Skip to main content

ஓடிவிட்டானா? ஒட்டியிருக்கிறானா?

ஓடிவிட்டானா? ஒட்டியிருக்கிறானா?

 

 

தன்னுடைய வாழ்க்கையை தேவனுக்கென்று அர்ப்பணித்துவிட்ட மனிதனுடைய ஓட்டத்தின் வேகத்தை ஒடுக்கிவிடவும், ஓட்டப்பாதையினின்று அவனை ஓரங்கட்டிவிடவும் துடித்துக்கொண்டிருப்பவன் சத்துரு. இதற்குச் சாதகமாகவும், சாக்குப்போக்குகளைச் சொல்லும்படியாகவும் ஏராளமானவைகளை கண்ணுக்குத் தென்படும்படி முன்னுக்குக் கொண்டுவந்து வைப்பான் அவன். 'போகிறேன் என்று சொன்னவர்களை, போகாமலிருக்கும்படிச் செய்யவும்' 'புறப்படாதவர்களைப் போய்விடாதபடிக்குப் பிடித்துக்கொள்வதும்' சத்துருவின் செயல். இத்தந்திரங்களை அறிந்துகொண்டால் மாத்திரமே, நம்மால் தொடர்ந்து ஓட முடியும். முன் நிற்கும் தடைகளுக்கு விடையறிய முற்பட்டு, தேவனிடம் கேள்விகளையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு, தோல்வியிலேயே தங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொள்ளும் மனிதர்கள் தோற்றுப்போவார்கள். உங்களை உட்கார வைக்க, குடும்பம், பிள்ளைகள், வேலை, நண்பர்கள், உறவினர் போன்ற பல்வேறு சூழ்நிலைகளை உங்களுக்கு விரோதமாக வலுவாக்கி, வலுசர்ப்பமான அவன் உங்கள் வழியிலேயே படுத்திருப்பான். போருக்கு நீங்கள் புறப்படும்போது, வாளெடுத்து வைராக்கியமாக நீங்கள் நின்றுகொண்டிருக்கும்போது, வார்த்தையினாலே உங்களை வீழ்த்திவிடவேண்டும் என்று நினைப்பான் சாத்தான். உங்கள் ஓட்டம் அவனுக்கு எதிரானது என்பதை அறிந்தவன் அல்லவா! எனவே தரிசனத்தைப் பெற்ற உங்களை எவரைக் கொண்டும் தணித்துவிடாதபடி கவனமாயிருங்கள்; உங்களிடம் பேசுபவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஒருவேளை, அவர்களில் சிலர், 'நீங்கள் போய்தான் ஆகவேண்டுமா' 'வேறு எவராது போகலாமே' போன்ற வார்த்தைகளை உதிர்த்து, சத்துருவுக்குச் சாதகமாக நம்மைச் சரித்துவிடுவார்கள். ஜெபிக்கவேண்டும் என்று நீங்கள் அமர்ந்திருக்கும் நேரத்தில், ஜெப வேளையில் வேறெந்த காரியத்தையே பேசிக்கொண்டிருக்கும் மனிதர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களைத் திசை திருப்புகிறவர்கள்.

என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மாற் 10:29,30) என்றார் இயேசு. கடுமையான ஆலோசனையாக இது இருப்பினும், இது நம் கர்த்தரால் கற்பிக்கப்பட்டதே. இத்தகையோர் உங்களைப் பிடித்துவைத்திருப்பார்களென்றால், அவர்களிடமிருந்து விடுவித்துக்கொள்ளவேண்டியது உங்கள் கடமையே. தேவனுடைய பிள்ளையே, சினேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டிருப்பாயென்றால், உன்னைத் தப்புவித்துக்கொள் (நீதி. 6:3). பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள் (சக. 2:7).

