Skip to main content

நாளைக்கும் நான் நடமாடவேண்டும்

 

நாளைக்கும் 

நான் நடமாடவேண்டும்

 

கிறிஸ்துவுக்காக நம்மை அற்பணித்து ஊழியம் செய்துவருவதுடன், அவருக்காக உயிரையும் கொடுக்கத் துணித்து, சுவிசேஷத்தினைச் சுமந்து செல்லும் நாம், வழியில் சந்திக்கும் விரோதிகளை கையாளும்போது கவனமாயிருக்கவேண்டும் என்பதனைக் கற்றுக்கொள்ளவேண்டும். இயேசுவின் வாழ்க்கையினை உற்றுக் கவனித்தாலே நமது வாழ்வியலுக்குப் பாடங்கள் கிடைத்துவிடும். தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து இயேசு ஜனங்களிடையே பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; 'ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான்' (லூக். 13:31) என்று பயமுறுத்தும் வார்த்தைகளைச் அவரது பயணத்தை திசை திருப்ப முயன்றார்கள். எனினும், பரிசேயரின் இந்த வார்த்தைகள் இயேசுவை பயமுறுத்தவில்லை; இயேசுவின் ஊழியத்தை பாதியில் நிறுத்திவிடவுமில்லை; திட்டமிட்டிருந்த பயணத்தைத் திசைதிருப்பிவிடவுமில்லை. தான் அனுப்பப்பட்டதின் காரணத்தையும், அது நிறைவேறி முடியும் காலத்தையும் அறிந்தவராயிருந்த இயேசு பரிசேயரை நோக்கி: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம் நாளில் நிறைவடைவேன். இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபொகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அநத் நரிக்குச் சொல்லுங்கள் (லூக். 13:32,33) என்று சொன்னார். இயேசுவின் பதில் இரண்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது. ஒன்று, 'இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்' என்பது; மற்றொன்று, 'எருசலேமுக்குப் புறம்பே தான் மரிக்கப்போவதில்லை' என்பது. இவ்விரண்டிற்கும் விரோதமாக எதிரி எடுக்கும் எந்த ஒரு முடிவும் இயேசுவின் செயல்களை முடிவுக்குக் கொண்டுவரமுடியாது.

ஆம், நாம் தாயின் கருவிலேயே தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள் மாத்திரமல்ல, அழைப்பினைப் பெற்றபோது, அதனைச் செய்துமுடிக்கவேண்டிய பொறுப்பினையும் கூடவே பெற்றவர்கள். இயேசு சிலுவையில்தான் 'முடிந்தது' (யோவான் 19:28,30) என்ற வார்த்தையினை உபயோகித்தார். ஊழியத்தின் நிமித்தம் நாம் நடக்வேண்டிய நாட்கள் தேவனால் நிச்சயிக்கப்பட்டவை, எனவே, காலத்துக்கு முன்னால் கத்தும் எதிரிகளைக் குறித்து நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. காலம் வரும் முன்னர் வேதனைப்படுவதை பிசாசுகளே விரும்பாதிருக்க (மத். 8:29), காலம் வரும் முன் தன்னுடைய பிள்ளைகளின் மரணத்தை தேவன் அனுமதிப்பாரோ. நம்முடைய தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றனவே (மத். 10:30). நம்முடைய காலம் கர்த்தருடைய கையில் அல்லவோ இருக்கின்றது; 'என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது' (சங். 31.15) என்று தாவீதும் பாடுகின்றானே. ஆம், நம்முடைய காலம் நம்மை விரோதிக்கிறவர்களின் கைகளில் அல்ல, வியாதியின் கைகளில் அல்ல கர்த்தரின் கைகளிலேயே இருக்கிறது; இதில் எள்ளவும் நமக்கு சந்தேகம் வேண்டாம். 'உன்னுடைய காலத்தை என்னுடைய கையில் வைத்திருக்கிறேன்' என்று வியாதிகள் சொல்லுவதைப் போன்ற மாயையான வார்த்தைகளுக்குப் பயந்து, உள்ளிருக்கும் தேவ பெலத்தை மறந்து வாழவேண்டிய அவசியமில்லையே. வியாதிகளோ, பாடுகளோ, எதிரிகளின் மற்றெந்த சூழ்ச்சிகளோ நம்முடைய ஊழியத்தை பாதியில் முடிப்பவைகள் அல்ல; அவைகள் ஒருவேளை நம்மை பாதித்தாலும், நமது பாதங்கள் தொடர்ந்து ஓடுவதை தடுத்து நிறுத்த முடியாது. 'மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்' 'மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்' என்ற மன வைராக்கியங்கொண்ட அழைப்பின் நிச்சயம் நம்மை மரண பயத்தினின்று விடுதலையாக்கி, வேதனையின் மத்தியிலும் வீரனாக முன்னேறச் செய்யும். மீதியாயிருப்பவைகளையும் சோர்ந்துபோகாமல் செய்து முடிக்க பலன் தரும். கர்த்தரோ எனக்குத் துணையாகநின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன் (2தீமோ 4:17) என்று பவுலைப் போல நாமும் சொல்லக்கூடும். உள்ளத்திலே வீரனாகத் தொனிக்கும் பவுலும், சரீரத்திலே முள்ளைப் பெற்றவன்தானே (2கொரி. 12:7-9). தேவன் எதற்காக நம்மை இந்த உலகத்திற்கு அனுப்பினாரோ, நம்மைக் கொண்டு எந்தெந்த திட்டங்களையெல்லாம் செய்து முடிக்கவேண்டும் என நினைத்தாரோ, யார் யாருக்கெல்லாம் நம்மைக் கொண்டு சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும் என வாஞ்சித்தாரோ அது அத்தனையும் நம்மாலேயே நிச்சயம் நடந்தேறும் வரை எதிரிகளால் நம்மை வெல்ல முடியாது; இது நிச்சயம். எரோதுவைப் போல கொலை செய்ய மனதுள்ளவர்கள் அநேகர் இருக்கலாம், ஆனால், நமக்காக விலை செலுத்திய இயேசு நம்மோடு உண்டல்லவா!

