என்னை ஜெயிக்கும் எழுத்து
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். (சங் 119:18)
வழி திறந்திருந்தும், விழி திறக்காததினால் வெளியேற இயலாமல் வேலிக்குள்ளேயே அடைபட்டு வாழும் மனிதர்கள் அநேகர். அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது (சங் 115:5) என்று விக்கிரகங்களைக் குறித்தும், அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள் (சங.; 115:8) என்று விக்கிரகங்களை வணங்குகிற மனிதர்களைக் குறித்தும் வரையறுக்கும் சத்திய வேதம், கிறிஸ்துவைப்பின்பற்றும் மனிதர்களும் அப்படிப்பட்ட பார்வையற்ற நிலையில் வாழ்;ந்துவிடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு சொன்னபோது, தன்னுடைய வார்த்தையை உணர்ந்துகொள்ள இயலாதிருந்த சீஷர்களைப் பார்த்து, 'உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா?' (மாற். 8:18) என்று இயேசு சொன்னாரே.
இன்றும், வேதத்தினைப் புரிந்துகொள்ள இயலாத பார்வையற்ற மக்கள் உண்டு. வேதத்தை தினம் தினம் வாசித்தும் இரட்சிப்பின் வழியை அறிந்துகொள்ளாதவர்கள், இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிந்துகொள்ளாமல் நிர்வாணிகளாகவே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், பாவமன்னிப்பின் நிச்சயத்தை இன்னமும் பெற்றுக்கொள்ளாதவர்கள், முழுகி ஞானஸ்நானம் பெறாதவர்கள், சுகமாக வாழும்படியாக அல்ல சுவிசேஷத்தை உலகெங்கும் பரப்பும்படியாகவே இவ்வுலகில் நாம் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறோம் என்ற சிந்தையற்றிருப்பவர்கள் அனைவரும் கண்களிருந்தும் காணாதிருப்பவர்களே. இப்படிப்பட்டவர்களைப் பார்த்து, 'நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்' (வெளி 3:18) என்று ஆண்டவர் சொல்லுகின்றார்.
பிசாசு இயேசு கிறிஸ்துவை சோதித்தபோது, 'எழுதியிருக்கிறதே, எழுதியிருக்கிறதே' (மத். 4:4,7,10) என்று வேத்தின் வார்த்தைகளை ஞாபகமூட்டியே அவனை ஜெயித்தார். ஆனால், தன்னைப் பின்பற்றுகிற ஜனங்களுடைய வாழ்க்கையையும், சீஷர்களுடைய வாழ்க்கையையும் மற்றும் தன்மீது குற்றம் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று பின்தொடர்ந்துவந்த மனிதர்களையும், 'வாசிக்கவில்லையா, வாசிக்கவில்லையா' என்று சொல்லியல்லவோ இயேசு ஜெயித்தார்.
இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்று பரிசேயர் சொன்னபோது, தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? என்றும், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா? (மத் 12:2,3,5) என்றாரே. மேலும், புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று பரிசேயர் கேட்டபோது, இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? (மத் 19:3,5)
அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து, அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றபோது, ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா (மத் 21:16) என்றும், வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளினகல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? (மத் 21:42) என்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? (மத் 22:31) என்று சதுசேயரைப் பார்த்தும் இயேசு கூறினாரே.
வேதம் கையிலிருந்தால் போதாது, கண்களில் கலிக்கமுமிடப்பட்டிருக்க வேண்டும் 'நம்முடைய கண்கள் திறக்கப்பட்டால்', வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
Comments
Post a Comment