இருப்பிடமா? இழப்பா?
தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது. நாங்கள் யோர்தான்மட்டும் போய் அவ்விடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான். (2 இரா 6:1,2)
இருக்கும் இடத்தின் முக்கியத்துவத்தை உணராமல், இழக்கும் இடத்தை நோக்கி பயணித்து, இருப்பதையும் பறிகொடுத்துவிடும் மக்கள் உலகத்தில் அநேகர். தேவையானவைகள் இருப்பினும் அவைகளுடன் வாழ்க்கையில் திருப்தியாயிருப்பதை விட்டுவிட்டு, விசாலமானதைத் தேடி வாழ்க்கையில் வெறுமையாகிவிட்டவர்களும் உண்டு. எலிசாவோடு கூட இருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள், விசாலமான இடத்தை விரும்பி, தங்களுக்கும் தங்கள் தலைவனாயிருந்த எலிசாவுக்கும் இடையில் விரிசலை உண்டாக்கிக்கொள்ளவும் தயங்கவில்லையே. இருக்கிற சூழ்நலையில், தலைவனோடு தாங்கள் தங்கியிருக்கும் இடத்தையே விரிவாக்குவதை விட்டுவிட்டு, வேறு ஓர் இடத்திற்கு பிரிந்துசெல்லும் முடிவினை எடுத்துவிட்டார்களே. 'உம்முடன் குடியிருக்கிற இந்த இடம்' என்று அவர்கள் சுட்டிக்காட்டுவதினால், 'தீர்க்கதரிசியாயிருந்தபோதிலும், சிறியதோர் இடத்திலேயே எலிசா குடியிருந்தான்' என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். என்றபோதிலும், எலிசா குடியிருக்கிற அந்த இடத்தில் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களால் குடியிருப்பதோ கடினமாயிருந்தது. இன்றும், இப்படிப்பட்ட மனநிலையோடு வாழும் மக்கள் அநேகர். இருப்பதில் திருப்தியடையாமல், தேவமனிதர்களை விட்டு விலகி, தேவைகளை நோக்கித் திரும்பி, தேவன் வைத்திருக்கும் சித்தத்தையும் இடத்தையும் விட்டு தூரமாகச் சென்றுவிட்டவர்கள் உண்டு.
மேலும், 'நாங்கள் யோர்தான் மட்டும் போய்' என்று சொல்லும் அவர்களது வார்த்தைகள், எலிசாவை தங்களோடு உடன் அழைக்காததையே உணர்த்துவிக்கின்றது. மேலும், 'எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம்' என்று அவர்கள் சொன்னதும், 'போங்கள்' என்று எலிசா அனுமதி அளித்ததும், எலிசாவை விட்டு அவர்கள்
தூரமாகச் செல்லவிருப்பதையும், தங்களது தலைவனாயிருந்த எலிசாவை அவர்கள் தனிமையாக்கிவிருப்பதையுமே சுட்டிக்காட்டுகின்றது. தலைவனது வாயிலிருந்து புறப்படுபவைகளை மாத்திரமல்ல, தலைவனுடைய வாழ்க்கையிலிருந்து வெளிப்படுபவைகளையும் கற்றுக்கொள்ளவேண்டுமென்றால், நெருக்கமாயிருந்தாலும், தலைவனோடு தங்கியிருந்தால் மாத்திரமே அது சாத்தியம். பிரசங்கத்தை மட்டுமே கேட்டுவிட்டுப் பிரிந்துபோய்விடுவதினால், இன்றும் பல மக்களால், தேவமனிதர்களின் வாழ்க்கையை வாழ இயலவில்லை. உடனிருந்தால் மாத்திரமே, நெருக்கமான அவர்களது வாழ்க்கை முறையை நாமும் உணர்ந்துகொள்ள முடியும்.
அத்துடன், அவர்கள் யோர்தான் நதியருகே வந்தபோது மரங்களை வெட்டினார்கள். ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி (யுஓநு ர்நயன) தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான் (2 இரா 6:4,5). இன்றும் அநேகருடைய வாழ்க்கையில் நடப்பது இதுவே; தங்களை நடத்திக்கொண்டிருக்கும் மேய்ப்பனையோ, தலைவனையோ விட்டுப் பிரிந்துபோனதினால், அவர்கள் கையில் வைத்திருந்த கோடரி கழன்றுபோனபோது; கூவும் நிலை உண்டாகிவிட்டது. கைப்பிடியுடன் இறுகலாக இல்லாத, கழன்றுபோகக்கூடிய, கடனாக வாங்கிய கோடரியைக் கொண்டிருந்ததால், உத்திரத்தை வெட்டும்போது கைப்பிடியிலிருந்து கோடரி உருவிப்போய்விட்டது. வாழ்க்கையில் உண்டாகும் நெருக்கங்களால், வசிப்பிடத்தை மாற்றிக்கொள்ளும் மக்கள் உண்டு. ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குச் சென்றுவிடுவோர் உண்டு. தலைவர்கள் குடியிருக்கும் இடத்திலேயே குடியிருப்பது, நெருக்கமாயிருந்தாலும் வாழ்க்கைக்கு அதுவே பாதுகாப்பானது. அல்லது கோடரி கழன்றுவிழும்போது, தலைவனிடம் ஓடிவரவேண்டியதிருக்கும்.
