Skip to main content

நீதிமானைக் கொன்ற பாவி


நீதிமானைக் கொன்ற பாவி

(Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar)

www.sinegithan.in


இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4) என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்க வேண்டியதாயிற்று (சங். 69:4) என்று ஆபத்துக் காலத்தில் நாம் கதறி ஜெபித்தாலும், நம்மைக் காப்பாற்றும்படியாகக் கர்த்தரால் அனுப்பப்படும் மனிதர்களைக் குறித்த அறிவு நமக்கு இல்லாமற்போகுமென்றால், அவர்களிடமிருந்து அகன்று சென்று ஆபத்திலேயே அகப்பட்டுத் தவிக்கும் நிலைக்கே நாம் தள்ளப்பட்டுவிடுவோம். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் (1 கொரி. 10:13) என்று பவுல் எழுதியிருக்கும் வரிகள் நாம் அறிந்ததே; எனினும், சோதனைகளில் நாம் சிக்கித் தவிக்கும் நேரங்களில், பாடுகள் நம்மைச் சூழ்ந்து நெருக்கும் சமையங்களில், எதிரிகளும் மற்றும் சகோதரர்களும்கூட நமக்கு விரோதமாக சத்துருக்களாக எழுந்து நிற்கும் காலங்களில், 'தப்பிக்கொள்ளும்படியான போக்கு' நமக்கு எப்படி உண்டாகின்றது? என்பதையும் மற்றும் யார் மூலமாக உண்டாகின்றது? என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டுமே. வழியில் காயங்களோடு, குற்றுயிராகக் கிடக்கும் நம்மீது திராட்சரசம் வார்த்து, வாகனத்தில் ஏற்றிக்கொள்ளும்படியாக வரும் மனிதர்களை அடையாளம் காணும் கண்கள் நமக்கு வேண்டுமே (லூக்கா 10:34). நம்மைக் காப்பாற்றும்படியாக வரும் மனிதர்களையும் கல்லெறிந்து விரட்டிவிட்டால், எஞ்சியிருக்கும் நம்முடைய பயணம் கேள்விக்குரியாகிவிடுமே!  

ஏரோது, தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக வைத்திருந்ததை அறிந்த யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொன்னபோது, ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான் (மாற்கு 6:18). தவறான பாதையில் சென்றுகொண்டிருந்த ஏரோதை நேர்வழிப்படுத்தும்படியாகவே யோவான் எச்சரித்தான்; ஆனால், எரோதோ, யோவானின் வார்த்தைகளைக் கேட்டு மனந்திரும்புவதற்குப் பதிலாக, அவனைப் பிடித்து காவலில் அடைத்துவைத்தான். காவலில் யோவானை ஏரோது அடைத்து வைத்திருந்தபோதிலும், 'யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்' (மாற்கு 6:20) என்றே அவனைக் குறித்து வேதத்தில் நாம் வாசிக்கின்றோம்.  

யோவான் 'நீதியும், பரிசுத்தமுமுள்ளவன'; என்ற அறிவு ஏரோதுவுக்கு இருந்தது; என்றாலும், தன்னுடைய வாழ்க்கையில் காணப்படுகின்ற பாவத்தைக் குறித்து யோவான் சொன்ன வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவோ ஏரோதுவுக்கு மனதில்லை.  ஒருபுறம் யோவானை அடைத்துவைக்கிறவனாகவும், மறுபுறமோ அவனை தனக்குச் சாதகமாக மாத்திரம் பயன்படுத்துகிறவனாகவுமே காட்சியளிக்கின்றான் ஏரோது. பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையும் அநேக நேரங்களில் ஏரோதுவைப் போலவே காணப்படுகின்றது. தேவ மனிதர்கள் மற்றும் தேவனால் அனுப்பப்படும் ஊழியர்கள் சொல்லும் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவோ, மனந்திரும்பவோ மனதில்லாமல், அவர்கள் சொல்லும் மனந்திரும்புதலுக்கடுத்தவைகளை அடைத்துவைத்துவிட்டு, நமது மனதுக்குப் பிடித்தவைகளுக்காகவும் மற்றும் நமக்குச் சாதகமானவைகளுக்காகவும் மாத்திரமே அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என எண்ணுகின்றோம். ஏரோது யோவானை காவலில் வைத்து தனக்குச் சாதகமாக மாத்திரம் பயன்படுத்திக்கொண்டதைப் போல, தேவ ஊழியர்களை இன்றைய நாட்களில் பயன்படுத்தும் மனிதர்கள் ஏராளம். மனந்திரும்ப மனதில்லாமல், தங்கள் மனைக்குள் ஊழியர்களை அழைத்துவந்து, ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே அவர்களை ஜெபிக்கத் தூண்டும் மனிதர்கள் பெருகிவரும் காலம் இது. ஏரோதுவினிடத்தில் காணப்பட்ட இத்தகைய குணம், இன்றைய நாட்களில் நம்முடைய வாழ்க்கையில் காணப்படாதிருக்கட்டும்.

