வலையில் விழுந்த
வாழ்க்கை
சத்துருவின் சதிகளை அறிந்திருந்தால் மாத்திரமே, வழிகளில் காணப்படும் குழிகளில் அவன் நிறைத்து வைத்திருக்கும் சகதிகளில் நமது கால்கள் சிக்கிக்கொள்ளாமல் நம்மைக் காத்துக்கொள்ள முடியும். நமது பாதங்களைத் திசை திருப்பி, நமது பாதையின் முழு பயணத்தையுமே தன் பக்கத்தில் வைத்துக்கொள்ளவும், அவனது விழிகளை விட்டு எங்கும் நாம் விலகிச் சென்றுவிடாதபடி, அவனது வலைக்குள்ளேயே வாழ்க்கையைத் தொடரவும் விரும்புபவன் சத்துரு. எனவே, அவன் கட்டும் கண்ணுக்குத் தெரியாத பல கட்டிடங்கள் நமக்கு மேல் கல்லறையாக எழும்பிவிடாதபடிக்கு ஒவ்வொரு நாளும் நாம் கவனமுடன் காணப்படவேண்டியது அவசியம். தேவனுடைய ராஜ்யத்தின் பணியில் தீவிரமாயிருக்கும் நம்மை தடுத்து நிறுத்தவும், உடனிருப்போராலேயே நம்மை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடவும் அவன் வகுக்கும் திட்டங்களில் நமது வாழ்க்கையும் சிக்கிவிடாதபடி காத்துக்கொள்ளவேண்டுமென்றால், நம்முடைய வாழ்க்கை வழுகும் இடங்களையும், வாழ்க்கையை வழுகச் செய்யும் மனிதர்களையும், சத்தியத்திலிருந்து சரிந்து விழும் நம் சரித்திரத்தையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
மக்களைப் பிரியப்படுத்தும் மனம்
மக்களைப் பிரியப்படுத்தவேண்டும் என்ற மனநிலை நம்மிலே மிகுந்து காணப்படுமென்றால், நம்முடைய வாழ்க்கை வலைக்குள் சிக்கிக்கொள்ள அதுவே காரணமானதோர் பாதையாக அமைந்துவிடும். ஏரோது ராஜாவாக சிங்காசனத்தில் வீற்றிருந்தவன். ஜனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும், ஜனங்களைப் பாதுகாக்கவேண்டும், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை அனுதினம் விசாரிக்கவேண்டும் என்ற உயர்ந்த ஸ்தானத்தில் வீற்றிருந்தவன்; என்றபோதிலும், ராஜாவாக வீற்றிருந்த ஏரோது, மக்களைப் பிரியப்படுத்தும் காரியங்களைச் செய்ய முதலிடம் கொடுத்தபோது, அவனது மனம் ஸ்தானத்திற்கடுத்த காரியங்களிலிருந்து பிசகி, பிசாசின் வழிகளில் பயணிக்கத் தொடங்கியது. சவுலைப் போல (1 கொரி. 15:9; கலா. 1:13; பிலி. 3:6) சபையைத் துன்பப்படுத்தத் தொடங்கினான் ஏரோது; மற்றும், யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபையும் பட்டயத்தினாலே கொலை செய்தான் அவன். அதுமாத்திரமல்ல, யாக்கோபை கொலை செய்தது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று கண்டு, பேதுருவையும் பின்தொடர்ந்தான் ஏரோது (அப். 12:1-3). தேவனுக்கு விரோதமாக வாழ்ந்து, மனிதர்களைப் பிரியப்படுத்தவேண்டும் என்று விரும்பிய ஏரோது, தேவனாலேயே அடிக்கப்பட்டு மரித்துபோனானே. கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான் (அப் 12:23) என்றுதானே அவனது முடிவைக் குறித்து வேதத்தில் வாசிக்கின்றோம்.
