Skip to main content

ஆயுதமாகும் ஆத்துமா

 

ஆயுதமாகும் ஆத்துமா



பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ. கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான்.(1சாமு 17:37)


தற்காலத்தில் நாம் சந்திக்கும் வேதனைகளும், சோதனைகளும்,  வியாதிகளும், வருத்தங்களும், வருங்காலத்தில் நம்மை வீரர்களாக நிறுத்தவே என்ற உறுதியான சத்தியம் உள்ளத்தில் உறைந்திருந்தால்; சோதனைகளின் மத்தியிலும் மண்ணான சரீரத்திலிருக்கும் நமது ஆத்துமாவை பொன்னாக மாற்றி, போருக்கு ஆயத்தமான ஆயுதமாக அதனை வனைந்துவிட ஒப்புக்கொடுப்போம். போருக்கு தேவன் நம்மை உருவாக்கும் விதத்தை பலர் உணர்ந்து அறிந்துகொள்ளாததினாலேயே, நிகழ்காலத்தில் சந்திக்கும் எல்லாவற்றையும் தங்களது வாழ்க்கைக்கு எதிரானதாகவே பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு ஆயுதத்தை உருவாக்க இன்னொரு ஆயுதம் தேவையல்லவா! ஒரு கோடரியை உண்டாக்க இரும்பையே உருக்கும் அக்கினியும், கோடரியாக இரும்பினை அடித்து உருமாற்றும்படியான சம்மட்டியும் தேவையானதல்லவோ! அப்படியிருக்க, உருமாற்றப்படுவதற்கு ஏதுவாக தன்னை இளகப்பண்ணும் அக்கினியையும், அடித்து உருமாற்றுவதற்கு ஏதுவான சம்மட்டியையும் இரும்பு வெறுக்குமென்றால், அது கோடரியாக மாறுவது எப்படி? 

ஆயுதமாக  நம்மை ஆயத்தப்படுத்தும் அத்தனையையும் சத்துரு நம்மை விட்டு தூரப்படுத்தவே விரும்புகின்றான். எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை. இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப் போகவேண்டியதாயிருந்தது (1சாமு 13:19-20) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே. நம்மை கூர்மையாக்கும்படியாக, கொல்லர்களைப் போல தேவன் வைத்திருக்கின்ற மனிதர்களை, சத்துரு கொள்ளை கொண்டுபோய்விடக்கூடும். தேவ மனிதர்களைக் கொண்டு மாத்திரமல்ல, எதிரிகளைக் கொண்டும் நம்மை கர்த்தர் கூர்மையாக்கக்கூடுமே. 

கோலியாத்தை எதிர்கொள்ள ஆயத்தமாகிய தாவீது சவுலைப் பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான் (1சாமு 17:34-36)

என்ற வார்த்தை வீரனாக வனத்தில் அவன் வனையப்பட்டதையே வெளிப்படுத்துகின்றது. இந்த நாட்களில் நாம் சந்திக்கும் வியாதிகளும், வரும் நாட்களின் பெரும் போருக்கு நம்மை ஆயத்தப்படுத்தவே என்பது நிச்சயம். 

வலிகளை உண்டாக்கும் மனிதர்கள் நமது வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் குணங்கள் என்ற ஆயுதம் கூர்மையாக்கப்படாமல் போய்விடக்கூடும். தேவன் அனுமதித்திருக்கும் மனிதர்களைக்கூட அருவருத்து வெறுத்ததினாலேயே, அநேகருடைய வாழ்க்கை என்னும் வாள் இன்றும் இன்னும் வெட்டுமளவிற்குக் கூர்மையாகாமல் மழுங்கலாகவே காணப்படுகின்றது. இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, பொலைந்துபோ. சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல்வீட்டாரின் இரத்தப் பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்; நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்று சீமேயி தாவீதை தூஷித்ததைக் கேட்டதும், செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ஆண்டவனைத் தூஷிப்பானேன்?

நான் போய் அவன் தலையை வாங்கிப் போடட்டுமா? என்று சொன்னபோது, தாவீது செருயாவின் குமாரனை நோக்கி, 'செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் 

தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் (2சாமு 16:7-10)

என்றல்லவா பதிலளித்தான். தன்மேல் சொல்லப்படும் தூஷணமான வார்த்தைகளைச் சகித்துக்கொள்ளும் அளவிற்கு தாவீதின் ஆத்துமா சத்துவம் பெற்றிருந்ததே. இத்தகைய சத்துவம் ஆண்டவருக்கும் தாவீதுக்கும் இடையிலான உறவினால் உண்டானது அல்லவா. 

மேலும், தன்மேல் சொல்லப்படும் தூஷணமான வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ள சக்தி பெற்றிருந்த தாவீதின் ஆத்துமாவினால், கோலியாத் ஜீவனுள்ள தேவனை நிந்தித்ததையோ பொறுத்துக்கொள்ள முடியவில்லையே. ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தன் எம்மாத்திரம் (1சாமு 17:26) என்று எதிர்த்து சென்றானே; யுத்தத்திலும் ஜெயத்தைப் பெற்றானே. நம்முடைய ஆத்துமாவும் இத்தகைய ஆயுதமாகட்டும். 


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...