எனினும், ஒரு மனிதமன் அழைத்ததினால், அங்கு வந்திருந்த எலிசா (2 இராஜா. 6:3), ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி, அதை எடுத்துக்கொள் என்றான் (2இரா 6:6,7). தீர்க்கதரிசிகளின் புத்திரர்களின் கையிலிருக்கும் கோடரி, குடியிருக்க உத்திரத்தை வெட்டக்கூடும் (2 இராஜா. 6:2); ஆனால், தீர்க்கதரிசியாகிய எலிசாவின் கையிலிருக்கும் கோடரியோ,
இழப்பிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் மரங்களை வெட்டக்கூடியது. ஜனங்கள் தங்கள் வாழ்க்கைக்கேதுவானவைகளுக்காகவே வேதத்தை கையில் வைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால், ஊழியர்களோ வேதத்திலிருந்து நீங்கள் கழன்றுவிழும்போது, மீண்டும் உங்கள் ஆத்துமாக்களை மீண்டும் மிதக்கப்பண்ணுகிறவர்கள்.
இஸ்ரலே; ஜனங்களின் பிரயாணத்திலும் இது பிரதிபலிப்பதை நாம் வேதத்தில் காணமுடியுமே. பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினபோது, அவர்கள் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்றுநாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்ததுளூ அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது. அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள் (யாத் 15:22-24). வனாந்தர பயணம், தண்ணீரற்ற சூழ்நிலை, கசப்பான தண்ணீர் இவைகள் ஜனங்களை மோசேக்கு விரோதமாக முறுமுறுக்கச் செய்தது. எனினும், கூப்பிட்டபோது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்ளூ அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று (யாத் 15:25). ஜனங்களுடைய கண்கள் கசப்பான தண்ணீரை மட்டுமே கண்டதுளூ ஆனால், அவர்களை நடத்திக்கொண்டுசென்ற மோசேயின் கண்களுக்கோ அதை இனிப்பாக மாற்றும் மரத்தைக் காண்பித்தார் கர்த்தர்.
தகப்பனோடு தங்கியிருப்பதை விட்டுவிட்டு, தன்னுடை பங்கை வாங்கிக்கொண்டு இருப்பிடத்தை விட்டுப் பிரிந்துசென்றான் இளைகுமாரன். எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான் (லூக் 15:13-15). ஆனால், புத்தி தெளிந்தவனாக மீண்டும் தகப்பனை தேடிவந்தபோது, தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்ளூ காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள் (லூக் 15:22-24). தகப்பனை விட்டுத் தூரமாகச் சென்றது, இளையகுமாரனுடைய வாழ்க்கையில் வெறுமையைக் கொண்டுவந்துவிட்டதேளூ எனினும், மீண்டும் தகப்பனைச் சந்தித்தபோது அது நிறைவாக்கப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் சீடர்களின் வாழ்க்கையிலும் இது நிகழ்ந்தது. சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை (யோவா 21:2,3). மனிதர்களைப் பிடிப்பதற்காக சீஷர்களாக இயேசு கிறிஸ்துவால் அழைக்கப்பட்டிருந்தும், அழைப்பினை மறந்து மீண்டும் படவில் ஏறி தங்கள் பழைய தொழிலுக்குத் திரும்பினபோது, கடலில் வீசின அவர்களது வiலை வெறுமையாகவே வந்தது. இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை (யோவா 21:5) என்றே சொன்னார்கள் அவர்கள். அப்பொழுது இயேசு கிறிஸ்து: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள் (யோவா 21:6).
மீண்டும் தலைவனுடனான சந்திப்பே அவர்களை வெறுமையிலிருந்து மீட்டெடுத்தது. ஏறக்குறைய இருநூறு முழத் தூரத்திலிருந்து, படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை அவர்கள் இழுத்துக்கொண்டு கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள் (யோவா 21:8,9). கரையிலிருந்த இயேசு கிறிஸ்துவின் கரங்களில் மீன்கள் கிடைத்தது எப்படி? என்ற கேள்வி சீஷர்களுக்கு எழுந்திருக்கக்கூடும்ளூ எனினும், கடலுக்குச் சென்று சீஷர்கள் செய்ய நினைத்ததை, இயேசு கிறிஸ்துவினால் கரையிலிருந்தே செய்துவிடமுடியும். தலைவனோடு தங்கியிருந்தால் நம்முடைய வாழ்க்கையிலும் இது சாத்தியமே.
Comments
Post a Comment