2005-ம் ஆண்டு, பீஹாரிலுள்ள கிராமம் ஒன்றில் சுவிசேஷம் அறிவித்துவிட்டு நானும் மற்றும் மூன்று மிஷனரிகளும் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்திற்கு அருகாமையிலுள்ள கிராமத்தின் வழியாக நாங்கள் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த கிராமத்தினர் எங்களைத் தடுத்து நிறுத்தினார்கள். நூற்றுக்கும் அதிகமானோர் அங்கிருக்க, ஏன் எங்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள் என்பதை நாங்கள் அறியும் முன்னதாகவே, எங்களை அடிக்கத் தொடங்கினான் ஒரு மனிதன். சிறுவர் முதல் பெரியோர் வரை அத்தனை பேரும் கற்களாலும், மூங்கில் கம்புகளாலும் அடிக்கத் தொடங்கினர். சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை அடித்துக்கொண்டே தெருத் தெருவாக இழுத்துக்கொண்டு சென்றனர், சகோ.ஜேசுராஜ் மற்றும் சகோ.அம்புரோஸ் ஆகியோரும் அடிபட்டு வளாகத்தை நோக்கிப் போய்விட்டனர். நானோ, அவர்கள் அடித்த அடியில் மயங்கியவனாக அங்கேயே விழுந்துக் கிடந்தேன். அப்போது, அங்கு வந்த கிராமத்தான் ஒருவன் 'இவன் செத்திருப்பான், அருகிலுள்ள நதியில் போட்டுவிடு' என்று சொல்லும் வார்த்தைகளும் எனது காதில் விழுந்தது. ஒருவழியாக அருகிலுள்ள வயல் நிலத்தில் தண்ணீருக்குள் நான் கிடந்தேன். இரவு சுமார் 7.30 மணிக்கு ஜெம்ஸ் ஊழியர்கள் மற்றும் காவலர்கள் என்னைக் கண்டெடுத்து, ஜெம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுவந்தார்கள். அப்போது, எனக்கு வலது கை, வலது கால் எதையுமே அசைக்க முடியாதிருந்தது. கர்த்தருக்காக எழுதவேண்டும் என்ற வைராக்கியம் கொண்டிருந்த நான் எனது வலது கரத்தினைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். என்னுடைய எழுத்துப் பணிக்கு முடிவு உண்டாயிற்று என்று நினைத்தேன். அப்போது, 'மரணம்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை நான் எழுதிக்கொண்டிருந்தேன், ஆனால், அதனை நான் முடிக்காதிருந்தேன். அதைப்போன்று, பல கட்டுரைகளைப் பாதியில் விட்டிருந்தேன். பயம் என்னைச் சூழத் தொடங்கும்போது, இடது கையைக் கொண்டாகிலும் இவைகளைக் செய்து முடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஆறுதலைத் தந்தது. என்னைக் கொண்டு செய்யவேண்டியவைகள் எஞ்சியிருப்பதால், எனக்கு வேண்டிய பெலனையும் தேவன் திரும்பத் தந்தார். சில நாட்களுக்குள்ளாகவே, வலது கை மற்றும் வலது கால்களில் பெலனைப் பெற்றேன். இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

குருதி வழிய சிலுவையிலேயே மரணம் நிகழும் என்பதையும், அது நிகழுங் காலத்தையும் அறிந்திருந்திருந்தார் இயேசு. இயேசுவின் மரணம் சிலுவையிலே முன்குறிக்கப்பட்டிருக்க, ஏரோது பட்டயத்தால் இயேசுவின் உயிரைப் பறிக்கக்கூடுமோ, எருசலேமுக்குப் புறம்பே கொலை செய்துவிடக்கூடுமோ? அழைப்பைக் குறித்த நிச்சயங் கொண்டவன், ஆபத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. புதரில் வீறும் பாம்புக்கெல்லாம், பதறிப் பதறி வாழ்வதில்லை. நாம் எதைச் செய்ய தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள்? நாம் முடிக்கவேண்டிய பணிகள் எத்தனை எத்தனை? நமது அழைப்பின் இறுதியும், அதன் உறுதியும் இதயத்தை நிரப்பியிருந்தால், பாதையில் பாதியில் ஜீவன் போய்விடுமோ எனப் பயப்படவேண்டியதில்லையே. மீதி ஒன்றும் இல்லாமல் அனைத்தையும் செய்து முடித்த பின்னர்தான் நாம் நீதிக்குள் பிரவேசிப்போம். யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, ராத்தங்கிய இடத்தில் சொப்பனம் கண்டபோது, 'நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தச் தேசத்துக்கு உன்னை திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை' என்றாரே (ஆதி. 28:10-15); இதே வார்த்தைகள்தான் இன்றும் நமது ஓட்டத்திற்கு ஆதாரம். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி