தேவனை விட்டு பிரிந்துபோன நமக்காக, தனது ஜீவனைக் கொடுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த உறவை மீண்டும் மலரச்செய்து, இறைவனோடு நம்மை இணைத்தவர் இயேசு. அவர் (இயேசு) தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே, அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறதுபோல, நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் (1யோவான் 3:16). ஜீவனைக் கொடுத்து, பிறரது ஜீவனை தேவனோடு இணைப்பதற்காக அழைக்கப்பட்டவர்கள் நாம்; அவர்களது ஜீவனை நித்தியஜீவனாக மாற்ற அழைக்கப்பட்டவர்கள் நாம். இதையே இயேசுவின் சிலுவையில் செய்துமுடித்தார். அவர் முடித்ததை நாம் உலகெங்கும் முழங்கவேண்டும் அவ்வளவுதான். இந்த மாபெரும் பணிக்கு அழைக்கப்பட்டிருக்கிற நாம் தேவனுடனா உறவில் செம்மையாயும், மனிதர்களுடனுமான உறவுகளில் கவனமாகவும் வாழவேண்டும். தேவனோடு உள்ளதான உறவை விட்டுவிடக்கூடாது, மனிதர்களுடனான உறவில் தேவனை விட்டுவிடக்கூடாது; இவ்விரண்டுமே ஆவிக்குரிய ஓட்டத்தில் நமது உயிரையும், பிறரது உயிரையும் நாம் காக்கக்கூடிய தாரகச் செய்திகள்.
தாவீது - பத்சேபாள் :
தாவீது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன்; அவரே அவனை அரசனாக்கினார். ஆட்டுக்குடிலிலிருந்து அரியணைக்கு உயர்த்தியவர் தேவனே. எனினும், உயர்ந்த பதவியில் அமர்ந்திருந்தபோது, தனக்கு இருக்கும் மனைவிகள் போதுமென்றிராமல், மற்றொருவனுடைய மனைவியோடும் உறவு கொள்ளத் துணிந்தான். அரமனை உப்பரிக்கையின்மேல் உலாத்திக்கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயைக் கண்டான், விசாரிக்க ஆள் அனுப்பினான், அழைத்துவரச் சொன்னான், அவளோடு சயனித்தான் (2 சாமு. 11:1-4). மற்றொருவனுடைய மனைவியுடன் உறவு கொண்டதால், உறவுகொண்டவளின் கணவன் உயிரைப் பறிக்கும் நிலை உண்டானது. இது உயிரைப் பறிக்கும் உறவல்லவா! தாவீது தனது உறவில் உல்லாசம் காண்பதற்காக, இன்னொருவனுடைய உயிரை பறித்துவிட்டான்.
தாவீது-பத்சேபாள் இடையிலான உறவு அவளது வயிற்றில் கருவாக வளர்ந்துகொண்டேயிருந்தது. அந்தச் செய்தியை, தாவீதுக்கு அறிவிக்கும்படி பத்சேபாள் ஆள் அனுப்பினாள். பாவம் செய்தபோது, தாவீது, பத்சேபாளை அழைத்துவரும்படி ஆள் அனுப்பினான். அடுத்தகட்டத்திலோ, பத்சேபாள் அறிவிக்கும்படி ஆள் அனுப்பிளாள். பத்சேபாளோடு உண்டான அந்த உறவு அன்றோடு முடிந்துவிடவில்லை, அறிவிக்கும் நாளும் வந்தது. வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை (மாற். 4:22) என்பது அவனது வாழ்க்கையில் நிறைவேறியது. அந்தரங்கத்திலோ, எவருக்கும் தெரியாமலோ பாவத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் சகோதரனே, சகோதரியே எச்சரிக்கை! எச்சரிக்கை!! நீங்கள் அழைத்தனுப்பிச் செய்த பாவங்கள் அனைத்தையும் அறிவிக்கும் நாள் நெருங்குகிறது. இன்று அறிவிக்கப்படும் சுவிசேஷத்திற்கு நீங்கள் செவிகொடுப்பீர்களென்றால், அவைகள் இன்றே அழிக்கப்பட்டும், அன்று அறிவிக்கப்படாது; இயேசுவின் இரத்தத்தினால் உண்டாகும் சுத்தம் எத்தனை பெரியது. தாவீது இதனை உணர்ந்ததாலேயே, நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் (சங் 51:7) என்றான். மனிதர்களுடனான நம்முடைய உறவுகள் பிறரது சரீர மற்றும் ஆத்மீக உயிரைப் பறிப்பதாக அமைந்துவிடக்கூடாது.
