Skip to main content

ஜீவனால் உண்டாகும் ஜீவன் (யோவா 1:4,5)

ஜீவனால் உண்டாகும் ஜீவன்



அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. (யோவா 1:4,5) 


உலகத்தில் மனிதர்கள் உயிரோடு இருந்தாலும், உள்ளத்தில் ஜீவனாக கிறிஸ்து உறைந்திருந்தால் மாத்திரமே, உலகிற்கு அவர்கள் ஒளிதர இயலும். அப்போஸ்தலனாகிய பவுல், ரோமாபுரியாருக்கு எழுதிய நிருபத்தில், நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே (ரோம 5:10) என்று எழுதுகின்றாரே. குமாரனாகிய கிறிஸ்துவின் ஜீவன் நம்முடைய வாழ்க்கையில் பிரவேசித்தால் மாத்திரமே, பிதாவின் பிள்ளைகள் என்ற உரிமைக்கு நாமும் உரியவர்களாவோம். 

'ஜீவன் ஒளியாயிருக்கிறது, ஒளி இருளிலே பிரகாசிக்கிறது, இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை' எனும் இம்மூன்று படிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் மிக முக்கியமாக முன்னேறிச்செல்லவேண்டியவைகள். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றும், நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் (யோவா 11:25) என்றும், திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் (யோவா 10:10) என்றும், வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை (யோவா 5:39,40) என்றும், 'தானே ஜீவன்' என்பதை ஆணித்தரமாக போதித்தார் இயேசு கிறிஸ்து.  

மேலும், அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம் (1யோவா 1:2) என்றும், தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் (யோவா 1:18) என்றும், அந்த ஜீவன் எங்கிருந்து வந்தது என்பதை தனது நிருபத்தில் சுட்டிக்காட்டுகின்றார் யோவான். அப்படியே இயேசு கிறிஸ்துவும், நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். (யோவா 16:28) 

உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும் 'உயிருள்ளவர்களே' என்றாலும் எல்லாரும் 'ஜீவனுள்ளவர்கள்' அல்ல. 'ஜீவனாகிய கிறிஸ்துவை வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளும்படியாகவே, உயிருடன் வாழும்படியான நாட்கள் மனிதர்களுக்குக் வழங்கப்பட்டிருக்கின்றன.' எனவே, குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன் (1யோவா 5:12) என்று எழுதுகின்றார் யோவான். உயிரோடு வாழும் நாட்களில் இதனை மனிதர்கள் உணராதுபோய்விட்டால், உலகத்தை விட்டுப் பிரிந்தபின் உன்னதம் அவர்களை உதறிவிடுவது உறுதி. வாழும் நாட்களிலேயே இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இறந்தபின் இறுதித் தீர்ப்பை மாற்றிக்கொள்ள எவராலும் இயலாது. 

தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய் (வெளி 3:1) என்று சர்தை சபைக்கு யோவான் மூலமாக ஆண்டவர் எழுதுகின்றாரே. இதன் அர்த்தம் என்ன? நம்முடைய வாழ்க்கையில் 'ஜீவனாகிய கிறிஸ்து' இல்லாவிட்டால், 'மனிதர்கள்' என்ற பெயரில் இந்த உலகத்தில் உயிரோடு உலாவலாம்; என்றாலும், உன்னதமோ நம்மை உயிரற்றவர்களாகவே பார்க்கும். இதனையே ஏசாயா தீர்க்கதரிசியும், கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள் 

(ஏசா 43:8) என்று தீர்க்கதரிசனமாக அறைகூவலிடுகிறான். அத்துடன், இயேசு கிறிஸ்துவின் சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று கேட்டபோது, இயேசு கிறிஸ்து பிரதியுத்தரமாக, மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றாரே (மத் 8:21,22). இதன் பொருள் என்ன? அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள், அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களை அல்லது சரீரத்தின்படி இறந்தவர்களை அடக்கம்பண்ணட்டும் என்பதுதானே. 