ஆனால், ஏரோதியாளோ, யோவான் பாவத்தைச் சுட்டிக்காட்டினபோது, ஏரோதுவைக் காட்டிலும் கொடூர குணம் கொண்டவளாக மாறிவிட்டாள்; தனது தவறான வழியைச் சுட்டிக்காட்டிய ஏரோதுவை கொலை செய்யவும் துணிந்துவிட்டாள். ஏரோதியாளும் அவனுக்குச் சதிநினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று (மாற்கு 6:19) என்ற வசனத்தைத் தொடர்ந்து, ஏரோது யோவானுக்குப் 'பயந்திருந்தது மாத்திரமல்ல, அவனை பாதுகாத்தும் வந்தான்' (மாற்கு 6:20) என்று எழுதப்பட்டிருக்கும் வசனம், யோவான் காவலில் வைக்கப்பட்டிருந்த நாட்களில், ஏரோதியாள் அவனை கொன்றுபோட சமையம் தேடிக்கொண்டிருந்தாள் என்பதையும், தொடர்ந்து முயற்சித்துக்கொண்டேயிருந்தாள் என்பதையும்தானே நமக்கு வெளிக்காட்டுகின்றது. ஏரோதுவைக் காட்டிலும், ஏரோதியாளுக்குள் இருந்த இத்தனையான கோபம், ஒருவேளை, ஏரோது அவளை அழைத்தபோது, அவள் தனது கணவளை உற்சாகமாக உதறிவிட்டு ஏரோதுவினிடத்திற்கு சந்தோஷமாக ஒடிவந்திருக்கக்கூடுமோ? என்ற சந்தேகத்தையும் நமக்குள்ளே எழச்செய்கின்றது அல்லவா! ஏரோது யோவானை காவலில் வைக்க நினைத்தான்; ஆனால், ஏரோதியாளோ அவனை கல்லறைக்கு அனுப்பவே நித்தமும் திட்டமிட்டுக்கொண்டிருந்தாள். பாவத்தினைச் சுட்டிக்காட்டும் ஊழியர்களின் உயிரை வாங்க இன்றும் உலகம் போராடிக்கொண்டுதானிருக்கின்றது; இந்த ஏரோதியாள்களின் கூட்டத்திலோ அல்லது யேசபேல்களின் கூட்டத்திலோ (1 இராஜா. 19:2) நாம் இடம்பெற்றுவிடாமல், கர்த்தர் நம்மைக் காப்பாராக.  

பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்று மனிதர்கள் கீழ்ப்படியவேண்டியவைகளைக் கட்டளைகளாகக எழுதிக்கொடுத்தார் ஆண்டவர் (யாத். 20:17). ஆபிரகாமின் மனைவியாகிய சாராயை அழைத்ததின் நிமித்தம், கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார் (ஆதி. 12:17); என்றபோதிலும், ஆபிரகாமுக்கு அவள் சகோதரி அல்ல, மனைவி என்பதை அவன் அறிந்துகொண்டபோதோ, 'இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற்போனதென்ன?' (ஆதி. 12:18), 'இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ' (ஆதி. 12:19) என்று அவளை அனுப்பிவிட்டான் பார்வோன். 

அவ்வாறே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கும் ஆள் அனுப்பி ஆபிரகாமின் மனைவியாகிய சாராளை அழைத்தபோது, 'தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே' என்று அவனை எச்சரித்தார். அத்துடன், அவளைத் தொட இடங்கொடுக்கவில்லை; பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன் என்கிறார் (ஆதி. 20:6). இந்த எச்சரிப்பைப் பெற்ற அபிமெலேக்கு, அவளைச் சேராதிருந்தான். அதுமாத்திரமல்ல, ஆபிரகாமின் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான். (ஆதி. 20:3,4,14)

