Skip to main content

முடிவு

 

முடிவு

 

கிறிஸ்துவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து, அவருக்கே தொண்டு செய்ய தீவிரித்திருப்போர் ததங்களது உள்ளத்தின் எண்ணங்களை, அவ்வப்போது அலசி ஆராயவேண்டியது அவசியம். ஊழியன் தனது வாழ்க்கையில் தவறாமலும், ஊழியம் தவறான திசையில் பயணிக்காமலும் இருக்க, ஊழியனின் முடிவும் அத்துடன் ஊழியத்தின் முடிவும் தேவனது பார்வையில் உத்தமமாகவும், உகந்ததாகவும் காணப்பட, இத்தகைய ஆராய்தல் அவசியம். ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும், அதின் முடிவு நல்லது (பிர. 7:8) என்பது, தேவனிடமிருந்து ஞானத்தைப் பெற்ற சாலமோனின் வார்த்தை. நாம் எப்படி இரட்சிக்கப்பட்டோம் என்பதைக் காட்டிலும், எங்கு எவரிடத்டதில் ஞானஸ்நானம் பெற்றோம் என்பதைக் காட்டிலும், என்று அபிஷேகம் பெற்றோம் என்பதைக் காட்டிலும், எங்கெங்கெல்லாம் பிரசங்கம் செய்தோம் என்பதைக் காட்டிலும், கிறிஸ்துவுக்காக என்ன காரியங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம், செய்து முடித்தோம் என்பதைக் காட்டிலும், நமது வாழ்க்கையை இறுதியில் எப்படி முடிக்கிறோம் என்பது மிக மிக முக்கியமானது. இலக்கை நோக்கி ஓடத் தொடங்கிய அநேகரின் வாழ்க்கை முடிவில் இலட்சையாக மாறிவிட்டது.தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் (1கொரி 10:12) என்று எச்சரிக்கின்றார் பவுல். தொடக்கத்திலே ஆனந்தம், இரட்சிப்பின் சந்தோஷம், ஆர்ப்பரிப்பின் சத்தம், ஆரவாரம், களிப்பின் தொனி இவைகளை அனுபவித்துவிட்டு, தொடர்ந்து பயணிக்கும்போது, வழியில் இவைகளை விட்டுவிட்டால் நித்திய ஜீவனை நிச்சயம் சுதந்தரித்துக்கொள்ள முடியாது. ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? (கலா 3:3) என்று கலாத்தியரை எச்சரித்து பவுல் எழுதிய வார்த்தைகள் இன்றைய சூழ்நிலையில் நமக்கும் பொருந்தக்கூடியதல்லவா!

தீர்க்கதரிசியாகிய சாமுவேலைக் கொண்டு சவுலை கர்த்தர் அபிஷேகம் செய்திருந்தபோதிலும், முடிவில், பட்டயத்தை நட்டு அதின்மேல் விழும் நிலையிலிருந்தான் சவுல் (1சாமு. 31:4). மாம்சம் நம்மை ஆட்கொள்ள இடங்கொடுத்துவிட்டால், நம்மேலிருக்கும் கர்த்தரின் அபிஷேகமும் அகன்றுபோகும்; தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களைச் செய்தபோது, 'கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்' (1சாமு. 16.14). எனவே, பாவம் செய்து, மனம்திரும்பும் தாவீது, 'உமது சமூகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்' என்றும் 'உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்' என்றும் ஜெபிக்கிறான் (சங். 51.11).

சீஷனாக இயேசுவோடு வாழ்க்கையைத் தொடங்கியிருந்தபோதிலும், முடிவில் இயேசுவைக் காட்டிக்கொடுத்து, புறப்பட்டுப் போய், நான்றுகொண்டு செத்தான் யூதாஸ் (மத். 27:5). யூதாசுக்குள் இருந்த பண ஆசையே அவனது பயணத்தை மரண வாசலுக்குக் கொண்டுசென்றுவிட்டது.

