வனாந்தரத்திற்கு வந்தது ஏன்?
வாழ்க்கையில் வசந்தங்களே வந்துகொண்டிருந்தால், துன்பங்களும், தொல்லைகளும் நம்மைத் தொடாதிருந்தால், சந்தோஷத்திற்கும் மகிழ்ச்சிக்கும் நம்மில் குறைவு இருக்காது. ஆனால், வருத்தங்களைச் சந்திக்கும்போது, வனாந்தரத்திற்கு வந்துவிட்ட மனநிலை நமக்கும் உண்டாகிவிடும். ஏன்? ஏன்? ஏன்? என்ற கேள்விகளுக்கு விடை காண்பதையே பிரதானமாக்கிக்கொள்ளுவோம். கிறிஸ்துவின் அன்பை அறிந்திருந்தாலும், வேதத்தை அறிந்திருந்தாலும், அபிஷேகம் பெற்றிருந்தாலும் என்னுடைய வாழ்க்கையில் ஏன் இந்த வனாந்தரம் என்ற கேள்விக்கு விடை காணாத பட்சத்தில், நமது ஓட்டத்தைத் தொடர முடியாதவர்களாக; அங்கேயே ஸ்தம்பித்து நிற்பவர்களாகிவிடுவோம். தேவ தன்னுடைய பிள்ளைகளை விருதாவாக வனாந்தரத்திற்குக் கொண்டுசெல்வதில்லை. நாம் வனாந்தரத்திற்கு வருவதற்கு காரணங்கள் உண்டு. நம்மை வீழ்த்த அல்ல, நம்மை பெலப்படுத்தவே தேவன் வனாந்தரத்திற்குக் கொண்டுசெல்கின்றார்.
ஆபிரகாமுக்குப் பிள்ளை இல்லாததைக் கண்ட சாராள், அடிமைப் பெண்ணாகிய ஆகாரை ஆபிரகாமுக்குக் கொடுத்தாள். ஆபிரகாம், ஆகாரிடத்தில் இஸ்மவேலைப் பெற்றெடுத்தான். தன் தகப்பனாகிய ஆபிரகாமின் வீட்டில், அதாவது, தனது வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தான் இஸ்மவேல்; தகப்பனின் அன்பை அனுபவித்துக்கொண்டிருந்தான்; ஆபிரகாமின் வீட்டிலே சுதந்திரவாளியைப் போல வாழ்ந்துகொண்டிருந்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இஸ்மவேலின் வாழ்க்கையில் புயல் வீசியது. ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள் (ஆதி 21:10). தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது (ஆதி 21:11); என்றபோதிலும், மனைவி சாராளின் வார்த்தையின்படி, ஆகாரையும், இஸ்மவேலையும் வீட்டை விட்டு வெளியேற்றினான் ஆபிரகாம். ஆபிரகாமின் மகனாக எண்ணப்பட்டபோதிலும், ஆபிரகாமின் வீட்டை விட்டே துரத்தப்படும் நிலை இஸ்மவேலுக்கு உண்டானது. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள் (ஆதி 21:14).
தந்தையாகிய ஆபிரகாமின் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாலும், தேவன் இஸ்மவேலோடு கூட இருந்தார். அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான் (ஆதி 21:20). வனாந்தரம் இஸ்மவேலை வில்வித்தையில் வல்லவனாக்கிற்று.
தாவீது வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். தகப்பனாலும், உடன் பிறந்த சகோதரர்களாலும் அத்தனையாய் எண்ணப்படாமல், வனாந்தரத்தில் ஆட்டு மந்தையிலேயே வாழ்ந்துகொண்டிருந்த தாவீதை தேவன் வனாந்தரத்திலேயே பயிற்றுவித்தார். கோலியாத் இஸ்ரவேலை நிந்தித்தபோது, அங்கு சென்ற தாவீது சவுலைப் பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து,அதை அடித்துக் கொன்றுபோட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான். பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ. கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான் (1சாமு 17:34-37). ஆட்டுமந்தையுடன், வனாந்தரத்தில் தாவீது வாழ்ந்த வாழ்க்கை அவனை பெலவீனனாக அல்ல, பெலமுள்ளவனாக மாற்றியிருந்தது.
இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார் (மத் 4:1); வனாந்தரத்திலே, பிசாசின் மேல் அவர் வெற்றி கண்டார்.
மற்றவர்கள் நம்மைத் தள்ளிவிடும்போது, நாம் சோர்ந்துவிடுகின்றோம். இப்படி தாழ்ந்த நிலையில் என்னை வைத்துவிட்டார்களே என்று அங்கலாய்க்கின்றோம். ஆனால், அது தேவனுடைய செயல் என்பதை அறிந்துகொள்ளாமல் விட்டுவிடுகின்றோம். நாம் பெலனைப் பெற்றுக்கொள்ளும்படியாகவே வனாந்தரத்திற்குக் கொண்டுசெல்லப்படுகின்றோம்.
Comments
Post a Comment