மேலும், உரியாவின் மனைவியாகிய பத்சேபாளின் மேல் தாவீது இச்சையுள்ளவனாக மாறி, ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச்செய்து, அவளோடே சேர்ந்து, அவளது கணவனாகிய உரியாவையும் யுத்தத்திலே உயிர்துறக்கச் செய்து, அவனை தனக்கு மனைவியாக்கிக்கொண்ட 'இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது' (2 சாமு. 11:27). இதனை உணர்த்தும்படியாக தீர்க்கதரிசியாகிய நாத்தானை தாவீனிடத்திற்கு கர்த்தர் அனுப்பியபோது, 'தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங் கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப் போல இருந்தது' (2சாமு. 12:3) என்று எத்தனையாய் உரியாவுக்கும், பத்சேபாளுக்கும் இடையிலான உறவினை வர்ணிக்கின்றார். தவறி விழும் தாவீதுக்களும் சிங்காசனத்திலிருக்கும் ஏரோதுக்களும் இந்த பாசப் பிணைப்பினைப் புரிந்துகொள்ளுவதில்லை, மதிப்பதில்லை; அவர்களில் கிரியை செய்யும் மாம்சீக இச்சைக்கு முன்பாக அவைகள் துட்சமாகவே எண்ணப்படுகின்றன. 

புதிய ஏற்பாட்டில், இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அனுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்த ஐசுவரியவான், தனது வீட்டின் வாசலருகே கிடந்த லாசருவின் பசியைப் போக்கவில்லை; 'அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்' (லூக்கா 16:21) என்றுதான் லாசருவைக் குறித்து நாம் வாசிக்கின்றோம்; அந்த ஆசை நிறைவேறியதா என்பதையோ அறியோம் நாம். ஆனால், தாவீது என்ற இந்த ஐசுவரியவானோ, உரியா என்ற தரித்திரன் கையிலிருந்ததையும் எடுத்துத் தின்றுவிட்டான். இதனைக் கண்ட தேவன், தீர்க்கதரிசியாகிய நாத்தானை தாவீதினிடத்திற்கு அனுப்பியபோது, நாத்தானின் வார்த்தைகளைக் கேட்ட தாவீது, அந்த மனுஷன்மேல் மிகவும் கோபம் மூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் (2 சாமு. 12:5) என்று தீவிரமாக முழங்குகின்றான். மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று (2 சாமு. 11:15) என்று உரியாவைக் கொல்லும்படியாக கடிதத்தை எழுதி அவனுடைய கைகளிலேயே தாவீது கொடுத்து அனுப்பியதுபோலவே, தாவீதையும், தன்னுடைய வார்த்தைகளினாலேயே தனக்குத் தானே தீர்ப்பெழுதச் செய்ததார் கர்த்தர். 

என்றபோதிலும், இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான் (2 சாமு. 12:10,11) என்று தேவன் எச்சரித்தபோது, தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்றான்; அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார் என்றான். (2 சாமு. 12:13) 

பார்வோன், அபிமெலேக்கு, தாவீது போன்றவர்கள் எச்சரிக்கப்பட்டு, தங்கள் வாழ்க்கையைத் தப்புவித்துக்கொண்டார்கள். ஆனால், ஏரோதுவோ, தேவ மனிதனாகிய யோவானின் வார்த்தைகளைக் கேட்பதற்கு ஆயத்தமாக இல்லை, அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் அவனைத் தட்டிக்கேட்கவும் மனிதர்கள் நெருங்கிவரவில்லை. ஒருபுறம், தவற்றிலிருந்து தன்னைத் திருத்திக்கொள்ள மனதில்லாமலும், மறுபுறமோ, தான் செய்யும் தவறுகளை வேறெங்கிலோ, மக்கள் மத்தியிலோ அல்லது பிரசங்கத்திலோ யோவான் பிரகடனப்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கத்திலும் ஏரோது யோவானை காவலில் அடைத்துவைத்திருக்கக்கூடும். ஏனெனில், 'விரியன்பாம்புக் குட்டிகளே' (மத். 23:33) என்று பயமின்றிப் பிரசங்கிப்பவன் யோவான். 

