Skip to main content

எதிரிக்கு அறிவிக்கும் உளவாளி

எதிரிக்கு அறிவிக்கும் உளவாளி

 

நம்மையும், நம்மைப் பற்றிய செய்தியையும் அறிந்திருக்கும் உளவாளிகள் எதிரிகளின் பாளையத்திற்குள் உலாவுவர் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். இவர்கள் நம்மை வீழ்த்த ஆலோசனை கொடுப்பவர்கள், நமது இருப்பிடத்தைக் காட்டிக்கொடுப்பவர்கள், நமக்கு விரோதமாக யுத்தத்தைக் கிளற உபயோகமாகிறவர்கள். பல நேரங்களில் இதனை அறியாதபடியினால் பலரது வாழ்க்கையில் வீழ்ச்சியும், தோல்வியும் மறுக்க இயலாததாகிப்போய்விட்டது.

சீரியரின் பாளையத்தில் உன்னைப் பற்றியும், உன் இருப்பிடத்தையும் அறிந்த ஒருவன் இருக்கிறான் (காட்டிக்கொடுக்க). எதிரியின் எல்லைக்குள்ளும் என்னைப் பற்றி அறிந்த ஒருவன் உண்டு. இஸ்ரவேலருக்கு விரோதமாக எத்தனையாய் எத்தனித்தும், யுத்தம் பண்ண இயலாமல் சோர்ந்துபோயிருந்த சீரிய ராஜாவின் இருதயம் குழம்பியதால், 'அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார்? (2இரா 6:11) என கோபமுடன் கேட்கிறான். தன்னோடு கூட இருந்தவர்களையே சந்தேகப்படத் தொடங்கினான் சீரிய ராஜா. அமைதியாய் அனைவரும் இருக்கும்போது, ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர்; உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான் (2இரா 6:12).

இதனை விளக்கவே ஓர் உவமையினை இயேசு சொன்னார். 'பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது' (மத் 13:24-26). ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் நித்திரை பண்ணும் வேளையை அறிந்தவன் சத்துருவின் உளவாளி; நித்திரையைத் தவிர்த்துவிட்டால், சத்துருவைத் தகர்த்துவிடலாம்.

நாம் நித்திரை பண்ணுவோமாகில், நம்முடைய வாழ்க்கையில் களைகள் நிச்சயம் உருவாகிவிடும். 'இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை'. ஆனால், நாம் தூங்கும் நேரம் சத்துருவுக்கு அம்பலமாகுமென்றால், ஆபத்து அரங்கேறிவிடும்.

சிம்சோன்-தேவன் இடையிலான உடன்படிக்கையினை அறிய இயலாதவர்களாயிருந்தான் சத்துரு. பெலம் எங்கிருந்து வருகிறது என்பதனை எத்தனையாய் உளவு பார்த்தும் பயனில்லை. ஆனால், சிம்சோனின் படுக்கும் இடம் மாறியபோது, பாவத்தின் போதை மூளையில் ஏறியபோது, 'முடிதான் காரணம்' என சொல்லிவிட்டான்; அதுதான் அவனது முடிவுக்கும் காரணமாயிற்று.

தன்னுடைய சீடர்களை இயேசு நோக்கி, 'உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான்' (யோவா 6:70) என்றாரே, அவன் சீடர்களின் சபைக்குள் இருந்த சத்துருவின் உளவாளிதானே. அப்படியிருந்தும், அவனை அழிக்க இயேசு முற்படவில்ல, சிநேகிதனே என்றுதான் அவனை அழைத்தார். யூதாஸ் தானாகத் தன்னை அழித்துக்கொண்டான். உளவு வேளை செய்பவர்களை அழிக்கும் நோக்கோடு அவர்களைப் பின்தொடரும் பணி நமக்கு இல்லை. நாம் நம்முடைய பணியைச் செய்துகொண்டேயிருந்தால், அவர்கள் தானாகவே அழிந்துபோவார்கள். ஆனால், அவர்களுக்கு முன் கவனமானதோர் வாழ்க்கை அவசியம். 
கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.(கலா 2:4)

சீரிய ஊழியக்காரன் எத்தனையாய் உளவு பார்த்து, எலிசாதான் ராஜாவுக்கு அறிவிக்கிறான், அவன் தோத்தானில் இருக்கிறான் என்று சொன்னபோதிலும், எலிசாவைப் பிடிக்கவோ, எலிசாவை அழிக்கவோ சீரியப் படையினால் கூடாது போயிற்றே! ஏனெனில், எலிசா விழிப்புள்ள ஓர் வாழ்க்கை நடத்தியவன். வேலைக்காரனின் கண்கள் காணக்கூடாதவைகளாக இருந்தபோதிலும், கர்த்தரின் சேனையைக் காணுமளவிற்கு விழித்திருக்கும் விழிகள் பெற்றிருந்தவன்.

அன்றைய நாட்களில் அப்போஸ்தலர்களை வேட்டையாடியதுபோல, இன்றைய நாட்களிலும் உளவு பார்த்து பல ஊழியர்களை வேட்டையாடும் பணியினை சத்துரு செய்துவருகின்றான்.

வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை
கேட்டின் மனுடர் வந்து ஊடே இருப்பதில்லை
என்ன சுகம் ஆஹா என்ன சுகம்
என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம் 

அதைப் பெற்றே அனுபவித்தால் என்ன சுகம் 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...