Skip to main content

சத்துருவின் சகாதரன்

சத்துருவின் சகாதரன்

 

தேவைகளுக்காக மாத்திரமே தேவனது பாதத்தில் தவம் கிடப்பதல்ல, வாழ்க்கையில் அவரை தக்கவைத்துக்கொள்வது எப்படி என்பதிலும் ஒவ்வொரு நாளும் நாம் தடம்புரளாதிருக்கவேண்டும். அசந்து நிற்கும் நேரத்தில் கூட கசந்துவிடும் திராட்சைப் பழங்களாக (ஏசா. 5:1) நமது வாழ்க்கையை சத்துரு மாற்றிவிடுவான். பாதை பிசகி நடப்போமென்றால், பாதங்கள் சத்துருவின் கைகளால் கறைபட்டுவிடும்; சத்துருவின் சகோதரர்களாக வேரூன்றி வளர்ந்துவிட்டல், சத்தியம் அதுதான் என்றும், நிற்கிற இடம் சரிதான் என்றும் வாதிடுமளவிற்கு சத்துருவின் வளையத்திற்குள் வாழ்க்கை விலங்கிடப்பட்டுவிடும். இலக்கை தன்வசம் இழுக்க சத்துரு செய்யும் முயற்சிகளை நாம் முறித்துப்போடவேண்டும். ஆண்டவரை அறியாதவர்கள் அவரை வைத்துக்கொள்ளும் அறிவில்லாதவர்களாக இருக்கலாம்; ஆனால், அவரை அறிந்தவர்களும், பிதாவென்றும் பிள்ளைகளென்றும் உறவுகொண்டாடுபவர்களும் அவரை வைத்துக்கொள்ளத் தெரியாமலிருந்தால் வாழ்க்கை பறிபோய்விடுமே. நெருப்பு இருக்கும் இடத்தில் வெடிமருந்தைக் கொண்டுவந்து வைத்தால் என்னவாகுமோ, அப்படியே தேவனுக்குப் பிரியமற்றவைகளை நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவந்து வைத்து நமது வாழ்க்கையினைச் சின்னாபின்னமாக்க அவன் செய்யும் திட்டங்களை தீர்க்கமாகக் கண்டறிந்துகொண்டால் விழுந்துவிடாமல் முன்னேறிச் செல்லலாம்.

திரும்பிப் பார்த்த தீர்க்கதரிசி

பிலேயாம் தீர்க்கதரிசி; கர்த்தரோடு பேசும் பெலம் பெற்றிருந்தவன்; கர்த்தருடைய வார்த்தையை ஜனங்களுக்குக் கூறிவந்தவன். என்றாலும், மோவாபிய ராஜாவாகிய பாலாக் பிலேயாமை குறி சொல்லுகிறவனைப்போல பார்த்தான். மோவாபின் மூப்பரும், மீதியானின் மூப்பரும் குறிசொல்லுதற்குறிய கூலியை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமினிடத்திற்குப் போனார்கள் (எண். 22:7). தேவனை அறியாதவர்களின் கண்களுக்கு தேவ ஊழியர்கள் இப்படித்தான் தென்படுகிறார்கள். தேவன் ஆபிரகாமினிடத்தில், 'உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்' (ஆதி. 12:3) என்று சொன்னார்; இதனை அறிந்திருந்த பிலேயாமும் 'உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிப்கப்பட்டவன்' (எண் 24:9) என்று கூறுகிறான். ஆபிரகாமுக்கும், பிலேயாமுக்கும் இருந்த இந்த அறிவு, மோவாபிய மற்றும் மீதியானிய ராஜாக்களுக்கும் மூப்பர்களுக்கும் இல்லை; பிலேயாமை அவர்கள் சந்தபோது, 'நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம்' என்று சொல்லுகிறான் (எண் 22:6). தேவன், தேவ ஊழியன், தேவஜனம், தேவஜனத்தின் விரோதிகள் என இந்த நான்கு பேரையும் உள்ளடக்கிச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தில், 'நீர்' 'நான்' 'விரோதி' என்பவைகளை மாத்திரமே உச்சரிக்கின்றனர்; தேவனுக்கும், தேவஜனத்திற்கும் இடமில்லை. தேவனையும் தேவஜனத்தையும் விட்டு விலகி நிற்கும் இவர்களோ, தேவ ஊழியனாகிய பிலேயாமை தங்கள் வசமாககச் சேர்த்துக்கொள்ள அவனைத் தேடி வருகின்றனர்.

