ஞானம்
இவ்வுலக வாழ்க்கை தேவன் நமக்குக் கொடுத்த ஓர் வரப்பிரசாதம். அவர் விரும்புகிறதை நம்முடைய வாழ்க்கையில் எழுதும்படியாகவும், நம்முடைய வாழ்க்கையைக் கொண்டு பிறருடைய வாழ்க்கையை வடிவமைக்கும்படியாகவும் நம்மைத் தெரிந்துகொண்ட தேவன், நமக்கு வாழ்நாட்களைக் கூட்டிக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார் என்பது சந்தோஷமான செய்தி. எனினும், வருகின்ற வருடத்தை சந்தோஷத்தோடு வாங்கிக்கொள்ளும் நாம், போய்விட்ட வருடத்தை திரும்பிப்போய் பிடிக்க முடியாது என்பது வருத்தமான செய்தி. 'உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்' (2 இராஜா. 20:6) என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக எசேக்கியாவுக்கு சொல்லிய தேவன், நம்முடைய வாழ்நாளின் நீளத்தையும் அறிந்தவரே. 'என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது' (சங். 31:15) என்பதுதான் நமது விண்ணப்பமாயிருக்கவேண்டும்.
பிரியமானவர்களே, கர்த்தர் நமது வாழ்க்கையில் கூட்டிக்கொடுக்கும் ஒவ்வொரு வருஷமும் அர்த்தமுள்ளது, அது அவருடையது, அதனை பிரயோஜனப்படுத்திக்கொள்ளவேண்டிய பொறுப்பு நம்முடையது. காசுகளைச் செலவு செய்ததற்கான காரணத்தை கணக்குப் பார்க்கின்ற நாம் காலத்தைச் செலவு செய்ததற்கான கணக்கினையும் கூடவே சேர்த்துப் பார்ப்போமென்றால் வாழ்க்கையில் வெற்றியின் இலக்கைத் தொட்டுவிடுவோம். அவருக்காக நாம் செயல்பட்டிருப்போமென்றால் ஆனந்தம் நமது மனதில் தங்கியிருக்கும், அதுவே இவ்வருடத்திலும் நம்மோடு தொடரும். நாம் பிறந்ததற்கும், நமது வாழ்க்கை தொடர்வதற்கும் ஓர் காரணம் இருக்கும்போது, 'ஏன் பிறந்தேன்' என்றும், 'வாழ்க்கை வீண்' 'ஏன் வாழுகிறேன்' என்றும் புலம்பும் மனிதர்களாக நாம் காணப்படக்கூடாது.
சாலமோன் எழுதின பிரசங்கியின் புத்தகத்தில் ஆங்காங்கே தேவன் கொடுத்த ஞானம் வசனங்களில் தென்பட்டபோதிலும், வாழ்க்கையைக் குறித்த பல நிகழ்வுகளை சாலமோன் விளக்கும்போது, வாழ்க்கை என்பது ஒன்றுமில்லை என்பதைப்போலவும், இப்புவியில் வாழ்வதில் அர்த்தம் ஏதுமில்லை என்பதைப்போலவும், நமது வாழ்க்கையின் பிரயாசத்தினால் பலனோ பயனோ எதுவும் கிடைக்காததுபோலவும், அநியாயமாய் வாழ்ந்து அனைத்தையும் சேர்த்து அடுத்தவருக்கு விட்டுப்போவதைப் போலவும், இப்பூமியில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளினாலும் நாம் ஏமாற்றப்படுவதுபோலவும், மாயைக்குள்ளேயே தேவன் நம்மை மாட்டிவிட்டிருப்பதைப்போலவுமே நமக்குத் தோன்றும். மாயை மாயை என்று வாயைத் திறந்து சாலமோன் சொல்லும் வார்த்தைகள் நம்முடைய மனதையும் அப்படியே மாற்றிவிடக்கூடாது, அவனைப்போலவே சொல்லவைத்துவிடக்கூடாது, சத்தியத்தை நோக்கிய நமது சாயையினைச் சரியான கோணத்தைவிட்டு சரியச் செய்துவிடக்கூடாது.
வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும் பொருட்டு, என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன் (பிர 2:3) என்கிறான் சாலமோன். எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும் திரவிய சம்பன்னனுமானேன்; என் ஞானமும் என்னோடேகூட இருந்தது. என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சி கொண்டிருந்தது; இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன் (பிர 2:9,10). அவனது வாழ்க்கையின் உண்மையான வரைபடத்தை இந்த வரிகள் நமக்கு வெளிப்படுத்துகின்ன. அவனது இருதயம் ஞானத்தால் தேற்றப்பட்டுக்கொண்டிருந்தது; ஆனால், அவன் தனது சரீரத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருந்தான். இருதயத்திலோ ஞானம், சரீரத்திலோ மதுபானம்; எனவே புத்தியீனம் அவனை அவ்வப்போது பற்றிக்கொண்டது. ஒருபுறம் ஞானம், மற்றொருபுறம் சரீரம், இவ்விரண்டும் அவனது வாழ்க்கையில் கட்டிப்பிடித்து உருண்டுகொண்டிருந்தன. இந்த சண்டையின் சத்தமே பிரசங்கியின் புத்தகத்தில் எதிரொலிக்கிறது.
மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே (பிர 3:19) என்கிறான் சாலமோன். தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி 2:7) என்றல்லவா நாம் படைப்பின் உண்மையினைக் குறித்து வாசிக்கின்றோம். அப்போஸ்தலனாகிய பவுலும் தனது நிருபத்தில், 'எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே (1கொரி 15:39) என்று எழுதுகின்றாரே. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷpத்தவர்கள் அல்லவா? (மத் 6:26) என்றல்லவா இயேசுவும் போதித்தார். மதுபானம் ஞானத்தைப் புரட்டிப்போட்டதினால் வந்த விளைவுதான் அவனது வாயின் இந்த வார்த்தைகள்.
சாலமோன் தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்டபோது, 'உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை' (1இராஜா. 3:12) என்றார் தேவன். தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார் (1இராஜா. 4:29); சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது (1 இராஜா. 4:30); அவன் எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான் (1இராஜா. 4:31). எத்தனை பெரிய உயர்ந்ததோர் அனுபவம், உன்னதமானதோர் ஸ்தானம். தேவனிடத்திலிருந்து இத்தனையாய் ஞானத்தைப் பெற்றிருந்தாலும், ஞானி என்கிற தோற்றத்தில் அவன் வாழ்ந்துகொண்டிருந்தாலும், உள்ளத்திலோ சாலமோன் தோற்றுப்போனவன். ஞானத்தினால் அவனுக்கு உலகத்தில் உயர்வு கிடைத்தது, எனினும், உணர்வுகளோ அவனை கீழே இழுத்தது.
'பிரவேசிக்கலாகாது' 'சாயப்பண்ணுவார்கள்' 'வழுவிப்போகப்பண்ணுவார்கள்' (1இராஜா. 11:1-3) என்று தேவன் எச்சரித்திருந்த ஸ்திரீகளை நேசித்து தனது வாழ்க்கையினை நாசப்படுத்திக்கொண்டவன் அவன். வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள் (1இரா 11:4). 'மாயை மாயை எல்லாம் மாயை' (பிர. 1:1, 14; 2:11,17; 12:8), எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது (பிர. 1:8) என்று இவ்வுலகத்தின் வாழ்க்கையினையே வேண்டா வெறுப்பாக சாலமோன் பார்ப்பதற்கும், வருத்தத்துடன் புலம்புவதற்கும் காரணம் அவனது வாழ்க்கையில் உண்டாகியிருந்த வீழ்ச்சியே. தேவனைப் பற்றிய, உலகத்தைப் பற்றிய, உலகில் உள்ளவைகளைப் பற்றிய ஞானம் உண்டு; இத்தனை இருந்தும், வீழ்ச்சி அவனை வாழ்க்கையிலிருந்து வெறுப்பை நோக்கி வெளியேற்றியது. எனவே, வாழ்க்கையினை 'மாயை, மாயை, மாயை' என்றே வர்ணித்து எழுதுகின்றான். வீழ்ந்துபோன மனிதர்களே வாழ்க்கையைப் பழித்துப் பேசுகின்றனர். வீழ்ந்துபோன மனிதர்களாக அல்ல, வீரமுள்ள மனிதர்களாக, வரும் ஆண்டை எதிர்கொள்ள முற்படுவோம்.