மனிதர்களைப் பிரியப்படுத்தவேண்டும் என்ற மனநிலை பிரதானமானதாக நம்மில் மேலோங்கி நிற்குமென்றால், நம்முடைய பாதங்கள் பாதையிலிருந்து பிசகிவிடும்; தேவனுக்கடுத்த காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். 'யூதருக்குப் பிரியமாயிருக்கிறது' என்று ஏரோது நினைத்ததைப் போல, 'நண்பர்களுக்குப் பிரியமாயிருக்கிறது' என்றும் 'உடனிருப்பவர்களுக்குப் பிரியமாயிருக்கிறது' என்றும் ஏரோதுவைப் போல மேலும் மேலும் தவறுகளைச் செய்ய அது நம்மைத் தூண்டிவிடும். நம்முடைய அதிகாரத்தின் பெலன் அனைத்தையும் துர்ப்பிரயோகத்திற்கு நேராக திசை திருப்பிவிடும். வைக்கப்பட்டிருக்கும் ஸ்தானத்தை மறந்து, மதி மழுங்கின நிலைக்குள் அது நம்மைத் தள்ளிவிடும். செய்யவேண்டும் என்று நமக்குக் குறிக்கப்பட்ட அல்லது முன் வைக்கப்பட்டிருக்கின்ற வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு, பிழைகளைச் செய்யும்படியாக நம்மை பின்தொடரப்பண்ணிவிடும். மனிதர்களைப் பிரியப்படுத்தவேண்டும், மனிதர்களுடைய மனதுக்கு இதமானவர்களாகவும் பிரியமானவர்களாகவும் நடந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பத்தில், அழைப்பினை விட்டே விலகி வாழ்ந்துகொண்டிருக்கும் ஊழியர்களும் உண்டல்லவா.
இதனைத்தானே அப்போஸ்தலனாகிய பவுல், 'நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே' (கலா 1:10) என்று தெளிவாக எழுதுகின்றார். மனிதர்களுக்குப் பிரியமாயிருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, தேவனிடத்தில் ஜெபிப்பதற்குப் பதிலாக மனிதர்களுடைய காதுகள் கேட்கிறது என்ற சிந்தையில் மனிதர்களிடத்தில் ஜெபித்துவிட்டு வருகிற மனிதர்கள் உண்டு; அவ்வாறே, தேவனுடைய வாயாக செயல்படவேண்டியவர்கள், தேவனுடைய செய்தியை ஜனங்களுக்குக் கொண்டுவரவேண்டியவர்கள், தேவனை மறந்து ஜனங்களை மனதில் நிறுத்தி, ஜனங்களுக்கு ஏற்ற பிரசங்கங்களையும், வார்த்தைகளையும் பேசிவிட்டு, ஜனங்களுக்கு முன் வீரர்களாகவும், தேவனுக்கு முன்பாகவோ வெறுங்கையர்களாகவும் நடைபோடுகின்ற மனிதர்களும் உண்டு.
மனிதர்களைப் பிரியப்படுத்தவேண்டும் என்ற மனநிலைக்குள் சிக்கியிருக்கும் மனிதர்கள், மனிதர்கள் தங்களை உற்சாகப்படுத்தவேண்டும் என்ற மனநிலைக்குள்ளாகவும் தங்களையறிமால் தாங்களே சிக்கியிருப்பார்கள் என்பது நிச்சயம். தேவனிடத்திலிருந்து அல்ல, தங்களைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களிடத்திலிருந்தே இவர்களது மனம் பாராட்டுதல்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும். தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும், காரியங்கள் அனைத்திற்கும் இந்த பூமியிலேயே பிரதிபலனை எதிர்பார்ப்பவர்களாகவே அவர்கள் காத்துக்கிடப்பார்கள். கடலிலே ஆத்துமாக்களாகிய மீன்களைப் பிடிக்கவேண்டிய ஊழியர்களாகிய இவர்கள், மீன்களினால் மீண்டும் கடல் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்படும் மனிதர்கள் இவர்கள். வேதம் காட்டும் வழியில் அல்ல, மனிதர்கள் காட்டும் வழியிலேயே தங்கள் விழிகளைப் பதித்திருப்பவர்கள் இவர்கள்.