இத்தகைய மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ளாத தீர்க்கதரிசியாகிய பிலேயாம், 'இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்' (எண். 22:8) என்று அவர்களை தன்னுடைய வீட்டிலே ஏற்றுக்கொண்டான். தேவன் பிலேயாமிடத்தில் வந்து, 'உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார்?' (எண். 22:9) என்று கேட்டபோதிலும், இரண்டாவது முறையாக அவர்கள் வந்தபோது, 'இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள்' (எண். 22:19) என்று மீண்டும் அவர்களைத் தங்கவைத்தான். 'நான் உங்களோடே கூட வருகிறதற்கு கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார்' (எண். 22:13) என்றும் அவர்களிடத்தில் சொல்லியனுப்பியிருந்தபோதிலும், 'என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன? ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம்பண்ணமாட்டேனோ?' (எண். 22:37) என்ற வார்த்தைகளில் பிலேயாமை விழவைத்தான். கர்த்தருடைய பட்டயத்திற்கு நேராக நம்மை பயணிக்கவைக்கிற எதிரியின் பந்தயப் பொருளையோ வெகுமதியையோ பரிசாக எண்ணி புறப்படாதிருப்போம்; வழியிலே நிச்சயம் கர்த்தரையே நாம் எதிரியாகச் சந்திக்கநேரிடும். அப்படி விழுந்துவிட்டால், மறுநாள் காலமே பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய மேடுகளில் ஏறப்பண்ணியதைப் போல (எண் 22:41) நம்முடைய பாதங்களையும் சத்துருவின் மேடுகளில் ஏறச்செய்துவிடுவான். மலையின்மேல் அழகாயிருக்கவேண்டிய நமது பாதங்கள் (ஏசாயா 52.7), மலைகளின் மேல் அருவருப்பான இடங்களில் நின்றுகொண்டிருக்கக் கூடாது.

இன்றைய நாட்களிலும், தங்களிடத்திலுள்ள பாவங்களையோ, தேவனுக்கு விரோதமான பாதைகளையோ வெளிக்காட்டிக்கொள்ளாமல், தேவ ஊழியர்களை மாத்திரம் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள விரும்பும் மக்கள் அநேகர் உண்டு. இவர்களை விதவிதமான போலியான திட்டங்களில் சத்துரு சிக்கவைப்பது தொடர்ந்துகொண்டிருக்கின்றது. தன் வீட்டிலுள்ள பெரிய மனிதர்களை ஊழியர்களிடத்தில் அனுப்பி, ஊழியர்களை மிகவும் கனம்பண்ணி எப்படியாவது ஊழியர்களை தங்கள் வீடுகளில் கொண்டுவந்து நிறுத்தி, ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள நினைப்பவர்கள் உண்டு. மாயவித்தைக்காரனாகிய சீமான், தேவனுடைய வரத்தையும் பெற்றுக்கொள்ள விரும்பிய போது, பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது (அப் 8:20) என்று சொன்னதுபோல, பாவங்களைச் சுட்டிக்காட்டும் பிரதானமான குணம் நமக்குத் தேவையே.

பேதுரு மற்றும் கொர்நெலியுவின் தரிசனங்களும், பயணங்களும் நமக்கு நல்லதோர் பாடம். கர்த்தர் கொர்நெலியுவை நோக்கி, 'நீ யோப்பா பட்டணத்திற்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி' (அப். 10:5) என்று சொன்னபோது, அப்போஸ்தலனாகிய சீமோன் பேதுரு தோல் பதனிடுகிற சீமோனின் வீட்டில் தங்கியிருந்தான். சரியான நபர்கள் ஒருவரையொருவர் சந்திக்கவேண்டும் என்பதில் தேவன் எத்தனை தெளிவாக இருக்கிறார் என்று பாருங்கள். சீமோனின் வீட்டில் சீமோன் பேதுரு தங்கியிருக்கும்போது, கொர்நெலியுவின் மனிதர்கள் சென்று, சீமோன் இருக்கிறாரா? என்று கேட்டால், வீட்டுக்காரனாகிய சீமோனைத்தான் அவர்கள் பார்த்திருப்பார்கள். தோல்பதனிடுகிறவனாகிய அந்த சீமோனை அழைத்துக்கொண்டு நொர்நெலியுவின் வீட்டிற்கு வந்திருந்தால் என்னவாகியிருக்கும்? கொர்நெலியுவுக்கும் என்ன நடக்கிறது என்று புரிந்திருக்காது, தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுக்கும் என்ன நடக்கிறது என்பது புரிந்திருக்காது, தேவ திட்டமும் கொர்நெலியுவின் வீட்டில் நிறைவேறியிருக்காது, கொர்நெலியுவும் அவனது வீட்டாரும் அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ந்திருக்கமாட்டார்கள். சரியானவர்கள் சந்திக்கவேண்டும் என்பதில் தேவன் எத்தனை குறியாக இருக்கிறார். எனவே, 'பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி' என்று சொல்லுகின்றார். நம்மை வட்டமிடும் நபர்கள் அல்ல தேவன் திட்டமிடும் நபர்கள் சந்திக்கப்படவேண்டும்.

