Skip to main content

அடையாளம்

அடையாளம்





பிதாவின் அடையாளம்

 

இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன் (வெளி 14:1)


பிசாசின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, பிதாவின் மகிமையை இழந்து வாழ்ந்துகொண்டிருந்த மனுக்குலம், எத்தனையாய் பிதாவை விட்டு தூரம் போய்க்கொண்டிருந்தாலும், தங்களுக்கும் பிதாவுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துக்கொண்டிருந்தாலும், பிதாவின் கண்களோ, மனிதர்களை மீண்டும் தன்னுடைய பிள்ளைகளாக்கிக்கொள்ளவே ஏங்கிக்கொண்டிருந்தன. தீர்க்கதரிசிகள், ஊழியர்கள் பலரை அனுப்பியும் மனிதர்களை தன் பக்கம் இழுக்க பிதா வழிகள் எத்தனை! எத்தனை!! பரிசுத்தமான தேவன் தனது நாமத்தை பாவத்தில் இருப்போரின் நெற்றிகள் மேல் எழுதி அவர்களை தன் பிள்ளைகள் என்று சொல்லிவிட முடியாதே. எனவே, அவர்களது பாவங்களை நீக்கி அவர்களைச் சுத்திகரிக்க தன்னுடைய ஒரே பேரான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார், அதையே நாம் கிறிஸ்மஸ் பண்டிகையாகக் கொண்டாடுகின்றோம். பிதாவின் நாமம் நமது நெற்றிகளில் தரிக்கப்படுவதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் இயேசு.


(இயேசுவின்) நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாக மாற்றப்படுகின்றனர் (யோவா 1:12). யோவான் ஸ்நானகன் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தினார், அப்படியே, அப்படியே இயேசு பிதாவின் நாமம் நமது நெற்றிகளில் எழுதப்படுவதற்கு நம்மை ஆயத்தப்படுத்தினார். தேவனுடைய பிள்ளைகளாகுவதற்கு ஒரே வழி இயேசுவின் நாமத்தை விசுவாசிப்பதே. எனவே இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவா 14:6) என்றார். இந்த இயேசுவுக்கு நமது வாழ்க்கையை அர்ப்பணிக்காவிடில், அவரை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளாவிடில், அவர் நம்மை பிதாவுக்குப் பிரியமான பிள்ளைகளாக ஆயத்தப்படுத்த முடியாது.


பிதாவின் நாமம் நமது நெற்றிகளில் எழுதப்படவேண்டுமேயாகில், நாம் முதலில் கிறிஸ்துவை தரித்துக்கொள்ளவேண்டும். எனவே பவுல்,  ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே (கலா 3:27) என்று எழுதுகின்றார். கிறிஸ்துவை தரித்துக்கொள்ளாத மனிதன் பரலோகில் நுழையவும் முடியாது, பிதாவோடு வாழவும் முடியாது, பிதாவின் நாமமும் நமது நெற்றிகளில் எழுதப்படாது.


இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன் (வெளி 14:1) என்றும், அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள், அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும் (வெளி 22:4) என்றும் பிதாவின் நாமத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பரிசுத்தவான்களை யோவான் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.


பலர் கிறிஸ்தவ மதத்தைத் தரித்துக்கொண்டிருக்கின்றார்கள், பலர் கிறிஸ்தவ பெற்றோரைத் தரித்துக்கொண்டிருக்கின்றனர், பலர் கிறிஸ்தவ சான்றிதழ்களை மற்றும் அடையாள அட்டைகளைத் தரித்துக்கொண்டிருக்கின்றார்கள், பலர் சபை அங்கத்தினர் அட்டைகளைத் தரித்துக்கொண்டிருக்கின்றார்கள், ஆனால், கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளவில்லை. கிறிஸ்தவர்கள் பலரிடத்தில் கிறிஸ்துவைக் காண முடிவதில்லையே. கிறிஸ்தவத்தை வாழவிட்டு, கிறிஸ்துவை வாழ்க்கையில் மாளவிட்டு, சத்துருவை சரீரத்திலும் வாழ்க்கையிலும் ஆளவிட்டுவிடும் மக்களின் நெற்றிகள் பிதாவின் நாமத்தின் அடையாளத்திற்குத் தூரமாயிருக்கும். 'இயேசு' என்ற நாமத்தினால் கிடைக்கின்ற இரட்சிப்பின் வஸ்திரத்தைத் தரித்துக்கொள்ளாமலிருப்போமானால், நமக்கு பிதாவின் வீட்டில் அனுமதி மறுக்கப்படும்.