கணவன் போர் முனையில் இருக்கும்போது, வீட்டிலிருக்கும் மனைவிகளே கவனமாயிருங்கள். போரில் கணவனை வீழ்த்துவதற்கு பெலனற்ற பிசாசு, வீட்டில் உங்களை வீழ்த்தப் பிரயாசப்படுவான். வீட்டில் ஊழியர்களின் மனைவிகளே, ஊழியர்களின் பிள்ளைகளே இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான். அப்படியே, மனைவி போரிலிருக்கும்போது தனிமையாயிருக்கும் கணவன்மார்களே எச்சரிக்கையாயிருங்கள், போரில் மனைவியைத் தொட இயலாத சத்துரு, வீட்டில் வேறு எந்த பெண்ணைக் கொண்டாகிலும் உங்களைத் தொட்டுவிட பிரயாசப்படுவான். பெண்ணைக் குத்தினால் கணவனின் கண்ணைக் குத்தமுடியும் என்பதை அறிந்தவன் சத்துரு.
ஏரோது - ஏரோதியாள் :
அவ்வாறே, ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை வைத்துக்கொண்டிருந்தான்; அது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான் (மத். 14:5). நியாயமல்ல என்று சொன்ன யோவானுக்கு ஏரோதுவினால் கிடைத்த நியாயம் சிறைச்சாலையே. என்றாலும், நியாயம் பேசும் யோவானக் கொன்று வீச வேளையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் ஏரோதியாள். ஏரோதின் ஜென்ம நாள் கொண்டாட்டத்தின்போது, யோவானின் தலையைத் தட்டிலே வாங்கிக்கொண்டாள்; சத்தியத்தை அறிவித்ததின் நிமித்தம் இரத்தசாட்சியாக மரித்தவர்களின் பட்டியலில் யோவான் சேர்க்கப்பட்டான். அதுதான் அன்று அவளுக்குக் கொண்டாட்டம். சிறைச்சாலையிலிருந்து, சிரைச்சேதத்துக்கு யோவானை இழுத்துக்கொண்டுபோனது 'ஏரோது, ஏரோதியாள்' உறவே. நாம் இருவரும் இணைந்து வாழ, இடையில் எவரும் வரக்கூடாது என்ற நிலை. சட்டத்திற்குப் புறம்பாக அது காணப்பட்டாலும், எங்களைப் பொருத்தவரையில் அது சரியே என்று சம்மதங்கூறுபவர்கள். இத்தகையோரின் உறவு, எவருடைய உயிரையாவது நிச்சயம் பறித்துவிடும்.
கட்டுப்பாடற்ற பாலுறவுக் கடலில் கரைந்து, காணாமற்போய்விடவேண்டாம். உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும்போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்;களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. என் மகனே, நீ பரஸ்திர்Pயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன? (நீதி 5:18-20) என்ற வரிகள் மனுக்குலத்தை எச்சரிப்புக்குள் நடத்தட்டும். மனைவியை மறந்து, மாற்றாள் மேல் கொண்டுவரும் ஈர்ப்பை சத்துரு உங்களுக்குள் விதைத்துவிட்டால், ஒருநாள் நீங்கள் மனைவியையே துறந்துவிடும் நிலைக்கு அவன் உங்களைத் தள்ளிவிடுவான்; மனைவிகளுக்கும் அப்படியே; கணவனை மறந்து, மாற்றான் மேல் கொண்டுவரும் ஈர்ப்பை சத்துரு உங்களுக்குள் விதைத்துவிட்டால், ஒருநாள் நீங்கள் கணவனையே துறந்துவிடும் நிலைக்கு அவன் உங்களைத் தள்ளிவிடுவான். கணவன் - மனைவி உறவை வெடிப்பாக்கி, விவாகரத்து வரை கொண்டுசெல்ல நினைப்பது சத்துருவின் தரிசனம். எதிர்பாலினரோடு செய்யும் நீண்ட உரையாடல்களிலிருந்து மீண்டு வர இயலாமல் இருப்போர் ஏராளம். எது எதுவரையில் என்பதை அறியாமல், இறுதிவரை சென்று ஆவிக்குரிய வாழ்க்கையில் இறந்துபோய்விட்டவர்கள் அநேகர். இப்படிப்பட்ட கணவன்மார்கள், மனைவிக்கு பிணமாகவே திரும்பக் கிடைப்பர். திருமண வாழ்க்கையைக் குறித்து யோபுவும், 'என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?' (யோபு 31:1) என்று நினைப்பூட்டுகின்றான். என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டானால், அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்றுமனிதர் அவள்மேல் சாய்வார்களாக (யோபு 31:9,10) என்று சவாலிடுகின்றான்.
