திசை மாறிய பறவைகள்
சட்ட புத்தகம் மட்டும் கையில் காணப்பட்டால் போதாது, சட்டங்களும் வாழ்க்கையில் கடைபிடிக்கப்படவேண்டும். சுவிசேஷத்தைப் பற்றிய விஷயங்கள் பல அறிந்து வைத்திருந்தாலும், சுவிசேஷகத்தைப் பிரசங்கிப்பவராக இருந்தாலும், சுவிசேஷத்திற்கொப்ப வாழ்வில்லையெனில் நமது வாழ்க்கை கர்த்தருக்கு முன் பாழ்நிலமே. சுவிசேஷம் வாழ்க்கையில் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்பதை இயேசுவின் போதனையிலிருந்தும், உவமையிலிருந்தும், உபதேசத்திலிருந்தும் நாம் அறிந்துகொள்வதே பிரதான வழி. நாம் ஆவிக்குரியவர்களாயிருப்போமெனில், நாம் என்ன செய்யNவுண்டும்? என்றும் பிறரிடத்தில் என்ன எதிர்பார்க்கவேண்டும்? என்றும் அறிந்துகொள்வது அவசியம்.
நீங்கள் விரும்புவதை அவர்களுக்குச் செய்யுங்கள்: மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத். 7:12). கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள் (ரோம 12:10). மனிதாபிமானத்திலிருந்து மரியாதை வரை மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது மாத்திரமே சிலரின் குணமாகிவிட்டது. என்னை மதிக்கவில்லை, என்னை கண்டுகொள்ளவில்லை, எனக்கு எதுவும் செய்யப்படவில்லை, எனது பெயர் வாசிக்கப்படவில்லை என்றும், இவைகள் அனைத்தும் தாழ்மட்டத்திலிருந்து உயர்மட்டத்திற்கே செலுத்தப்படவேண்டியவைகள் என்றும் நினைத்துக்கொண்டு வாழும் மனிதர் கூட்டமே மிகுதி. நேற்று என்னை அவர் பார்த்தார், ஆனால் வணக்கம் சொல்லவில்லையே என்பதிலேயே அவர்களுக்கு பிரச்சனை முளைவிடத் தொடங்கிவிடும். நாம் செய்யவேண்டியதை பிறரிடத்தில் எதிர்பார்த்துக்கொண்டிருந்தால், நாம் திசை மாறிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்றே அர்த்தம். விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் (மத் 23:6,7). 'எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரன்' என்று எலிசாவைக் குறித்துச் சொல்லப்பட்டது (2இராஜா. 3:11); சீடர்களுடைய கால்களைக் கழுவினவர்' (யோவான் 13:14) என்று தேவக்குமாரனான இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. மனிதனுடையதை அல்ல, மனுஷக்குமாரனுடையதை நாம் கற்றுக்கொள்ளுவோம், கடைபிடிப்போம்.
கேட்காமல், மன்னியுங்கள்: இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, 'பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என்றார் (லூக். 23:34). யார் யாரிடத்தில் மன்னிப்பு கேட்டவேணண்டும்? என்ற இந்தக் கேள்விக்கு விடை கேட்டால், 'குற்றம் செய்தவர்களே மன்னிப்பு கேட்கவேண்டும்' என்ற பதில் அனைவரின் உள்ளத்திலும் எழும். இதுவே, உலகத்தாரின் நெறிமுறை, எதிர்பார்ப்பும்கூ கூட. ஆனால், இயேசு தான் கடைபிடித்ததும், நமக்குக் கற்றுக்கொடுத்ததும் இதனின்று மாறுபட்டதாயிற்றே. ஒரு குற்றமும் செய்யப்படாத அவரை ஜனங்கள் பிடித்து, நிந்தித்து, முகத்தில் துப்பி, முள்முடி அணிவித்து, உடையின் பேரில் சீட்டு போட்டு, அடித்தவன் யார் என்று கேட்டு, காடியைக் கொடுத்து, சிலுவையில் ஆணியடித்துத் தொங்கவிட்டனர். தேவக்குமாரனுக்கு விரோதமாக கொடிதான குற்றத்தைச் செய்தார்கள் ஜனங்கள். தங்களை இரட்சிக்க வந்தவருக்கு விரோதமாக சத்துருக்களாகி மூர்க்கமடைந்து நின்றனர். இத்தனை கொடிய குற்றத்தை அவர்கள் செய்திருந்தபோதிலும், 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' என்று தாமாக முன்வந்து அவர்களை மன்னித்தார். தன்னை அடித்தவர்கள், மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தவர்கள் அவரிடத்தில் மன்னிப்பு கேட்காதிருந்தபோதிலும், அவராகவே முன்வந்து மன்னித்தார்; இதுவே நாமும் இயேசுவினிடத்திலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். குற்றம் செய்தவர்கள்தான் வந்து நம்மிடத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற மனமாற்றத்திற்குள் சத்துரு கிறிஸ்துவை அறிந்தோரையும் வஞ்சித்து வைத்திருக்கின்றானே. அது உலகத்தினால் உண்டாது; இத்தகை உலகவழக்கத்திற்குள் கிறிஸ்துவைப் பின்பற்றுவோரும் வழுக்கிவிழுந்துவிட்டதுதான் பரிதாபம். 'நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து' (மத். 5:25) என்று போதித்தார் இயேசு. 'மன்னிப்பு' என்பது அடிக்கப்பட்டவரிடமிருந்து அடித்தவர்களுக்குப் புறப்படவேண்டும்; இது தெய்வீக குணம். தேவனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களிடத்திலிருந்து, ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புறப்படவேண்டும் (யோவான் 7:38). தனக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை மன்னித்த பின்புதான் இயேசு ஜீவனை விட்டார் என்பது நினைவிருக்கட்டும். மற்றவர்கள் உங்களை அவமதிக்கும்போது நீங்கள் மன்னிக்கும் இடத்திற்கு உயர்த்தப்படுகிறீர்கள்.
