இடையில் வரும் இறைவன்
நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான்.(தானி 4:27)
மனம்போன போக்கில், இவ்வுலகத்தின் வழிகளிலே மனிதர்கள் போய்க்கொண்டிருப்பதை, தனது விழிகளினால் பார்த்துக்கொண்டேயிருப்பதுடன், அவர்களைத் தடுக்கும்படியாகவும், தப்புவிக்கும்படியாகவும் பல்வேறு வழிகளில் வழியில் வந்து மறித்து நிற்பவர் நம் தேவன். என்றபோதிலும், இடையில் வரும் இறைவனை அடையாளம் கண்டுகொள்ள இயலாமல், மறித்து நிற்கும் அவரையும் தாண்டிச் சென்று மரணத்தில் மாட்டிக்கொள்ளும் மக்கள் கூட்டம் மிகுதி.
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சகல சவுக்கியங்களோடு அரமனையிலே வாழ்ந்துகொண்டிருந்தான் (தானி. 4:4). தனது ஆட்சிக்குட்பட்ட பாபிலோனைக் குறித்த பெருமை அவனது உள்ளத்தை ஆக்கிரமித்திருந்தது. பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் (1 பேதுரு 5:5) என்ற எதிர்ப்பைச் சம்பாதித்தவனாக, ஆண்டவரையே தனக்கு எதிரியாக மாற்றியிருந்தான் நேபுகாத்நேச்சார். அவனுடைய நிலையைக் குறித்து, அவனிடத்திலேயே சொப்பனத்தில் ஆண்டவர் காட்டியபோதிலும், அது அவனுக்கே விளங்கவில்லை. இன்றைய நாட்களிலும், நேபுகாத்நேச்சாரைப் போன்ற ஜனங்கள் உண்டு. தங்களுக்கென ஆண்டவர் காட்டும் காரியங்களை தங்களாலேயே புரிந்துகொள்ள இயலாத மக்கள் ஒருபுறம் இருக்க, எல்லா வசனங்களையும், யாருக்கோ பிரசங்கிக்கவேண்டியவைகள் என்ற கோணத்தோடு பார்ப்பதினால், தன்னுடைய வாழ்க்கையோடு பேசும் வசனங்களையும்கூட தவறவிட்டுவிடுகிற மக்கள் ஆவிக்குரிய உலகத்தில் உண்டு.
மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டான் நேபுகாத்நேச்சார். அதின் இலைகள் நேர்த்தியும் அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினாலே போஷிக்கப்பட்டது (தானி 4:12) என்றபோதிலும், விருட்சத்தை வெட்டும்படியாக ஆணை பிறந்தது. அதுமாத்திரமல்ல, அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது (தானி 4:16) என்ற ஆணையும் கூடவே பிறந்தது. இவை அனைத்தும், தன்னுடைய நிலையையே சுட்டிக்காட்டுகின்றது என்பதை நேபுகாத்நேச்சார் அறிந்துகொள்ளவில்லை. என்றபோதிலும், தானியேல் அங்கு வரும்படியாக வழியமைத்தார் ஆண்டவர்.
ஆபத்தை மாத்திரம் கூறிவிட்டு, அங்கிருந்து அகன்றுவிடவில்லை; ஆபத்திலிருந்து தப்பிக்கொள்ள வழியையும் எடுத்துக்கூறுகின்றான் தானியேல். நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும் என்றும், நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு, நீதியைச் செய்து, உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி, உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்ற ஆலோசனையையும் கொடுத்தான் (தானி 4:26,27). என்றபோதிலும், தானியேலின் வார்த்தைகளுக்கு நேபுகாத்நேச்சார் செவிகொடுக்கவில்லை. பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் நேபுகாத்நேச்சார் உலாவிக்கொண்டிருக்கும்போது: இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா (தானி 4:29,30) என்ற வார்த்தை அவனது வாயிலிருந்து புறப்பட்டவுடனே, அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது (தானி 4:33). அவனுக்கு புத்திவந்தபோது (தானி, 4:34,36), பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்தினதோடு, அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான் (தானி 4:37).
இன்றும், வாழ்க்கையில் அழிவு வருவதற்கு முன் கைப்பிரதிகள் மூலமாகவோ, ஊழியர்கள் மூலமாகவோ வரும் ஆண்டவரது ஆலோசனையை அடையாளம் கண்டுகொள்ளாததினால், மிருகம்போல வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். பரம அதிகாரத்தை அறியாததினாலேயே, பெருமை அநேகருடைய வாழ்க்கையில் குடிகொண்டிருக்கின்றது.
Comments
Post a Comment