ஊடுருவும் கண்கள்
பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: (அப் 14:9)
நமக்கு அருகில் இருப்பவர்களையும், பாதையில் நம்முடைய கண்களில் தென்படுபவர்களையும் நாம் பார்க்கும்போது, அவர்களைக் குறித்து நம்முடைய மனதில் தோன்றுவது என்ன? ஆவிக்குரிய கண்களைத் திறக்காமல், சரீரப்பிரகாரமான கண்களை மாத்திரம் திறந்துவைத்துக்கொண்டு, ஆவிக்குரிய பயணம் செய்வது என்பது நமக்கு மாத்திரமல்ல, பிறருடைய வாழ்க்கைக்கும் பயனற்றவர்களாகவே நம்மை மாற்றிவிடும். பிறருடைய வாழ்க்கையில் காணப்படுபவைகளிலிருந்து கட்டியெழுப்பவேண்டிய நாம், அவர்களைக் கண்டுகொள்ளாமற் போய்விடுவோமென்றால், கட்டப்படவேண்டியவர்களும் கைவிடப்பட்டுவிடுவார்களே. பிறருடைய வாழ்க்கையில் எதையாகிலும் கட்டிவிட அல்ல, அஸ்திபாரமாகவும் அத்துடன் அழைப்பாகவும் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொண்டால் மாத்திரமே, ஆண்டவர் விரும்பும் வண்ணம் அழகான மாளிகையாக அவர்களை கட்டியெழுப்ப இயலும்.
லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டான் (அப் 14:8,9). பிறந்தது முதல் சப்பாணியாயிருந்தவன்தான், என்றாலும் பவுலின் கண்கள் முதலில் உடலில் காணப்பட்ட குறைபாடுகளைக் காணவில்லை; மாறாக, உடலையும் தாண்டி அவனது உள்ளத்தில் உண்டாயிருக்கும் விசுவாசத்தை உற்றுப்பார்த்தன. ஆனால், இன்றைய நாட்களில் பலருடைய பார்வையோ உடலைச் சார்ந்ததாகவே காணப்படுகின்றது; அதனைத் தாண்டி உள்ளத்தை ஊடுருவுவதில்லை.
பரிசேயனுடைய வீடடில் இயேசு கிறிஸ்து பந்தியிருந்தபோது, அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து, அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள் (லூக் 7:36-38). பரிசேயனுடைய கண்கள் அந்த ஸ்திரீயின் வெளிப்புற வாழ்க்கையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தன. அவர்களுடைய கண்களுக்கு அவள் 'பாவியாகவே' காட்சியளித்துக்கொண்டிருந்தாள். இயேசுவோ, அவளுக்குள் இருக்கும் இரட்சிப்பிற்கேற்ற விசுவாசத்தைக் கண்டார். எனவே, இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி; அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொன்னதுடன், அந்த ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார் (லூக் 7:47-50).
இயேசு கிறிஸ்து கப்பர்நகூமுக்குப் போனபோது, அவரது வசனத்தைக் கேட்கும்படியாக, அவர் இருந்த வீட்டின் வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்துக்கொண்டிருந்தார். அப்போது, நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள், ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள். இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் (மாற் 2:1-5). சரீரத்தையே சுகமாக்குவார் என்று வேதபாரகர்கள் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இயேசுவின் கண்கள் முதலில் பார்த்தது அவனது ஆத்துமாவையே. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன்படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? (மாற் 2:9) என்று சொல்லி, பாவங்களை முதலில் மன்னித்துவிட்டு, பின்பு, நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (மாற் 2:11); இதுவே, ஊழியத்தின் சூத்திரம்.
Comments
Post a Comment