கலப்பையிலே கை
என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை அறிந்த நாம், என்ன செய்ய அழைக்கப்படுகிறோம் என்பதை அறியாமற்போவோமென்றால், அழைப்பினை விட்டு அகன்று சென்றுவிடுவோம். அறிந்ததையும், அனுபவமுள்ளதையும், தெரிந்ததையும் மட்டுமே தொடர்ந்து செய்துகொண்டிருக்கும்படி தூண்டப்படுவது மனித இயல்பு. என்றபோதிலும், கிறிஸ்துவை அறிந்துகொண்ட நாம், அவருடைய சீஷர்களாகவும், ஊழியர்களாகவும் உலகத்தில் அறியப்படும் நாம் தேவன் கொடுக்கும் பணிகளை அறிந்துகொள்வது அவசியமானது. அழைப்பு நமது அறியாமையை அகற்றிவிடும் அகல்விளக்கு. தேவன் மோசேயை அழைத்தபோது, அவனோ 'நான் திக்கு வாயும், மந்த நாவும் உள்ளவன்' என்றான் (யாத். 4:10). எரேமியாவை அழைத்தபோது, அவனோ 'நான் பேச அறியேன் சிறுபிள்ளையாயிருக்கிறேன்' என்றான் (எரே. 1:6). உனக்கு இருக்கிற இந்த பலத்தோடே போ என்று கிதியோனைப் பார்த்து சொன்னபோது, கிதியோனோ, 'ஆண்டவரே நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்? என் குடும்பம் எளியது; நான் எல்லாரிலும் சிறியவன் என்றான் (நியா. 6:14,15). சவுலை தேவன் ராஜாவாக தெரிந்துகொண்டார், ஆனால் சவுலோ, 'நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான், என் குடும்பம் அற்பமானது என்று சொன்னான் (1சாமு. 9:21). மாபெரும் பணிக்காக இவர்களையெல்லாம் அழைத்தபோது, 'என்னால் என்ன ஆகும்' என்ற அறியாமையின் இருள் அவர்களை பின்னுக்கு இழுத்தது. தன்னோடு இருக்கும் தேவனைப் பாராமல், தன்னையே அவர்கள் பார்த்துக்கொண்டிருந்ததால் வந்த விளைவு இது. அழைக்கும்போது நாம் தனியாக அவரிடத்தில் வந்தாலும், அவர் போகச் சொல்லும் இடத்திற்கு நாம் புறப்பட்டுச் செல்லும்போது, அவரும் கூட வருவார். தனியாக அவரிடத்தில் வந்து, தேவனோடு புறப்பட்டுச் செல்வதுதான் அழைப்பு பெற்ற மனிதனின் அடையாளம்.
தேவன் அழைக்கும்போது நமது பதில் என்ன? உங்களைக் கொண்டு என்ன செய்யமுடியும் என்பதை அறிந்தவர் அவர். உங்கள் பெலத்தின் அளவைத் தெரிந்தவர் அவர். ஆனால், பல நேரங்களில் நம்மைக் குறித்து நமக்குத் தெரிந்த பெலத்தின் அளவைக் கொண்டே தேவனுக்குப் பணியாற்ற நினைக்கிறோம்; அது தவறல்ல, என்றாலும், மாற்றொரு பணிக்கு கர்த்தர் நம்மை அழைக்கும்போது, நாம் அறியாத பணிக்கு, நமக்கு அனுபவமில்லாத பணிக்கு கர்த்தர் நம்மை அழைக்கும்போது நமது பதில் என்ன? ஊழியத்திற்குப் புறப்படுவோரின் மூன்று நிலைகளை நாம் அறிந்துகொள்ளுவோம்.
முதலாவது, அழைப்பினைப் பெற்ற பின்னர் போய்த் திரும்பி வருவோர்: எலியாவின் ஸ்தானத்தில் எலிசாவை நியமிக்கும்படி கர்த்தரால் எலியாவுக்கு உத்தரவு பிறந்தது. எலியா பன்னிரண்டு ஏர் பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான், எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான். அப்பொழுது எலிசா மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு எலியா: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான் (1இரா 19:20). அப்பொழுது அவன் இவனை விட்டுப்போய், ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இரைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான் (1இரா 19:21). பின்தொடரவேண்டிய பணியானாயிருப்பினும், தன்னை எதுவும் பின்னுக்கு இழுத்துவிடாதபடி கவனமாயிருந்தான் எலிசா. முகாம்களிலும், கூட்டங்களிலும், சபைகளிலும் விடுக்கப்படும் அழைப்பினை கேட்கும் பலர் தேவப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்தபோதிலும், உறவினர்களைச் சந்திக்கும்போது, வீட்டாரைச் சந்திக்கும்போது மீண்டுவர இயலாமற்போய்விடுகின்றனர். அழைப்பை ஏற்றுப் போகும் அவர்கள் திரும்பி வருகிறதில்லை. மிஷனரிப் பணிக்கென அழைக்கப்பட்டவர்கள், சுவிசேஷகர்களாக அழைக்கப்பட்டவர்கள், தீர்க்கதரிகளாக அழைக்கப்பட்டவர்கள் பலர் போய், திரும்பி வராதிருக்கின்றனர்; போன இடத்தில் திசைமாறிவிட்டனர். பெற்றோர்களால், உடன்பிறந்தவர்களால், உறவினர்களால் தடுக்கப்பட்டு திரும்பிவராமற்போனவர்கள் எராளம் ஏராளம். தேவன் தங்களுக்குச் செய்ததை அவர்கள் நினைக்காதிருக்கின்றனர்.
இரண்டாவது, அழைப்பினை பெற்று திருப்பி அனுப்பப்படாதோர்: எனவே இயேசு, தன்னைப் பின்பற்ற விரும்புபவர்கள் பின்னிட்டுத் திரும்பிவிடாதபடிக்குக் கவனமாயிருந்தார். 'நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும்?' (மாற். 10:17) என்று கேட்டான் ஒருவன். அதற்கு இயேசு, 'நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா' (மாற். 10:21) என்றார். பின்பு வேறொருவன் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் (லூக் 9:61) என்று உத்தரவு கேட்டபோது, 'கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல' (லூக். 9:62 என்றார் இயேசு. தன்னைப் பின்பற்றிவரவேண்டும் என்று விரும்புகிறவர்கள், பின்னிட்டுத் திரும்பிவிடக்கூடாது என்பதில் அதிகக் கவனமாயிருந்தார். ஆனால், இயேசுவோ அதற்குக் கூட இடமளிக்கவில்லை. அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: 'மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா' (மத் 8:21,22) என்றார். 'நாம் வைத்துவிட்டுப் போகிறவைகள், 'மீண்டும் வா' என்று நம்மை இழுக்கும் சக்தி கொண்டவைகள். பின்னிட்டுத் திரும்பும் நிலை ஏற்பட்டால், நமது பயணமே நின்றுவிடும் நிலை உண்டாகும். லோத்துவின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.
மூன்றாவது, அழைப்பினை ஏற்று தாங்களாகவே விட்டு வருவோர்: இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார் (லூக். 5.10). இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டதும், அவர்கள் படகினை கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள் (லூக். 5:11). அழைப்பை ஏற்றுக்கொண்ட நாம் செய்யவேண்டியது இதுவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக