Skip to main content

கேள்வியைக் கொன்ற கேள்வி

 

கேள்வியைக் கொன்ற கேள்வி

 

தேவனுக்கு ஊழியம் செய்வதுடன், தேவனைப் பற்றிய அறிவும் தேவை நமக்கு. தேவனைப் பற்றிய அறிவும், வேதத்தைப் பற்றிய அறிவும் இல்லாமல் சிலம்பாடிக்கொண்டிருந்தால், சத்துருவின் சிலந்தி வலையில் சிக்க நேரிடும். நாம் எதிரியின் பிடியில் சிக்கியிருப்பவர்களை மீட்கவே அழைக்கப்பட்டவர்கள். எனவே, சத்துருவின் பிடியிலிருந்த மனிதர்களைத் நாம் தப்புவித்த பின்னர், சத்துருவைத் தொடர்ந்து செல்லவேண்டிய பணி நமக்கு இல்லை. பிரசங்கத்தில் பிசாசினைப் பார்த்துப் பேசிக்கொண்டேயிருக்கக்கூடாது, ஜெபத்தில் பிசாசையே பார்த்து பேசிக்கொண்டிருக்கக்கூடாது. நம்மைத் தொடர்ந்தாலும் சத்துருவுக்கு வெற்றியில்லை என்பது நமதறிவில் நிற்கவேண்டியது. என்றபோதிலும், அவனை ஜெயிக்கவேண்டுமென்றால், அவன் வீசும் ஏவுகணைகளை நாம் அழிக்கக் கற்றிருக்கவேண்டும். தொடர்ந்து வந்த சத்துருவை, வேதத்தின் வசனத்தைக் கொண்டும், தனது வார்த்தைகளைக் கொண்டும் இயேசு வீழ்த்தினாரே.

ஸ்தேவான் விசுவாசத்தினாலும், வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்துகொண்டிருந்தபோது, லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள். என்றபோதிலும், ஸ்தேவான் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்து நிற்க அவர்களால் கூடாமற்போயிற்று (அப். 6:9,10).

ஊழியர்களாகிய நாம் அநேக கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய நிலைக்கு சில வேளைகளில் தள்ளப்படுகின்றோம். வேதத்திற்கடுத்ததாகவும், வாழ்க்கைக்கடுத்ததாகவும் மனிதர்கள் நம்மிடத்தில் தொடுக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற நிலை ஒருபுறம் இருந்தாலும்; மறுபுறம் நம்மிடம் தொடுக்கப்படும் கேள்விகளில் நாம் வீழ்ந்துவிடக்கூடாது என்பது பிரதானமானது; சரியான பதிலையே கொடுக்கவேண்டும் என்பதும் முக்கியமானது. எதிரியின் கேள்விகளுக்கு உத்தரவு கொடுக்கக் கூடிய தருணங்கள் எவை? கொடுக்கக் கூடாத தருணங்கள் எவை? என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். எனவே சாலமோன், மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப்போலாவாய் என்றும், மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான் என்றும் சொல்லுகின்றான் (நீதி 26:4,5). நம்மிடத்தில் சிலர் கேட்கும் மதியீனமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முற்பட்டால், நாமும் அவர்களது மதியீனத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பவர்களாக காணப்பட்டுவிடுவோம். 'மதியீனமான கேள்விகளை மறுத்துவிடுவதே சிறந்தது'. அதேவேளையில், மதியீனமான கேள்விக்குப் பதிலாக அல்லாமல், மதியீனன் தன் மதியீனத்தைப் புரிந்துகொள்ளும்படியான மாறுத்தரமான வார்த்தைகள் நம்மிடத்திலிருந்து பிறக்கவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