பிரியமானவர்களே, தங்கள் சுயவிருப்பத்தினை நிறைவேற்ற தேவனுக்கு விரோதமாக நம்மை பயணிக்கச் செய்யும் மக்களுக்கு எச்சரிக்கையாயிருப்போம். உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அப்பம் புசித்து தண்ணீர் குடிக்க உன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான்' என்று கிழவனான தீர்க்கதரிசி பொய் சொன்னபோது (1இராஜா. 13:18) தேவனுடைய மனுஷன் ஏமாந்துவிட்டான், அவனுடைய வீட்டிற்கும் சென்றான்; விளைவு கர்த்தருடைய ஊழியத்தை செய்து முடித்துவிட்டு வரும்போதே வழியில் உயிரை விடவேண்டிய நிலை உருவாகிற்று.

யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக (எண் 23:10) என்று பிலேயாம் விருப்பப்பட்டபோதிலும், மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்கள் கொன்றுபோடப்பட்டபோது, பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள் (எண் 31:8). மீதியானியர்களோடு பிலேயாம் கலந்து இருந்ததைத்தானே இந்த மரணம் வெளிக்காட்டுகின்றது. 'உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்று பாலாக் சொன்னபோது, பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன்' (எண் 24:11,12) என்று பாலாக்கும் பிலேயாமும் பேசிக்கொண்டதாக வேதத்தின் நாம் வாசித்தபோதிலும், 'விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்தவன் பிலேயாமே' (வெளி. 2:14; எண். 31:16)) என்றும், 'என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்' (மீகா 6:5) என்றும் நாகமானுக்குப் பின் ஓடிய கேயாசியைக் குறித்து எழுதப்பட்டிருப்பது போல பாலாக்கிற்குப் பின் ஓடிய பிலேயாமையும் வேதம் அடையாளம் காட்டிக்கொடுத்துவிட்டதே.

'இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்' (எண். 24:1) என்ற நிலையிலிருந்த ஜனங்களை, காண்டாமிருகத்திற்கொத்த பெலத்தோடிருந்த அவர்களை (எண். 24:8) பார்த்து பயந்துபோன மோவாபின் ராஜாவாகிய பாலாக், பிலேயாமின் ஆலோசனையினாலேயே மோவாபிய குமாரத்திகளை தேவஜனத்திற்குள் ஊடுருவச் செய்தான். அவனது செய்கையினால், இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள் (எண் 25:1), மோவாபிய தேவர்களுக்கு இட்ட பலிகளைப் புசித்தார்கள், மோவாபிய தேவர்களைப் பணிந்துகொண்டார்கள் (எண். 25:2), பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; விளைவு, இஸ்ரவேலர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது (எண். 25:3).

கர்த்தருடைய ஊழியர்களாயிருப்போமென்றால், முன்னே என்ன பேசுகிறோம், பின்னிட்டு எங்கே ஓடுகிறோம் என்பதில் கவனமாயிருப்போம்; இவ்விரண்டும் கர்த்தர் அறிபவை, பின்வரும் சந்ததிக்கும் அறிவிக்கும் அளவிற்கு நம்மைக் குறித்து சரித்திரங்களாக அவைகள் எழுதப்படும் முன்னால், இன்றே எச்சரிக்கையோடு வாழவேண்டியது அவசியம். கர்த்தரை விட்டு விலகிச் சென்ற சிம்சோனின் மரணம் பெலிஸ்தியரோடு கூட நடந்துவிட்டதுபோல நம்முடைய நிலையும் மாறிவிடக்கூடாது.