உறவினால் சிக்குண்டு தங்கள் ஆவிக்குரிய உலகத்தை இழந்துவிட்டவர்கள் பலர். உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆவிக்குரிய வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டோர் பலர். முன்னுக்கு நிற்கும் மனிதனுக்காக தேவனை பின்னுக்குத் தள்ளிவிட்டவர்கள் பலர். உறவோ, உலகமோ, உலகத்தின் பொருளா உங்கள் ஓட்டத்தின் வேகத்தை தளரச் செய்யாதபடிக்குக் கவனமாயிருங்கள். நியாயத்தீர்ப்பின் நாளில், 'நீ என்ன செய்தாய்?' என்ற கேள்விக்கு, ஆதாமைப்போல மற்றொரு மனிதனைக் காரணம் காட்டி அவனுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, அதனால்தான் செய்ய இயலவில்லை என்ற பதில் சொல்ல எத்தணிக்கவேண்டாம். தடுப்பணைகளையும் உடைக்கும் ஜீவத்தண்ணீரைக் கொண்டவர்கள் நீங்கள்.

இயேசு சவுலைச் சந்தித்தபோது, 'சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய், நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.(அப் 9:5)

சவுலை சந்தித்த இயேசு இரண்டு விதங்களில் தன்னை அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றார். ஒன்று, 'துன்பப்படுத்துகிற இயேசு' என்றும் மற்றொன்று 'முள்ளில் உதைக்கிறாய்' என்பது. முதல் பகுதியில் துன்பம் இயேசுவுக்கு, இரண்டாவது பகுதியிலோ துன்பம் சவுலுக்கு. இதையே, அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன் (2கொரி 12:9) என்று பவுலாகிய மாறிய சவுல் எழுதுகின்றான்.

யோபுவின் துன்பத்தையும், பவுலின் துன்பத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். தேவனுக்கு பயந்து நடந்துகொண்டிருந்த யோபுவை, தேவனை விட்டுப் பிரிக்கும் நோக்கத்தில், சாத்தான் தேவனிடம் அனுமதி கோரியபோது, தேவனும் அனுமதி கொடுத்தார். அவனுக்கு உண்டானது எல்லாம் போய்விட்டால், அவன் தேவனை தூஷித்துவிடுவான் என்பதுதான் சாத்தானின் எதிர்பார்ப்பு. எனினும், அத்தனையையும் இழந்தபோதிலும், யோபு தேவனை இழக்கவில்லை. சாத்தானுக்கு தேவன் அனுமதி கொடுத்தார், ஆனால் யோபுவோ சாத்தானை ஜெயித்துக் காட்டினான். அத்தோடு அவனது பாடுகளுக்கு முடிவு வந்தது, இரட்டத்தனையான ஆசீர்வாதமும் தேவனிடத்திலிருந்து வந்தது.

ஆனால், பவுலையோ உயிரோடு கூட இருக்கும் நாள்வரை, சாத்தான் துன்பப்படுத்திக்கொண்டேயிருக்க அனுமதியளித்திருந்தார் தேவன். பவுல் இயேசுவை அறிவிக்கத் தொடங்கியபோது, அவனோடு கூட இருக்கும்படியாக சாத்தானும் ஒரு தூதனை நியமித்துவிட்டான். அந்த தூதன் வாழ்நாளெல்லாம் பவுலைக் குட்டிக்கொண்டேயிருந்தான். இப்படிப்பட்ட நிலையின் மத்தியிலும், பவுலின் ஓட்டத்தை சத்துருவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எத்தனை நிருபங்கள், எத்தனை சபைகள், எத்தனை தேசங்கள், எத்தனை சீஷர்கள் என பவுலின் பணி விரிவடைந்துகொண்டே சென்றது.

பிரியமானவர்களே, சரீரத்தில் முள் என்றால், முடஙகிவிடவேண்டாம், அதை சாக்குப்போக்காக மாற்றவேண்டாம், மாறாக பவுலைப் போல ஓடப் பழகுங்கள். உங்கள் முள்ளை அல்ல, முட்கிரீடம் சுமந்தவரைச் சுமந்து செல்லுங்கள். மனிதர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டாலும், ஓடிக்கொண்டிருக்கின்றீர்களா? என்பதுதான் உங்களுக்கு முன்னே நான் வைக்கும் கேள்வி. உடன் ஓடுகிறவர்கள் இல்லாமற்போய்விட்டாலும், உங்களால் ஓடமுடியுமே! சுகவீனத்தைக் காரணம் காட்டுகிறவர்கள் ஓடுவதில்லை, சுவிசேஷத்தைக் காரணம் காட்டும் சுகவீனர்கள் ஓடிக்கொண்டேயிருப்பார்கள். பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது அவருக்கு லேசான காரியம் (2நாளா. 14:11) என்பதை அறிந்தவர்கள் அவர்கள்.

