Skip to main content

விதிமீறல்

 

விதிமீறல்

 

பரலோக ராஜ்யத்தின் விதிமுறைகள் வித்தியாசமானவைகள். மனித மார்க்கமாய் பின்பற்றப்பட்டுவருகின்ற பல்வேறு செயல்முறைகள், ஒருவேளை பாவமாயில்லாமலிருக்கலாம் ஆனால், பரத்தினால் அங்கீகரிக்கப்பட்டதல்ல. பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் (கொலோ 3:2) என்கிறார் பவுல். பிதாவை நோக்கி இயேசு ஜெபிக்கும் வேளையில், 'நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல' (யோவான் 17:14,16) என்று தன்னையும், தனது சீஷர்களையும் பிதாவுக்கு இயேசு அடையாளப்படுத்திக் காண்பிக்கின்றாரே. கர்தர் நமக்கு வித்திருக்கின்றவைகளைச் செய்ய நாம் கவனமாயிருக்கவேண்டும் என்பதுதானே வசனங்கள் நமக்கு உணர்த்தும் சத்தியம் (உபா. 12:32; 17:10; 24:8; 28:1; 31:12; 32:46; யோசு. 1:7). வசனங்கள் வாசிப்பதற்காக மாத்திரமல்ல, வாழ்வதற்காக நமக்கு அருளப்பட்டவைகள். மனந்திரும்பியோர் பலர் தங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்திருந்தபோதிலும், வாழ்க்கையின் பல பகுதிகளில் வேத வசனத்தின் வழிகளில் ஒத்துழைக்க மறந்துவிடுகின்றனர், மறுத்துவிடுகின்றனர். இயேசுவை ஜனஙகள் பிடித்து பிலாத்துவுக்கு முன் நேர் நிறுத்தியிருந்தபோது, பிலாத்து இயேசுவை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா? என்று கேட்டான் (யோவான் 18:33); இயேசுவோ பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார் (யோவான் 18:38).

பரலோக ராஜ்யத்தின் விதிமுறைகளையும் அதற்கு முரணான உலக ராஜ்யத்தின் நடைமுறைகளையும் நாம் அடையாளம் கண்டுகொண்டால் மாத்திரமே பரலோக ராஜ்யத்தின் வாசிகளுக்கான குணநலன்களோடு பூலோகத்திலே வாசம் செய்யமுடியும். 
ஒருவன் ஓடிவந்து, இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார். அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக் கொண்டிருக்கிறேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து, 'உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்' (மாற். 1019-21) என்று சொன்னார். நியாயப்பிரமாணத்தைக் குறித்த அறிவு அவனுக்கு இருந்தது; ஆனால், அந்த அறிவு பரலோகத்தில் அவனுக்குப் பொக்கிஷக்தைக் கொண்டுவரவில்லை. பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்ப்பதற்கான வழிமுறையினை இயேசு அவனுக்குச் சொன்னபோதிலும், அவனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகுந்த ஆஸ்தியுள்ள அவன் மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான் (மாற். 10:22). தேவனைக் குறித்த அறிவைக் கொண்டிருந்தும், அவரை வேதனைப்படுத்தும் வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் ஏராளம், ஏராளம். ஒருபுறம் இவ்வுலகத்தின் விதிமுறைகளில் சிக்கியிருக்கும் வாழ்க்கை, மறுபுறம் நித்திய ஜீவனைக் குறித்த ஆசை. இவ்வுலகத்தில் நமக்கு எவ்வளவு ஆஸ்திகள் இருக்கின்றன என்பதை கணக்கில் கொள்பவரல்ல இயேசு; நாம் அவரைச் சந்திக்கும்;போதெல்லாம், நமது பரலோக பொக்கிஷத்தின் நிலையே அவரது கண்ணுக்கு முன் தென்படும். இந்த உலகத்தில் ஐசுவரியமாய் வாழ்ந்து, செய்யத்தக்க நன்மைகளைக் கூட செய்ய மறந்து, மரணத்திற்குப் பின்னர் தண்ணீருக்கும் திண்டாடிய ஐசுவரியவான் - லாசருவின் சம்பவம் நமக்கு நினைவில் வரட்டும்.