இவைகள் ஒருபுறமிருக்க, நாங்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று கௌரவமாக தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வோர் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உலகத்தில் கூடிக்கொண்டேவருகின்றது. சத்தியமில்லாத இந்த உறவை சட்டமாகவும் மாற்றிக்கொண்டது சில நாடுகள், அத்தகைய நாடுகளில் தேவனைத் தேடுவோரின் வீடுகளைத் தேடியே கண்டுபிடிக்கும் நிலை உண்டாகும். ஓரினச் சேர்க்கையை விதையாக மனிதர்களிடத்தில் விதைத்துக்கொண்டிருக்கும் சத்துருவின் தந்திரம், உயிருக்கு எதிரானதே. உயிர்கள் உலகில் பிறக்கும் விதிக்கு எதிரான இது சத்துருவின் சதிதானே. பலுகிப் பெருகுங்கள் என்ற வாக்குத்தத்தம் கொண்ட நாம், உயிர்களே இல்லாமற் போய்விட்டால், உலகம் ஒரு நாள் வெற்றிடமாக விட்டுவிடப்பட்டுவிடுமே. இந்த பூமி அப்படித்தான் இருக்கவேண்டும் என்று சத்துரு எதிர்பார்க்கிறான்; எனவே, எதிர்பாலினரை எதிர்க்கிறான். பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது (எரே 4:23) என்று எரேமியா சொல்லும் நாட்களை மீண்டும் நம்முடைய காலத்தில் கொண்டுவர விரும்பும் சத்துருவின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுவோம். ஒருபுறம், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்றுவிடும் மக்களும் உண்டு. உயிருக்கு விரோதமாக சத்துரு எடுக்கும் இத்தனை முயற்சிகளில் உடன்படாமல் முன்னேறுவோம்.
மகளைக் கற்பழிக்கும் தந்தைகளும், உடன் பிறந்த சகோதரிகளின் கற்பினைக் கைவைக்கும் சகோதரர்களும், அடுத்தவரது மனைவியின் மேல் ஆசைகொள்ளும் மனிதர்களும், மகனோடு உறங்கத் தயங்காத தாய்களும் இன்றைய நாட்களின் அன்றாடகச் செய்திகள்தானே. எழுதுவதற்கே கூச்சமாக இருந்தாலும், எழுதி எச்சரிக்காவிட்டால், அது என் தவறாகிவிடக்கூடாதே. போராட பெலமில்லாவிட்டாலும், அவைகள் நம்மை மேற்கொள்ளாதவாறு காத்துக்கொள்ளவாவது நமக்கு பெலம் வேண்டுமே.
சிம்சோன் - வேசி :
சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான் (நியா. 16:1). இந்த உறவினால் அவனது உயிர் பணையம் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவன் அறியாதவனாயிருந்தான். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனையோ ஏமாற்று வேலைகளைச் செய்தும், பிடியிலிருந்து அவன் விடுபடவில்லை. வேசி அவனைப் பார்த்து, 'உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?' (நியா. 16:15) என்று உறவை மேலும் இறுக்கமாக்கவே முயன்றாள். அவனது ஆத்துமாவை சரீரம் மேற்கொண்டது, 'அவனது ஆத்துமா விசனப்பட்டது' (நியா. 16:16). தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி, பலட்சயமானான், மற்ற எல்லா மனுஷரைப்போல மாறினான்; உறவிற்காக தனது பெலனையே விட்டுக்கொடுத்தது மாத்திரமல்ல, தனது உயிரையும் அவன் விட்டுவிடும் நிலை உண்டாகிவிட்டதல்லவா! இதைத்தானே சாலமோனும் எழுதுகின்றான், 'ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல்ல அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது' (நீதி. 7:23). உங்கள் உயிரைப் பறிக்கும் உறவுகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இத்தகைய நிகழ்வுகளை இன்று சாதாரணமாக தினசரிச் செய்தித்தாட்களிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும், இணையதளங்களிலும் நம்மால் காணமுடியும். தகாத உறவைத் தட்டிக்கேட்கும்போது, வெட்டிக்கொல்லும் மனிதர்களும் மனுஷிகளும் ஏராளம். தகாத உறவினைச் சொல்ல முயலும்போது வீட்டை விட்டே வெளியேற நினைக்கும் வாலிபர்கள் ஏராளம். கழுத்தில் கத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று கத்திச் சொல்லுவோரை நோக்கி கத்தியை வீசவே துணிகிறார்கள். நண்பன்தானே என்று நெருக்கமாயிருந்த வாலிபனுனான பழகும் வரம்பை உயர்த்திக்கொண்டதால், கற்பைப் பறிகொடுத்த வாலிபப் பெண்கள் அநேகர். சகோதரன் என்று அழைத்துக்கொண்டும், தனது சரீரத்தை விட்டுக்கொடுத்தவர்கள் அநேகர். பாசம் பாவத்தைத் தொடக்கூடாது, நேசம் என்பது நேர்மையை விட்டுவிடக்கூடாது, அன்பு என்பது அடுத்தவரை ஆபத்திற்குள் தள்ளக்கூடாது.
