இயேசுவை வைத்துக்கொள்ளுங்கள்
இயேசுவை நீதிமான் என்று நாம் அறிந்திருந்தாலும், அவரே மெய்யான தெய்வம் என்று அறிந்திருந்தாலும், அவராலேயே இரட்சிப்பு என்ற அறிவிருந்தாலும், உலகத்தின் பல்வேறு நெருக்கங்களினால் இயேசுவை விட்டுவிடுகின்றனர் பலர். பொருளாசை, சிற்றின்பம், நட்பு, அந்தஸ்து, பதவி போன்றவைகளும், உடன் நிற்கும் மக்களும் நெருக்கும்போது, இயேசுவுக்காக அவைகளை மற்றும் அவர்களை இழக்க மனதில்லாமல், அவர்களுக்காக இயேசுவை இழக்கும நிலைக்கு மனநிலை தள்ளப்பட்டுவிடுகின்றது.
இந்திய ராணுவத்தில் உயரிய பதவியில் இருக்கும் ஓர் அதிகாரி ஒரு முறை என்னை தனது காரில் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முக்கியமான ஒரு காரியத்தை என்னிடம் பேசவேண்டும் என்று சொன்னவாறு, அவரது வீட்டு இருக்கையில் அமரச் செய்தார். ராணுவத்தில் உயர்ந்த பதவியில் அவர் இருப்பதால், உண்டாகும் பல்வேறு நெருக்கங்களையும், உடன் அதிகாரிகள் விருந்துகளில் மது அருந்தும்போது உடனிருக்கவேண்டிய நிலை ஏற்படுவதைக் குறித்தும் என்னிடம் பேசிக்கொண்டிருந்த அவர், இயேசுவை ஏற்றுக்கொண்ட தனக்கோ அது நெருக்கமாயிருக்கின்றது என்று சொன்னார். பதவி பணத்தைத் தந்தாலும், மனமோ வேலையில் இசைந்து நிற்கவில்லை; எனவே ராஜினாமா செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்றார் அவர்.உலகத்தின் காரியங்கள் நம்மை நெருக்கும்போது, எதை நாம் தெரிந்துகொள்கின்றோம்? இயேசுவையா, தேவனுக்கடுத்தவைகளையா? அல்லது உலகத்துக்கடுத்தவைகளையா? என்பதில் கவனமாயிருப்போம்.
தலைவர்களாக, ஊழியத்தின் முன்னோடிகளாக, மந்தையினை மேய்ப்பவர்களாக முன் செல்லும் நாம், நெருக்கப்படும் நமது ஒவ்வொரு நடக்கைகளிலும் கவனமாயிருக்கவேண்டும். எவரோ, யாரோ நம்மை நிர்ப்பந்தப்படுத்துவதினால், நியாயத்தைப் புரட்டிவிடும் மனிதர்களாக நாம் காணப்படக்கூடாது. 'தீமை செய்ய திரளான பேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து உத்தரவு சொல்லாதிருப்பாயாக' (யாத். 23.2). திரளான மக்கள் எப்பக்கமோ, அப்பக்கமே பெலன் என்ற எண்ணம் தவறான திசைக்குத் நம்மைத் தள்ளிவிடும். நியாயத்தை அறிந்திருந்தும், நீதி இன்னதென தெரிந்திருந்தும், தீயோரை எதிர்க்க இயலாமல், தீயோரின் கூட்டத்திற்குள் ஒருவனாக வாழ நம்மை விற்றுப்போட்டுவிடக்கூடாது. நீதியை அறிந்திருந்தும் தீயவருக்குச் சாதகமாக நாம் வாழ்ந்துவிடக்கூடாது. பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்குமே (உபா. 16:19). என்றாலும், தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ (யோபு 8.3). உலகத்தில் உள்ள மனிதர்களால் நீதிமான்களின் நியாயம் புரட்டப்பட்டாலும், தேவ நியாயம் ஒருநாள் வெளிப்படும் என்பதைத்தானே யோபுவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே சாலமோன், ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு (பிர 5:8) என்று எழுதியிருக்கின்றான். உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும், மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ (புல. 3:35,36). எந்நிலையிலும், தேவனையும், வேதத்தின் சட்டங்களையும் விட்டுவிடாமல் அதனோடேயே ஒட்டிக்கொண்டு வாழப் பழகுவோம்.
பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை. உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே. ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.(லூக் 23:13-16)
பிலாத்துவின் இந்நிலையிலிருந்து தவறிப்போனவன். பொறாமையினாலேயே இயேசுவை ஒப்புக்கொடுத்தார்கள் என்று (மத். 27:17) பிலாத்து அறிந்திருந்தான். இயேசுவை விசாரித்தபோதிலும், அவர்கள் சாட்டின குற்றங்களில் ஒன்றையும் பிலாத்து இயேசுவினிடத்தில் காணவில்லை. அவன் மாத்திரமல்ல, அவனது எதிரியாயிருந்த ஏரோதுவும்கூட இயேசுவினிடத்தில் குற்றம் காணவில்லை என்ற செய்தியையும் அறிந்தவன் பிலாத்து. அதுமாத்திரமல்ல, பிலாத்து நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்கு சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன்' (மத். 27:19) என்று சொன்னாள். இயேசு குற்றமற்றவர் என்று பிலாத்து நன்கு அறிந்திருந்தான், என்றாலும், தலைவனாயிருந்த அவன் அதனை தன்னுடைய ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல பெலனற்றவனாயிருந்தான். 'இயேசுவை தண்டித்து விடுதலையாக்குவேன்' என்று ஜனங்களிடத்தில் சொன்னான். தான் தப்பித்துக்கொள்ளவும், ஜனங்களையும் திருப்திபடுத்திக்கொள்ளவும் இப்படிச் சொன்னான் பிலாத்து. அநேக நேரங்களில், குற்றம் சுமத்துவோரின் குரல் ஓங்கி ஒலிப்பதினால், நீதிமானையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் நிர்ப்பந்தத்துக்கு தலைவர்கள் தள்ளப்பட்டுவிடுகின்றனர். ஜனங்களின் விருப்பத்திற்கு விட்டுவிடுகின்றனர். துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிற இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் (நீதி. 17:15). அப்படியிருக்க, இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் என்று பிலாத்து தன்னைத் தப்புவித்துக்கொள்ளலாகுமோ? ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவினாலும், என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னாலும், 'இயேசுவை வைத்துக்கொள்ளுங்கள்' என்று சொன்னவன் பிலாத்துதானே. 'எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ?' என்று விடுதலைபண்ணுவதை ஜனங்களின் விருப்பத்திற்கே பிலாத்து விட்டுவிட்டானே (மத் 27:18). அதுமாத்திரமல்ல, 'கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டு, 'சிலுவையில் அறையவேண்டும்' என்ற பதிலை ஜனங்களிடமிருந்து பெற்றவன் பிலாத்து. 'ஏன் என்ன பொல்லாப்பு செய்தான்?' என்று கேட்டபோது (மத். 27:23), மீண்டும் அதே பதிலையே பிலாத்து பெற்றான். பிலாத்துவே உமக்கு இனி நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது, நாங்கள் சொல்வதை நிறைவேற்றும் என்பதுதான் அதன் அர்த்தம். அப்போது பிலாத்து, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் (மத். 27:24) ஜனங்களுக்கு விருப்பமாக விரும்பி, கர்த்தருக்கு அருவருப்பாக தலைவர்கள் மாறிவிடக்கூடாது. நீதிமான்கள் பக்கத்தில் தயங்காமல் திடமாய் நிற்க தேவன் நமக்குப் பெலன் தருவாராக.
நீதிமானுக்கு விரோதமாக எழும்பும் பிரச்சனைகளில் உடன் நிற்கக் கற்றுக்கொள்ளுவோம், நம்மைத் தப்புவித்துக்கொள்ள இயலாவிட்டாலும், தவறானவைகளைச் செய்துவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம். பிலாத்து இயேசுவைக் காப்பாற்ற நினைத்திருந்தால், ஜனங்கள் அவனை தலைமைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்திருப்பார்கள். அவனோ, தனது பதவிக்காக ஒருவரை பலி கொடுத்துவிட்டான். ஒருவரைக் குறித்த நியாயம் உங்களுக்கு தெரிந்திருந்தும், நீதி தெரிந்திருந்தும், அடுத்தவரின் அழுத்தத்தினால், கூட்டத்தின் கூக்குரலினால் 'வைத்துக்கொள்ளுங்கள்' என்று நீதிமானை பாவிகள் கையில் ஒப்புக்கொடாதிருப்போம். குற்றமற்றவர்களை கூண்டுக்குள் தள்ளிவிடாமலும், கை கழுவிவிட்டு கைதியாக நாம் சிக்கிக்கொள்ளாமலும் கர்த்தர் காப்பாராக. வாழ்க்கையில் எதை இழந்தாலும், இயேசுவை தக்கவைத்துக்கொள்ளுங்கள்.
Comments
Post a Comment