எனவே இயேசு தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும். நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார் (லூக் 14:12-14). திருமண நிகழ்வுகளில், மற்றெந்த விசேஷித்த காரியங்களின்போது தரித்திரரையும், பிச்சைக்காரர்களையும் விருந்துண்ண அழைப்பதை தரக்குறைவாகப் பார்க்கும் உலக விதியினை மீறிச் செயல்படமுடியாமல் இருக்கும் மனிதர்கள்தானே நாம். திருமணத்தின்போது, பிச்சைக்காரன் ஒருவன் தெரியாமல் வந்துவிட்டால், பந்தலுக்கு வெளியே அல்லது திருமண மண்டபத்துக்கு வெளியேதானே விரட்டிவிடுகின்றோம்; இது பரமராஜ்யத்தின் நியமமல்லவே. ஆவிக்குரிய மனிதர்கள் என்று சொல்லிக்கொண்டாலும், அவரது பசியை உணர்ந்துகொள்ளாததினால், பரலோக ராஜ்யத்திற்குள்ளேயே பிரவேசிக்கும் சிலாக்கியத்தை நாம் இழந்துவிடுகின்றோமே (மத். 25:42-46).

பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை; என்று சொன்ன இயேசு, உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் (மத் 6:19-21) என்று நமது நிலமையையும் எடுத்துக் கூறினார். பொக்கிஷத்தை பூமியிலே வைத்துவிட்டு, பரலோகத்தில் ஒன்றுமில்லாதவர்களாய் நுழையும் மாயையான நிலைக்கு நமது வாழ்க்கையை தத்தம் செய்துவிடவேண்டாம். நாம் சேருகின்ற இடத்திலேயே சேர்ப்போம் பொக்கிஷத்தை.

ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறான் (மத் 11:11) என்றார் இயேசு, இது பரலோகத்தின் விதிமுறை. உலகிலோ யோவான் பெரியவன்; ஆனால், பரலோக ராஜ்யத்திலோ யோவானிலும் பெரியவன் இருக்கின்றான். மாளும் உடலோடு, வாழும் ஆஸ்திகளோடு இருப்பவர்களையே மதித்து, மரியாதை செலுத்துவது உலக வழக்கம். எனினும், மனுஷன் பார்க்கிற வண்ணம் பார்க்கிறவரல்லவே இயேசு, அவர் பரலோக ராஜ்யத்தின் விதிகளின்படி நமது வாழ்க்கையினை அளக்கிறவரல்லவா. அவரது அளவின்படியே நாம் வாழக் கற்றுக்கொள்ளுவோம்.

இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள். ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். (மாற் 12:41-44) என்றார். இன்றைய ஊழியர்கள் நெஞ்சில் இயேசுவின் இப்படிப்பட்ட அளவுகோல் உண்டா? அதிகமாய்க் கொடுக்கிறவர்களைத்தானே அதிகமாய்க் கொடுக்கிறவர்கள் என்று அளந்துகொண்டிருந்கின்றார்கள். அப்படிக் கொடுக்கிறவர்களுக்குத்தானே பலவிதமான உபசரிப்பும், வாகனங்களும், மரியாதைகளும், பாராட்டுகளும், விதவிதமான உணவு வகைகளும் பரிமாறப்படுகின்றன. ஊழியத்திற்கென்று ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் கொடுத்தவர்களுக்கெல்லாம் இத்தகைய காரியங்களைச் செய்ய மனம் வருவதில்லையே. இதை பாரபட்சம் என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்லுவது. எனவே யாக்கோபு, என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? நீங்களோ தரித்திரரைக் கனவீனம் பண்ணுகிறீர்கள் என்று எழுதுகின்றார் (யாக். 2:5-6). ஊழியத்திற்கென தங்கள் ஐசுவரியத்திலிருந்து பணத்தை வாரி இறைக்கும் மக்களே அதிகம் கொடுத்தவர்களாகக் கணக்கிட்டு, ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்ட அநேகர் கண்களுக்குத் தென்படாமலேயே போய்விடுகின்றனர். அதிகம் கொடுத்தோர் என அவர்களைப் பாராட்டும்போது, ஜிவனத்துக்கு உண்டான எல்லாவற்றையும் கொடுத்த இவர்கள் மனம் புண்படும் என்பதை மறுத்துவிடக்கூடுமோ. ஆனால், பரலோகராஜ்யமோ இப்படிப்பட்ட மக்களை 'அதிகம் போட்டவர்கள்' பட்டியலில் எழுதிவைத்திருக்கின்றது. தேவ ஜனங்களாகிய நமது கணக்கு தேவ ராஜ்யத்திற்கு முரண்படலாமா? ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாவற்றையும் போட்டுவிட்டபோதிலும், அதனை ஐசுவரியவான்கள் போட்டதற்கு ஒப்பிட்டு, 'இன்னும் அதிகம் கொடுங்கள், இன்னும் அதிகம் கொடுங்கள்' என்று கேட்போரே பெருகிவருகின்றனர்.