தன்னைத் திருத்திக்கொள்ளாமல், தொடர்ந்து தவறான வழியிலேயே பயணித்துக்கொண்டிருந்த ஏரோது, இறுதியில் தேவ மனிதனாகிய யோவானையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.  வெளியிலிருந்து அல்ல, வீட்டிலேயே அதற்கான சதி அரங்கேறத் தொடங்கியது. ஏரோதுவின் ஜென்ம நாளிலே, ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினபோது, ஏரோது சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்லுகின்றான். சிறையிலிருக்கும் தேவ மனிதனாகிய யோவானை  மறந், மற்றவைகளை மாத்திரமே மனதிற்கொண்டு, உற்சாகத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டான் ஏரோது; ஆனால், ஏரோதியாளோ, இராஜ்யத்திலிருக்கும் மற்றவைகளை மறந்து, சிறையிலிருக்கும் தேவ மனிதனாகிய யோவானை மட்டுமே குறிவைத்துக்கொண்டிருந்தாள். எதைக் கேட்கவேண்டும் என்று அறியாத ஏரோதியாளின் குமாரத்தியாகிய அச்சிறு பெண், 'நான் என்ன கேட்கவேண்டும்?' என்று தன் தாயினிடத்தில் வினவ, தாயின் திட்டம் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது (மாற்கு 6:22-28). ராஜா துக்கமடைந்தான் (6:26); என்றாலும், ஏரோதியாள் அப்போது எத்தனையாய் சந்தோஷமடைந்திருப்பாள். நாமும் அநேக நேரங்களில், ஏரோதுவைப் போல வார்த்தைகளை வீசிவிட்டு, பிறர் விரிக்கும் வலைக்குள் வீழ்ந்துவிடுகின்றோம்; இத்தகைய ஆபத்திலிருந்து கர்த்தர் நம்மைக் காப்பாராக. 

ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை பிடித்து, பிலாத்துவினிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய (பிலாத்துவினுடைய) மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள் (மத். 27:19). ஆனால், ஏரோதுவின் மனைவியாகிய ஏரோதியாளோ, நீதிமானாகிய யோவானை எப்பொழுது தீர்த்துக்கட்டலாம் என்றே திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள். பாவங்களிலேயே நிலைத்திருக்க விரும்பும் மனிதர்கள், பரிசுத்தவான்களைப் புதைத்துவிட்டு, தங்கள் பயணத்தைத் தொடரவே விரும்புகின்றனர். ஏரோதுவின் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளின் குணம் இப்படிப்பட்டதே. ஏரோதியாளை உடன் வைத்துக்கொண்டே, தேவ மனிதனாகிய யோவானையும் பராமரிக்க விரும்பிய ஏரோது, இறுதியில் யோவானை இழக்கக்கொடுத்தான். 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே, அநேக நேரங்களில் நாமும் இந்த ஏரோதுவைப் போலவே காணப்படுகின்றோம். பசுவை வீட்டில் கட்டிவைத்து, நமக்குத் தேவையான பாலை மாத்திரம் அதனிடத்திலிருந்து கறந்துகொள்ளுவதைப் போல, தேவ மனிதர்களுக்குக் கீழ்ப்படியாமல், அவர்களைத் தங்கள் எல்லைக்குள்ளாகவும் மற்றும் தொடர்பிலும் வைத்துக்கொண்டு, அவர்களை தங்களுக்குச் சாதகமாக மாத்திரம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கின்றோம். அவர்கள் காவலிலிருக்க, நாமோ கலாலாற விரும்புகின்ற இடமெங்கிலும் உலாவிவரலாம் என நினைக்கின்றோம். அப்படிச் செய்வோமென்றால், என்றாவது ஒருநாள் உலகம் அவர்களை நம்மை விட்டுப் பிரித்துவிடும். தேவனையும், தேவனுக்குப் பிரியமில்லாதவைகளையும் சுமந்துகொண்டு செல்ல பிரயாசப்படக்கூடாதே; இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது (மத். 6:24); இதில் நாம் தோற்றுப்போவது நிச்சயம். 

யோவான் மேலே மதிப்பும், மரியாதையும் ஏரோதுவுக்கு இருந்தது உண்மையே; யோவான் மரணமடைவேண்டும் என்றோ, அவனை கொலை செய்யவேண்டும் என்றோ ஏரோது ஒருபோதும் நினைக்கவில்லை. எனவே, இயேசு கிறிஸ்துவைக் குறித்து அவன் கேள்விப்பட்ட நேரத்திலும், 'யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் செய்கைகள் விளங்குகிறது' (மாற்கு 6:14) என்றே கூறுகின்றான். ஒருவேளை, தானியேலின் நாட்களில், ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டதுபோல (தானி. 6:20), யோவானைச் சிரைச்சேதம் பண்ணும்படியாகச் சேவகர்களுக்குக் கட்டளையிட்டபோது, ஏரோதுவின் உள்ளமும், யோவானுக்காகத் துடித்திருக்குமோ! ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னில் மிகவும் சஞ்சலப்பட்டு (தானி. 6:14) என்று தானியேலின் நாட்களில் வாசிக்கின்றதைப் போலவே, அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான் (மாற்கு 6:26) என்று ஏரோதுவைக் குறித்தும் வாசிக்கின்றோமே. 

