மந்தையும், சிந்தையும்
நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோவா 10:11)
மந்தையின் மேலேயே தனது முழு சிந்தையையும் மனதையும் பதித்திருப்பவனே ஆடுகளுக்கு ஏற்ற சிறந்த மேய்ப்பன். தனது ஜீவனைக் கொடுத்தாகிலும் மந்தையின் ஜீவன்களைக் காக்கவேண்டும் என்ற சிறையாக்கப்பட்ட எண்ணத்திற்குள்ளேயே தன்னை அடைத்துவைத்திருப்பவன் அவன். தாவீதைப் போல, 'ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து,அதை அடித்துக் கொன்றுபோட்டேன்' (1சாமு 17:34,35) என்று வீர வசனம் பேசுபவன். ஆடுகள் அனைத்தும் எஜமானுடையதாகவேயிருந்தாலும், தனக்குச் சொந்தமானது போன்ற பந்தத்திற்குள்ளேயே தினம் தினம் மூழ்கிக்கிடப்பவன். ஆங்காங்கே தழைகளையும், இலைகளையும் பறித்து, எவரையாகிலும் அழைத்து எப்படியாகிலும், எதைக்கொண்டாகிலும் ஆடுகளைப் போஷிக்கவேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஆடுகளை மேய்ப்பவன் அல்ல; மாறாக, பிரதான மேய்ப்பனிடமிருந்து ஆடுகளுக்குத் தேவையானவைகளை, தினம் தினம் தானே எடுத்து பறிமாறுகிறவன்.
ஆடுகளுக்காக உழைக்காமல், ஆடுகளின் தேவைகளை அறிந்து ஊழியம் செய்யாமல், 'மேய்ப்பன்' என்ற ஸ்தானத்தில் மாத்திரம் அமர்ந்திருக்க விரும்புவோரின் வயல்கள் விளைநிலைங்களாயிராமல் விரைவில் வீணாய்ப்போம். சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது (நீதி 24:30,31) என்று சாலொமோன் எழுதுகின்றாரே. எனவே, மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார் (ஏசா 40:11) என்ற ஆடுகளைக் குறித்து ஆண்டவருக்கு இருக்கும் அக்கறை நம்மையும் நெருக்கவும், ஆடுகளுக்காக உருக்கமுடையவர்களாக மாற்றவும் அர்ப்பணிப்போம்.
ஐந்து தாலந்தை வாங்கினவன், ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்று சொன்னபோதும், அவ்வாறே, இரண்டு தாலந்தை வாங்கினவன், இரண்டு தாலந்தை சம்பாதித்தபோதும், உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் என்றாரே (மத். 25:21,22). நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட கொஞ்சத்தில் நாம் உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டியது எத்தனை அவசியம். இன்று அநேகத்திற்கு பலர் அதிகாரியாக்கப்படாததற்குக் காரணம், கொஞ்சத்தைக் குறித்த கரிசனையின்மையும், கவலையின்மையுமே. எத்தனை தாலந்துகளை இத்தகையோரின் கைகளில் கொடுத்தாலும் ஒவ்வொன்றாகப் புதைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவார்கள். இவர்களுடைய மந்தையின் நிலையையும் அப்படியே மாற்றிவிடுவார்கள். காணாமல் போகும் ஆடுகளைக் குறித்து கவலைப்படாமல், ஒவ்வொன்றாக இழந்து இழந்து இறுதியில் ஆடுகளற்றதாகவே தொழுவத்தை வெறுமையாக்கிவிடுவார்கள். தொலைந்துபோன ஒரு வெள்ளிக்காசைத் தேடிக் கண்டுபிடிக்கும் மனநிலை நமக்கு இராவிட்டால், போனால் போகட்டும் இருப்பது போதும் என்று அலட்சியமாயிருந்தால், அத்தனையும் தொலைந்துபோனாலும், அமைதியாயிருக்கும் மனநிலை நம்மிலே உருவாகிவிடும். இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் (லூக் 19:10) என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து வாசிக்கின்றோமே. காணாதவைகளைக் குறித்து நாம் வடிக்கும் கண்ணீரே ஆடுகளின் மீதுள்ள பாரத்தை ஆண்டவருக்கு வெளிப்படுத்தும்.
மேலும், ஆடுகளிடமிருந்து ஏதாகிலும் பெற்றுக்கொள்வோம் என்று எண்ணாமல், தன்னையும், தன்னுடையதையும் தந்துவிடுவதற்கு ஆயத்தமாயிருப்பவனே சிறந்த மேய்ப்பன். கூலிக்குப் பாத்திரர்களாயிருந்தபோதிலும் (1 தீமோ. 5:18), ஆடுகளிடமிருந்தோ, ஆடுகளுக்காகவோ கூலிகளை மாத்திரமே முன்நிறுத்தி ஊழியம் செய்யும் நபர்களை ஆபத்து நாட்களில் ஆடுகளின் நடுவே காண்பது அரிது. கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும் (யோவா 10:13,12). ஆனால், இயேசு கிறிஸ்துவோ தன்னைக் குறித்து, 'நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்' (யோவான் 10:11) என்றல்லவா சொன்னார். ஆடுகளை விட்டு ஓடிப்போவதையும், ஆடுகளோடு உடனிருப்பதையும் கொண்டு, நாம் ஊழியம் செய்வது கூலிக்காகவா அல்லது ஆடுகளுக்காகவா என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிறவர்களாகவும், பராமரியாமல் துரத்திவிடுகிறவர்களாகவும், பயப்படுத்துகிறவர்களாகவும், கலங்கடிக்கி றவர்களாகவும் நாம் காணப்படாமல், அவைகள் பலுகிப் பெருகும்படியான (எரே 23:1-4) காரியங்களை தொழுவத்தில் செய்வதற்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.
Comments
Post a Comment