ஆராதிக்காவிடில் ஆபத்து
அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு. (யாத். 10:3)
ஆராதிக்க முடியாததபடி ஆண்டவருடைய பிள்ளைகளை சத்துரு அடைத்துவைத்துவிட முடியாது. உணரும்வரை ஒடுக்குதலுக்குள் ஆண்டவர் நம்மை ஒப்புக்கொடுத்தாலும், அவரை நோக்கிப் பார்க்கும்போதோ, சத்துரு எழுப்பிவைத்திருக்கும் சுவரை முற்றிலும் உடைத்து சமதளமாக்கி, சமவெளியில் தன்னுடைய பிள்ளைகளை தான் விரும்பும் திசையினையும்,
திட்டத்தினையும் நோக்கியும் பயணிக்கச் செய்பவர் நமது தேவன். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது, அவர்களது ஆவிக்குரிய வாழ்க்கை மெல்ல மெல்ல ஆண்டவருக்குத் தூரமானது. ஆதி பிதாக்களிடத்தில் காணப்பட்ட விசுவாசமும், பக்தியும், நம்பிக்கையும் தலைமுறைகளிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து, எகிப்தியர்களுடைய தெய்வங்களை நோக்கியே சாய்ந்துபோகத் தொடங்கினது. ஆண்டவரின் கண்ணுக்குப் பிரியமானவர்கள், விரல்விட்டு எண்ணுமளவிற்கே குறுகியிருந்த நிலை அது. நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் (யாத் 3:13) என்ற நிலையிலும், அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் (யாத் 4:1) என்ற நிலையிலும்தான் மோசேயினால் அவர்கள் அளக்கப்பட்டிருந்தார்கள்.
இஸ்ரவேல் ஜனங்களின் ஆவிக்குரிய நிலை இப்படியிருப்பினும், மாம்சத்திலோ அவர்கள் பெருகிக்கொண்டேயிருந்தார்கள். அவர்களுடைய ஆவிக்கும், ஆண்டவருக்கும் இடையிலான தொடர்பு அறுந்துபோய்விட்டபோதிலும், மாம்சத்திலோ அவர்கள் பலுகிப் பெருகிக்கொண்டேயிருந்தார்கள். ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள் (யாத் 1:12) என்றே வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். 'நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது' (மத் 26:41) என்று சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்தார். என்றபோதிலும், இஸ்ரவேல் ஜனங்களின் அடிமைத்தன வாழ்க்கையிலோ மாம்சத்தினால் பெருக்கம் உண்டாகிக்கொண்டிருந்தது; ஆனால், ஆவியோ அவிந்துபோய்க் கிடந்தது. இன்றைய நாட்களிலும், அடைபட்டுக் கிடக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் இஸ்ரவேல் மக்களிடத்தில் காணப்பட்ட இத்தகைய நிலை உண்டாகிவிடக்கூடும். அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில், அடிமைத்தனத்திற்கு உட்பட்டு உட்பட்டு, ஆண்டவருக்கும் தனக்கும் இடையிலான தொடர்பினைத் துண்டித்துவிட்டு, மாம்சத்திற்கடுத்த சிந்தையில் மாத்திரம் பெருகிக்கொண்டிருக்கும் மனிதர்கள் உண்டு. மாம்சத்தில் நாம் பெருகியிருக்கும் காரியங்களை மாத்திரம் அளந்துகொண்டு, அவைகளத்தனையையும் ஆண்டவரிடத்திலிருந்து வந்த ஆசீர்வாதங்களே என்றே அளந்துகொண்டு, ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து அசட்டையாயிருக்கிற மனிதர்கள் உண்டே.
நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு. நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்தாயாகில், கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும் (யாத் 9:1-3) என்றும், எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ;டபுத்திரனைச் சங்கரிப்பேன் (யாத் 4:23) என்றுமே ஆண்டவர் மோசேயினிடத்தில் கூறியிருந்தார்; எனினும், மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்திற்குச் சென்றபோது, எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாதிருந்தால், அவர் கொள்ளைநோயும் பட்டயமும் எங்கள் மேல் வரப்பண்ணுவார் என்றார்கள் (யாத் 5:3) என்றல்லவா கூறுகின்றார்கள். இதன் அர்த்தம் என்ன? மோசேயையும் ஆரோனையும் கொண்டு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு ஆராதிக்கும்படியான வழியை ஆண்டவர் திறந்துகொடுத்தபோதிலும், எகிப்திலேயே இஸ்ரவேலர்கள் இருந்துவிட்டால், எகிப்தியருக்கு வரவிருக்கும் கொள்ளைநோயினால் இஸ்ரவேலரும் கொள்ளைபோவது உறுதி என்பதுதானே.
தன்னுடைய சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்து, அடிமைத்தனத்திலிரு;நது விடுபடும் வழியை பரலோகப் பிதா நமக்கு திறந்து கொடுத்திருக்கின்றபோதிலும், இன்னும், இன்றும் பாவத்தின் அடிமைத்தனத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் உண்டே, இவர்களது சரீரம் எகிப்திலேயே சாயும்.
Comments
Post a Comment