புறமுதுகு காட்டும் போர்வீரர்கள்
மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். (யோவா 10:12)
சத்துருவுடனான போரில் விண்ணவரின் சேனை வெற்றியை நோக்கி முன்னேறிச் சென்று, இறுதியில் ஜெயத்தைச் சுதந்தரித்தாலும், சில வீரர்களின் தேகத்தையோ போருக்குப் போகவிடாமல் தூரமாக்கி, வீட்டிலடைத்து, அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையோடுகூடவும் விளையாடி வீழ்தும்படியாக வகைதேடுபவன் சத்துரு. போர் நடக்கும் இடத்தை விட்டுவிட்டு, போர்முனைக்குப் புறம்பாக எங்கே புறப்பட்டுச் சென்றாலும் வீரன் வீழ்ந்தவனே. பெற்றோராயினும், குடும்பமாயினும், மனைவியாயினும், பிள்ளைகளாயினும் மற்றும் உறவுகளாயினும்கூட உதறித்தள்ளிவிட்டு போர்முனையைப் பார்த்;து ஓடுபவனே வீரன்.
அப்பொழுது, பேதுரு இயேசு கிறிஸ்துவை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டபோது, இயேசு கிறிஸ்து பிரதியுத்தரமாக, மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னதோடு மாத்திரமல்லாமல், உண்மையான வீரன் விடவேண்டிய மேலும் சில காரியங்களையும் கூடவே எடுத்துக் கூறுகின்றார். என் நாமத்தினிமித்தம் வீ;டடையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான் (மத் 19:27-29). இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டு, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தபோது, ஆசீர்வாதத்தை வைத்துக்கொண்டு ஆண்டவரை அனுப்பிவிட நினைத்தான் பேதுரு (லூக். 5:8); ஆனால், இயேசு கிறிஸ்துவோ, ஆசீர்வாதங்களை விட்டு விட்டு அவனை தன்னோடு வரும்படியாக அழைத்தார். பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். அப்பொழுது, அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள் (லூக் 5:10,11). என்றபோதிலும், இஸ்ரவேல் ஜனங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பினதுபோல (அப். 7:39), இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, பேதுருவும் மீன்பிடிக்கும்படியாக கடலுக்குத் திரும்பிவிட்டானே (யோவான் 21:3); அப்படியென்றால், இயேசு கிறிஸ்துவோடுகூட சென்றுகொண்டிருந்தாலும், இருதயத்திலோ, தான் விட்டுவந்திருந்த ஆசீர்வாதங்களையும், படகினையும் நினைத்துக்கொண்டேதானே இருந்திருக்கவேண்டும்; எனவேதான், 'தான் விட்டு வந்ததை' இயேசு கிறிஸ்துவுக்கு முன் நினைவுகூருகின்றான். நாம் விட்டு வந்தது நம்முடைய நினைவில் நீங்காமல் நிலைத்திருக்குமானால், கடினமான சூழ்நிலையில் நமது கண்களை மீண்டும் விட்டுவந்த திசையினை நோக்கித் திருப்பிவிடவும், நம்மை திரும்பிச்செல்லும்படியாக திசைதிருப்பவும் சத்துரு கிரியைசெய்துவிடுவான். வீரர்களாகப் புறப்படவேண்டிய நாம் பேதுருவைப் போல மீண்டும் விட்டுவந்த திசையில் பயணித்துவிடக்கூடாது.
மேலும், தாவீதின் வாழ்க்கையையும் வீட்டிலடைத்து வீழ்த்தினான் சத்துரு. மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான் (2சாமு 11:1). அந்த வெற்றியின் பங்கு தேசத்திற்குக் கிடைத்தாலும், பல வீரர்கள் வெற்றிக்காக தங்கள் உயிரை விட்டிருந்தாலும் (2 சாமு. 11:17), தாவீதின் தேகத்திற்கோ அந்த வெற்றி தூரமாகிவிட்டதே. போர்முனையை விட்டுவிட்டு வீட்டிலிருக்கும் வீரர்களின் நிலையினை இத்தகைய நிலைக்கு உள்ளாக்கிவிடுவான் சத்துரு.
மேலும், இயேசு கிறிஸ்துவும் தனது போதனையில், 'கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்' (யோவா 10:13) என்றே போதித்தார். ஆபத்து வரும்போது ஆடுகளோடுகூட இருப்பவனே மேய்ப்பன். எனினும், ஆபத்துக் காலத்தில், ஆடுகளையும் மந்தையையும் விட்டுவிட்டு, தன்னுடைய ஜீவனைக் காப்பதற்காகவும், தன்னுடைய குடும்பத்தைக் காப்பதற்காகவும், தன்னுடைய உடமைகளையும் மற்றும் பிள்ளைகளையும் காப்பதற்காகவும் ஓடிப்போகிறவர்கள் கூலிக்காக வேலை செய்கிறவர்களே. நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவா 10:11) என்பதே இயேசு கறிஸ்துவின் உபதேசம்; இத்தகைய மேய்பர்களால், ஆடுகளை விட்டுவிட்டு ஓட முடியாது, ஆடுகளுக்காகவோ, ஆடுகளோடுகூடவோ மரிப்பார்களே தவிர, ஆடுகளை விட்டுவிட்டு இவர்களைப் பிரிக்க முடியாது; குடும்பமோ, பிள்ளைகளோ, உறவோ, உடமைகளோ மற்றும் ஆசீர்வாதங்களோ கிறிஸ்துவின் அன்பை விட்டு இவர்களைப் பிரிக்காது என்பது நிச்சயம்.
Comments
Post a Comment