அறிந்துகொள் அறிவி
எழுதப்பட்டிருப்பது எதற்காக என்பதை அறிந்தோர், தன்னை அர்ப்பணிப்பதுடன், தரணிக்கும் அதனை அறிவிப்பர். மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தபோது, கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூ தன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான் (லூக் 2:8-12). எழுதிக்கொடுக்கப்பட்டிருந்ததை, அறியாதிருந்த மேய்ப்பர்களுக்கு, உன்னதத்திலிருந்து தூதர்கள் மூலமாக நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள் (லூக் 2:15-17). பிள்ளையைக் காணும்படியாகப் புறப்பட்டுச் சென்றதோடு, பிள்ளையைக் கண்டபின்பு, தங்களுக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்தவர்களாக 'தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.'
எழுதிக்கொடுக்கப்பட்டிருப்பதை அறியாதவர்களுக்கு, அதனை அறிவிக்கும் பொறுப்பு நம்முடையதே. இயேசுவின் பிறப்பை மேய்ப்பர்களுக்கு அறிவிக்கும் பணி அன்று தூதர்களுடைய கைகளில் கொடுக்கப்பட்டிருந்ததைப் போல, இன்று சுவிசேஷத்தை அறிவிக்கும் பணி மனிதர்களாகிய நம்முடைய கரங்களில் நம்பிக்கொடுக்கப்பட்டிருக்கின்றது; ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் (மத் 24:14) என்றும், அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே (ரோம 10:14-15) என்றும் வாசிக்கின்றோமே.
தூதர்கள் மூலமாக நற்செய்தி அறிவிக்கப்பட்டதும், உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள் (லூக் 2:14). இதே சந்தோஷம், நாம் நற்செய்தியை அறிவிப்பதினால், ஒவ்வொருவர் உள்ளத்திலும் இயேசு கிறிஸ்து பிறக்கும்போது பரலோகத்தில் உண்டாகும். மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 15:7) என்று இயேசு கிறிஸ்து சொன்னாரே.
மற்றொரு கூட்டத்தினரோ, எழுதப்பட்டிருப்பதை கைகளில் வைத்துக்கொண்டிருந்தார்கள்; ஆனால், என்ன நடக்கிறது என்பதையோ அறியாதிருந்தார்கள். ஏரோது, பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச் செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே,யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள் (மத் 2:4-6); என்றபோதிலும், இயேசு கிறிஸ்து பிறந்ததை அறியாமல், சாஸ்திரிகளால் அறிவிக்கப்பட்டபோதிலும்கூட பணிந்துகொள்ளும்படி புறப்பட்டுச் செல்லாமல் எருசலேமிலேயே இருந்துவிட்டார்கள். எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கும் வேதத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு, இயேசு கிறிஸ்து பிறக்கும் இடமான 'தங்கள் இதயத்தை' அறிந்துகொள்ளாமல் வாழும் மக்கள் இன்றைய நாட்களில் அநேகர். பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூ ரானுமாகிய இயேசுவே (யோவா 1:45) என்று சொன்னதைப் போல, பிறருக்கும் சொல்வது நம் கடமை.
Comments
Post a Comment