வியாதியினிமித்தம், சரீரத்தில் பெலவீனம் உண்டாகிவிட்டால், வியாதியினால் தாக்கப்பட்டுவிட்டால், தொடர் சிகிச்சைக்குள்ளாகிவிட்டால், இனி அவ்வளவுதான், என் வாழ்க்கையே போய்விட்டது, என்னால் இனி ஓட முடியாது, ஓய்வுதான் எடுக்கவேண்டும் என்று ஓரத்தில் அமர்ந்துகொள்ளத் தூண்டும் மனநிலைக்கு பலர் தங்களைக் தள்ளிவிடுகின்றனர். இது ஒருபுறம் இருக்க, வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாயிராமல், ஊன்றுகோலாயிராமல், ஆறுதலாயிராமல், அவர்களை உடன் வைத்துக்கொள்ளாமல், பெலவீனத்தில் அவர்களுக்கு உறுதுணையாயிருந்து அவர்களது பெலத்தை வெளிக்கொணராமல், அவர்களை ஒதுக்கிவிடுகின்றனர் பலர். 'என் கிருபை உனக்குப் போதும்' என்று சொன்னாரே இயேசு, அந்தக் கிருபையினைச் சுமந்தோராய் வியாதியுள்ளவர்களை தங்கள் பெலத்தால் தாங்க முன்வரும் மனிதர்கள் சொற்பமே. அன்றைய நாட்களில் குஷ்டரோகிகள் பாளையத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது போல வியாதியுள்ள மனிதர்களையும் இன்றைய நாட்களில் பாளையத்திற்குப் புறம்பாக்கிவிடுகின்றனர் பலர். இந்த இரு நிலைகளையும் கடந்து முன்னேறிச் செல்ல நாம் கற்றுக்கொண்டால் மாத்திரமே, தேவன் நமக்கெனக் குறித்த அக்கரையை நாம் எட்டிப்பிடிக்க முடியும்.

பவுலின் நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமானது (2கொரி 10:10); என்றாலும், பவுல் ஒதுங்கிவிடவில்லை, மற்றவர்கள் தன்னை ஒதுக்கவும் இடங்கொடுக்கவில்லை. பவுலின் பிராணனுக்காகக் கழுத்தைக் கொடுக்கிற பிரிஸ்கில்லாவும், ஆக்கில்லாவும் இருந்தார்கள் (ரோமர் 16:3,4). அப்படியே, ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன். நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள் (1கொரி 16:17,18). சரீரத்திலே முள்ளோடு இருந்த பவுல், 'தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம் (பிலி 1:23,24) என்றே எழுதுகின்றார். எலியாவைப் போல எடுத்துக்கொள்ளும் என்று கதறவில்லை.

யோபுவைப் போல என்றோ சாத்தான் உங்களோடு போராடி விட்டுப் போயிருக்கலாம், அல்லது பவுலுடன் இருந்ததைப்போல தொடர் வியாதி, பலவீனம், வாழ்நாள் சிகிச்சை என கூடவே குட்டுபவனாக என்றும் இருக்கலாம்; என்றாலும் வென்று காட்டுவோம். இயேசுவை சோதிக்கும்படி வந்த சாத்தான், சோதனையினாலே அவரை வெற்றிகொள்ள முடியவில்லை. சோதனையெல்லாம் முடிந்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான் (லூக். 4:13). என்றாலும், பின்னர் அவரை துன்பப்படுத்தும்படியாக அவருடைய சீஷர்களில் ஒருவனான யூதாசுக்குள் புகுந்து அவரோடு இருந்தான் (லூக். 22:3). மரணம் வரை அவரை கொண்டுசென்றான், ஆனால், மரணத்திற்குப் பின்னரோ இயேசுவே வென்று நின்றார். ஓடிவிட்டானா? அல்லது ஒட்டியிருக்கிறானா? என்பது முக்கியமல்ல; நீங்கள் ஓடுகிறீர்களா? என்பதே முக்கியம். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி