முடக்கப்படும் முக்கியத்துவங்கள்
தேவனைப் பின்பற்றும் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியவைகளை முடக்கிவிட உலகம் ஆயத்தமாயிருக்கின்றது. குடும்ப வழக்கம் என்றும், ஜாதி முறை என்றும், மூதாதையரின் வழிகாட்டல் என்றும், ஊர் வழக்கம் என்றும், சமுதாயத்தின் சம்பிரதாயம் என்றும், திருமண முறை என்றும் பல்வேறு காரியங்கள் ஆவிக்குரியவர்களின் கால்களில் பாசியைப் போல சுற்றிக்கொள்ள முயற்சிக்கின்றன. கிறிஸ்தவர்கள் என்றும், கிறிஸ்துவை அறிந்தவர்கள் என்றும், ஆவிக்குரியவர்கள் என்றும் அடையாளப்படுத்தப்படும் மக்களையும் மூடத்தனமான பல பழக்கவழக்கங்கள் மூடிக்கொள்கின்றன. ஏன் செய்கின்றோம்? எதற்காக செய்கின்றோம்? வேதத்தின்படி நாம் செய்வது சரியானதா? என்பவைகளை ஆராய முற்படாமல், ஆற்றோடு ஓடும் மீனான உலகத்தாருடன் ஓடும் மனிதனாக நாம் காணப்படக்கூடாது.
பரமக் கட்டளையை முடக்கும் பாரம்பரியங்கள்: குடும்பத்திலும், ஊரிலும், நண்பர்கள் மத்தியிலும் தொன்றுதொட்டு வழங்கிவரும் பழக்கவழக்கங்கள் பரிசுத்தத்தையும், பரமனின் கட்டளைகளையும் மீறிவிடாதபடிக்கு நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். முன்னோர்கள் செய்தார்கள் அதனால் நாங்களும் செய்கிறோம் என்றும், முன்னோர்கள் செய்தவற்றைச் செய்தால் மாத்திரமே நாம் அவர்களின் சந்ததியார் என்பதற்கான அடையாளம் என்றும் எண்ணி அவைகளில் அகப்பட்டுக்கொண்ட மனிதர்கள் அநேகர். உடை உடுத்துவதிலிருந்து பாடையில் குழிக்குள் செல்லும் வரை இடையில் செய்யும் எதுவும் வேதத்தின் கற்பனைகளுக்குப் புறம்பானதாகக் காணப்படக்கூடாது.
இயேசுவின் சீஷர்கள் கை கழுவாமல் போஜனம் செய்ததை வேதபாரகரும் பரிசேயரும் கண்டபோது, அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? (மத் 15:1-3) என்று பதில் கொடுத்தார். மேலும், இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனபோது, அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள். பரிசேயர் அதைக் கண்டு, இயேசுவை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள் (மத். 12:1-2). அதற்கு இயேசு, 'தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்' (மத் 12:6) என்றார்.
முன்னோர்களின் பாரம்பரியங்கள் மாறிவிடக்கூடாது என்பதில் வேதபாரகரும், பரிசேயரும் கவனமாயிருந்தார்கள்; அவைகளுக்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். முன்னோர்களின் பாரம்பரியம் மீறப்பட்டுவிடக்கூடாது என்று வைராக்கியமாயிருந்ததினால், தேவனுடைய கற்பனையையும் மீறத் துணிந்தார்கள். அவர்களைக் குறித்தே இயேசு, 'மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள் (மத் 23:27,28) என்று சொன்னார். வெளிப்புறச் செயல்களின்மேலேயே கவனம் செலுத்தி உட்புறத்தை மறந்துவிட்டவர்கள் அவர்கள். கை கழுவாமல் சாப்பிடுவதும், கதிர்களைக் கொய்து தின்னுவதும் அவர்கள் கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் தேவனுடைய கற்பனைகளை தாங்கள் மீறுவது கண்ணுக்குத் தெரியவில்லையே.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் வெளிப்புறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா? அல்லது உட்புறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா? உள்ளே கல்லறையாய் வாழ்ந்துகொண்டு வெளியே பாரம்பரியத்தைக் கொண்டு வெளியே வெள்ளையடித்துக்கொண்டு அலையும் வாழ்க்கை வேண்டாம். தேவாலயத்தைக் கண்டுபிடித்தும், தேவனைக் கண்டுபிடிக்காமல் வாழக்கூடாது. தேவாலயத்திலும் பெரியவரே வாழ்க்கையின் பிரதான தேவை என்பதை மறந்துவிடவேண்டாம்.
தள்ளிவிடுதலை பாரம்பரியமாக்கிவிட்ட கிறிஸ்தவ உலகம்:
தாயைத் தள்ளும் மக்கள்: அந்நாட்களில் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணவேண்டும் என்ற தேவனது கற்பனை மீறப்பட்டது. ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவனுடைய கடைமை தீர்ந்தது (மாற் 7:11) என்ற பாரம்பரியத்துக்குள் அவர்கள் சிக்கிக்கிடந்தார்கள். பெற்ற தாய் தந்தையரை 'கொர்பான்' என்னும் காணிக்கையைக் கொடுத்து விற்றுவிட்டவர்கள் அவர்கள். உறவை விட்டுத் தள்ளிவிட்டு உதவித்தொகையினை மாத்திரம் கொடுத்துவிடுவது நியாயமா? உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக (யாத் 20:12); தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன் (யாத் 21:15); தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன் (யாத் 21:17; நீதி. 30:11). தகப்பனையாவது தாயையாவது நிர்வாணமாக்கலாது (லேவி. 18:7). தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷpக்கிறவன் சபிக்கப்பட்டவன் (உபா. 27:16; நீதி. 20:20). ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான் (நீதி. 15:20). அதுமாத்திரமல்ல, தன் தப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவனும் உண்டு (நீதி. 19:26; நீதி. 28:24).
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது (எபே. 6:3) என்று பவுல் எழுதுகின்றாரே. நம்மைப் பெற்றவர்களைப் பற்றிய காரியம் இப்படியிருக்க, 'கொர்பான்' என்னும் காணிக்கையைக் கொடுத்து, அவர்களது எஞ்சிய ஆயுளைக் கொடுமைக்குள் தள்ளுவது சரியாகுமோ? கற்பத்தில் சுமந்தவர்கள் பலரது பார்வைக்கு அற்பமாகத் தென்படுகின்றனர். இன்றைய நாட்களில், பெற்றோரை தனியாகவே வாழவிடுவதும், முதியோர் இல்லத்தில் காப்பாற்றுவதும், உறவினர் பார்வையில் விட்டுவிடுவதும், எத்தனைப் பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும், பிள்ளையற்றவர்களைப் போல அவர்களை இறுதி நாட்களில் பேதலிக்கச் செய்வதும், பாரம்பரியத்தினாலே கிறிஸ்துவின் கட்டளைகளை அவமாக்கும் செயலேயன்றி வேறல்ல.
தாரத்தைத் தள்ளும் மக்கள்: பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள் (மத் 19:3). ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்(உபா 24:2) என்ற சட்டத்திற்கு இடங்கொடுத்தது தேவன் அல்ல மோசேயே. தள்ளுதற்சீட்டைக் கொடுத்து மனைவியைத் தள்ளிவிடலாமென்ற மோசேயின் கட்டளையினையே பாரம்பரியமாகப் பின்பற்றிவந்தார்கள் அவர்கள்.அவர்களுக்கு இயேசு பிரதியுத்தரமாக, ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார் (மத் 19:5-6). மேலும், உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை (மத் 19:8) என்று சொன்னார். திருமணம் முடிந்த பின்னர் 'விருப்பமில்லை' என்றால் மனைவியைத் தள்ளிவிடலாம் என்பது மோசேயின் பாரம்பரியம், ஆனால், 'வேசித்தனம்' செய்தால் ஒழிய மனைவியைத் தள்ளிவிடமுடியாது என்பதுதான் இயேசுவின் போதனை. இன்று வாழும் கிறிஸ்தவர்கள் பலரும் மோசே சொன்னதும் பரிசேயர் பின்பற்றியதுமான பாரம்பரியத்தைப் பின்பற்றி கிறிஸ்துவின் கட்டளையினை அவமாக்கிவருகின்றார்களே.
