ஆத்துமாவின் அஸ்திபாரம்
பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ;டத்தையும் வெயிலின் உஷ;ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். (மத் 20:12)
ஆவிக்குரிய வாழ்க்கையின் அஸ்திபாரம் ஆடிவிடாதபடிக்கு எப்பொழுதும் நாம் ஆயத்தத்தோடுகூட காணப்படுவது அவசியம். ஆனந்தம் பொங்கும்போது ஆர்ப்பரிப்பதும், துன்பங்கள் நெருங்கும்போது துவண்டுவிடுவதும், தோல்வியின் பக்கத்தில் எப்போது வேண்டுமானாலும் நம்மை இழுத்துச் சென்றுவிடக்கூடும். கட்டிடங்கள் ஆடும்படியாக அல்ல, அஸ்திபாரங்களிலிருந்து அது அகன்றுபோகும்படியாகவே சத்துருவாகிய சாத்தான் கிரியை நடப்பிக்கின்றான். எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாச்சாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது (1கொரி 3:10,11) என்று பவுல் எழுதுகின்றாரே. இதனையே, 'வேறொரு சுவிசேஷம் இல்லையே' (கலா. 1:7) என்று கலாத்தியருக்கும் பவுல் குறிப்பிடுகின்றார். கட்டடம் ஒருவேளை விதவிதமாக, அழகழகாக, பல்வேறு வேலைப்பாடுகளோடுகூட கட்டப்பட்டபோதிலும், அஸ்திபாரமோ ஒருபோதும் மாற்றத்தக்கது அல்ல என்பதுதானே பவுல் கற்றுத்தரும் பாடம். என்றபோதிலும், மாற்றப்படக்கூடாதவாறு, மறைவாக, பூமிக்குள்ளேயே புதைந்திருக்கும் அஸ்திபாரத்தைக்கூட அசைத்துப் பார்க்கக சத்துரு சில நேரங்களில் சதி செய்கிறான். தேவனுக்குள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை உறுதியாயிருக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில், அஸ்திபாரமாகிய அவரிடத்திலிருந்து நம்முடைய உறவையே துண்டித்துவிடும்படியான காரியங்களை அரங்கேற்றும்போது, நாம் கவனமாயிருக்கவேண்டியது அவசியம்.
மேலும், 'இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்' (1கொரி 10:12) என்று பவுல் தனது நிருபத்தில் எழுதுகின்றாரே. அத்துடன், 'பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்' (2கொரி 5:1) என்றும் சுட்டிக்காட்டுகின்றாரே. இதன் பொருள் என்ன? பூமிக்குரிய காரியங்கள் அழிந்துபோகும்போது, கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருக்கிற நமது ஆத்துமாவும் கவலைக்குள்ளாகி அழிந்துபோய்விடக்கூடாது, நித்திய வீட்டிற்குள் பிரவேசிக்க ஆயத்தமாயிருக்கவேண்டும் என்பதுதானே.
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது (மத் 7:25) என்ற இயேசு கிறிஸ்துவின் போதனையில், அஸ்திபாரத்தின் மீது அழகாகக் கட்டப்பட்டிருக்கும் வீடு கடந்துபோவோரின் கண்களுக்குத் தென்பட்டபோதிலும், அஸ்திபாரமோ பிறரது கண்களுக்கும், அஸ்திபாரத்தின் ஆழமோ வீட்டைக் கட்டினவனின் அறிவுக்கு மாத்திரமுமே அல்லாமல் வேறெவருக்கும் தெரிவதில்லையே. என்றபோதிலும், பல நேரங்களில் பூமிக்குரிய காரியங்களை கருத்தில் கொண்டே பரத்திற்கு நாம் பணிசெய்துகொண்டிருக்கின்றோம். அஸ்திபாரத்தின் அந்தரங்கம் ஒருவேளை அடுத்தவருக்குத் தெரியாதிருந்தாலும், அடுத்தவரோடு ஒப்பிடும்போது அது வெளிப்படத் தொடங்கிவிடுகின்றதே.
வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினபோது (மத் 20:2), அவர்களும் எஜமானின் சம்பளத்திற்குச் சம்மதித்தார்கள். என்றபோதிலும், மூன்றாம் மணி வேளையிலும், ஆறாம் மணி வேளையிலும், ஒன்பதாம் மணி வேளையிலும் மற்றும் பதினோராம் மணி வேளையிலும் வேலையில் அமர்த்தப்பட்ட மனிதர்களோடு கூட வேலை செய்துகொண்டிருந்தபோதோ, அவர்களுடைய உள்ளத்தில் 'தாங்கள் முந்தி வந்தவர்கள்' என்ற முறுமுறுப்பு உருவெடுத்திருந்தது. பிந்தி வந்தவர்களிடத்தில் அதனை பிரதிபலிக்காதிருந்தபோதிலும், வேலை செய்துகொண்டிருந்தபோது அதனை வெளிப்படுத்தாதிருந்தபோதிலும், கூலி கொடுக்கும் வேலையிலோ அவர்களுக்குக் குழிபறிக்கத் தொடங்கிவிட்டனர். தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள் (மத் 20:10); ஆனால், அவர்களும் ஒரு பணம் வாங்கினபோது, அவர்கள் வீட்டெஜமானை நோக்கி: பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள் (மத் 20:12). ஒரே தோட்டத்தில் வேலை செய்தபோதிலும், உயர்வு தாழ்வு என்ற மனப்பான்மை உள்ளத்திலே உண்டாயிருந்தது. பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; என்று வரிசையை மாற்றியமைத்ததுடன், அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் (மத் 20:16) என்று வேறுபடுத்தியும் காண்பித்தாரே. மாம்சத்தின் வேதனைகள், ஆத்துமாவின் அஸ்திபாரத்தை அசைத்துவிடக்கூடாது.
Comments
Post a Comment