இரண்டையும் கலந்தால் தேவஜனத்திற்கு கட்டாயம் இழப்பு உண்டு என்பதை அறிந்து, தேவஜனங்களை அழிக்க அன்று பிலேயாம் ஆலோசனை கொடுத்ததுபோலவே, இன்றும் ஊழியர்கள் என்ற போர்வையில் சத்துருவின் வசத்தில் இருக்கும் சிலரைக் கொண்டு தேவனுக்கு விரோதமானவைகளை தேவஜனத்தின் மத்தியில் சத்துரு நுழைத்துக்கொண்டிருக்கிறான்; இதனால் பலியாகும் தேவஜனங்களின் எண்ணிக்கையோ ஏராளம் ஏராளம். சத்துரு உள்ளே நுழைக்கும் காரியங்களுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டியது நமது பொறுப்பல்லவோ. இரண்டையும் சேர்த்தால் நாம் இடிந்துபோய்விடுவோம் என்பது சத்துருவுக்கு நன்றாகத் தெரியும். பிலேயாமைப் போல தேவனையும், பேயோரின் குணங்களையும் ஒன்றாக வைத்துக்கொண்டு வாழுவது அவனைப் போன்ற முடிவையே நம்முடைய வாழ்க்கையிலும் உண்டாக்கிவிடும். தேவன் உபயோகிக்கும் பாத்திரமாகிய நாம், தேவையற்ற இடங்களில் இருப்போமென்றால், தேவனற்றவர்களாக மாறிவிடுவோம். சத்துருவின் சதிகளோடு ஒத்துப்போய்விட்ட பலர் தேவனுக்குத் தொண்டு செய்பவர்களைப் போலவே கண்களுக்குத் தென்பட்டாலும், அவர்களைக் கொண்டு தேவஜனத்தை தொலைத்துக்கட்டவே சத்துரு திட்டம் தீட்டுகிறான் என்பது பிலேயாமின் வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடம்.

குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம் பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே? என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள். (மல் 1:6)

பிரியமானவர்களே, எதினாலே தேவனை நாம் அசட்டைபண்ணிக்கொண்டிருக்கிறோம் என்ற அறிவே இல்லாதபடி வாழ்ந்துகொண்டிருப்பது ஆபத்துக்கானது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் இப்படித்தான் வாழவேண்டும் என்று வேதம் வரையறுத்துக்கொடுத்திருக்கும் சட்டங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் கண்டபடி வாழ்வது ஆவிக்குரிய கண்களை ஒருநாள் குருடாக்கிவிடும், ஆவிக்குரிய வாழ்க்கையினையே இருளடையச் செய்துவிடும். பிதா படைத் தலைவராயிருப்பாரென்றால், படையிலிருக்கும் நாம் நமது உடையையோ நடையையோ இஷ்டத்திற்கு மாற்றிக்கொள்ள இயலாது? அப்படி மாற்றிக்கொண்டால், வெற்றிபெறும் கர்த்தரின் சேனையிலிருந்து

தூக்கியெறியப்பட்டு, தூற்றுக் கூடையில் மாட்டிக்கொள்வோமல்லவோ. தேவன் நம்மை வைத்துக்கொள்ளவேண்டுமென்றால், தேவனை வைத்துக்கொள்ள நமக்கும் தெரிந்திருக்கவேண்டும். அங்கும் இங்கும் வாழுவது அஸ்திபாரத்திற்கே ஆபத்தானது. 'நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்' (வெளி 3:16) என்று அவரே சொல்லியிருக்கின்றாரே. இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான் (லூக். 16:13) என்ற வார்த்தையின்படி, மற்றொரு எஜமானையும் நீங்கள் வாழ்க்கையில் அனுமதிப்பீர்களென்றால் சீக்கிரத்தில் அந்த எஜமான் கர்த்தரைப் பகைத்து, கர்த்தரை அசட்டைபண்ணும் நிலைக்குள் உங்களைத் தள்ளிவிடுவான்.

தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே (2கொரி 6:16) 'அசுத்தமானதைத் தொடாதிருங்கள், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன்; நீங்கள் என் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்ககள்' (2கொரி. 6:17,18) என்று கர்த்தர் சொல்லும் ஆலோசனைக்குச் செவிகொடுத்து ஆபத்தில் சிக்கிக்கொள்ளாது நமது வாழ்க்கையினைக் காத்துக்கொள்ளுவோம். சத்துருவின் சகோதரனாக மாறி, சத்தியத்தை விட்டு விலகிவிடாதபடி நம்மைக் காத்துக்கொள்ளுவோம்.