தசமபாகத்தை பாரம்பரியமாக்கிவிட்ட கிறிஸ்தவ உலகம்: ஆதி நாட்களில், ஆசாரியர்களின் காலங்களில் ஆண்டவரால் நியமிக்கப்பட்டது என்றபோதிலும், புதிய ஏற்பாட்டின் நாட்களில் 'தசமபாகத்தை' மட்டும் மனதில் கொண்டு, கற்பனைகளைக் கைவிட்டுவிட்டு, பெற்றோருக்கு 'கொர்பான்' என்ற காணிக்கை கொடுப்பது போல, போதகர்களுக்கு 'தசமபாகம்' என்ற காணிக்கையினைக் கொடுத்துவிட்டால் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கும் விசுவாசிகள் அநேகர். உற்சாகமாய் அல்ல, கட்டாயமாய்க் கொடுக்கவேண்டும் என்ற பாரம்பரியத்திற்குள் கிறிஸ்தவர்கள் பலர் தங்களை உட்படுத்திக்கொண்டனர். சபைக்கு தசமபாகத்தைக் கொடுத்துவிட்டால், தேவனுக்குரிய பங்கு முடிந்துவிட்டது என்றே நினைக்கின்றனர் இத்தகைய ஜனங்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து வரும் தசமபாகத்தைக் குறித்து போதகர்கள் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். தேவனுடைய கற்பனையைக் கைக்கொள்ளாமல், இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல், துன்மார்க்கமாகவும் தேவபக்தியற்ற விதமாகவும் வாழ்ந்து சபைக்கும் வந்துகொண்டிருக்கும் மனிதர்கள் போதகர்கள் கையில் கொடுப்பது தசமபாகம் அல்ல 'கொர்பான்' எச்சரிக்கை. எனினும், 'கொர்பான்' கிடைத்தாலே போதும் என்று திருப்தியாகிவிடுகின்ற போதகர்கள் உண்டு. அப்படிப்பட்ட போதகர்கள் 'அடிக்கிறவர்களையும், தூஷிக்கிறவர்களையும், சபிக்கிறவர்களையும், அலட்சியம்பண்ணுகிறவர்களையும், கொள்ளையடிக்கிறவர்களையும், துரத்திவிடுகிறவர்களையும்' கண்டுகொள்ளமாட்டார்கள். இரத்தக்கிரயமான வெள்ளிக்காசை காணிக்கைப் பெட்டியிலே போடலாகாதென்று அன்றைய ஆசாரியர்களே அறிந்திருந்தார்கள் (மத். 27:6). சகோதரனுடன் ஒப்புரவாகாததினால், செலுத்தப்படாமல், பலிபீடத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் காணிக்கையினை எடுத்து போதகர்கள் கணக்கிலே சேர்த்துவிடக்கூடாது, அது சகோதரனுடன் ஒப்புரவாகாத 'கொர்பானாக' இருக்கலாம். அப்படிப்பட்ட கொர்பானை வாங்கி எரிகோ கோட்டையைக் கட்டிவிடவேண்டாம். அன்றைய மாயக்காரரான வேதபாரகரும் பரிசேயரும், ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டார்கள் (மத் 23:23). நியாயப்பிரமாண காலத்தில் உள்ளவற்றில், தங்களுக்குச் சாதகமானதை மாத்திரம் சட்டமாக்கிக்கொண்டு சபை நடத்தும் போதகர்கள் அநேகர்.
பாரம்பரியமாகிவிட்ட இராப்போஜனம்: சகோதரனோடு ஒப்புரவாகாவிட்டாலும் காணிக்கை செலுத்தவேண்டும் என்றும், கர்த்தருக்குக் கீழ்ப்படியாவிட்டாலும் தசமபாகம் கொடுக்கவேண்டும் என்றும் முற்படுகிற மனிதர்கள், இராப்போஜனத்தில் பங்கெடுக்கவும் முன்னேறிவிடுகின்றனர். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன் (1கொரி. 11:28) என்றெழுதப்பட்டிருந்தபோதிலும், அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறவர்களாக மாறி குற்றமுள்ளவர்களாகிவிடுகின்றார்கள் (1கொரி. 12:27). இதற்குக் காரணம், இராப்போஜனத்தை அவர்கள் 'பாரம்பரியமாக' நினைத்துவிட்டதே. இரட்சிக்கப்படாமல் தங்கள் எச்சிலை பாத்திரத்தில் வைத்து ஆக்கினையை அடைந்துவிடுகின்றனர்.
'மனுஷருக்கு முன்பாக நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறவர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருந்தவர்கள் (மத். 23:28); அவர்கள் வாயினால் தேவனிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் அவரைக் கனம்பண்ணுகிறார்கள்; ஆனால், அவர்கள் இருதயமோ தேவனுக்குத் தூரமாய் விலகியிருக்கிறது (மத் 15:8). யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். ஆனால், பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள். (லூக் 7:30)
முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷனை இயேசு சுகமாக்கியபோது, யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள் (யோவா 5:10). சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் கண்ணுக்கு முக்கியமாகத் தெரியவில்லை, ஓய்வு நாளே முக்கியமாகத் தெரிந்தது. ஓய்வுநாள் பாரம்பரியத்தோடு ஒட்டிக்கொண்டிருந்து ஆத்துமாக்களைக் குறித்த பாரத்தை விட்டுவிடவேண்டாம். வழியில் அடிபட்டுக் கிடப்பவனைக் கண்டுகொள்ளாமல், ஆலய ஆராதனைக்கு நேரமாகிவிட்டது என்பவரெல்லாம் இக்கூட்டத்தாரே. இத்தகையோர், தொழுகையில் அல்ல தொழுவில் மாட்டிக்கொண்டவர்கள். உங்கள் கால்கள் சிக்கிக்கொள்ளாதபடிக்குக் கர்த்தர் காப்பாராக. ஆலயத்தைக் காட்டிலும், ஆத்துமாக்கள் முக்கியம், ஆலயத்திற்காக ஆத்துமாக்களைத் தள்ளிவிடவேண்டாம். இதனைப் புரிந்துகொள்ளும் போதகர்களும் இன்றைய நாட்களில் தேவை.