பிரியமானவர்களே! தானியேலின் நாட்களில், 'ராஜா தன்னில் மிகவும் சஞ்சலப்பட்டு, தானியேலைக் காப்பாற்றும்படிக்கு அவன்பேரில் தன் மனதை வைத்து, அவனைத் தப்புவிக்கிறதற்காகச் சூரியன் அஸ்தமிக்கு மட்டும் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தும் (தானி. 6:14) தனது கட்டளையினிமித்தமும், கூட இருந்தவர்களிமித்தமும் தானியேலை சிங்கக் கெபியில் போட்டதைப் போலவும், ஜனங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக எழுந்தபோது, பிலாத்து இயேசு கிறிஸ்துவை விடுதலைபண்ண வகைதேடினபோதிலும், யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டதினால், சிலுவையில் அறையும்படிக்கு பிலாத்து அவரை ஒப்புக்கொடுத்தது போலவும் (யோவான் 19:12,16), யோவானின் நாட்களில், ஏரோது ராஜா துக்கமடைந்தபோதிலும், ஆணையினிமித்தமும், கூடப்பந்தியிருந்த வர்களினிமித்தமும், மறுக்க மனதில்லாமல், யோவானை சிரைச்சேதம் பண்ணுவித்ததைப் போலவும் (மாற்கு 6:26,27), அநேக நேரங்களில், நாமும், நமது ஸ்தானத்தையும், அதிகாரத்தையும் மற்றும் மதிப்பினையும் காப்பாற்ற, பிற மக்களின் உந்துதலினாலும் அழுத்தத்தினாலும், நமது இருதயம் ஒத்துக்கொள்ளாத, துக்கமடைகின்ற காரியங்களைச் செய்யச் சம்மதித்துவிடுகின்றோம். நீதியினை அறிந்திருந்தும், நேர்மையானவைகள் என தெரிந்திருந்தும், சத்தியத்திற்கு எதிராகி, சத்துருவின் பக்கம் சாய்ந்துவிடுகின்றோம்; இத்தகைய ஆபத்திலிருந்து கர்த்தர் நம்மைக் காப்பாராக. 

தமக்கு முன்னே பெத்சாயிதாவுக்குப் போகும்படியாக சீஷர்களை இயேசு கிறிஸ்து அனுப்பியிருந்தபோதிலும், காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டுவலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டபோதோ அவர்களை தேடி வந்தார் (மாற்கு 6:48). ஆனால், சீஷர்களோ, 'ஆவேசம்' என்று அலறினார்கள். எனினும், அவர் படவில் ஏறினபோது, காற்று அமர்ந்தது (மாற்கு 6:51). இன்றும், தனியே பயணிக்கும்படியாக அனுப்பிவிட்டபோதிலும், ஊழியர்கள் நம்மை மீண்டும் தேடிவருவதின் நோக்கம் இதுவே. ஆனால், நாமோ, தனியே அனுப்பிவிடப்பட்டதும், தகப்பனோடிருக்கும் தொடர்ப்பினையே முற்றிலும் துண்டித்துவிட நினைக்கின்றோம்; தனியே பயணிக்க அனுமதித்துவிட்டு, மீண்டும் வந்து ஏன் படகினில் ஏறுகின்றார் என்றே எண்ணுகின்றோம்; அத்தகைய நினைவு, பயணத்தின்போது நம்மை பாதிலேயே நிறுத்திவிடுவது மாத்திரமல்ல, நம்மை ஆபத்திலேயும் மூழ்கடித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. தனியே நாம் பயணித்தாலும், நம்மை மீண்டும் தேடிவருவதின் நோக்கம் நம்மைத் தடுத்து நிறுத்த அல்ல தப்புவிக்கவே. இளையகுமாரனைப் போல ஆஸ்திகளைப் பெற்றுக்கொண்டதும், தகப்பனை முற்றிலும் அசட்டைபண்ணிவிட்டால், தகப்பனோடிக்கும் உறவினையும் மற்றும் தொடர்பினையும் முறித்துவிட்டால், இளையகுமாரனுக்கு ஏற்பட்ட நிலைக்குத்தான் நாமும் தள்ளப்படுவோம். எனினும், இத்தகைய சூழ்நிலையிலும், தப்பிக்கொள்ளும்படியான போக்கு தகப்பனிடத்திலேயே உண்டு என்பதை அறிந்துகொண்டவர்களாக, இளைய குமாரனைப் போல, தகப்பனையே மீண்டும் தேடிவந்தால் நாம் பிழைத்துக்கொள்வது நிச்சயம். 