நம்முடைய வாழ்க்கை இருப்பது எந்த நிலையில்? 'செத்தவர்கள்' என்ற பட்டியலிலா? அல்லது 'ஜீவனுடையவர்கள்' என்ற வரிசையிலா? குமாரனாகிய ஜீவன் நமக்குள் இருந்தால், நம்முடைய வாழ்க்கை இந்த பூமியோடு புதைந்துபோவதில்லை; மாறாக மகிமையாக மறுவுலகிலும் 'நித்திய ஜீவனுடன்' தொடரும். தேவன் நமக்கு 'நித்தியஜீவனைத்' தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். (1யோவா 5:11). ஜீவனே நம்மை நித்திய ஜீவனுக்குள் நடத்துகின்றது. ஜீவனாகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் உதித்ததின் நோக்கம் இதுவே 

தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான் (மத் 16:25) என்றார் இயேசு கிறிஸ்து. மேலும், ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன் 

(லூக் 9:23) என்றும் போதித்தாரே. இப்போதனையில் இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டுவது என்ன? நம்முடைய ஜீவனை அதாவது நாம் ஜீவன் என்று நினைத்துக்கொண்டிருப்பவைகளை இழந்தாகிலும், ஜீவனாகிய அவரைக் கண்டடைந்துவிடவேண்டும் என்பதுதானே. இதனையே இயேசு கிறிஸ்து, மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான் (மத் 13:45,46) என்று சொல்லுகின்றார். அப்படியே, தன்னைத் தேடிவந்த வாலிபனை நோக்கி: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா (மத் 19:21) என்று சொன்னபோதோ, தன் ஜீவனுக்குரியவைகளை விட்டுவிடவோ, விற்றுவிடவோ மனதில்லாமல், நித்திய ஜீவனை அந்த வாலிபன் இழந்துபோனானே. எனவே, பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல (லூக் 12:15) என்று இயேசு கிறிஸ்து போதித்தாரே. இதனை உணர்ந்ததாலேயே, 'கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்' (பிலி. 1:21) என்றும், ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ;டமென்று எண்ணினேன் (பிலி 3:7) என்றும் எழுதுகின்றார் அப்போஸ்தலனாகிய பவுல். இவ்வுலக காரியங்களை நஷ்டமாகவே எண்ண நாமும் அழைக்கப்பட்டவர்கள். எனினும், இயேசு கிறிஸ்துவாகிய ஜீவனை நம்முடைய வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளாமல் நஷ்டப்படுத்திவிடக்கூடாது. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ;டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26) என்று நஷ;டப்படுத்தக்கூடாத ஜீவனைச் சுட்டிக்காட்டுகின்றாரே இயேசு கிறிஸ்து. அநேகர், இவ்வுலக ஜீவனை நஷ்டப்படுத்தாமல், கிறிஸ்துவாகிய ஜீவனை நஷ்டமாக நினைத்துவிடுகின்றார்கள். 

நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவா 10:11) என்றும், ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவா 15:13) என்று ஜீவனுக்குப் பதிலாகவே ஜீவன் கிடைக்கின்றது என்பதை இயேசு சுட்டிக்காட்டுகின்றாரே. இவ்வசனங்கள் கற்றுத்தரும் சத்தியம் என்ன? நம்முடைய ஜீவனுக்குரியவைகளை இழந்தாகிலும் நாம் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுடன், மற்றவர்கள் தங்க்ள் வாழ்க்கையில் கிறிஸ்துவாகிய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அவைகள் பயன்படுத்தப்படவேண்டும் என்பதுதானே. நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன் (2கொரி 12:15) என்பதல்லவோ பவுலின் விருப்பம்.331 

இரண்டாவதாக, நாம் பெற்றுக்கொண்ட ஒளி இருளிலே பிரகாசிக்கவேண்டும். இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசா 9:2) என்றே இயேசு கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனமாக முன்னுரைத்தான் ஏசாயா. அப்படியே இயேசு கிறிஸ்துவும், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன் (யோவா 12:46) என்றும், நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் (லூக் 5:32) என்று சொன்னாரே. இதன் அர்த்தம் என்ன? ஒளியாகிய இயேசு கிறிஸ்து இருளிலே பிரகாசித்தார் என்பதுதானே. 

பிரகாசமான ஓர் அறையிலே, ஓர் மெழுகுவர்த்தியை ஏற்றிவைப்பதினால் பிரயோஜனம் என்ன? ஆனால் இன்றோ, அநேகருடைய வாழ்க்கை வெளிச்சத்திலேயே எரிந்துகொண்டிருக்கின்றன. நடுப்பகலில் சாலையில் ஓர் ஓர் மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருக்குமென்றால், அதன் வெளிச்சம் செல்லுவோரின் கண்களுக்குத் தென்படுமோ? மேலும், எரிந்துகொண்டிருக்கும் அந்த மெழுகுவர்த்தியை எவராயினும் கண்டால், பட்டப் பகலில் ஏன் இது வீணாக எரிந்துகொண்டிருக்கின்றது? என்றுதானே சலித்துக்கொள்ளுவர். இன்று அநேகருடைய வாழ்க்கை இப்படித்தான் எரிந்துகொண்டிருக்கின்றது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னும், வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்ட பின்னும், இருளிலே பிரகாசிக்காததால் அவர்களது வெளிச்சம் அவர்களுக்கும் தெரிவதில்லை அடுத்தவருக்கும் தெரிவதில்லை. வெளிச்சத்தின் எல்லையை விட்டு (தன்னிடத்தில் உள்ள வெளிச்சத்தை விட்டுவிட்டு அல்ல), இருளின் எல்லைக்குள் இருக்கும் ஜனங்களை நோக்கிச் சென்றால் மாத்திரமே நம்முடைய வெளிச்சம் வெளியே இவ்வுலகிற்குத் தெரியவரும். 'இருளில் இருக்கிற ஜனங்களை நோக்கி நாம் சென்றால் மாத்திரமே' நம்மிலுள்ள வெளிச்சம் அவர்களுடைய வாழ்க்கையையும் பிரகாசிக்கச் செய்யும். 

இருளான வீடுகளில் எரியவேண்டிய அநேக மெழுகுவர்த்திகள், இன்றோ, பத்திரமாக பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. 'நான் ஏன் பயன்படுத்தப்படவில்லை' என்ற ஆதங்கத்துடன், இன்னும் வெளிச்சமான வீட்டிலேதான் அநேகர் காத்திருக்கின்றனர்.  

மூன்றாவதாக, ஒளியாக நம்முடைய வாழ்க்கையில் இயேசு ஏற்றப்பட்டிருப்பாரென்றால், அதனை அணைத்துப்போட சத்துரு பல வழிகளில் எடுக்கும் முயற்சிகளை நாம் முறியடிக்கவேண்டும். இல்லையேல், நம்மிடத்திலுள்ள ஒளியை இழந்து மீண்டும் இருளில் நம்முடைய வாழ்க்கை மூழ்கும் நிலை உண்டாகிவிடும். ஒளியில் வாசம்செய்ய இயலாத பிசாசு; நம்முடைய வாழ்க்கையை ஒளியிலிருந்து அகற்றிவிடவே அலைந்துதிரிகின்றான். இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக நமது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டிருப்போமென்றால், இவ்வுலகத்தின் பாவத்தில் நம்முடைய பாதங்கள் பதிந்துவிடாதபடி பதனமுடன் பயணிப்பது அவசியம். எனவே பேதுரு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (1பேது 5:8) என்று எழுதுகின்றார். 

எப்பக்கத்திலும் நன்றாகப் பூட்டப்பட்டிருந்தாலும், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தாலும். வெளிசம் நிறைந்த ஓர் அறையினை இருளாக்க, வெளியிலிருந்து இருள் வரவேண்டிய அவசியமில்லை; அறைவீட்டில் இருக்கும் மின்விளக்கினை அணைத்தாலே இருள் வந்துவிடும். அப்படியே, ஆவிக்குரிய வாழ்க்கையின் ஓட்டத்தில், அனுதினமும் நம்மை எரியச்செய்துகொண்டிருக்கும் ஆண்டவரை விட்டு அகன்றுவிடாதபடிக்கு நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டியது அவசியம். வேதவாசிப்பு, ஜெபம், உபவாசம், சபை கூடிவருதல், ஆத்துமபாரம், ஊழியவாஞ்சை போன்ற நம்முடைய வாழ்க்கையை எரியச்செய்யும் எண்ணெயினை தொடர்ந்து ஊற்றிக்கொண்டேயிராவிட்டல், அது வற்றும் நாளிலே இருள் முற்றும் நமது வாழ்க்கையை கவ்விக்கொள்ளும். ஒரு காலத்தில் தேவனால் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களாக அல்ல, ஒவ்வொரு நாளும் தேவனால் பயன்படுத்தப்படும் பாத்திரங்களாக நாம் காணப்பட்டால் மாத்திரமே, நம்முடைய ஆவிக்குரிய அறைவீட்டில் இருள் குடிபுகாதபடி நாம் காத்துக்கொள்ள முடியும். எனவே, இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் (1கொரி 10:12) என்று பவுலும் ஆலோசனையாக எழுதிச்சென்றிருக்கின்றாரே. எதையும் எரிக்கும் அளவுக்கு நம்முடைய ஆவிக்குரிய் விளக்கு எரிந்துகொண்டிருக்குமென்றால், இவ்வுலகத்தின் இருள் நம்மை மேற்கொள்ள முடியாது. 

 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...