பிணைப்பும் பெலமும்
ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். (மத் 18:20)
பிள்ளைகளாகிய நம்முடைய உள்ளத்தில் பிதாவாகிய தேவன் வாசம் செய்கின்றபோதிலும், பிள்ளைகளாக பலர் இணையும்போது உண்டாகும் பிணைப்பினால் அவரது பெலம் இன்னும் பலமாகவும், முழுவதுமாகவும் வெளிப்படத் தொடங்குகின்றது. அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள் (அப் 4:31) என்று அப்போஸ்தலர்களின் நாட்களில் நடைபெற்ற அசைவினை வேதத்தில் வாசிக்கின்றோமே. ஆவிக்குரிய வாழ்க்கையைத் தொடரும் நாம், பிதாவாகிய தேவனுக்குப் பிள்ளைகளாயிருந்தாலும், பிற மனிதர்களோடும் பிணைந்து நிற்கும் மனமுள்ளவர்களாயிருக்கவேண்டியது அவசியம். ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம் (2 கொரி 5:16) என்ற பவுலின் வார்த்தையினை, ஒரு புற அறிவோடு அறிந்துகொண்டு, மறுபுறத்திலிருக்கும் மனிதர்களை புறம்பே தள்ளிடும் மக்கள் இந்நாட்களில் உண்டே. பிற மனிதர்களோடு கலவாமல், உறவாடாமல், பழகாமல், தங்களைத் தாங்களே பெரியவர்களாக நினைத்துக்கொண்டும், ஆவிக்குரிய ஐசுவரியவான்களாக தங்களைத் தாங்களே அளந்துகொண்டும், பெருமையான மனதோடு, ஆவிக்குரிய வாழ்க்கையின் அநாதைகளைப்போல வாழும் மனிதர்கள் உண்டே.
பெலிஸ்தரின் சேனை படைகளோடு பக்கத்தில் உடன் நின்றுகொண்டிருந்தபோதிலும், உடன் நிற்கும் சேனை வீரர்களின் பலத்தை உதறித் தள்ளிவிட்டு, தனது மாம்சீக உருவத்தினையும் மற்றும் பெலத்தினையும் மனதில்கொண்டவனாக, தன்னிடமிருக்கும் பெலன் மட்டுமே போதும் என்ற மனதுடன், உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள். அவன் என்னிடத்தில் வரட்டும் (1சாமு 17:8) என்று தனியே யுத்தத்திற்குச் சென்றதால், தாவீதினால் வீழ்த்தப்பட்டுவிட்டானே. இராட்சதன் என்ற தன் மனதின் நினைவு யுத்தத்தில் அவனை தாவீதின் கையிலிருந்து இரட்சிக்கவில்லையே.
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி? ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (பிர 4:9-12) என்று சாலொமோனும் ஆண்டவர் கொடுத்த ஞானத்தினால் எழுதி உணர்த்துகின்றானே.
ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான் (லூக் 10:30-34). 'யூதர்களாயிருந்த, தேவாலயத்தோடு தொடர்பிலிருந்த, தேவாலயத்தின் பொறுப்புகளிலிருந்த, ஆசாரியனும், லேவியனும்' காயமாகக் கிடந்த மனிதனைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்களே; ஆனால், சமாரியனான மனிதனோ, காயம்பட்ட மனிதனுக்கு சகோதரனைப் போல உதவி செய்தானே. இவ்வாறே, கிறிஸ்தவர்களாயிருந்தபோதிலும், ஆவிக்குரியவர்களாயிருந்தபோதிலும், இரட்சிக்கப்பட்டவர்களாயிருந்த போதிலும், அபிஷேகம் பெற்றவர்களாயிருந்தபோதிலும், சகோதரர்களைக் கண்டு பக்கமாய் விலகிச் செல்லும் ஆவிக்குரிய மனிதர்கள் உண்டே. காயம்பட்டவனைத் தொட்;டால், கரங்கள் கறையாகிவிடும் என்ற அச்சத்தினால் அவர்கள் அகன்று செல்லுகின்றார்களோ? இல்லவென்றால், தாமரை இலையின் மேலுள்ள தண்ணீரைப்போல, தங்களைத் தனிமைப்படுத்திக் காண்பிக்க விரும்புகின்றார்களோ? பாடையில் கிடந்த வாலிபனையே தொட்ட இயேசுவே இவர்களுக்கு விடை.
அடுத்தவரோடு இணைந்து நிற்காமல் அநாதைகளைப் போல அல்ல, உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் (மத் 18:19,20) என்ற கிறிஸ்துவின் வார்த்தையினால் இணைவோம்.
Comments
Post a Comment