புழுதியை நீக்கும் புயல்
தேவனுடைய கரங்களினால் வனையப்படுவதற்கு மாத்திரமல்ல, கறைகள் கழுவப்படுவதற்கும் நம்முடைய வாழ்க்கை ஆயத்தமாயிருக்கவேண்டும். நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் (சங். 51:7) என்பதுதானே பாவத்தில் விழுந்தெழுந்த தாவீதின் ஜெபம். வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும் (ஏசா. 1:18) என்பது அவர் நமக்குத் தரும் வாக்குறுதி அல்லவா!
பாவம், நம்மை பிதாவினிடமிருந்து பிரித்துவிடும் என்பது நிச்சயம்; 'உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது' (ஏசா. 59:2) என்று வாசிக்கின்றோமே. நாம் பாவிகளாயிருந்தபோது, 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' (யோவான் 3:16); அதுமாத்திரமல்ல, அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவான் 1:12); என்றபோதிலும், 'பிள்ளைகள்' என்ற ஸ்தானத்தை அடைந்தபின், ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப்போனால் (எபி. 6:4), நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது (2பேதுரு 2:22) என்ற நிலைக்கு நமது வாழ்க்கை மீண்டும் பாவத்தில் பிசகிப்போகுமென்றால், 'இரணவைத்தியனாக' மாறி நம்மை சுகப்படுத்தவும் அவர் விரும்புகின்றார் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்? (எரே. 8:22) என்றும், அதுமாத்திரமல்ல, இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார் (ஆமோஸ் 4:2) என்றும் வாசிக்கின்றோமே. உங்களுக்கு என்னவேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ? (1கொரி. 4:21) என்று பவுலும் கடினமாக எழுதுகின்றாரே. இந்த நிலையினையும் நாம் புரிந்துகொள்ளத் தவறுவோமென்றால், 'துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று: பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை. அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்' (எரே. 6:29,30) என்ற ஆபத்தான நிலைக்கு நம்முடைய வாழக்கை சென்றுவிடும்.
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே (எபிரெயர் 12:6-8) என்று வேதத்தில் நாம் வாசிக்கின்றோமே. எனவே, மீண்டும் நம்மை மீட்டெடுக்க அவரெடுக்கும் முயற்சிகளைப் புரிந்துகொண்டு புத்திரர்கள் என்ற ஸ்தானத்தைத் தக்கவைத்துக்கொள்ளுவோம்.
நம்முடைய வாழ்க்கையை சிதைப்பதற்கு அல்ல, மாறாக, சீர்ப்படுத்துவதற்கே சிட்சை; இதனை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. எனினும், சிட்சையைக் கண்டு நாம் சிதறி ஓடுவோமென்றால், சீக்கிரத்தில் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை ஆபத்தைச் சந்தித்துவிடும்;; இத்தகைய நிலை அடித்தளம் மற்றும் அஸ்திபாரம் அசைகின்ற மனிதர்களுடைய வாழ்க்கையில் மாத்திரமே ஏற்படும். அவரிடத்தில் இருந்து வீசும் புயல், நம்முடைய வாழ்க்கையிலிருக்கும் புழுதியை மாத்திரமே அடித்துச் செல்லும்; மாறாக, புதைகுழிக்கு நேராக நம்மை ஒருபோதும் வழிநடத்தாது.
Comments
Post a Comment