Skip to main content

நியாயமா? நீதியா?

நியாயமா? நீதியா?


தேவன் நீதிபரர், நம்மையும் நீதிமான்களாக மாற்றுகிறவர், அதற்கென்று சொந்தக் குமாரனென்றும் பாராமல் இயேசுவையே பலியாக சிலுவையில் கொடுத்தவர். எத்தனையாய் பிதாவை விட்டு வழி விலகிப் போனாலும், உலகத்தின் இறுதியில் நடைபெறவிருக்கும் நியாயத்தீர்ப்புக்கு முன்னர் நம்மை நீதிமானாக விரும்புகிறவர். தேவனது நியாயத்தீர்ப்பினை இன்னும் மனுக்குலம் சந்திக்கவில்லை; அதற்குள்ளாக அவரை அண்டிக்கொண்டு நீதிமானாகிவிடுவதற்கு நமக்குத் தருணம் தரப்பட்டிருக்கிறது. நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கின்றோம் (ரோம 5:9). தேவனுக்கு விரோதமாக மனிதர் எத்தனையோ பாவங்களை இப்புவியில் செய்துகொண்டிருந்தாலும், பாவத்தின் மேல் பாவத்தினை அதிகரித்துக்கொண்டிருந்தாலும் நியாயம் தீர்த்து விரைவில் மனிதரை நித்திய ஆக்கினைக்குள் தள்ளிவிடவேண்டும் என்று ஆசைப்படாமல், தனது குமாரனாகிய இயேசுவின் வருகையைத் தள்ளிப்போட்டுக்கொண்டேயிருக்கின்றார். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2பேது 3:9). எனவே, அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 15:7) என்றார் இயேசு. எனவே தாவீது, அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார் (சங் 103:10) என்று தேவனைக் குறித்து எழுதுகின்றார். 

குற்றவாளியாக நம்மை கூண்டுக்குள் மாத்திரம் நிறுத்திவிட்டு, நியாயாதிபதியாக தேவன் சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டிருப்பவரல்ல. நமக்கு நியாயத்தீர்ப்பு நடக்கும் முன்னதாக, நம்முடைய குற்றங்களைக் கழுவி நியாயத்தீர்ப்பின் நாளன்று நீதிமானாக நம்மை நிறுத்த விரும்புகிற பிதா அவர். வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர் (யூதா 1:24) என்று யூதா தேவ விருப்பத்தை தனது நிருபத்தில் எழுதுகின்றாரே. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1தீமோ 2:4). உலகத்தின் இறுதி நாட்களில் தண்டனை வரும் முன்னதாக, நம்மை தம்பிள்ளையாக்கிக்கொள்வதுதான் தேவனுடைய திட்டம். இதனை மனதில் கொள்ளாமல், தேவனது அன்பினைப் புரிந்துகொள்ளாமல் தேவனை மறந்து தண்டனைக்கு நேராகவே, நியாயத்தீர்ப்புக்கு நேராகவே ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு பெருங்கூட்டம். 

சமாரிய ஸ்திரீ. இயேசு முதலில் இந்த உலகில் வந்தது நம்மை நியாயந்தீர்க்க அல்ல நீதிமானாக்க, இரண்டாம் முறையாக இந்த உலகத்திற்கு மீண்டும் வரப்போவது நீதிமானாக்க அல்ல நியாயந்தீர்க்க. எனவே, தேவனது நீதிமானாக்கும் திட்டத்தை அறிந்துகொள்வோம், புரிந்துகொள்வோம், அவரைத் தள்ளிவிடமால் நம்பக்கமாய் ஏற்றுக்கொண்டு, அவர் 'தம் பிள்ளை' என்று அழைக்கும் ஸ்தானத்தைப் பெறுவோம்.

பலர் இன்றைய நாட்களில் தேவன் எனக்கு நியாயம் செய்துவிட்டால் போதும் என்ற மனநிலையோடேயே நின்றுவிடுகின்றனர். எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை முறியத்துவிட்டால் போதும் என்ற மனதோடேயே நின்றுவிடுகின்றனர். எதிரிகளின் சூழ்ச்சிகளினின்று என்னை அவர் காப்பாற்றிவிட்டால் போதும் என்று திருப்தியடைந்துவிடுகின்றனர். நியாயம் என் பக்கம் தான், தேவன் அதனைச் சரியாகச் செய்தார் என்று சந்தோஷப்பட்டுக்கொள்கின்றனர். இதனை விளக்கும்படியாகவே இயேசு இரு உவமைகளைச் சொன்னார்.

ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள். வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.(லூக் 18:2-5) தேவன் எனது வாழ்க்கையில் இந்த நியாயாதியைப்போல செயல்பட்டுவிட்டால் மாத்திரம் போதும், எனக்கு நீதி கிடைத்துவிட்டால் போதும் என்பதிலேயே திருப்தியடைந்துவிடுகின்ற மக்கள், தேவனை இந்த உலகத்தில் 'நியாயாதிபதியாக' மாத்திரமே பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட மக்களை நோக்கியே, 'என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார்?' (லூக் 12:14) என்றார் இயேசு. நான் உங்களை நியாயந்தீர்க்க இப்போது வரவில்லை, நீதிமானாக்கவே வந்திருக்கிறேன் என்று இயேசு சொல்வதின் கருத்தையோ ஜனங்கள் புரிந்துகொள்ளவில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் (மத் 9:13) என்று இயேசு ஆணித்தரமாகக் தான் வந்த நோக்கத்தை ஜனங்களுக்கு வெளிப்படுத்துகின்றாரே. மனந்திரும்பும்படி நம்மை அழைக்கவந்த இயேசுவை நியாயஞ்செய்யும்படியாகவே வற்புறுத்திக்கொண்டிருந்தால், நம்மை நீதிமானாக்கவே அவர் வந்தார் என்ற மறுபக்கத்தை நாம் மறந்துவிடுவோம். அலுவலகத்தில், குடும்பத்தில், அண்டை வீட்டாரிடத்தில், சபையில், ஊரில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் தேவன் எனக்கு நீதி செய்தார் என்று சாட்சி சொல்லிக்கொண்டிருப்போம். இப்படிப்பட்டோராய் நாம் இருந்தால், நம்முடைய வாழ்க்கையில் மாற்றம் அவசியம். நியாயந்தீர்க்கப்பட்டவர்கள் பலர் ஒன்பது குஷ்டரோகிகள் சென்றுவிட்டதைப் போல சென்றுவிடுகின்றனர். தேவனிடத்தில் அவர்கள் எதிர்பார்த்ததும் அதுதானே, தாங்கள் நீதிமான்களாகவேண்டும் என்ற எண்ணத்தோடு அல்ல, தங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதானே அவர்கள் வந்தார்கள்; எனவே, நீதி கிடைத்ததும், நீதிமானாக தாங்கள் வாழவேண்டும் என்ற மனம் அவர்களுக்கு இல்லாது போயிற்று.

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார் (லூக் 18:10-14).

பாவியாக இருந்தபோதிலும், தேவனுக்கு விரோதமானவைகளைச் செய்துவிட்டேனே என்று உள்ளம் அவனை உறுத்தியபோதிலும், மார்பிலே அடித்துக்கொண்டு: 'பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்' என்றபோது, ஆயக்காரன் நியாயந்தீர்க்கப்படவில்லை, நீதிமானாக்கப்பட்டான். அப்படியே, போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் (யோவா 8:4,5) என்று இயேசுவை வேதபாரகரும், பரிசேயரும் நெருக்கியபோதிலும், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நியாயத்தீர்ப்பு செய்யப்படவேண்டும் என்று இயேசுவை வற்புறுத்தியபோதிலும், இயேசு அவளை நோக்கி: நான் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார் (யோவா 8:11) என்று அவளை நீதிமானாக்கியல்லவோ அனுப்பினார். நமக்கு விரோதமாக எத்தனை காரியங்களைச் செய்த நபர்களானாலும், எத்தனை துரோகத்தைச் செய்த மனிதர்களானாலும் அவர்கள் நமது கண்களின் முன்பாகவே நியாயந்தீர்க்கப்படவேண்டும் என்ற விருப்பம் நமக்குள் ஓங்கி நிற்குமென்றால், நாம் நீதிமான்களல்ல. நம்மையும், நம்முடைய துரோகியையும் இருவரையும் நியாயந்தீர்க்க அல்ல இருவரையும் நீதிமானாக மாற்றுவதே இயேசுவின் அன்பு. அந்த அன்பின் குணத்தை மாற்ற நாம் எத்தணிக்காதிருப்போம்; அது நம்மால் கூடாது; ஏனெனில், அவர் மாறாதவர்.

உலக வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் நீதிமான்களாக நம்மை மாற்றிக்கொள்ளவே அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தார். பாவிகளான நமக்காக பாவத்தை ஏற்றுக்கொண்டவர் அவர். இயேசுவின் இதயத்தின் அன்பை அறிந்துகொள்ளுவோம். நீதிமான்கள் என்ற பட்டியலில் நாமும் இடம்பெறுவோம்.










 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...