பாரம்பரியமாகிவிட்ட ஞானஸ்நானம்: ஞானஸ்நானத்தின் முறையறியாமலும், ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம் அறியாமலும் இருக்கும் மக்கள் 'கிறிஸ்தவர்கள்' என்று அழைக்கப்படுகிறவர்களிலேயே பலர் உண்டு. இவர்களுக்குத் தொண்டு செய்யும் சபைகளே இதற்குக் காரணம் என்றால், அது மிகையாகாது. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான் (மாற்கு 1:4). இயேசுவும் யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார் (மாற்கு 1:9). தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள் (மத் 3:6). எனினும், வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள மாத்திரம் விரும்பியவர்களாக, மனந்திரும்புதலைக் குறித்த கரிசனையற்றவர்களாக, மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுக்காதவர்களாக வந்த பரிசேயரையும், சதுசேயரையும் யோவான் கண்டபோது (மத். 3:6,7), விரியன்பாம்புக் குட்டிகளே! என்றான். நான் கொடுக்கும் ஞானஸ்நானம் மனந்திரும்புதலுக்குரியது என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்று அவர்களை எச்சரித்தான். மனந்திரும்பி பின்பு ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றான் பேதுரு (அப். 2:38). ஆனால், மனந்திரும்புதலைக் குறித்த அறிவில்லாத நிலையில், குழந்தைப் பருவத்தில், ஆலயத்தில் அர்ப்பணிக்கும் நிகழ்வையே 'ஞானஸ்நானம்' என்ற பாரம்பரியத்துக்குள் தள்ளிவிட்ட கிறிஸ்தவர்கள் ஒரு கூட்டத்தினர். மற்றொருபுறம், ஆவிக்குரிய சபை என்று அழைக்கப்படுவதினால் மனந்திரும்பாதவர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்து, ஞானஸ்நானத்தையும் பாரம்பரியமாக்கிவிட்ட கூட்டத்தினர். கற்பனைகளின் அறிவே நம்மை கர்த்தரண்டை சேர்க்கும்.
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்; (2யோவா 1:9). இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான் (மத் 5:19) என்றார் இயேசு. வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 5:20). 'நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுதல்' 'சகோதரனை வீணனென்று சொல்லுதல்' 'மூடனே' என்று சொல்லுதல், 'குறைகளோடு காணிக்கை செலுத்துதல்' போன்றவை நம்மை எரிநரகத்துக்கே கொண்டு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை (மத். 5:22-24).
வேதபாரகரையும், பரிசேயரையும் போலவே இன்றைய நாட்களில் விசுவாசிகள் பலரும் மாறிவிட்டனர். 'வேதத்தை வைத்துக்கொண்டு நியாயந்தீர்க்கத் தெரியும்; ஆனால், வேதத்தின்படி நடக்கத் தெரியாது' ஆலயத்திற்குச் செல்வதில் தவறுவதில்லை, காணிக்கை கொடுப்பதிலும், தசமபாகம் செலுத்துவதிலும் தவறுவதில்லை; ஆனால், தேவ கற்பனைகளுக்கோ கீழ்ப்படிவதில்லை. இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளாமல், வேதத்தின் சத்தியத்திற்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்காமல் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக ஆலயத்திற்கு வந்து போகும் மனிதர்கள் மாயக்காரர்களே. இத்தகையோரை நோக்கியே, 'உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்' (மத். 15:6) என்கிறார் இயேசு.
பவுல் பாரம்பரியங்களுக்காக வைராக்கியமாக இருந்தவர். என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப் பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேரினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன் (கலா. 1:14) என்று தன்னை அறிமுகப்படுத்தி எழுதும் பவுல், லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக்கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல (கொலோ 2:8) என்று எழுதுகின்றார்.
நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைக்கு உட்படுகிறதென்ன? இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே. இப்படிப்பட்ட போதனைகள் சுயஇஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.(கொலோ 2:20-23)
Comments
Post a Comment