ஜனங்களைப் பிரிக்கும் சீஷர்கள்
இயேசு பாரபட்சமற்றவர், அனைவரையும் ஒன்றாக நேசிப்பவர், உயர்ந்தவர்கள் தாழ்ழந்தவர்கள், ஏழை, ஐசுவரியவான்கள், தரித்திரர்கள் என அவரது விழிகள் எவரையும் பிரித்துப் பார்த்ததில்லை. குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், எஎன்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டபோது, அவர் தமது கையை நீட்டி, அந்த குஷ்டரோகியைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார் (லூக். 5:12,13). அந்நாட்களில் மனிதர்களைப் பார்க்கும்போது தீட்டு, தீட்டு என்று கத்திக்கொண்டிருந்த குஷ்டரோகிகளை இயேசுவின் கரம் தொட்டது. அதுமாத்திரமல்ல, நாயீன் ஊர் வாசலுக்கு சமீபமாய் இயேசு வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; இயேசுவோ கிட்டவந்து பாடையைத் தொட்டு அந்த வாலிபனை உயிரோடு எழுப்பினார் (லூக். 7:13-15). குருடர்களைக் கண்டபோது இயேசு அவர்களது கண்களைத் தொட்டு பார்வை கொடுத்தார் (மத். 20:34); உலகத்தாரால் தள்ளிவைக்கப்பட்டிருந்த, ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஜனங்களைக் கண்டபோதெல்லாம் இயேசு மனதுருகினார். அவர்களுக்கும் தான் சொந்தமானவர் என்பதையும், அவர்களும் பரமப் பிதாவின் பிள்ளைகள் என்பதையும் ஊரார் அறிய தனது செயல்களின் மூலம் வெளிப்படுத்தினார். ஒதுக்கப்பட்டவர்களைக் கண்டு இயேசு ஒதுங்கிக் சென்றுவிடவில்லை. எனவே, ஒதுங்கியிருக்கும் மக்களும் இயேசுவோடு கூட ஒட்டிக்கொள்ள நினைத்தார்கள். தீட்டுள்ள மனிதர்களை இயேசுவே தொட்டு குணமாக்குகிராரே, எனவே தீட்டுள்ள நான் இயேசுவைத் தொடுவதில் தவறில்லை, அவர் பரிசுத்தராயிருந்தாலும் அவரைத் தொட்டால் னது பிணிகள் அகன்றுபோகும் என்று நினைத்த பன்னிரெண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஸ்திரீ, இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி, ஜனக்கூட்டத்திற்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்; உதிரத்தின் ஊறல் நின்று வேதனை நீங்கி ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொண்டாள் (மாற். 5:25-29). தள்ளப்பட்டவர்களை இயேசு தொட்டதினால், தள்ளப்பட்டவர்களும் தாங்களாக முன்வந்து இயேசுவைத் தொட்டனர்.
கிறிஸ்துவைப் பின்பற்றும் நம்முடைய குணங்கள் எப்படி இருக்கின்றது. ஒதுக்கப்பட்டிருக்கும் மக்களை முன்வந்து தொட்டு விசாரிக்கும் மனது நமக்கு உண்டா? அப்படி நாம் செய்தால் மாத்திரமே ஒதுங்கிக்கிடக்கும் மக்கள் நம்மைத் தொட முன்வருவார்கள். சிவகாசி பட்டணத்திற்கு ஒருமுறை நான் சென்றிருந்தேன். என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய காரில் சிவகாசிப் பட்டணத்தைச் சுற்றிப்பார்ப்பதற்காக உடன் அழைத்துச் சென்றார். ஆதி நாட்களில் சுவிசேஷம் பரவத்தொடங்கிய விதத்தினையும், அந்நாட்களில் அங்கு பணிசெய்த மிஷனரிகளைப் பற்றியும் அப்போது நான் அறிந்துகொள்ள ஆசையாயிருந்தேன். அங்கு கட்டப்பட்ட முதல் சிற்றாலத்திற்குச் சென்றேன், அது பூட்டப்பட்டிருந்தது; எனினும், அருகில் இருந்த அந்த ஆலயத்தினைப் பராமரிக்கும் ஊழியர் ஒருவர்; அதனைத் திறந்து காட்டி அதனைக் குறித்த சில வரலாற்றுச் சம்பவங்களையும் எடுத்துரைத்தார். அங்கிருந்த தென்னிந்தியத் திருச்சபையின் ஆலயத்தினையும் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிவகாசியில் மிஷனரியாக சுவிசேஷம் அறிவிக்க வந்த மிஷனரி ராக்லாந்துவைப் பற்றியும் அங்குள்ள ஊழியர்கள் சொல்ல தெரிந்துகொள்ளமுடிந்தது. மிஷனரி ராக்லாந்து கொண்டுவந்திருந்த இராப்போஜனம் கொடுக்கும் பாத்திரத்தைப் பார்த்தேன், அவருடைய சில பொருட்கள் என்னை அவரது நாட்களை நினைக்கச் செய்தன. ராக்லாந்துவின் கல்லறைம் சென்று பார்வையிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். வழியில் என்னை அழைத்துச் சென்ற நண்பர் ஓரிடத்டதில் வாகனத்தை நிறுத்தி அது SC Church இது BC Church என்று அடையாளம் காட்டிக்கொடுத்தார்; அவ்வளவுதான் சிவகாசியைப் பற்றி எனது சிந்தையில் ஏற்றியிருந்த அத்தனையையும் அந்த அலை அழித்துப்போட்டது; வேதனை என் நெஞ்சைப் பற்றிப்பிடித்தது.
