விண்ணவர் காட்டும் வித்தியாசம்
என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.(யாத் 8:23)
நம்முடைய வாழ்க்கை அவரது கரத்தில் வரையப்பட்டிருக்குமானால், நம்மேல் எழும் வழக்கை அவரே விசாரித்துக்கொள்ளுவார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் இருந்தபோது, எகிப்தியரைக் காட்டிலும் கீழ்த்தரமாகவே அவர்கள் பார்க்கப்பட்டார்கள்; அத்துடன், அரசனாகிய பார்வோனுடைய பார்வையிலும் அடிமைகளாகவே அவர்கள் அளக்கப்பட்டார்கள். தங்களைக் காட்டிலும் கீழானவர்கள் என்ற எண்ணம் எகிப்தியரின் உள்ளங்களில் எழுந்தபோது, இஸ்ரவேல் மக்களை ஒடுக்குவதிலேயும், கொடுமையாக வேலை வாங்குவதிலேயும், கடினமாக நடத்துவதிலேயும், அவர்களது ஜீவனைக் கசப்பாக்குவதிலேயும் மற்றும் அவர்களது குழந்தைகளைக் கொல்லுவதிலுமே எகிப்தியர்கள் குறியாயிருந்தார்கள். பார்வோனும், மற்றும் எகிப்தியர்களும், தங்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை இவ்விதமாகவே வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்;. பார்வோனைப் போன்ற மனநிலை கொண்ட மனிதர்கள் இந்த உலகத்திலும் உண்டு. தங்களைக் காட்டிலும் தாழ்வானவர்களாகவே பிறரை அளந்துகொண்டிருக்கும் அவர்களது மனநிலை, அத்தகையோரை தூரமாகப் பார்ப்பதுடன், அவர்களை துன்புறுத்தும் நிலைக்கும் அவர்களைத் தள்ளிவிடுகின்றது. வித்தியாசத்தினால் இப்படிப்பட்ட வேதனைகளை தேவ பிள்ளைகளின் வாழ்க்கையில் உலக மனிதர்கள் கூட்டவும், காட்டவும் தொடங்கும்போது, என் பிள்ளைகள், 'உன்னுடைய அடைக்கலத்தில் அல்ல; அவர்கள் உயர்ந்த அடைக்கலத்தில் இருப்பவர்கள்' என்பதை தேவனும் வெளிப்படுத்தத் தொடங்குகின்றார்.
அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் (சங் 91:14) என்பது அல்லவோ வேதம் போதிக்கும் சத்தியம். அதுமாத்திரமல்ல, உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான் (சக 2:8) என்றும், இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது (ஏசா 49:16) என்றும், யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார் (ஏசா 41:14) என்றும் கர்த்தர் உரைத்திருக்கின்றாரே. தாழ்ந்த நிலைக்கு மேலும் மேலும் மனிதர்கள் நம்மை உந்தித் தள்ள நினைக்கும்போது, 'நாம் உயர்ந்த அடைக்கலத்தில் இருப்பவர்கள்' என்பதை உணர்த்துவிக்கும்படியான கிரியையைத் தொடங்குகின்றார் தேவன்.
மேலும் மேலும் பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களைத் துன்புறுத்தத் தொடங்கினபோது, தன்னுடைய ஜனத்திற்கும் மற்றும் எகிப்தியர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தையும் வெளிப்படுத்தத் தொடங்கினார்; பார்வோன் தேவ ஜனங்களை வேதனைப்படுத்தத் தொடங்கினபோது, தேவன் பார்வோனையும் எகிப்தியர்களையும் வேதனைப்படுத்தத் தொடங்கினார். 'என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும்' (யாத் 8:23) என்று மோசேயினிடத்தில் கூறினாரே. நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல (யோவா 17:16) என்பதுதானே இயேசு கிறிஸ்து நம்மைக் குறித்து அடையாளப்படுத்திக்காட்டும் வார்த்தைகள். அவரது கிரியைகள் நாம் அவருக்கு உரியவர்கள் என்பதை வெளிப்படுத்த போதுமானவைகள்.
திமிர்வாத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனை, நான்கு பேர் சுமந்துகொண்டுவந்து, இயேசு கிறிஸ்து போதித்துக்கொண்டிருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, படுக்கையோடு உள்ளே இறக்கினபோது, இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் (மாற். 2:5). திமிர்வாதத்தினால் அவன் படும் வேதனையைக் கண்டதினாலேயே, சுகமாகும்படியாக அவர்கள் அவனை இயேசு கிறிஸ்துவினிடத்திற்கு சுமந்துகொண்டு வந்தார்கள். எனினும், அந்த மனிதனுடைய வாழ்க்கையில் காணப்பட்ட பாவங்களையோ அவர்கள் காணவில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவின் கண்களோ, சுமந்துகொண்டு வந்தவர்களின் உள்ளத்தில் காணப்பட்ட விசுவாசத்தையும், திமிர்வாதமாகக் கிடந்த மனிதனிடத்தில் காணப்பட்ட பாவத்தையும் பார்த்தன. வெளிப்புறத்தில் எத்தனையாய் அலங்கரித்து நின்றாலும், ஆண்டவரின் கண்களோ ஆத்துமாவையே பார்க்கின்றன. ஈசாயின் வீட்டில் சாமுவேல் நுழைந்து, எலியாபைப் பார்த்தவுடனே, கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்று சொன்னபோது, கர்த்தரோ, நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1சாமு 16:7) என்று சொன்னாரே.
மனிதர்களாகிய நம்மால் மனிதர்களை வித்தியாசப்படுத்திப் பார்ப்பது இயலாதது; என்றாலும், படைத்தவரின் கண்களுக்கோ பாவிகளையும் தனது பிள்ளைகளையும் வித்தியாசம் கண்டுகொள்வது என்பது சுலபமானது. உள்ளத்தில் அவருயைவர்கள் என்ற உறுதியிருந்தால், சத்துரு நம்மை வேலிக்குள் அடைத்தாலும் அவரால் வெளியே கொண்டுவர முடியும்.
Comments
Post a Comment