தனது தவறு வெளியே தெரிந்துவிட்டது என தற்கொலை செய்துகொள்வோரும், தான் தவறு செய்யவேண்டும் என்பதற்காகப் பிறரைக் கொலை செய்வோரும் பெருகிவருகின்றனர். எப்படியாவது நரகம் நிரம்பவேண்டும் என்று நாலாபுறமும் கிரியை செய்தும் சத்துருவின் சத்திகளை நாம் அறிந்துகொள்ளுவோம். உயிரைக் கொடுத்து பிதாவோடு நம்மை இணைத்தார் இயேசு, ஆனால், சத்துருவோ, தகாதோருடன் இணைத்து உயிரை எடுத்துவிடாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ளுவோம்.
ராஜா - பிரதான ஆசாரியர் :
இயேசு இந்த உலகத்தில் அவதரித்தபோது, ஆளுகை செய்த மன்னன் மட்டுமல்ல, ஆண்டவனின் ஆலயத்தில் பணிவிடை செய்துகொண்டிருந்த ஆசாரியர்களும் அவருக்கு விரோதமான போரில் களம் குதித்தனர். தேசத்தில் ராஜா இருந்தபோது, யூதருக்கு ராஜாவாகப் பிறந்தவர் அவர் (மத். 2:2). பிரதான ஆசாரியன் இருந்தபோது பிரதான ஆசாரியனாகப் பிறந்தவர் அவர். 'யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' (மத். 2:2) என்று சாஸ்திரிகள் ஏரோதினிடத்தில் கேட்டபோது, உடனே அவன் பிரதான ஆசாரியரை அழைத்தான் (வச. 4). கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்பதை, ஏரோது ராஜா அறியாதவனாயிருந்தான்; ஆனால், ஆசாரியர்களுக்கோ அதைக் குறித்த அறிவு இருந்தது (வச. 2-6). 'இராஜாவாகவும், ஆசாரியனாகவும்' பிறந்த இயேசு, இவ்விருவராலும் பகைக்கப்பட்டார். தேசத்தை ஆளுகிறவர்களும், தேவாலயத்தை ஆளுகிறவர்களும் இயேசுவை தீர்த்துக்கட்டவே திட்டந்தீட்டிக்கொண்டிருந்தனர். இயேசுவின் போதனைகளுக்கு விரோதமாக, பிரதான ஆசாரியர் தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டேயிருந்தனர். அரசாங்கமும், ஆசாரியர்களும் ஒரே நோக்கத்துடன் இருந்தனர். ராஜாவுக்கு, தேசமும், பதவியும் போய்விடும் என்ற பயம்; ஆசாரியருக்கு, ஆலயம் போய்விடும் என்ற பயம். இருவரும் தங்களுக்குரியதைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டுமென்றே, இயேசுவை அகற்றிவிட நினைத்தார்கள். இயேசுவுக்கு விரோதமாக, பதவியில் உள்ளவர்களையும், பதவியில் உள்ளவரையும் இணைத்தான் பிசாசு. இயேசுவுக்கு விரோதமான போக்கு உங்களை இயேசுவுக்கு விரோதமானவர்களுடனேயே இணைத்துவிடும்; எச்சரிக்கை! இயேசு நிந்தித்துப் பரியாசம்பண்ணப்படும்போது, முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதர்களாகிவிட்டார்கள் (லூக் 23:12). இயேசுவைப் பகைக்கும் இருவர்கள், ஒருவருக்கொருவர் பகைவர்களாயிருந்தபோதிலும், தங்களது பகைவன் ஒருவனே என்று ஒன்றுகூடிக்கொண்டனர். இயேசுவுக்கு விரோதமாக, பகைவர்களையும் பகைவர்களையும் இணைத்தான் பிசாசு. ஒரு கொலையினை அரங்கேற்றுவதற்காக, சத்துரு எடுக்கும் இத்தகைய முயற்சிகளை அடையாளம்காண முடிகிறதல்லவா!