ராஜ்யபாரம் செய்யும் தொடக்கத்தில் தேவனிடத்திலிருந்து ஞானத்தைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட சாலமோன், கர்த்தருக்கென்று ஆலயத்தையும் கட்டிய சாலமோன், முடிவில் தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை (1இராஜா. 11:4). ஆலயத்தையும் கட்டி, அருவருப்பான அந்நிய தேவர்களுக்கும் கோயில்களைக் கட்டினான் (1இராஜா. 11:5). அவனிடத்திலிருந்த ஞானம் தேவனுடையது, ஆனால் வாழ்க்கையோ வழுவிப்போனது.

கருவிலிருந்தே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன் சிம்சோன்; ஆனால், அவனது முடிவோ, பெலிஸ்தியர்களுக்கு வேடிக்கை காட்டும்படியாக மாறிவிட்டது (நியா. 16:27). யாரை வீழ்த்தும்படியாக தேவன் தெரிந்துகொண்டாரோ, அவர்கள் கைகளிலேயே வீழும் நிலை உண்டானது.

தூளிலிருந்து உயர்த்தப்பட்டவன் பாஷா, ஆனால், அவன் யெரொபெயாமின் வழியிலே நடந்து, இஸ்ரவேல் ஜனங்களைப் பாவஞ்செய்யப்பண்ணினபடியால், முடிவில், அவனுடைய பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழிக்கப்பட்டனர்; அவனுடைய வீடு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆகியது (1இரா. 16:1-3).

தொடக்கத்தின்போது, அநேகரை சத்துரு தொடுவதில்லை, இடைமறிப்பதில்லை, அவர்கள் இஷ்டத்திற்கு கிறிஸ்துவின் பின்னால் செல்லும்படிக்கு விட்டுவிடுகின்றான். ஆனால், காலம் செல்லச் செல்ல வாழ்க்கையின் முடிவை நெருங்க, நெருங்க சத்துரு மெல்ல தனது முகத்தை அவர்களை நோக்கித் திருப்பத் தொடங்குகின்றான். கொஞ்சம் கொஞ்சமாக தனது விஷத்தை அவர்கள் வாழ்க்கையில் ஊற்றுகின்றான். இதனை அறிந்துகொண்டவர்கள் மாத்திரமே இத்தகைய விபரீதத்தினின்று தங்களைத் தப்புவித்துக்கொள்ள முடியும். ஒருகாலத்தில் உற்சாகமாக தனது இரட்சிப்பின் அனுபவத்தைச் சொன்னவர்கள் இன்று தனது இரட்சிப்பைக் குறித்தே பேசாமல் ஊமையாகிப்போனதற்குக் காரணம், அவர்கள் பயணத்தின் திசை மாறிப்போனதே. ஊழியர்கள் பலர் தவறியதற்கும், ஊழியங்கள் பல தடம்புரண்டதற்கும் இதுவே பிரதான காரணம். ஒரு ஸ்தாபனத்தை, ஊழியத்தை நன்றாக வளரவிட்டு, முடிவில் அதனை வளர்த்தவர்களைக் கொண்டே, அதனை வெட்டிவிடத் துடிப்பவன் சத்துரு. தவறான போதனைகள், தாறுமாறான வாழ்க்கைகள் இவை அனைத்தும், தேவ சந்நிதிக்கு முன் நமது நீதியையும், நியாயங்களையும் நிற்கக்கூடாமற் செய்துவிடும்.

நம்முடைய அழைப்பிலிருந்தும், அர்ப்பணிப்பிலிருந்தும் நாம் அகன்றுவிடக்கூடாது; வசனத்தின்படியான வாழ்க்கையிலிருந்து விலகிச் சென்றுவிடக்கூடாது. நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு (வெளி. 2:4) என்ற நிலையில் நமது வாழ்க்கையை முடிக்கக்கூடாது. ஆரம்ப கால வாழ்க்கையிலிருந்து நாம் வளர்ச்சியடையவேண்டுமேயல்லாமல், வீழ்ச்சியடைந்துவிடக்கூடாது. வேதவாசிப்பு, ஜெபம், உபவாசம், சபை கூடுதல் போன்றவைகளில் உண்டாகும் தளர்ச்சி நமது முடிவையே மாற்றி எழுதிவிடும் வல்லமை படைத்தவை. தன் பார்வைக்குச் சரியானபடி செய்யத் தொடங்கி, முடிவில் மரண வழிகளுக்குள் நுழைந்துவிட்ட ஊழியர்கள் உண்டு (நீதி. 14:12; 16:25). எத்தனையோ லட்சம் பேரை கானானுக்குள் சேர்க்கும் நம்மை, முடிவில் கானானுக்குள் நுழையவிடாதபடி தடுக்கும் சத்துருவின் தந்திரத்தைப் புரிந்துகொள்ளுவோம். நம்முடைய முடிவு நித்திய ஜீவனாயிருக்கட்டும் (ரோமர் 6:22). மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ;டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? (மத் 16:26)