நாம் செய்யும் தவறுகளைச் துணிந்து நேருக்கு நேராய் நின்று சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, மேலும் மேலும் தவறுகளையே செய்யும்படியாகவும், தவறான பாதைகளிலேயே தொடர்ந்து செல்லும்படியாகவும் நம்மை உற்சாகப்படுத்தும் மனிதர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டியது அவசியம். இல்லையெனில், அந்த உறவுகள் நம்மை தேவனுக்கு எதிரிகளாக மாற்றிவிடுவது நிச்சயம். எப்போதுமே நம் செய்யும் காரியங்களுக்கு 'ஜால்ரா' போடுகிறவர்களைக் குறித்தும், இசைந்து செல்பவர்களைக் குறித்தும், வளைந்து கொடுப்பவர்களைக் குறித்தும் நாம் கவனமாயிருக்கவேண்டும். ஏனெனில், சத்தியத்தின் பாதையில் நடந்துகொண்டிருக்கும் நம்மை வழிவிலகச் செய்யும் சத்துருவின் ஆவி அவர்களை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடும்.
ஒருவனை ஏற்றுக்கொள்ளாத மனம்
மேலும், யாரை நம்முடைய பட்சத்தில் வைத்துக்கொள்ளுகின்றோம், யாருடைய பட்சத்தில் நாம் சேர்ந்து நிற்கின்றோம் என்ற தீர்மானம், நம்மை தேவனுக்கு எதிரியாகவோ அல்லது தேவனுக்கு பிரியமாகவோ மாற்றிவிடக்கூடியது. இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப், கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராக யுத்தத்திற்கு எத்தனித்தபோது, யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: 'கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகிறீரா?' என்று கேட்டான். அதற்கு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பிரதியுத்தரமாக, 'நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன்' என்று மாறுத்தரம் அளித்தான் (2 நாளா. 18:3). ராமோத்துக்கு எதிராக யுத்தத்திற்குச் செல்லவேண்டும் என்ற தன்னுடைய மனவிருப்பத்தை நிறைவேற்ற ஆகாப் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாலும், நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச் செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று தனக்குச் சாதகமான தீர்க்கதரிசிகளிடத்தில் கேட்கின்றான். அந்த தீர்க்கதரிசிகள் தேவன் பக்கத்தில் நிற்பவர்கள் அல்ல; மாறாக, ராஜாவாகிய ஆகாபின் பக்கத்தில் நிற்பவர்கள். அதற்கு அவர்கள்: போம், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்று பதிலளித்தார்கள் (2 நாளா 18:5). இந்த தீர்க்கதரிசிகளின் பதில் ராஜாவாகிய ஆகாபின் மனதிற்கு ஏற்றதாகவே காணப்பட்டது; ராஜா எதிர்பார்த்ததும் அதுவே.
சண்டைக்குச் செல்ல சாதகமான பதில் கிடைத்துவிட்டது என்று அவனது மனம் சம்மதம் தெரிவித்துக்கொண்டிருந்த நேரத்தில், யூதாவின் ராஜாவாகிய யோசபாத் ஆகாபை நோக்கி, 'நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா?' என்று கேட்கிறான் (2 நாளா 18:6). அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான் (2 நாளா 18:7).