அணைந்துபோன ஆசாரியனின் வீடு

தேவனுக்காக எரிந்துகொண்டிருக்கும் நாமும் நமது சந்ததியும் அணைந்துவிடக்கூடாது. ஆசாரியனாயிருந்த ஏலி வயது சென்றவனாக இருந்தபோது, தகப்பனுக்குப் பின் ஆசாரியப் பணியினைத் தொடரவேண்டிய ஏலியின் குமாரர்களோ கர்த்தரை விட்டுத் தூரமாக நின்றுகொண்டிருந்தார்கள்; பார்க்கக்கூடாதபடிக்கு ஏலியின் கண்களும் இருளடைந்திருந்தது. கர்த்தருடைய வசனமும் தரிசனமும் அபூர்வமாயிருந்தது. இஸ்ரவேலருக்கும் பெலிஸ்தியருக்கும் யுத்தம் உண்டானபோது, எதிரியுடன் போரிட எஞ்ஜியிருப்பது தேவனுடைய பெட்டி மாதத்திரமே என்பதை அறிந்த ஜனங்கள், அதனையும் தூக்கிக்கொண்டு வந்தபோது, பெட்டியும் பெலிஸ்தியர்களிடம் பிடிபட்டுப்போனது; ஆசாரியனுடைய வீடு இருளடடையத் தொடங்கியதால், அது ஆலயத்திலும் பிரதிபலித்தது. இஸ்ரவேலர் முறியடிக்கப்பட்டார்கள், ஏலியும் செத்துப்போனான், ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் மாண்டார்கள் (1சாமு. 4:11), மருமகளும் மரணமடைந்தாள், மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று (1சாமு. 4:21) ஆசாரியனுடைய வீடு அணைந்துபோனது. அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் (1சாமு 3:13) என்ற கோபம் பலித்தது.

ஆசாரியனுடைய பிள்ளைகள் என்று பிறந்துவிட்டதினால், தேவாலயத்தின் அத்தனை உரிமையும் எங்களுக்குத்தான் என்ற மனப்போக்கில் வாழ்ந்துகொண்டிருந்த ஏலியின் வீட்டை கர்த்தர் அணைத்துவிட்டார்; ஆசாரியனுடைய வீடு அணைந்து கிடந்த இந்தச் சூழ்நிலையில், தேவனுடைய ஆலயத்தில் ஒளிகொடுத்துக்கொண்டிருந்த தேவனுடைய விளக்கின் அண்டையில் (1சாமு. 3:1-3) படுத்துக்கொண்டிருந்த சாமுவேலை இஸ்ரவேலுக்கெல்லாம் தீர்க்கதரிசியாக எரியச் செய்ய கர்த்தர் ஆயத்தமாக்கினார். இக்காலத்திலும், ஊழியத் தலைவர்கள் பலர் தரிசனமற்ற தங்கள் பிள்ளைகளிடத்தில் ஊழியங்களை வலுக்கட்டாயமாகத் திணித்துவிடுகின்றனர். தேவனது சிந்தையிலிருக்கும் சிறந்தவர்களிடம் கொடுக்க மறுக்கின்றனர். ஆசாரியனுக்குப் பிறந்தவன் மட்டும் ஆசாரியனல்ல, எல்லோரும் ஆசாரியர்களே என்பதை உணராதிருக்கின்றனர். ஊழியங்கள் என்பது வாரிசு என்ற பெயரில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய பரிசு அல்ல, சொந்தங்களுக்கு மட்டுமே போய்ச் சேரவேண்டிய சொத்துக்களும் அல்ல; அது கர்த்தருடையது. அவரை அறியாதவர்களிடம் அது ஒப்புக்கொடுக்கப்படுமாயின் நிச்சயம் அதனை இருள் கவ்விப் பிடிக்கத் தொடங்கும், தேவனுடைய ஊழியத்தைச் செய்கிற நமக்கு இது ஓர் எச்சரிப்பு? தேவனுக்கு விரோதமாக நடப்போமென்றால், நமது குடும்பத்தை அணைந்துவிட்டு அடுத்தவரிடத்தில் அனைத்தையும் கொடுத்துவிடுவார் என்பது திண்ணம். தகப்பனுக்குப் பின் ஊழியத்தை நடத்திச் செல்லவிருக்கும் போதகர்களின் பிள்ளைகளுக்கோ அல்லது ஸ்தாபன தலைவர்களின் பிள்ளைகளுக்கோ இது இது தக்க பாடம் அல்லவா. சவுக்கை எடுத்து ஆண்டவரே வெளியே விரட்டிவிடும் சந்ததியாராக நம்முடைய சந்ததியினர் காணப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...