ஆதி அப்போஸ்தலனான ஸ்தேவானின் வாழ்க்கையும் அப்படியே. அவன் கல்லெறியப்பட்டபோது, அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான் (அப் 7:60). இன்றோ, மன்னிக்காமலேயே பலர் மரணத்தைத் தழுவுகின்றனர்; கசப்புடனும், வைராக்கியத்துடனும், கோபத்துடனும், தங்களுக்கு விரோதமாக அவர்கள் செய்தவற்றையே பாரமாய்ச் சுமக்கும் மனதுடனுமே மரணத்தைச் சந்திக்கின்றனர். இத்தகையோர், 'பிதாவே, இவர்களுக்கு மன்னியும்' என்ற பாடத்தைக் கற்காதவர்கள்தானே. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார் (மத் 6:14) என்ற சட்டம் நம்மேல் நிறைவேறினால் நாம் கறையேறுவது கஷ்டமாகிவிடுமல்லவா. 'இயேசு சொன்ன வசனமே நம்மை கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்' (யோவான் 12:48) என்பதை மறந்துவிடவேண்டாம்.
போஜனத்தை விட்டுவிடாதிருங்கள்: இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் (மத் 18:20) என்று இயேசு போதித்துக்கொண்டிருந்தார்; அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் (மத் 18:21,22) என்று கேட்கிறான். இதன் அர்த்தம் என்ன? எனக்கு விரோதமாக குற்றம் செய்யும் சகோதரனை நான் மன்னிக்காது போனால், கூடியிருக்க முடியாதே என்பதுதான். கூடியிருக்க இயலாதவர்கள், முடியாதவர்கள், முயலாதவர்கள் கூட்டிலிருந்து ஓடிவிடுகின்றனர். இன்றைய நிலை இதுவே; ஆலயங்களில், ஜெபக் கூடுகைகளில், ஊழிய ஸ்தாபனங்களில் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் தவறு செய்யும்போது, மனப்பூர்வமாய் அதனை மன்னிக்க மனதில்லாமல், கூடியிராமல், பிரிந்து கிடக்கின்றார்கள். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள் என்கிறார் யாக்கோபு (யாக். 5:16). நியாயாதிபதியாகிய இயேசு வாசலில் நின்றுகொண்டிருக்கிறார், அவர் உள்ளே வர மனதாயிருக்கிறார்; எனவே, சகோதரரே, நீங்கள் ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள். முறையிட்டுக்கொண்டிருந்தால் நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்; (யாக். 5:9), ஐக்கியமாயிருந்தால், நம்மோடு கூட அவரும் அமர்ந்து போஜனம்பண்ணுவார் (வெளி. 3:20). உங்கள் சபைக்குள், ஐக்கியத்திற்குள், ஜெபக்குழுவிற்குள், ஸ்தாபனத்திற்குள் இயேசு போஜனம்பண்ணும்படி வர விரும்புகிறீர்களா அல்லது நியாதிபதியாக வர விரும்புகிறீர்களா? 'கர்த்தரின் பந்தியில் வா சகோதரா கர்த்தரின் பந்தியில் வா' என்ற பாடலைப் பாடி கர்த்தரின் பந்தியில் சகோதரனுடன் சேருவோம்.
சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான். நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய் (யாக். 4:11) என்று யாக்கோபு எழுதுகின்றார். சகோதரர்களுக்கு விரோதமாய் எழும்பும் மனிதர்கள், மற்றொரு பள்ளத்தாக்கிற்குள்ளே தங்களைத் தள்ளிக்கொள்வதை, நியாயாதிபதியாக தங்களை உயர்த்திக்கொள்வதை இந்த வசனத்தில் நாம் காணலாம். அப்படிப்பட்டோர், மாம்சத்துக்கேற்றபடியே நியாயந்தீர்க்கிறார்கள் (யோவான் 8:15). நியாயாதிபதி கிறிஸ்துவே! நம்மை நியாயந்தீர்ப்பவர் அவர் ஒருவரே! சிங்காசனத்தில் வீற்றிருக்க அதிகாரம் பெற்றவர் அவர் மாத்திரமே! நம்மை நியாயாதிபதியாக்காதிருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக