Skip to main content

பயப்படாதே, பயப்படு

 

பயப்படாதே, பயப்படு

 

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2தீமோ 1:7) என்ற வசனம் நாம் அறிந்ததே. என்றாலும், அனுதின வாழ்க்கையில் பயம் என்பது அவ்வப்போது வந்து நமது ஆவிக்குரிய பெலத்தைச் சோதித்துப் பார்க்கத்தான் செய்கிறது. வியாதியைக் குறித்து, எதிர்காலத்தைக் குறித்து, திருணமத்தைக் குறித்து, பிள்ளைகளைக் குறித்து, வேலையில்லாமையைக் குறித்து, விரோதமாய் கிரியை செய்வோரைக் குறித்து இன்னும் எத்தனையோ விதஙக்ளில் பயம் என்பது நமது அன்றாட வாழ்க்கையைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டே நிற்கின்றது. பக்கத்தில் பயம் நின்றாலும், ஆவிக்குரிய பெலத்துடன் நாம் எப்படி அதனைச் சந்திக்கின்றோம் என்பதே நமது வாழ்க்கையில் ஜெயத்தைக் கொண்டுவரும். இயேசு போதித்தபோது, 'என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்' (லூக் 12:4) என்று ஆலோசனையான பாடம் கற்பித்தார். பயப்படக்கூடாதவைகளுக்கு நாம் பயந்துகொண்டிருந்தால், நம்முடைய பாதை மாறிவிடும். பயம் என்கிற விதையை மனிதரின் உள்ளத்தில் விதைத்து, அது மனதில் மரமாகி, அவனது ஆவிக்குரிய மரணம் நிகழும் வரை சத்துரு அதற்கு நீரூற்றிக்கொண்டேயிருக்கின்றான். பயத்தை நெஞ்சில் ஊற்றி, விசுவாசத்தை வெளியிலே தூற்றிவிடுகின்றான் அவன்.

'சரீரத்தைக் கொலை செய்து, அதற்குப் பின் ஒன்றும் செய்ய திராணியில்லாத' எத்தனைக் காரியங்களுக்கு நாம் வாழ்க்கையில் பயந்துகொண்டிருக்கின்றோம். நாளைய உணவைக்குறித்த பயம், எதிர்காலத்தில் நான் விரும்புகிற வண்ணம் நடக்காவிட்டால் என் வாழ்க்கையே முடிந்துவிடும் என்ற பயம், திருமணத்திற்கு மாப்பிள்ளையோ அல்லது பெண்ணோ கிடைக்கவில்லையென்றால், வாழ்க்கை வீணாகிவிடுமே என்ற பயம், வியாதியால் மரித்துவிடுவேனோ பயம்; இவை அனைத்தும் உங்கள் சரீரத்தைக் கொல்பவைகளே; ஆத்துமாவை அல்ல. தேவ பயத்தை மனதில் வைத்துக்கொண்டும், மேற்சொன்ன இத்தகைய பயங்களை நெஞ்சில் சுமந்துகொண்டும் நாம் வாழுவோமென்றால், சத்துருவின் சுனாமி வீசும்போது இலகுவாக நாம் அவனால் ஈர்த்துக்கொள்ளப்படுவோம். பயப்படக்கூடியவருக்குப் பயப்படாமல், பயப்படாதவைகளுக்கு பயந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் அநேகர். அவரை ஆராதித்தாலும், அவனைக்குறித்த பயமே இவர்களை ஆளுகின்றது.

நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று (மத் 4:9) இயேசுவிடம் நேரடையாகச் சொன்னது போலவோ அல்லது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு முன்பாக பொற்சிலை நிறுத்தப்பட்டு வணங்கும்படிச் சொல்லப்பட்டது போலவோ (தானி. 3:12) சத்துரு நம்மைச் சந்திக்காமலிருக்கலாம், ஆனால், பயத்தைக் கொடுத்து, தன்னை பணிந்துவிடவைத்துவிடுகின்றான். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன் (உபா 7:21) எனவே நாம் பயப்படவேண்டிய அவசியமில்லையே. தேவைகளுக்கான பயம், தேவனுக்கு விரோதமான பயம், சத்துருவைக் கண்டு பயம் இவை அனைத்தும், நம்மை மோட்ச ராஜ்யத்திற்குள் பிரசவேசிக்கமுடியாதபடி நம்மைத் தடுக்கின்ற காரணிகள். பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (வெளி 21:8).

எகிப்தை விட்டுப் புறப்பட்டு, கானானை நோக்கி பிரயாணப்பட்டுக்கொண்டிருந்த இஸ்ரவேல் மக்களை, மீண்டும் பார்வோன் பின்தொடர்ந்து சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தih நோக்கிக் கூப்பிட்டார்கள். அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? (யாத் 14:10,11) என்று அங்கலாய்த்தார்கள். தேவனால் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தபோதிலும், தொடரும் எதிரியைக் குறித்த பயம் தொடர்ந்துகொண்டேதானிருந்தது. உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய் (சங் 91:7,8) எனவே பயம் வேண்டாம்.

தேவனுடைய சிங்காசனத்தின் மேல் ஆசை கொண்டவன் சாத்தான், தேவனுக்கு மேலாக தான் உயர்வாக வைக்கப்படவேண்டும் என்று நினைத்தவன் அவன். தேவனுக்குரியதை எப்பொழுதும் தன்னுடையதாக்கிக்கொள்வதிலேயே குறியாயிருப்பவன் சாத்தான். தேவனை வணங்கும் மக்களை அவனை வணங்கத் தூண்டுவான்; தேவனைத் தேடும் மக்களை தன்னைத் தேடவைப்பான்; அப்படியே விசுவாசிகளாகிய, ஆவிக்குரியவர்களாகிய நமக்குள் இருக்கிற பயம் தேவனுக்குரியது. அவர் ஒருவருக்கே நாம் பயப்படவேண்டும். ஆனால், நாம் 'கர்த்தருக்குப் பயப்படுவதை' விரும்பாத சத்துரு, நம்மை 'அவனுக்குப் பயப்படுகிறவர்களாக' மாற்றிக்கொள்ள விரும்புகின்றான். எனவே, இத்தகைய 'சத்துருவுக்குப் பயப்படும் பயத்தை' நெஞ்சில் கொண்டிருக்கும் மக்கள் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறதில்லை; கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே பரலோகத்தில் பிரவேசிப்பார்கள்; சாத்தானுக்குப் பயந்துகொண்டிருக்கும் மக்கள், நரகத்திற்கே தள்ளப்படுவார்கள்; இதுவே சத்தியம். எனவே இயேசு, நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் (லூக் 12:5) என்று, நாம் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை அடையாளப்படுத்திக் கூறினார். சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படுங்கள் (யோசு. 4:23). கர்த்தருக்குப் பயப்படும் பயம் நம்மில் நிறைந்திருந்தால், நாம் சத்துருக்களுக்குப் பயப்படவேண்டிய அவசியமில்லை. கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷனே ஆசீர்வாதங்களையும் வாழ்க்கையில் பெற்றுக்கொள்கிறான் (சங். 128:4). யாருக்குப் பயப்படவேண்டும், யாருக்குப் பயப்படக்கூடாது என்பதை அடையாளம் கண்டுகொள்ளுவோம், பயம் தேவன் ஒருவருக்கே. 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...