பிரிமானவர்களே! தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே, தலைவர்களாக ஜனங்களை முன்நின்று நடத்துவோர்களே, தேவனையும், எழுதித்தரப்பட்ட வேதத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும் தவறிவிடுவோமென்றால், இயேசுவை விரோதிப்போரின் உள்ளத்தில் உண்டாகும் பகையுணர்வு, நமது உள்ளத்திலும் உண்டாகிவிடும்; உணர்வுகள் ஒன்றாகிவிடும்போது, இரு உடல்களை ஒன்றாக்கிவிடுவது சத்துருவுக்கு சாமான்யமான வேலையல்லவா! அதனை எளிதாக அவன் செய்துவிடுவான். உயிரைப் பறிக்கும் அவனது திட்டத்தில் நீங்களும் ஒருவராகிவிடவேண்டாம்.
பிரதான ஆசாரியர் - சவுல் :
அப்போஸ்தலர்களின் நாட்களில், இயேசுவின் போதகத்தைப் பின்பற்றியவர்களுக்கு விரோதமாக ஆசாரியர்கள் மறைமுகமாகப் போராடத்தொடங்கினர். இயேசுவின் போதகத்தைக் கேட்போராகவும், ஜெப ஆலயத்திற்குச் சென்றுவருவோராகவும் இருந்த அவர்கள் ஆசாரியர்களின் கண்களுக்கு கண்ணிகளாகவே காணப்பட்டனர். இயேசுவின் போதகத்தைக் கேட்ட அவர்கள் தங்கள் மாய்மாலத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதை அவர்கள் அறிந்துகொண்டதினால் உண்டான போராட்டம் அது. இயேசுவைப் பின்பற்றினாலும், பிதாவின் ஆலயத்திற்கு அவர்கள் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தனர். பிதாவின் ஆலயம், அது பிள்ளைகளுக்கே உரியது என்பதை இயேசுவும் சொல்லியிருந்தாரே.
அப்படி சென்றுகொண்டிருந்த மக்களால், பிரதான ஆசாரியர்களின் போதனைகளுக்கும் இயேசுவின் போதனைகளுக்கும் இருந்த வித்தியாசங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது; பிரதான ஆசாரியரியர்களின் செயல்களுக்கும் இயேசுவின் செயல்களுக்கும் இருந்த வித்தியாசங்களையும் அவர்களால் கண்டுபிடித்துக்கொள்ள முடிந்தது; பிரதான ஆசாரியர்களின் போலியான போதனைகள் பலவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. இயேசுவின் போதனைகளினால், பிரதான ஆசாரியர்களின் மாய்மாலமான வாழ்க்கைகள் இவர்கள் கண்களுக்கு வெளியரங்கமாயின. தன்னைப் பின்பற்றுவோராகவும், ஜெப ஆலயத்திற்கும் சென்றுவருவோராகவும் இருந்த மக்களை நோக்கி: நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் (மத். 23:3) என்று இயேசு ஆலோசனை கொடுத்தார். பரலோகத்தைப் பூட்டிப்போடுகிறதையும், பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணுகிறதையும், மக்களை இரட்டிப்பாய் நரகத்தினுடையவர்களாக்குகிறதையும், குருடரான வழிகாட்டிகள் என்றும், நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் விட்டுவிட்டார்கள் என்றும், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்றும் வேதபாரகரையும், பரிசேயரையும் இயேசு காட்டிக்கொடுத்தார் (மத். 23:1-27).