இயேசுவோ அனைவரையும் சமமாகப் பார்த்தார்; இயேசு ஒரு வீட்டில் போஜபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள் (மத். 9:10,11); சீஷர்களிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இயேசு பதிலளித்தார்; பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை என்றார் (மத். 9:12). பரிசேயர் கேட்கும் கேள்வி சரிதானே என்று ஒருவேளை சீஷர்கள் நினைத்திருக்கலாம், பரிசேயரின் கேள்வி சீஷர்களைக் குழப்பியிருக்கலாம், பதில் சொல்லத்தெரியாமல் சீஷர்கள் விழி பிதுங்கியிருக்கலாம்; ஆனால், இயேசுவோ தெளிவான பதிலை பரிசேயருக்குக் கொடுத்தார்.
இயேசுவின் குணத்தையும், அவரது விருப்பத்தையும் வாஞ்சையையும், பூரணமான பிதாவின் ஆசையைச் சுமந்து அவர் செல்வதையும் அவரைச் சுற்றியிருந்த சீஷர்களாலும், பிற ஜனங்களாலும் கூட விளங்கிக்கொள்ள இயலாதிருந்தது. குழந்தைகளை இயேசு தொடும்படிக்கு அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். ஆனால், சீஷர்களோ கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள் (லூக் 18:15). இயேசுவின் விருப்பத்தையே வெறுக்கும் மனிதர்களாயிருந்தார்கள் அவர்கள். இயேசுவோ அவைகளைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவைகளைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்றதோடு மாத்திரமல்லாமல், எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக் 18:17). யாரைப்போல நீங்கள் மாறவேண்டுமோ, அவர்களையே நீங்கள் வெறுக்கிறீர்களே என்ற உபதேசம் அப்போது சீஷர்களுக்குப் போதிக்கப்பட்டது.
இயேசு எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக் கொண்டிருந்தான். ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான் (லூக் 18:35-38). இயேசுவோ, அதட்டப்படும் இந்த குருடன் மேல் மனதுருகினார்; அவர் நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார். அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை குணமாக்கினார் (லூக். 18:39-43). இயேசுவைத் தேடும் மக்களை அதட்டும் மனிதர்களாக சீஷர்கள் காணப்பட்டார்கள்.
சிறுவர்களையும், குருடர்களையும் இயேசுவின் பக்கதில் விடாமல் பாதுகாப்பாக இருந்த சீஷர்கள், ஐசுவரியமுள்ள மனிதன் வந்தபோது அவரைச் சந்திக்க வழிவிட்டார்கள். அவன் வந்து, நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று (லூக் 18:18) இயேசுவிடத்தில் பேச அனுமதித்தார்கள். ஆனால், இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய மனதற்றவனாயிருந்தான் (லூக் 18:18-23).
ஊழியர்களைச் சந்திக்க ஏழைகள் வரும்போது எங்கே வைக்கப்படுகிறார்கள்? பணக்காரர்கள் வரும்போது எங்கே வைக்கப்படுகிறார்கள்? ஏழைகளுக்கு என்ன மரியாதை கொடுக்கப்படுகிறது? பணக்காரர்களுக்கு என்ன உபசரிப்பு கொடுக்கப்படுகின்றது? ஏழைகளுக்கு என்ன விருந்து கொடுக்கப்படுகின்றது? பணக்காரர்களுக்கு என்ன விருந்த கொடுக்கப்படுகின்றது? என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், நாமும் இயேசுவின் சீஷர்களைப் போலத்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோமோ என்ற கேள்விக்கு பதில் நமக்குக் கிடைத்துவிடும். இயேசுவை இதயத்தில் வைத்துக்கொண்டு, மாம்சத்திலோ சீஷர்களைப் போலவே இன்னும் நின்றுகொண்டிருக்கும் வாழ்க்கை நமக்கு வேண்டாம். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாய் நாம் வாழ்ந்து, மாய்மாலக்காரர்களாய் உலகை ஏமாற்றவேண்டாம். நீங்களோ தரித்திரரைக் கனவீனம் பண்ணுகிறீர்கள் (யாக். 2:6) என்று யாக்கோபு எழுதுகின்றாரே. நம்மால் ஒதுக்கப்படும் மக்களே ஓர்நாள் நியாயத்தீர்ப்பின்போது சாட்சிகளாக நிறுத்தப்படுவார்கள் அப்போது என்ன செய்வீர்கள்???
Comments
Post a Comment