இயேசுவின் நாட்களிலும், அவரைச் சுற்றியிருந்த பரிசேயரும், சதுசேயரும் மற்றும் பிற ஜனங்களும் பல்வேறு கேள்விகளை இயேசுவினிடத்தில் கேட்டுக்கொண்டேயிருந்தனர். இயேசு தேவாலயத்தில் உபதேசித்துக்கொண்டிருந்தபோது, பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து:நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள் (மத். 21:23). இந்தக் கேள்விக்கு இயேசுவினிடமிருந்த பதிலையே அவர்கள் எதிர்பார்த்தார்கள்; ஆனால், அவரிடமிருந்து பிறந்ததோ கேள்வி. இயேசு அவர்களை நோக்கி: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன் (மத் 21:24) என்றார். இந்தக் கேள்விக்கு எந்தப் பதிலைச் சொல்வது? என்று அவர்கள் திணறினார்கள். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது அவர்: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார் (மத் 21:25-27). இயேசுவினிடத்டதிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது, ஜனங்களிடத்திலும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று இருபுற பயத்தோடு காணப்பட்டார்கள் அவர்கள். எதைச் சொன்னாலும், தாங்கள் சிக்கிக்கொள்வோம் என்ற நிலையை அறிந்த அவர்கள் இயேசுவினிடமிருந்தும், ஜனங்களிடமிருந்தும் தங்களைத் தப்புவித்துக்கொள்ளவே வகை தேடினார்கள். நம்மையும் இப்படிப்பட்ட ஜனங்கள் சந்திக்கலாம், தேவனையும் சந்திக்க பெலனற்ற, மனிதர்களையும் சந்திக்கப் பெலனற்றவர்கள் நம்மைச் சந்திக்க பெலன் பெற்றுவிடுவார்களோ? அப்படிப்பட்டவர்கள் நம்மை வீழ்த்த அல்ல, நம்மிடத்தில் வீழ்ந்துபோகவே வருகின்றனர். ஆவிக்குரிய வாழ்க்கையின் அடித்தள ஞானமற்றவர்கள், இயேசுவைக் கூட தங்கள் வாழ்க்கையில் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்கள், பாவத்திலேயே சிக்கிக் கிடப்பவர்கள்;, ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பமே தெரியாதவர்கள் நம்மிடத்தில் குற்றம் காணும் எண்ணத்தோடு வருவார்களென்றால், அவர்களைக் குறித்து நாம் பயந்துவிடவேண்டாம்; நம்மிடத்திலுள்ள பெலததை மறந்துவிடவும் வேண்டாம்.

'பாவிகளோடு போஜனம் பண்ணுகிறது என்ன?' (மத். 9:11), 'ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா?' (மத். 12:10), 'வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காட்டவேண்டும்' (மத். 16:1),; 'உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா?' (மத். 14:24), 'புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா?' (மத். 19:3), 'உயிர்த்தெழுதலில் அவ்;வேழு பேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்?' (மத். 22:28), 'உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்ன?' (மாற். 2:18), 'உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள்?' (மாற். 7:5), 'எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி?' (மாற். 9:11), 'நீர் யார்?' (யோவான் 1:22), 'நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர்?' (யோவான் 1:25, 'ஆண்டவரே இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுககுத் திரும்பக் கெர்டுப்பீர்?' (அப். 1:6), 'நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா?' (மத். 26:63) போன்ற கேள்விகள் பிரதான ஆசாரியர்களால், சதுசேயர்களால், பரிசேயர்களால் இயேசுவினிடம் கேட்கப்பட்டது; எனினும் அவரை வீழ்த்துமளவிற்கு அவைகள் வலிமை பெற்றதாயிருக்கவில்லை.

நம்மிடத்தில் கேட்கப்படும் கேள்விக்கு நம்முடைய பதில் நிலை என்ன? வேதம் உள்ளத்தின் உள்ளே இருந்தால், அத்தனையையும் வெல்வது நமக்கு எளிதானதே. நம்மைச் சந்திக்கும் மக்களிடத்தில் சறுக்கிவிடாதபடி கர்த்தர் நம்மைக் காப்பாராக.

 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி