பதவியா? பாசமா?
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் (1தீமோ 1:15)
சத்தியத்தைச் சுமந்துகொண்டும் சகோதரர்களோடுகூட சகவாசமின்றி செல்லும் மனிதர்கள் உண்டு; அப்படியே, சத்தியத்தை சுமந்துகொண்டு சகோதரர்களையும் காக்க தங்கள் கால்களால் சகதியில்கூட இறங்க ஆயத்தமாயிருக்கும் ஊழியர்களும் உண்டு. நம்மை மீட்பதற்காக இயேசு கிறிஸ்துவும் பரலோகம் விட்டு பூமிக்கு வந்தாரே. பார்வோனுடைய அரண்மனையில் வாழ்ந்துகொண்டிருந்தபோதிலும், தான் ஓர் எபிரெயன் என்பதை அறிந்துகொண்ட மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, அங்கும் இங்கும் பார்த்து, ஒருவனும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான் (யாத் 2:12). எகிப்தியர்களுடைய தேசத்தில் தான் இருந்தபோதிலும், எகிப்தின் அரண்மனையில் தான் உயர்ந்த நிலையிலிருந்தபோதிலும், பதவி அல்ல, சகோதரர்களைக் குறித்த பாசமே மோசேயை ஆட்கொண்டிருந்தது, மேற்கொண்டுமிருந்தது.
சகோதரர்கள் அடிமைகளாயிருப்பதையும், அடிக்கப்படுவதையும் கண்ட மோசே, தனது பதவியையும், ஸ்தானத்தையும் முக்கியமெனக் கருதி அதனைக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமுடையவனாக, சகோதரர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைக் காணாதவனாகக் கடந்து செல்லவில்லை; மாறாக, சகோதரன் ஒருவன் அடிக்கப்படும்போது, அங்கேயே நின்றுவிட்டான். அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டைபண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயஞ் செய்கிறவனை நோக்கி: நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான் (யாத் 2:13). இது அவனது வாழ்க்கையில் தலைமைத்துவத்திற்காக அவன் தெரிந்துகொள்ளப்படுவதற்கு தரமான ஓர் குணமாக தேவனால் பார்க்கப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். இயேசு கிறிஸ்துவும் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, வழியருகே உட்கார்ந்து பிச்சைக்கேட்டுக்கொண்டிருந்த ஒரு குருடன், 'தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்' என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டபோது, இயேசு கிறிஸ்து உடனே நின்று விட்டாரே (லூக். 18:38,39); இதுவே, உலக மக்களை இரட்சிக்கும்படியாகவும், மீட்கும்படியாகவும் பிதாவினால் அனுப்பப்பட்ட தலைவனாகிய இயேசு கிறிஸ்துவின் குணம். மோசேயையும், எகிப்திலிருக்கும் தனது ஜனங்களை மீட்கும்படியாக, தலைவனாகவும், மீட்பனாகவும் அல்லவோ தெரிந்தெடுத்து அனுப்பினார். முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே, தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார் (அப் 7:35) என்றே மோசேயைக் குறித்து வேதத்தில் வாசிக்கின்றோம். ஜனங்களை இரட்சிப்பின் வழிக்கு நேராக நடத்தும்படி அழைக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட நம் ஒவ்வொருவருக்கும் இத்தகைய குணம் காணப்படவேண்டியது எத்தனை அவசியம்.
என்றபோதிலும், செயல்படும் விதத்திலேயோ தேவ ஆலோசனைக்கும், தேவனது திட்டத்திற்கும், தேவ நடத்துதலுக்கும் இடங்கொடாமல், தன்னுடைய மாம்சத்தை மாத்திரமே முன்நிறுத்தி மோசே தவறிவிட்டான். எகிப்தியனுக்கும், எபிரெயனுக்கும் இடையில் நடந்த பிரச்சனையை தனது மாம்ச பெலத்தினால், எளிதாகத் தீர்த்துவிட்டான்; ஆனால், எபிரெயனுக்கும், எபிரெயனுக்கும் இடையிலான சகோதரத்துவ பிரச்சனையைத் தீர்க்க மோசே முற்பட்டபோதோ, 'எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ' (யாத் 2:14) என்ற வார்த்தை அல்லவோ சகோதரனிடத்திலிருந்து வெளிப்பட்டது. எதிரிகளிடத்தில் நாம் தவறாக செயல்படுவோமென்றால்கூட, சகோதரர்களிடத்தில் நாம் ஊழியம் செய்வது கடினம் என்பதை, இந்நிகழ்வு நமக்கு விளக்குகின்றதே. நம்முடைய செயல்கள், அழைக்கப்பட்ட இடத்திலிருந்து நம்மை அகற்றிவிடக்கூடாதே.
வேதனையிலிருக்கும் ஜனங்களுக்காகப் பரிதபியாமலும், அவர்களை விடுவிக்கும் பணியில் உள்நுழையாமலும், சுகமாக தங்கள் வாழ்க்கையை சுவருக்குள் வைத்துக்கொண்டு, என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் (உன் 5:3) என்று சொல்லிக்கொண்டு, உபத்திரவத்திலிருக்கும் ஜனங்கள் தங்களிடத்தில் உதவி ஏதும் கேட்டுவிடுவார்களோ என்ற மனப்பாங்குடன், ஆசாரியனைப் போலவும், லேவியனைப் போலவும் விலகிச் செல்லாமல், சமாரியனைப் போல மனதுருகி, அருகில் வந்து, அத்தகையோரின் காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, நம்முடைய சுய வாகனத்தின் மேல் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய் அத்தகையோரைப் பராமரிக்கவேண்டியது நம்முடைய பொறுப்பு அல்லவா (லூக். 10:31,32). பிறரது கஷ;டங்களைக் குறித்து கவலைப்படாமல், தன்னுடைய போக்கிலேயே போய்க்கொண்டிருக்கிற மனிதன் தலைவனாக உயர்த்தப்பட்டிருந்தாலும், அவனை தலைவனாக தாங்கி நிற்கும் ஜனங்களை அழித்து, தானே தரையில் விழுந்துவிடுவது நிச்சயம்.
Comments
Post a Comment