கிறிஸ்து பிறப்பின் நாளை ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது கண்கள் இந்த சத்தியத்தின் மீது பதியட்டும். புதிய ஆடைகள், புதிய அணிகலன்கள் போன்றவைகளால் சரீரத்தை அலங்கரித்து, புதிய பொருட்களால் வீட்டை அலங்கரித்துக்கொண்டாலும், கிறிஸ்துவை சரீரத்தில் தரித்துக்கொள்ளாமல், புத்தாடைகளை மட்டும் தரித்துக்கொண்டு ஆலயத்திற்குச் சென்றால் நமது வாழ்க்கை 'போக்காடு' போலவே மாறிப்போகும். இயேசுவை சரீரத்தில் தரிக்காமல், பிதாவின் நாமத்தை அடையாளமாக நமது நெற்றிகளில் பெற்றுக்கொள்ள முடியாது.


இத்தகைய நபர்களால் கிறிஸ்தவத்துடன் கிறிஸ்துவும் தூஷிக்கப்படுகிறார் என்பதை மறந்துவிடவேண்டாம். தேவ ஜனத்தை அந்நியர்கள் ஆளுகை செய்யும் போது, 'என் நாமம் தூஷpக்கப்படுகின்றது' என்று தேவன் சொல்லுகின்றார் (ஏசாயா 52.5). ஆம் பிரியமானவர்களே, நாம் தேவனால் ஆளப்படவேண்டியவர்கள். தேவனே நமது இராஜா, அவரே நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்குகிறவர். அவருடைய ஆளுகையின் வட்டத்தை விட்டு, அந்நிய காரியங்களால், சத்துருவின் காரியங்களினால், உலக பிரம்மைகளால் நமது சிந்தையும், உடலும், மனமும் ஆளுகை செய்யப்படுமாகில் நம்மால் பிதாவின் நாமம் தூஷிக்கப்படும் என்பதை மறந்துவிடவேண்டாம்.


களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக்கனவீனம்பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த்  தூஷிக்கப்படுகிறதே (ரோம 2:21-24). நம்முடைய செய்கைகளும், நடக்கைகளும் கிறிஸ்துவை வெளிப்படுத்தாதிருந்தால், வேதத்திற்கு விரோதமாயிருந்தால் தூஷிக்கப்படுவது தேவனுடைய நாமமே. கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன் (கலா 6:17) என்று பவுல் சொன்னதுபோல, நாமும் வாழ்ந்துகாட்டுவோம், கிறிஸ்துவின் நாமத்தை மேன்மைப்படுத்துவோம்.


பரிசுத்தவான்களின் அடையாளம்


ஐக்கியமும், ஒருமனமும் தேவ ஜனத்தின் அடையாளங்கள். சத்துருவையும் சிநேகிக்கவேண்டும் என்பது இயேசு கற்றுக்கொடுத்த போதனை. ஆனால், இன்றைய நாட்களில் சகோதரனையும் பகைத்து வாழும் கிறிஸ்தவர்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றனர். நம்முடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது (1யோவா 1:3). அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம் (1யோவா 1:7).


இயேசு பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சீஷர்களுக்குள்ளே கலக்கம் உண்டானது. இதுவரை நம்மை நடத்திய தலைவர் சென்றுவிட்டாரே, இனி என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வியும் சீஷர்களின் மனதில் உண்டானது. சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள் (யோவா 21:3). இயேசுவின் சிலுவைப் பாடுகளின் போது சீஷர்கள் பின்மாற்றமடைந்ததோடு மாத்திரமல்லாமல், அவர்களுக்குள் இருந்த ஒருமனமும் குலைந்துபோயிற்று. இப்படிப்பட்ட நிலையில் காணப்பட்ட சீஷர்களுக்கு, தன்னை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்து அவர்களுக்குள் ஒருமனதினை உண்டாக்கினார் இயேசு.


பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும்  நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது (அப் 2:1-3). ஐக்கியமாய், ஒருமனமாய் இருந்ததினால் பிதாவின் வாக்குத்தத்தம் அவர்களில் நிறைவேறியது. பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து (மத் 5:24) என்று போதித்தாரே இயேசு. இந்த ஐக்கியத்தின் அடையாளம் நம்மிடத்தில் காணப்படட்டும், அதுவே நம்மை பிதாவின் பிள்ளைகள் என அடையாளம் காட்டும்.


பிரிந்து கிடந்த நம்மை பிதாவுடன் ஐக்கியப்படுத்தும் அடையாளமாகவே இயேசு பிறந்தார். ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார், இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் (ஏசா 7:14) என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின்படி பிறந்த இயேசு ஓர் அடையாளம். அந்த அடையாளம் நமக்காக சிலுவையில் பலியாக்கப்பட்டது, அந்த அடையாளம் மூன்றாம் நாள் உயிரோடு கூட எழுந்தது, அந்த அடையாளம் மனிதர்களின் பாவ மன்னிப்புக்குக் காரணமானது. இந்த இயேசுவின் நாமம் என்ற அடையாளத்திற்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, நாமும் அடையாளமாக மாறுவோம். இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம் (ஏசா 8:18) என்ற தீர்க்கதரிசன வார்த்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறும்.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...