பதுங்கவா? பயணிக்கவா?
சத்தியத்தையும், சர்வவல்லவரையும் தவிர வேறொன்றையும் நமது சிந்தை சார்ந்துவிடாதபடி, சரியான திசையினை நோக்கியே அனுதினமும் நம்மை திருப்புகின்றார் கர்த்தர். இந்த வருடத்தின் தொடக்கமுதல், முடிவுவரை அவரையே சார்ந்திருக்க நம்மை அர்ப்பணிப்போமென்றால், தவறிப்போகாமலும், அவருடைய விருப்பத்திற்கு விரோதமாக எங்கும் தேங்கி நிற்காமலும் நாம் தொடர்ந்து பயணிக்க முடியும்.
கர்த்தர் எலியாவை நோக்கி: நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று சொன்னபோது, அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான் (1 இராஜா. 17:3-5). தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று (1இரா 17:7); ஒருவேளை, இறைச்சியைக் கொண்டுவந்துகொண்டிருந்த காகங்களும் காணாமற்போயிருக்கக்கூடும். சிலநாட்கள் வரை காகமும், கேரீத் ஆறும் எலியாவுக்குப் போதுமானதாக இருந்தது; என்றபோதிலும், 'கேரீத் ஆற்றையே' எலியா சார்ந்துவிடாதபடி, அங்கிருந்து அவனைப் புறப்படப்பண்ணினார் கர்த்தர். நம்முடைய வாழ்க்கையிலும் இது நடக்கக்கூடும்.
பின்பு கர்த்தர் எலியாவை நோக்கி: நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்று சொன்னபோது, அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான். கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான் (1இரா 17:10,11). எலியாவின் சொற்படி அவள் செய்தபோது, அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள் (1இரா 17:15). இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனை சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள் (1இரா 17:17,18). சாறிபாத் விதவையின் வீட்டையே எலியா சார்ந்துவிடாதபடி, அங்கிருந்து அவனைப் புறப்படப்பண்ணினார் கர்த்தர். அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார் (1இரா 18:1). ஒளித்துக்கொள்ளவேண்டிய காலமும் உண்டு; அப்படியே, நம்மைக் காண்பிக்கவேண்டிய காலமும் உண்டு.
மேலும், யேசபேலின் வார்த்தைகளை எலியா கேட்டபோது (1இரா 19:2), வனாந்தரத்தில், சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருந்தான். 'எழுந்திருந்து போஜனம்பண்ணு' என்று தூதன் சொன்னபோதிலும், தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்தபோதிலும், பயணிக்க மனதின்றி, புசித்துக் குடித்து திரும்பப் படுத்துக்கொண்டான் (1இரா 19:5.6). கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் (1இரா 19:7) என்று சொன்னபோது, அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான் (1இரா 19:8); என்றபோதிலும், அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கிவிட்டான்; அப்பொழுது, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார் (1இரா 19:9); பரம போஜனம் பயணிக்கவே.
அவருடைய செட்டையின் நிழலில் நாம் இருப்பதினால் (சங். 17:9; 36:7; 57:1; 63:7) வாழ்க்கைக்குத் தேவையான பாதுகாப்பும் உதவிகளும் கிடைத்தாலும், நாம் பதுங்கியிருப்பதை அல்ல, தொடர்ந்து பயணித்துக்கொண்டிருப்பதையே கர்த்தர் விரும்புகின்றார்.
Comments
Post a Comment