யோசேப்பு, வரப்போகின்ற பஞ்சத்திலிருந்து தேசத்தையும் மற்றும் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஓர் பாத்திரம்; ஆனால், உடன்பிறந்த சகோதரர்களோ அதனை உணர்ந்துகொள்ளவில்லை, அவனைக் கொன்றுவிடத்தானே தீர்மானித்தனர் (ஆதி. 37:20); எனினும், தேவனோ, ரூபனைக் கொண்டு அவனைத் தப்புவித்தாரல்லவா. அவ்வாறே, கைதியாக கப்பலில் இருந்தபோதும், அதில் பயணிப்போரைக் காப்பாற்றும் வழிகாட்டியாக தேவன் பவுலைப் பயன்படுத்தினபோது (அப். 27:10,11), உடனிருந்த போர்ச்சேவகர்களால் அதனை உணர்ந்துகொள்ள இயலவில்லையே; அவனை கொன்றுபோடவேண்டுமென்றுதானே யோசனையாயிருந்தார்கள். என்றபோதிலும், நூற்றுக்கு அதிபதியைக் கொண்டு தேவன் பவுலைக் காப்பாற்றினாரே (அப். 27:42,43). மேலும், வரவிருக்கும் தண்டனையை தெரிவிக்கும்படியாகவும், அதிலிருந்து தப்பிக்கொள்ளும் வழியினை அறிவிக்கும்படியாகவும், தானியேல் நேபுகாத்நேச்சாரிடத்திற்கு அனுப்பப்பட்டபோதிலும் (தானி. 4:27), அதனை உணர்ந்துகொள்ளாததினால், அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டுப்போனானே (தானி. 4:33). முதியோர் சொன்ன ஆலோசனையை ரெகொபெயாம் தள்ளிவிட்டதினால்தானே, ராஜ்யம் பிளவுபட்டுப்போனது (2 நாளா. 10:13). இதைப்போலவே, சிதேக்கியா ராஜா தப்பிப் பிழைக்கும் போக்கை காண்பிக்க எரேமியா அனுப்பப்பட்டான் (எரே. 38:20); ஆனால், எரேமியாவுக்குக் கிடைத்ததோ உளையும், உபத்திரமும் மாத்திரமே. எல்லாவற்றிற்கும் மேலாக, பாவத்தில் சிக்கிக்கிடந்த மனுக்குலம் நரகத்திற்குச் சென்றுவிடாதபடி, தப்பிக்கொள்ளும் போக்கை உண்டுபண்ணும் வழியாக வந்த பிதாவின் ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்வை ஜனங்கள் சிலுவையில் அறைந்தார்களே. 

பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கை தப்பிக்கொள்ளும்படியாக தேவன் வகுத்துவைத்திருக்கும் வழிகளைக் காணும் கண்களை, தேவன் நமக்குத் தருவாராக.  


பாவத்தைப் பக்கத்தில் அமர்த்தித்கொண்டு 

பரிசுத்தத்தைக் காப்பது இயலாதது

தேவைக்கு மிஞ்சிய பொருளிருந்தும் 

திருப்திக்குத் திருடுவது பொருந்தாதது


ஆபத்து என்று அலறிடும் நேரத்திலும்

ஆண்டவர் அனுப்பும் மனிதர்கள் உண்டு

அலைகடல் எழும்பி ஆர்ப்பரித்து நின்றாலும்

அருகிலே வந்ததட்டும் ஆண்டவர் உண்டு


பாடுகள் ஊடே நாம் பயணித்திடும் வேளை 

பரலோகம் காட்டிடும் பாதைகள் தெரியட்டும்

காக்கும் மனிதர்களையும் காவலில் வைத்துவிட்டால்

கடக்கும் பாதைகளிலோ கால்கள் இடறியே விழும்




அன்பரின் அறுவடைப் பணியில்

அன்பு சகோ. P.J. கிருபாகரன்

(Co-ordinator, GEMS Publications, Bihar)

 

Comments

Popular posts from this blog

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி