Skip to main content

சுதந்தரத்தை சுதந்தரி

 சுதந்தரத்தை சுதந்தரி

 

தேசத்தைச் சுதந்தரிக்க அழைக்கப்பட்டவர்களை தேசத்தை ஆளுபவர்கள் தடைசெய்துவிட முடியாது. தடுத்து நிறுத்தும் கற்களாக பாதையின் குறுக்கே வந்து நின்றாலும், அவர்கள் குறுக்கேயும் கடந்து செல்ல பாதை நமக்கு உண்டு; ஆம், மறித்து நின்ற கடலில் மரிக்காமல் குறுக்காக நடந்தவர்கள் நம் முன்னோர்கள். அக்கரைக்கு நேராக நம்மை நடததிச் செல்லும் பெலன் ஆண்டவருடையது. நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் (ஆதி. 1:28) என்ற வாக்குத்தத்தம், பாவமில்லாத நிலையிலிருந்த ஆதாம் - ஏவாளுக்குக் தேவனால் கொடுக்கப்பட்டது. அப்படியே, பாவ உலகத்தில் கிடந்தாலும், பரிசுத்தத்திற்குள் தங்கள் வாழ்க்கையினைத் தக்கவைத்துக்கொண்ட நோவாவையும் அவன் குமாரரையும் தேவன் ஆசீர்வதித்து, 'நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்' (ஆதி. 9:1) என்றார். தேவஜனங்கள் பெருகவேண்டும் என்பது தேவனின் விருப்பம், அதனை மனிதன் தடைசெய்துவிடமுடியாது. நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? (ஏசா. 43:13) என்ற அவரது சவாலைச் சந்திக்க மனித சந்ததிக்கு பெலனில்லையே. எகிப்து தேசத்தில், பார்வோன் தேவஜனங்களை ஒடுக்கியபோது, தேவ ஜனங்கள் மிகவும் பலுகிப் பெருகினார்கள். மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது (யாத். 1:7). எவ்வளவு ஒடுக்கப்பட்டார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள் (யாத். 12, ஆதி. 47:27). லாபான் தனது மருமகனாகிய யாக்கோபை ஒடுக்கியபோது, யாக்கோபின் ஆடுகளை பெருக்கமடையச் செய்தார் தேவன். லாபானுடைய ஆடுகளை எடுத்து யாக்கோபுக்குக் கொடுத்தார் (ஆதி. 31:9).

பிரியமானவர்களே! மனிதர்கள் நம்மை ஒடுக்கும்போது நாம் சோர்ந்துபோகவேண்டிய அவசியமில்லை; அவர்கள் ஒடுக்கத் தொடங்கும்போது, நாமோ பெருகத் தொடங்குவோம்; அது மாத்திரமல்ல, ஒடுக்குகிறவர்களுடைய ஆடுகளையும் தேவன் நமக்கு எடுத்துக் கொடுப்பார். நம்மைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான் (சக. 2:8) என்ற வார்த்தை நம்மை பெலப்படுத்தட்டும். எத்தiயாய் நாம் ஒடுக்கப்பட்டாலும், தேசத்தை சுதந்தரிக்காமல், தேசத்தை விட்டு வெளியேறவோ, தேசத்திற்குள் ஒளிந்துகொள்ளவோ நாம் அழைக்கப்பட்டவர்களல்ல. என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சுதந்தரித்து, என் பரிசுத்த பர்வதத்திலே காணியாட்சிக்காரனாயிருப்பான் (ஏசா 57:13) என்கிறார் தேவன்.

தேசத்தை சுதந்தரிக்கவேண்டுமென்றால் நம்மிடத்தில் காணப்படவேண்டிய சிலகாரணிகளை அடையாளம் கண்டு, அறிந்து, அதனை கைக்கொள்ளவேண்டியது அவசியம்.

