Skip to main content

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

 

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

 

அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலேஇஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27)


இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் (யாத் 15:26) என்று தனது ஜனத்தைக் குறித்து வைராக்கியம் பாராட்டிய கர்த்தர்,இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் குஷ்டரோகிகளைக் குணமாக்காமற் போனதற்கும் காரணம் என்ன?


மேசியாவாக இயேசு இந்த உலகத்திற்கு வந்தபோது, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? (மத். 2:2) என்ற கேள்வியுடனேயே சாஸ்திரிகளால் அறியப்பட்டார். அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தபோதிலும், அவருக்குச்சொந்தமானவர்களோ (இஸ்ரவேலரோ) அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா 1:11). இயேசுவின் மகிமையை உணராமல், எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? என்றும், நீ ஆபிரகாமைக் கண்டாயோ (யோவா 8:53,57) என்றும் பரிகாசமான வார்த்தைகளையே அவருக்கு முன் வீசினார்கள். இயேசுவை அல்ல பரபாசை விடுதலை செய்யுங்கள் (மத். 27:21) என்று இரத்தப்பழியையும் இஸ்ரவேலர் தங்கள் மேல் கூட்டிக்கொண்டார்கள். இவன் தச்சனுடைய குமாரனல்லவா? (மத். 13:55) என்று இயேசுவை கீழ்த்தரமாக மதிப்பிட்டார்கள். எனவே, இயேசு அவர்களை நோக்கி, 'வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்' என்ற பழமொழியைச் சொன்னார். குணமாக்குகிறவர் ஒதுக்கப்பட்டதால், அவர்கள் தன்னைத்தானே குணமாக்கிக்கொள்ளட்டும் என்று இயேசு சொன்னார். இஸ்ரவேலர் வியாதியோடு வாழ்ந்த வைத்தியர்கள். தங்களைத் தாங்களே குணப்படுத்திக்கொள்ள இயலாத வைத்தியர்கள். என்றாலும், தங்களுக்குள் பிறந்த குணமாக்குகிறவரையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள், அங்கீகரிக்காதவர்கள்; எனவே, குணமாகுதலைக் கண்டடையாமற் போனார்கள். அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது (ரோம 11:11). 


முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல (மாற் 7:27) என்று சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயினிடத்தில் இயேசு சொன்னாரே. என்றபோதிலும், எலியாவின் நாட்களில், இஸ்ரவேல் விதவைகள் போஷிக்கப்படாததற்கும், இஸ்ரவேலின் குஷ்டரோகிகள் குணமாக்கப்படாததற்கும் காரணம் அவர்கள் தேவனுடைய தீர்க்கதரிசிகளை அங்கீகரியாமற்போனதே. 


தேவனிடமிருந்து வருகின்ற ஆசீர்வாதங்களின் வழிகால்களாக நமது வழிகளில் தேவன் வைத்திருக்கும் தேவ மனிதர்களை, ஊழியர்களை நாம் அற்பமாக எண்ணுவோமென்றால், ஒதுக்கிவைப்போமென்றால், அசட்டை செய்வோமென்றால், தேவன் அவர்கள் மூலமாக செயல்படுகின்றார் என்பதை அங்கீகரிக்காதிருப்போமென்றால் நமக்கு தேவனிடமிருந்து வருகின்ற ஆசீர்வாதங்கள் நிச்சயம் தடைபடும். மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 25:40) என்றாரே இயேசு. என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (1சாமு 2:30).  


நம்முடைய வீட்டில், ஊரில், தேசத்தில், ஊழியத்தில் உடன் இருக்கின்ற தேவ மனிதர்களை அற்பமாக எண்ணுகின்றோமா? அவர்கள் நம்மில் ஒருவர் என்பதால் அங்கீகரிக்கத் தவறுகிறோமா? அவர்கள் நம்மில் ஒருவர்தான், விசேஷித்தவர்கள் அல்ல என்று எண்ணுகின்றோமா? தேவன் அங்கீகரித்தவர்களை அற்பமாக எண்ணுகின்றோமா? அப்படியென்றால் நம்முடைய பள்ளங்கள் நிரப்பப்படாமலேயே விடப்படும். 


இஸ்ரவேலில் வாழும் தீர்க்கதரிசியினால் புறஜாதிகளுக்கு சுகம் உண்டாகிறது, ஆனால், இஸ்ரவேலருக்கோ சுகம் உண்டாகவில்லை. இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தும், பஞ்ச காலத்தில் அவர்கள் போஷிக்கப்படாமல் போனதற்குக் காரணம், அவர்கள் தீர்க்கதரிசிகளை அங்கீகரிக்காததே. அப்படியே, இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தும் எவரும் குணமாகாமல் போனதற்குக் காரணம் அவர்கள் தீர்க்கதரிசிகளை அங்கீகரிக்காமற்போனதே. தேவ மனிதன் அங்கீகரிக்கப்படாமல் தள்ளப்படும்போது, தேவைகளும் சந்திக்கப்படாமல் தள்ளிப்போகின்றது. நம் உடன் இருக்கும் தேவ மனிதர்களைப் பற்றிய அறிவு நமக்கு உண்டா? அவர்களை நாம் அங்கீகரித்திருக்கின்றோமா? இந்நிலையிலிருந்து தவறுவோமென்றால், தேவன் அந்த ஊழியர் மூலமாக நமக்குத் தரும் ஆசீர்வாதங்களும் தவறிப்போகும். தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் (லூக் 4:24) என்று இயேசுவும் குறிப்பிட்டாரே. தேவ மனிதர்களை அங்கீகரிக்காத கூட்டத்திற்குள் ஒருவராக நாம் வாழாதிருப்போம். உடனிருப்பவர்களின் தாலந்துகளையும், திறமைகளையும் நாம் புரிந்துகொள்ளாவிட்டால், அறிந்துகொள்ளாவிட்டால், அவர்களை அங்கீகரிக்காவிட்டால் தேவன் அவர்களை நமக்குப் பயன்படுத்தாமல், பிற ஜனங்களுக்குப் பயன்படுத்துவார். அவர்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் தேவ ஆசீர்வாதங்களை, நாமே கெடுத்துக்கொள்வோம். 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...