும். நம்முடைய வனாந்தர வாழ்க்கையை எதற்காகப் பயன்படுத்துகின்றோம்? நம்முடைய வனாந்தரத்தில் பிறருக்கு ஆகாரமுண்டா? நம்முடைய வனாந்தரம் பிறரை சந்தோஷப்படுத்தக்கூடுமா? நம்முடைய வனாந்தரம் பரப்புவது வருத்தத்தையா அல்லது சுவிசேஷத்தையா? நம்முடைய வனாந்தரத்தில் அதிகமாகப் பேசப்படுவது பிரச்சனையா அல்லது பிதாவுக்கடுத்த காரியமா? நம்முடைய வனாந்தரத்தில் பெரியதாகக் காணப்படுவது பிசாசா அல்லது பிதாவா?
Comments
Post a Comment