தாயின் விழுகையினாலேயே தாவீதுக்கு வாரிசாகப் பிறந்தவன் சாலமோன். தந்தையின் செயல்தனை அறிந்திருந்தும் தன்னைத் தப்புவித்துக்கொள்ளவும், தற்காத்துக்கொள்ளவும் அவன் தவறியிருந்தான். தேவன் சாலமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார் (2 நாளா. 1:7), அதற்கு சாலமோன், 'ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்' (2நாளா. 1:10) என்று கேட்டான். ஞானத்தைக் கேட்ட சாலமோனுக்கு, தேவன் ஞானத்தோடு கூட ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுத்தார் (2நாளா. 1:12). முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (மத். 6:33) என்ற சூத்திரத்தின்படி தேவன் ஒரு குறைவும் வைக்காது அத்தனையையும் கூடக் கொடுத்தார். எனினும், அத்தனை காரியங்களும் வாழ்க்கையில் கிடைத்த பின்பு சாலமோன் கர்த்தரைப் பற்றிய ஞானத்தை மதியாமல் வாழ்ந்துகொண்டிருந்தான். இத்தகைய வாழ்க்கை இந்த ஆண்டில் நம்மிடத்தில் காணப்படாதபடி கவனமாயிருப்போம்.
ஒரு கடைக்குச் செல்கிறோம், அங்கே ஒரு பொருளின் மீது அழகிய கிண்ணம் ஒன்று இலவசம் என்ற அறிவிப்பு எழுதப்பட்டிருக்கிறது. பொருளை விட்டு விட்டு கிண்ணத்தை மட்டும் இலவசமாகக் கேட்போமென்றால் கடைக்காரர் அதனைக் கொடுக்க மறுத்துவிடுவார். அது அந்தப் பொருளுடன் சேர்ந்து கிடைப்பது. பொருளை வாங்கினால் அந்த இலவசம் தானாகவே நமக்குக் கிடைத்துவிடும். ஆனால் நாம் வீட்டிற்கு வந்த பின்னர் அந்த பொருளை வீசிவிட்டு கூட கிடைத்த இலவசமானதை மட்டும் வைத்துக்கொள்ளும் உரிமை நம்முடையது. இதுவே இன்று அநேகருடைய வாழ்க்கையில் நடைபெறுகின்றது. தேவனை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் அநேக காரியங்களை கூடப் பெற்றுக்கொண்டு, பின்பு தேவனை வீசிவிட்டு கூட கிடைத்த காரியங்களுடனேயே வாழத்தொடங்கிவிடுகின்றனர். கண்களால் முதலில் இலவசத்தைப் பார்த்துவிட்ட மக்கள் இவர்கள். ஐசுவரியம் அவர்கள் உடன் இருந்தாலும்; ஆனால் ஆசீர்வதித்தவருடன் அவர்கள் உறவு தொடருவதில்லை. ஆண்டவரிடத்தில் பேசும்போது, ஆவிக்குரியவர்களைப் போல பேசிவிடுகிறோம், ஆனால் உள்ளத்திலோ இலவசத்தின் மீதான ஈர்ப்பு ஒட்டியிருக்கிறது; அது ஆண்டவரை விட்டு நம்மை ஓரங்கட்டிவிடப் போதுமானது.
இடையில் அவ்வப்போது தேவன் தரும் இலவசங்களில் விழுந்துவிட்டோரும் உண்டு. பிறந்தநாள் அன்று ஓர் தந்தை மகனிடம் உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அழகிய கைக்கடிகாரம் ஒன்று வேண்டும் என்றான் மகன். மறுநாள் மாலையில் கடைக்கு அழைத்துச் சென்றார் தந்தை. அழகியதோர் கடை, ஏராளமான விதவிதமான கைக்கடிகாரங்கள் மத்தியில் மகனை கொண்டுவந்து நிறுத்திய தந்தை, உனக்கு எந்த கடிகாரம் வேண்டும் என்று கேட்டான். கடையில் நுழைந்ததும் தன் கண்ணை அதிகம் கொள்ளை கொண்டிருந்த ஓர் கடிகாரத்தை நோக்கி விரல் நீட்டினான் மகன். கடைக்காரர் அதனை எடுத்து காட்டினார். இதுதான் வேண்டுமா என்று தந்தை கேட்க, மகனும் ஆம் என்று சொல்ல, அதற்கான விலையைக் கொடுத்தார் தந்தை. கடைக்காரர் கடிகாரத்தை கையில் கொடுக்கும்போது, மற்றும் ஒரு பெட்டியையும் சேர்த்துக் கொடுத்தார்; இது என்ன? என்று தந்தை கடைக்காரரிடம் கேட்க, இந்த கைக்கடிகாரத்துடன் உங்களுக்குக் கிடைக்கும் இலவசப் பரிசு என்றார் கடைக்காரர். கடிகாரத்துடன் கடையைவிட்டு தந்தையும் மகனும் வெளியேறினர். கைக்கடிகாரத்தை கண்களால் பார்த்துவிட்டான் மகன்; கட்டிக்கொள்ள