சுவரொட்டிகள், சுவிசேஷகர்கள்
தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது என்ன என்பதில் தெளிவு நம்மில் உண்டாயிருந்தால் மாத்திரமே அவரது விருப்பத்தைச் செய்து முடிப்பது நமக்கு எளிதாயிருக்கும். இயேசுவை அறிந்துகொண்டு, அற்புதத்தை வாழ்க்கையில் சுவைத்தும், அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதை அறியாமலேயே வாழ்கின்றனர் ஒரு கூட்ட மக்கள். இயேசுவுக்கும் நமக்கும் இடையிலான சந்திப்பு, அவரையே சிந்திக்கும் சிந்தையை நம்மில் உருவாக்கவேண்டும். அவரையே அறிவிக்கும் சுவிசேஷகர்களாக நம்மை மாற்றவேண்டும்.
இயேசு கதரேனருடைய நாட்டிற்கு வந்தபோது, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். (மாற்கு 5.2) கதரேனருடைய நாட்டில் மனந்திரும்புதலின் செய்தியை, பிதாவின் குமாரனாக, மேசியாவாக, இயேசு எடுத்துச் சென்றபோது, அவர் படவிலிருந்து இறங்கியதும் அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷனோடே இயேசுவின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. இயேசு அவனை சொஸ்தமாக்கியது மட்டுமல்லாமல், நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார் (மாற் 5:19). அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள் (மாற் 5:20). இயேசுவோடு இருக்கவேண்டும் என்று அவன் விரும்பிபோதிலும், நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, இயேசு அவனை அனுப்பிவிட்டார் (லூக். 8:39). அப்படியே, திமிர்வாதக்காரனையும் நோக்கி : நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக் 5:24). இயேசு சமாரியாவில் சந்தித்த ஸ்திரீயும், தன் குடத்தை வைத்துவிட்டு,ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள் (யோவா 4:28-29) என்றாள்.
நம்மைச் சந்திக்கிற நபர்களுக்கு இயேசுவைக் காட்டுகிறவர்களாக மாத்திரமல்ல, இயேசுவைச் சந்திக்க மற்றவர்களையும் அழைக்கிறவர்களாக அவர்களை மாற்றுவது நமது கடமை. ஊருக்குள் சென்று நற்செய்திக் கூட்டத்திற்கு ஆள் திரட்டுபவர்களை எல்லாம், ஊருக்குள் அனுப்பாமல் நாம் உதவிக்காரர்களைப் போல உடன் வைத்துக்கொண்டிருந்தால், நற்செய்தியைக் கேட்க வருவோரின் எண்ணிக்கை குறைந்துவிடும். சுவரொட்டிகள் என்று அடையாளம் காண்போரை ஊருக்குள் இயேசுவை பிரசித்தம்பண்ண சுதந்திரம் கொடுங்கள். இவர்கள் இயேசுவின் நற்செய்திக் கூட்டத்திற்குச் சுவரொட்டிகள். சுகம் பெற்ற இவர்கள் சுவரொட்டிகளைப்போன்று செயல்பட்டு மற்றவர்களையும் இயேசுவைக் காண அழைத்துக்கொண்டுவந்தார்களே. இயேசுவை அறிந்துகொண்ட அனைவரும், நற்செய்தி அறிவிக்க தங்களால் இயலாவிட்டாலும், இயேசுவினிடத்தில் சுகம் பெற்றவர்கள் சுகரொட்டிகளாக மாறி மற்றவர்களை இயேசுவைக் காண அழைத்துக்கொண்டு வந்ததுபோல, ஆலயத்திற்கும், கூட்டங்களுக்கும் அழைத்துக்கொண்டுவரலாமே.
என்றபோதிலும், இயேசு சிலரை சீடர்களாக அடையாளம் கண்டு அவர்களை சுவிசேஷகர்களாகவும் மாற்றும்படி அழைத்தார். இவர்கள் இயேசுவோடு கூடவே இருக்க அழைப்பு பெற்றவர்கள். இயேசுவின் செயல்பாடுகள், குணங்கள், பிதாவோடு அவர் செய்யும் ஜெபம், உரையாடல்கள் அனைத்தையும் உடனிருந்து கற்று முழு உலகத்தையும் சுவிசேஷமயமாக்க அழைப்பு பெற்றவர்கள். ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார் (லூக் 5:27). அப்படியே, பேதுருவையும், அந்திரேயாவையும் நோக்கி, 'என் பின்னே வாருங்கள்' என்றார் (மத். 4:19). இயேசு இவர்களை அழைத்ததின் நோக்கம் அவர்களை நற்செய்தி அறிவிக்கும் சுவிசேஷகர்களாக மாற்றவே. இயேசுவை நாம் சந்தித்திருப்போமென்றால், சுவரொட்டியாகவோ அல்லது சுவிசேஷகர்களாகவோ நாம் செயலாற்றத் தொடங்கவேண்டும். இவ்விரண்டில் எந்த ஒரு பணியையும் நாம் செய்யாதிருப்போமென்றால், இயேசுவை நாம் சந்தித்ததில் பரலோகத்திற்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை.நாம் சுவரொட்டிகளா அல்லது சுவிசேஷகர்களா?
Comments
Post a Comment