இயேசுவின் போதனையைப் பெற்ற இந்த மக்கள் தொடர்ந்து ஜெப ஆலயத்திற்கு வந்துகொண்டிருந்தாலும், அவர்களது வருகையினை ஆசாரியர்களோ விரும்பாதவர்களாயிருந்தார்கள், அவர்களை ஒழித்துவிட நினைத்தார்கள். அவர்கள் தங்களுக்கு அல்ல, இயேசுவுக்கும், அவருடைய போதனைகளுக்குமே கீழ்ப்படிகிறவர்கள் என்ற வெறுப்போடிருந்தார்கள். இயேசுவைப் பின்பற்றுவோரை அடியோடு அழித்துவிடவேண்டும் என்று வைராக்கியமுடன் இருந்த அவர்களது வலையில் வாலிபனான சவுல் விழுந்தான். இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்கு யூதாஸ் கிடைத்தது போல, பிரதான ஆசாரியருக்கு இயேசுவைப் பின்பற்றும் ஜனங்களைக் கண்டுபிடித்து கொலை செய்வதற்கு சவுல் கிடைத்தான். சவுலின் இந்த தரிசனமும், பிரதான ஆசாரியர்களின் தரிசனமும் ஒத்திருந்தது. பிரதான ஆசாரியர்கள் தாங்கள் செய்ய விரும்புவதை சவுலைக்கொண்டு நிறைவேற்றிவிடத் துணிந்தனர். அவனுக்கு அதற்கான அதிகாரத்தை நிருபமாகவும் எழுதிக்கொடுத்தனர். கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்; இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு அவன் நிருபங்களைக் கேட்டபோது (அப் 9:2) பிதான ஆசாரியர்கள் அவனுக்கு நிருபங்களைக் கொடுத்தார்கள், அனுமதியளித்தார்கள். இயேசுவின் உபதேசத்தைக் கேட்ட சிலரோ பயிராக ஜெப ஆலயங்களில் காணப்பட்டனர். ஆனால், ஆசாரியர்களோ, இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களைக் களைகளாகவே கண்டனர். தங்கள் களைகளை நீக்குவதற்குப் பதிலாக, இயேசுவின் பயிரை அழிக்க அவர்கள் திட்டம் தீட்டினர்.
சத்தியத்தைப் பின்பற்றும் மக்களால், சபைகளிலும் மற்றும் போதகர்களுக்கும் இப்படிப்பட்ட சிக்கல்கள் உண்டாவது உண்டு. போதனையில் தவறும் போதகர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ளும்போது, தங்கள் போதனையை திருத்திக்கொள்வதற்குப் பதிலாக, அடையாளம் கண்டுபிடித்துவிட்ட மனிதர்கள் சபையை விட்டுப் போவதையே விரும்பும் போதகர்கள் அநேகர். தவறிப்போகும் சபையின் பாதையையும், தவறான உபதேசங்களையும் அறிந்துகொள்வதினால் வெறுக்கப்படும் நிலையும் உருவாகின்றது. எனவே பவுல், 'நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?' (கலா. 4:16) என்று கேட்கிறார். 'இந்த உபதேசம் தவறானது' 'சபையில் அந்கக் காரியத்தைச் செய்யக்கூடாது' என்று இயேசுவின் இலக்கணத்தைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்பவர்களை, தங்கள் வழிகளிலே சென்றுகொண்டிருக்கும் சபைகள் தள்ளிவிடத்தான் செய்கின்றன. அங்கத்தினர்களாயிருக்கும் அவர்களை அகற்றிவிடவே சபைகளும், போதகர்களும் நினைக்கின்றனர்.
ஜெப ஆலயங்களில் இயேசுவின் உபதேசத்தையும், இயேசுவையும் ஏற்றுக்கொண்ட ஜனங்களை அடையாளம் கண்டு, அவர்களை கொலை, செய்து முற்றிலும் அழித்துவிட்டு, கிறிஸ்தவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டும் என்ற முனைப்போடு நின்றான் சவுல். இயேசுவை விரோதிப்பவர்களின் தூண்டுதலும் துணையிருக்க வீரத்தோடு புறப்பட்டான் சவுல். இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களை அடையாளம் கண்டு அவர்களை பயமுறுத்தி, கொலை செய்து அடியோடு அழித்துவிடுவதற்காக அவன் சென்றுகொண்டிருந்தபோது, இயேசு அவனை சந்தித்தார்; பயணத்தைத் தடுத்து நிறுத்தினார்; அவனைத் தன்னுடையவனாக மாற்றிக்கொண்டார்.
அப்போது இயேசு அவனை நோக்கி: 'நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்' என்றார் (அப். 9:5). ஜெப ஆலயங்களில் இருக்கும் தன்னுடைய பிள்ளைகளைக் காக்க அவர் எதிர்த்து வந்தார். உங்களுக்கு விரோதமாக உயிரைப் பறிப்பவன் எழுந்துவரும்போது, எழுந்து ஓடவேண்டாம், இடைமறிக்கும் இயேசு நமக்கு உண்டு. உயிரோடு இருக்கும் அவரை மாத்திரம் உடன் வைத்துக்கொள்ளுங்கள்; பகைவனிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
Comments
Post a Comment