யோசபாத் கூறும் வார்த்தைகளை நாம் சற்று உற்றுக் கவனிக்கவேண்டியது அவசியம். ஏற்கனவே, நானூறு தீர்க்கதரிசிகள் வந்து ஆகாபிற்கு முன்பாக, ஆகாபிற்குச் சாதகமாக தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய தீர்க்கதரிசனங்களிளெல்லாம் திருப்தியடையாத யூதாவின் ராஜாவாகிய யோசபாத், 'இவர்களையல்லாமல், கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா?' (2 நாளா. 18:6) என்று கேட்கிறான். அப்படியென்றால், முன்பு வந்த நானூறு பேர் யார்? நாமும் சில நேரங்களில், நம்முடைய திட்டத்தினை நிறைவேற்ற, நம்முடைய மனதைத் திருப்திப்படுத்தும் மனிதர்களையும், நமக்குச் சாதகமானவைகளையே பேசும் மனிதர்களையுமே தேடி நாடுகின்றோம்; அவர்களை மட்டுமே அழைத்து பேசுகின்றோம். தேவனுக்கு விரோதமான திட்டங்களிலும் நமக்கு சம்மதம் தெரிவிக்கும் மனிதர்கள் நம்மை சவப்பெட்டிக்குள்ளேயே வைக்கின்றார்கள் என்பதுதான் உண்மை; அத்தகைய மரணத்திற்கு நம்முடைய வாழ்க்கையை விலக்கிக் காத்துக்கொள்ளுவோம்.
நானூறு பேருடைய வார்த்தைகளைக் கேட்டு யுத்தத்திற்குச் சென்ற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யுத்தத்திலேயே மரித்துப்போனானே. ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலே பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான். அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியருக்கு எதிராக இரதத்தில் சாயங்காலமட்டும் நின்றிருந்து, சூரியன் அஸ்தமிக்கும்போது இறந்துபோனான் (2 நாளா 18:33,34) என்று வாசிக்கின்றோமே. பிரியமானவர்களே! நம்மோடு கூட இருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகமானதாயிருக்கலாம், நமக்குச் சாதகமாக அவர்கள் பேசலாம், நமக்குப் பிரியமானவைகளையே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கலாம்; என்றபோதிலும், அவர்கள் தேவனால் அனுப்பப்பட்டவர்களா? என்ற கேள்விக்கு விடை 'இல்லை' என்று இருக்குமானால், 'அது நம்முடைய உயிருக்கே உலை வைத்துவிடும்' என்பதே உண்மை. இத்தகைய கூட்டத்தினருக்கு நம்மால் பலன் உண்டாகலாம், ஆனால் அவர்களோ அனுதினமும் நமக்கு படுகுழியைத்தான் தோண்டிக்கொண்டிருப்பார்கள்; எனவே, எச்சரிக்கையாயிருப்போம்.
முதியோரைத் தள்ளிவிடும் மனம்
அதுமாத்திரமல்ல, யாரை நாம் சார்ந்து நிற்கின்றோம் என்ற தீர்மானம் நம்மை சரிந்துவிழச் செய்யவும் போதுமானது. சாலொமோன் மரித்தபோது, ஜனங்கள் சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமை நோக்கி, உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் (1இரா 12:4) என்று சொன்னபோது, ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.
என்றபோதிலும், ரெகொபெயாமோ முதமியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையினைத் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனை பண்ணினான். (1 இரா. 12:6-8). வாலிபர்கள் தனக்குச் சொன்ன வார்த்தைகள் விளைவிக்கப்போகும் விபரீதத்தை அறிந்துகொள்ளாமலும், உணர்ந்துகொள்ளாமலும், அதனையே ஜனங்களுக்கு அறிவித்தான். விளைவு, நாடு இரண்டானது; தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள் (1இரா 12:16).
நாமும், ரெகொபெயாமைப் போன்ற தவறுகளைச் செய்து, ராஜ்யத்தை இரண்டாக்கிவிடக்கூடாதே. முதியோர்களை, தேவனுடைய பட்சத்தில் நிற்கும் மனிதர்களை ஓரந்தள்ளிவிட்டு, உடனிருப்போரின் உதடுகளில் பிறக்கும் வார்த்தைகளினால் உடன்கட்டை ஏறிவிடக்கூடாதே. இத்தகைய ஆபத்திலிருந்து கர்த்தர் நம்மைக் காப்பாராக, ஆமேன்.
Comments
Post a Comment