கடிகாரம் கையிலிருந்தும் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதைக் காணும் ஆசையில் கடையிலிருந்து தந்தையுடன் வீடு வந்துகொண்டிருந்தான் மகன். வீட்டில் நுழைந்ததும், கடிகாரத்தைப் பற்றிக் கூட பேசாமல், தந்தையிடமிருந்து அந்த பரிசுப் பெட்டியை வாங்கினால், மெதுவாகப் அதனைத் திறந்து பார்த்தான்; அங்கே அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே அழகியதோர் பேட்டரியினால் இயங்கக்கூடிய பொம்மை கார் இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே விலை கொடுத்து வாங்கிய கைக்கடிகாரம் அவன் கையில் இருந்தது, ஆனால், இலவசமாகக் கிடைத்த குட்டி காரோ அவனது கையை விட்டுப் பிரியாமல் இருந்தது. சில மாதங்களுக்குப் பின்னர், அந்தக் கடிகாரம் ஓடாமல் ஒரு மூலையில் நின்று கிடந்தது, ஆனால் அந்த காரோ அவனைச் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. நாம் எதிர்பாராமல் நம்முடைய வாழ்க்கையில் வந்து சேரும் ஆசீர்வாதங்கள் எத்தனையோ எத்தனையோ? எனினும், இந்த குட்டிப் பையனைப் போன்றதாகவே சிலநேரங்களில் நம்முடைய வாழ்க்கை காணப்படுகின்றது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்துக்கொண்டிருப்பவைகள் அனைத்தும், ஆண்டவரை நீங்கள் தேடியதால் உங்களிடத்தில் வந்து சேர்ந்தது என்பதை இந்த ஆண்டில் மறந்துவிடாதிருங்கள்.
இந்த உலகத்தின் ஐசுவரியங்கள், சம்பத்து, கனம் இவை எல்லாவற்றையும் தேவன் இலவசத்தின் பட்டியலில் வைத்திருக்கிறார்; இவையெல்லாம், கூடக் கிடைப்பவைகளே. இரட்சிப்பையோ அவர் விலைக்கிரயத்தின் பட்டியலில் வைத்திருக்கிறார்; அதற்கான விலையினையோ அவரே செலுத்தியிருக்கிறார். எனவே பவுல், 'கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்' (1கொரி 6:20) என்று அறிவுரையாகவும், 'தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?' (ரோம 8:32) என்றும் தான் அறிந்திருந்த முறையினை நமக்கு எழுதி உணர்த்துகின்றார். பேதுருவும், 'கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை' (2பேது. 2:1) என்றே குறிப்பிடுகின்றாரே. நம்முடைய இரட்சிப்பிற்கு தேவன் விலைக்கிரயம் செலுத்தியிருக்கிறார். தேவன் விலைசெலுத்திய இரட்சிப்பு நமக்கோ இலவசமாகக் கிடைத்திருக்கிறது. எனவே பவுல், கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபே 2:8) என்று எழுகிறார். தேவன் விலைகொடுத்து வாங்கித்தந்திருக்கும் இரட்சிப்பை நாம் 'இலவசம், இலவசம்' என்று எண்ணி எண்ணி, இலவசமாக தேவனிடத்திலிருந்து கிடைக்கக்கூடிய காரியங்களுக்கான விலைமதிப்பினை மனதில் வளர்த்துக்கொள்ளவேண்டாம். அவருக்காக எல்லாவற்றையும் நஷ;டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் (பிலி 3:11) என்ற பவுலின் நிலைக்கு நாம் இந்த ஆண்டில் உயர கர்த்தர் வழிநடத்துவாராக.
பிசாசு இயேசுவை சோதித்தபோது, அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னனபோது, இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார் (மத் 4:8-10). முதலிடம் தேவனுக்கு என்பது சோதனை நேரங்களிலும் நிரூபிக்கப்படவேண்டியது. 'உலகத்தில் உள்ளவைகள் வேண்டும்' என்பது இந்த ஆண்டு நமது சிந்தையில் முதலாவதாக இருக்குமென்றால், நீங்கள் ஆண்டவரை விட்டு விலகிச் செல்லுவதற்கான ஆரம்பமாக பிசாசு அதனை உங்கள் வாழ்க்கையில் மாற்றிவிடக்கூடும். ஆண்டவரையே தேடுங்கள், அவருடiனேயே வாழுங்கள், வாக்குத்தத்தங்கள் தாமதமானாலும், அவருடனான வாழ்க்கை என்பது தரமுள்ளதாக இருக்கட்டும்.
Comments
Post a Comment