கர்த்தர் எலியாவை நோக்கி, நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார் (1இரா 17:9). எலியா சாறிபாத்துக்குச் சென்று, விறகு பொறுக்கிக்கொண்டிருந்த விதவையைச் சந்தித்து அப்பம் கேட்டபோது, அந்த விதவை எலியாவை நோக்கி: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம் (1இரா 17:12,13) என்றான். தனது பசியைத் தீர்க்கும்படியாக அல்ல, அந்த ஏழை விதவை ஆசீர்வதிக்கும்படியாகவே எலியா அவளிடத்தில் அப்பத்தைக் கேட்டான். தனது பசியினை மாத்திரம் தீர்த்துக்கொண்டு, ஏழையின் ஆசீர்வாதத்தைக் குறித்து கவலையற்றவர்களாக இருக்கும் ஊழியர்கள், கொடுப்பவர்களின் மனந்திரும்புதலைக் குறித்தோ, வாழ்க்கையைக் குறித்தோ அவர்கள் செய்யும் பாவங்களைக் குறித்தோ கவலைகொள்ளாமல் 'கொடுங்கள்' 'கொடுங்கள்' என்றே போதித்துக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் கொடுக்கும் மக்கள், ஜீவனத்துக்குண்டானதையும் கொடுத்து ஜீவனையே விட்டுவிடுகின்றனர்; அவர்கள் ஜீவனும் நித்தியராஜ்யத்திற்குத் தூரமாகிவிடுகின்றது. ஊழியர்களே எச்சரிக்கை! ஊழியத்திற்குக் கொடுப்பவர்களே எச்சரிக்கை! பாவம் செய்துகொண்டே தேவனுடைய பசியை ஆற்ற முற்படாதீர்கள்; நீங்கள் பிரதிபலனுக்குத் தூரமாய் இருப்பீர்கள்.

எனவே பவுல், இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், நன்;மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு (1தீமோ 6:17-19) என்று தீமோத்தேயுவுக்கு எழுதுகின்றார்.

ஞானத்திலும் பரலோகராஜ்யத்தின் சுதந்தரவாளிகளான நாம் வித்தியாசமுடையவர்களே. உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.வைராக்கியம் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச் செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது (யாக் 3:13-17) என்று உலக ஞானத்தையும், பரத்திலிருந்து வருகிற ஞானத்தையும் வேறுபடுத்திக் காண்பிக்கிறார் யாக்கோபு. அப்படியே பவுலும், தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது (1கொரி 1:25) என்று எழுதுகின்றாரே. உலக ஞானத்தைப் பெற்றவர்களுக்கும், தேவ ஞானத்தைப் பெற்றவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. உலக ஞானத்தை தேவ ஞானத்திற்கு ஈடாக பார்த்துவிட முடியாது. இயேசுவின் ஞானத்தைக் கண்ட யூதர்கள் இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று இயேசுவைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள் (யோவா 7:15). ஸ்தேவான் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று (அப் 6:10). உலகத்தின் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார் (1கொரி 1:27,28). உலகத்தில் எத்தனை பெரிய கல்வியைக் கற்றும், அறிவுடையவனாக இருப்பினும், தேவபயம் இல்லாதிருந்தால், தேவ ஞானம் கொண்ட சாதாரண மனிதனால் அவன் வீழ்த்தப்படுவான். கர்த்தருக்குப் பயப்படுதல்தானே ஞானத்தின் ஆரம்பம். இந்த ஆரம்பம் இல்லாமல், அஸ்திபாரம் இல்லாமல், அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால், பரலோக ராஜ்யத்தைப் பொறுத்தவரையில் அவன் பைத்தியக்காரனே. ஆனால், கிறிஸ்தவ உலகத்திலும், ஊழியத்திலும் இப்படிப்பட்ட அஸ்திபாரமில்லாமல் வீடுகட்டியிருக்கும் மனிதர்களை பெரிய ஞானவான்களாகப் பார்க்கும் நிலை உண்டாகிவிட்டது. எத்தனை மாடி வீடு கட்டியிருந்தாலும், அவனுக்கு அஸ்திபாரம் உண்டா என்பது நமது ஆரம்ப கேள்வியாகட்டும்.


இயேசுவை ஏற்றுக்கொண்ட நாம் இயேசுவின் கண்களைச் சுமப்போம்

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...