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள் (மத். 5:5) என்று போதித்தார் இயேசு. மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் என்கிறது வேதம் (எண். 12:3). சாந்தகுணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள் என்கிறான் சங்கீதக்காரன் (சங். 37:11); இயேசு சாந்தகுணமுள்ளவராயிருந்தார் (மத். 21:4). நமக்கு விரோதமாக ஜனங்கள் எழும்பும்போது, எதிரிகள் திட்டங்களைத் தீட்டும்போது, நம்முடைய குணத்தின் நிலை என்ன? எதிரிக்கு எதிரியாக எழும்பி நிற்கிறோமா? அல்லது சாந்தகுணமுள்ளவர்களாயிருக்கிறோமா? இயேசுவைக் குறித்து: அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் அவர் தம்முடைய வாயைத் திறவாமலிருந்தார் (ஏசா. 53:7) என்றல்லவா எழுதப்பட்டிருக்கின்றது. இயேசுவின் இத்தகைய சாந்தகுணமே பூமியை அவர் பக்கமாக ஈர்த்தது. பிதாவை வேண்டிக்கொண்டால், பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை தன்னிடத்தில் அனுப்பப்படுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தபோதிலும் (மத். 26:53) அவர் அமைதியாயிருந்தாரே. பகைவருக்கு முன்னும் தன் பலத்தை நிரூபிக்கவில்லை அவர். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டு மென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ (மத் 5:39-41) என்பதே இயேசுவின் போதனை. இதையே பேதுருவும் தனது நிரூபத்தில் எழுதும்போது, அன்றியும், உன் சத்துருபசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய் (ரோம 12:20) என்று எழுதுகின்றார்.

சாந்தகுணம் என்பது யுத்தத்தில் சத்தமின்றி சத்துருவைச் சரிந்துவிழச் செய்வது. வெற்றி என்றும் நம்முடைய பக்கமே என்று அறிந்தவர்கள் நாம். கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (2 கொரி. 2:14) என்று எழுதுகின்றார் பவுல். நம்மை ஒடுக்கினாலும் வெற்றி நமக்குத்தான், ஓட ஓட விரட்டினாலும் வெற்றி நமக்குத்தான், நம்மை வெட்டிக்கொன்றாலும் வெற்றி நமக்குத்தான். நம்முடைய வெற்றி யுத்தத்திற்கு முன்னமே நிச்சயிக்கப்பட்டது. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றி சிறந்தார் இயேசு (கொலோ. 2:15). அதிகாரங்கள் யாருடைய கைகளில் இருந்தாலும் அதனைக் குறித்து நாம் கவலைகொள்ளவேண்டிய அவசியமில்லை, வெற்றி யாருக்கு என்பதுதானே முக்கியம். பிரியமானவர்களே! சாந்தகுணமுள்ளவர்களாயிருங்கள், சத்துருக்களை வென்றுவிடுங்கள்.

இரண்டாவதாக, இயேசுவுக்காக தன்னுடையவைகளை விட்டவர்கள் தேசத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள். என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான் (மத் 19:29) என்று போதித்தார் இயேசு.

சுதந்தரித்தல் என்றால், எதையும் விட்டுவிடாமல் மேலும் மேலும் தங்களுடன் சேர்த்துக்கொண்டேயிருத்தல் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர் பலர். ஒருபுறம் அது உண்மையே, என்றபோதிலும் மற்றொருபுறம் வேதம் காட்டும் சத்தியத்தையும் மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டுமே. கர்த்தருக்காக எதையும் விடாமல், கர்த்தர் கொடுப்பவற்றை மாத்திரம் சேர்த்துக்கொண்டேயிருக்கும் மனிதர்கள் அநேகர். தங்களுடையவைகளை விட்டு விட்டு ஆத்துமாக்களைத் தேடி ஓடவேண்டிய பலர், தங்களுடையவைகளையே சேர்த்துக்கொண்டு ஆஸ்திகள் போதுமென வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 'போதகரே, நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்?' என்று தலைவன் ஒருவன் கேட்டபோது, 'உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு' என்றார் இயேசு (லூக். 18:18,22). ஐசுவரியத்தோடு வாழ்ந்துகொண்டிருந்த அவனது வாழ்க்கை ஆஸ்தியோடேயே நின்றுபோய்விட்டது, ஆத்துமாக்களை தேடிச்செல்லவில்லையே.

நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ (ஆதி 12:1) என்று தேவன் ஆபிரகாமினிடத்தில் சொன்னபோது, அவன் புறப்பட்டுப்போனான். விட்டுப்போன ஆபிரகாமின் மடி பரலோகத்திற்குச் செல்லும் ஆத்துமாக்கள் கூட இளைப்பாறும்படி அங்கும் விரிக்கப்பட்டிருந்தது. தரித்திரன் மரித்தபோது தூதர்கள் அவனை ஆபிரகாமின் மடியில் கொண்டுபோய் விட்டார்கள் (லூக். 16:22). பிள்ளையாய் தரித்திரன் லாசருவை ஆபிரகாம் மடியில் வைத்திருந்தபோது, பிள்ளையில்லாத ஐசுவரியவான் ஆபிரகாமை 'தகப்பனே' என்று அழைத்தான் (லூக். 16:24). என்றாலும், ஆபிரகாம் சொட்டுத் தண்ணீர் கூட கொடுத்து ஐசுவரியவானுக்குத் தகப்பனாகவில்லை. போகவேண்டிய இடத்தையும் அறிந்திருந்தான், அப்படியே போகக்கூடாத இடத்தையும் அறிந்திருந்தான் ஆபிரகாம்.

இருக்கும் இடத்தை விட்டு எழுந்திராததினாலேயே பலரால் சுதந்தரிக்க இயலாமற்போயிற்று. கர்த்தர் அழைத்தபோதிலும், பலரை எதிர்கால கனவுகள் தடுத்துவிட்டது, இன்பங்கள் சிறையாக்கிக்கொண்டது. நண்பர்களை, குடும்பங்களை, உறவினர்களை, ஊரினை விட்டு தேவன் சொல்லும் இடத்திற்குச் செல்லாதவர்கள் தங்களை சுதந்தரவாளிகள் என்று சொல்லிக்கொண்டாலும், உண்மையில் அவர்கள் சுதந்தரிக்க இயலாதவர்களே.

யோவான் ஸ்நானகன், வழியாகிய இயேசு பயணிப்பதற்கு ஏற்ற வழியை ஆயத்தப்படுத்துகிறவனாக வந்தான். அவன் வழியுமல்ல, ஒளியுமல்ல எனினும், வழியைக் குறித்து அறிவிக்கவும், ஒளியைக் குறித்து சாட்சிகொடுக்கவும் வந்தவன் அவன். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு முரடானவைச் சமமாக்கப்படும் என்றும், கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று (ஏசா 40:3-5) என்று யோவானைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான் ஏசாயா தீர்க்கதரிசி.

ஆனால் இன்றோ, அவர் பயணிப்பதற்கு நாம் நிரப்பவேண்டிய பள்ளங்களையும், மேடுகளையும் நாம் பயணிப்பதற்கு அவர் நிரப்பவேண்டும் என்றும், அவர் பயணிப்பதற்கு தாழ்த்தப்படவேண்டிய மலைகளையும் குன்றுகளையும் நாம் பயணிப்பதற்கு அவர் தாழ்த்தவேண்டும் என்றும், அவர் பயணிப்பதற்கு செவ்வையாக்கப்படவேண்டிய கோணலானவைகளை நாம் பயணிப்பதற்கு அவர் செவ்வையாக்கவேண்டும் என்றும், அவர் பயணிப்பதற்கு சமமாக்கப்படவேண்டிய கரடு முரடானவைகளை நாம் பயணிப்பதற்கு அவர் சமமாக்கவேண்டும் என்றே மாற்றர்த்தம் கொண்டு, அச்சிந்தையினை மாற்ற மனதில்லாமல் தொடர்ந்து பள்ளங்களுடனும், மலைகளுடனும், குன்றுகளுடனும், கோணலானவைகளுடனும், கரடு முரடானவைகளுடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் ஏராளம் ஏராளம்.

எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் தேசத்தை சுதந்தரிக்கவேண்டுமென்றால், வழியை ஆயத்தம்பண்ணிக்கொடுக்கவேண்டிய பொறுப்பு உங்களுடையது என்பதை மறந்துவிடவேண்டாம். 'மனந்திரும்புங்கள்' என்று மாத்திரம் யோவான் பிரசங்கிக்கவில்லை, கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும் (லூக் 3:3), பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும் (லூக் 3:4) பிரசங்கித்தான். 'மனந்திரும்புங்கள்' (மத். 3:2) 'கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்' (மத். 3:3) என்பதுதான் யோவானின் பிரசங்க கோஷம்.

மூன்றாவதாக, ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான் (வெளி. 21:7) என்கிறார் கர்த்தர். ஜெயத்துடன் வாழ்க்கையை முடிப்பதே வெற்றி. வீரனாய் ஓட்டத்தைத் தொடங்கி வீழ்ந்தவனாய் ஓட்டத்தை முடிக்கக்கூடாது. தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் (1கொரி. 10:12) என்று ஆலோசனை சொல்லுகின்றார் பவுல். அப்படியே இயேசுவும், 'என் நாமத்தினாலே நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் (மத். 10:22) என்று போதித்தார். ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது என்றெழுதுகிறான் சாலமோன் (பிரசங்கி 7:8). கிறிஸ்துவுடனே கூட பயணத்தைத் தொடங்கியிருக்கிற நாம், அனுதின வாழ்க்கையில் ஜெயங்கொள்ளவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு. இயேசு வென்றுபோன காரியங்களில் நாம் தோற்று நின்றுபோய்விடக்கூடாது. ஒவ்வொரு நாளும் சந்திக்கும் பாவங்களை ஒதுக்கித் தள்ளிக்கொண்டே செல்லவேண்டும். ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (எபி 12:1) என்று ஞாபகமூட்டுகிறார் எபிரேய நிருப ஆக்கியோன். 'நல்ல போராட்டத்தைப் போராடு' (1தீமோ. 6:12) என்று தீமோத்தேயுவுக்கு ஆலோசனையாக எழுதிய பவுல், 'நல்ல போராட்டத்தைப் போராடினேன்' (2 தீமோ. 4:7) என்று தானும் அதனைச் செய்து முடித்திருப்பதை நினைப்பூட்டுகின்றாரே. பிறரை ஓடு ஓடு என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாமும் நமது ஓட்டத்தை ஓடிமுடிக்க அழைக்கப்பட்டவர்கள் என்பதை மனதில் கொள்ளுவோம். அவர் மேல் வைத்திருக்கிற அன்பிலே நாம் தவறாதிருந்தோமானால், முற்றிலும் ஜெயங்கொள்ளுவதையும் நாம் தவறவிடாமல் காத்துக்கொள்ளுவோம் (ரோமர் 8:37).

கிறிஸ்துவைப் பின்பற்றுவோராக நாம் காணப்பட்டாலும், ஜெயங்கொள்ள இயலாத பகுதிகள் நமது வாழ்க்கையில் காணப்படுமேயானால், நம்மால் சுதந்தரித்துக்கொள்ள முடியாது. எனவே, தோற்றுக்கொண்டேயிருக்கும் பகுதிகளில் ஜெயங்கொள்ளுவோம், சுதந்தரிக்கும் உரிமையினைப் பெற்றுக்கொள்ளுவோம்.

நான்காவதாக, பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், தேசத்தையும் தேவனுடைய ராஜ்யத்தையும் சுதந்தரித்துக்கொள்கிறார்கள். அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் (மத் 25:34) என்றார்.

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் (யோவா 14:2,3) என்றார் இயேசு. உலகத்தின் கடைமுனை மட்டும் சுவிசேஷத்தை அறிவிப்பதோடு மாத்திரமல்லாமல், தேவ ராஜ்யத்தின் உள்ளேயும் நுழைந்து அதனைச் சுதந்தரித்துக்கொள்ள அழைக்கப்பட்டவர்கள் நாம்.

தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், தேவராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்கிறார்கள். இந்த ஆசீர்வாதம், அவர்கள் தங்களுடையதை கொடுத்ததினால் உண்டானது. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார் (மத் 25:35,36). தேவன் நமக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களை மற்றவர்களுடன் நாம் பகிர்ந்துகொள்ளுகிறோமா? அல்லது நம்முடையது என்றே வாழ்கிறோமா? கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் (ஆதி. 24:31) என்ற வாழ்த்தின் வார்த்தை, தகுதியுள்ளோராயிருப்பின் நமக்கும் சொல்லப்படும். நமக்கு வரும் ஆசீர்வாதங்கள் மட்டும் ஆசீர்வாதங்களல்ல, நம்மிடத்திலிருந்து போகும் ஆஸ்திகளும், நேரங்களும் கூட நமக்கு ஆசீர்வாதங்களை அள்ளத்தருபவைகள். இது இறுதிநாளின்போது நமக்குத் தெரியவரும். 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...