வசனமும் வாழ்வும்
வசனம் வாழ்க்கையில் நுழைந்துவிடாமலும், வசனத்திற்குள் வாழ்க்கை நுழைந்துவிடாமலும் ஒவ்வொரு நாளும் மனிதர்களோடு சத்துரு போராடிக்கொண்டிருப்பதுடன், உலகமும் தன்னை கடினமாக்கி வேர்விடாதபடிக்கு மனுக்குலத்தை எதிர்த்தே நிற்கின்றது. வசனத்திற்கு விரோதமான இப்போரில் வசனத்தைக் கொண்டே நாம் வெற்றிபெறவேண்டும்.
வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான் (லூக். 8:12). கேட்பதற்கு மனிதர்களை அனுமதித்துவிடுகின்றான்; என்றபோதிலும், இருதயத்தில் விழுந்துவிட்ட வசனம் வேர்விட முயற்சிக்கும் முன்னதாகவே இருதயத்திலிருந்து எடுத்துப்போட்டுவிடுகின்றான். இரட்சிப்பிற்கேற்ற உபதேசங்களை பலமுறை கேட்டும் பாதாளைத்தை நோக்கியே இன்னும் பலர் பயணப்பட்டுக்கொண்டிருப்பதன் காரணம், வசனத்தை உணராததே. இரட்சிப்பைக் குறித்து மாத்திரமல்ல, தாழ்மை, மன்னிப்பு, பெருமை, பொறாமை, பொறுமை, இரக்கம், சமாதானம், சத்துருவே சிநேகிப்பது போன்ற பல பிரசங்கங்களை கேட்பதற்கு நம்மை அனுமதித்துவிடுகின்றான்; ஆனால், கீழ்ப்படிவதற்குள் அவைகளை பொறுக்கிவிடுகின்றான். எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும் (நீதி. 4:23) என்ற வசனத்தின்படி, வசனம் விழுந்த இருதயத்தை வேலியடைத்துக் காத்துக்கொண்டால் மாத்திரமே இரட்சிப்பின் விளைச்சல் சாத்தியம்.
இரண்டாவதாக, உலகத்தினால் உண்டாகும் தடையினை மேற்கொள்ளவும் நமக்கு பெலன் வேண்டும். கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக் காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள் (லூக். 8:13).
என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? (எரே. 23:29). இத்தகைய கர்த்தருடைய வசனத்தின் மேல் நாம் விசுவாசம் கொள்ளுவோமென்றால், மலைகளோ, குன்றுகளோ, பர்வதங்களோ நாம் வேர்விடுவததைத் தடுத்துநிறுத்திவிட முடியாது. கட்டடங்களிலும், மலைகளையும்கூட விரிசலை உண்டுபண்ணும் மரங்களின் வேர்களை வீதிகளிலே நாம் பார்க்கவில்லையோ? இயற்கையின் பெலமே இப்படியிருக்க, இயற்கைக்கு உருகொடுத்த இறைவனால் மலைகளை உடைக்க இயலாதோ! 'கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று' (சங். 97:5) என்று சங்கீதக்காரனும் பாடுகின்றானே. வசனத்தின் மேல் உள்ள விசுவாசம், 'பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும், மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிற பிரகாரம்' (லூக். 3:4,5) என்ற வசனத்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறச் செய்யும்.
மூன்றாவதாக, நம்மோடு கூட சேர்ந்து வளரும் காரியங்கள் களைகளாக மாத்திரமல்ல, நம்மையே கனிகொடாதவர்களாகவும்மாற்றிவிடக்கூடும். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள் (லூக். 8:14). தேவனுடைய ராஜ்யத்திற்கடுத்தவைகளைக் குறித்துச் சிந்தியாமல், உலகத்திற்கடுத்த காரியங்களோடும், ஆசீர்வாதங்களோடும், மனம் விரும்பும் ஆசைகளோடும் மாத்திரமே வாழவேண்டும் என்று விரும்புகிறவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை அவைகள் நெருக்கிப்போடுவது உறுதி. விட்டு விலகவேண்டிய இடத்தை விட்டு விலகாவிடில், வசனத்தை விட்டு வாழ்க்கை விலகிவிடும்.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள் (லூக் 8:15). மேற்கண்ட மூன்று நிலைகளையும் தாண்டினால் மாத்திரமே, நான்காவதான நல்லநிலம் என்ற எல்லைக்குள் கனிமரமாகும் நமது வாழ்க்கை.
Comments
Post a Comment