தற்போது தாங்கள் வாழும் சுகபோகமான வாழ்க்கையை உலகத்தார் கண்டுவிடாதபடி, தாங்கள் பாதை மாறிவிட்டது ஜனங்களின் கண்களில் பட்டுவிடாதபடி, ஊழியத்தின் தொடக்க நாட்களில் தாங்கள் செய்த தியாகத்தையும், பாடுகளையும், சந்தித்த துக்கம் நிறைந்த அனுபவங்களையுமே மேடையில் சொல்லிக்கொண்டிருக்கின்ற ஊழியர்கள் உண்டு. ஊழியத்தின் ஆரம்ப நாட்களில், மூன்று லட்சத்தில் ஒரு வாகனம் வாங்குவதற்குக் கூட யோசித்தவர்கள், முடிவில் வாகனத்திற்காக பல லட்சங்களைக் கொட்டுவதும், ஆடம்பரமான மாளிகைகளைக் கட்டுவதும் அவர்களுக்குத் தப்பிதமாய்த் தெரிவதில்லையே. எத்தனை ஆடம்பரங்கள், எத்தனை சுகபோகங்கள், இவை அனைத்தும் ஊழியத்தினிமித்தம் நான் அனுபவிக்கவேண்டியவைகளே என்று கண்சொருகிப்போனவர்கள் அவர்கள். சுகத்தையே தேடித் தேடி சொர்க்கத்தை மறக்கடித்துவிடுகிறான் பிசாசு. எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் (பிலி 3:7,8) என்றார் பவுல். தனக்கு எத்தனையோ கிடைத்தபோதிலும், எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன் (1கொரி 6:12) என்று தகுதியான முடிவைத் தெரிந்துகொண்டவர் பவுல். அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்ளூ அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள் (பிலி 3:18,19) என்று பாதைமாறியவர்களைப் பிரித்துக் காட்டினார் பவுல்.

விசுவாசிகள் என்றும், ஊழியர்கள் என்றும், போதகர்கள் என்றும் பிறரால் அறியப்பட்டிருக்கும் பலர், பகை உணர்வோடும், பிரிவினையோடும், வேதத்திற்கு விரோதமான செயல்களோடும் வாழ்ந்துகொண்டிருந்தால், அவர்கள் முடிவோ எட்டியைப் போல கசக்கும் (நீதி. 5:4), அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை தோல்வியாய் 'முடிந்தது' என்று சத்துரு அக்களிப்பான். கிறிஸ்தவன் என்ற பெயரில் வாழ்ந்தாலும், கிறிஸ்த கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டாலும், நம்முடைய ஆத்துமா முடிவில் எங்கு இருக்கும் என்பதை இங்கு இருக்கும்போதே தீர்மானித்துக்கொள்ளுவோம். நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக எண்; 23:10) என்ற பிலேயாமின் வார்த்தைகள் நம்முடையதாகட்டும்.

உலகத்தின் முடிவைக் காட்டிலும், பிசாசின் முடிவைக் காட்டிலும் உனது முடிவு முக்கியமானது.

உலகத்தின் முடிவு நிச்சயிக்கப்பட்டது, பிசாசின் முடிவும் நிச்சயிக்கப்பட்டது, உனது முடிவையோ நிச்சயிப்பது நீதான். 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...