Skip to main content

தனித்தவர்களாக்கும் தேவைகள்

 தனித்தவர்களாக்கும் தேவைகள்


இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), நம்முடைய ஆத்துமாவை மரணத்துக்கும், நம்முடைய கால்களை இடறலுக்கும் தப்புவிக்கிறவரும் (சங். 56:13), வெள்ளம்போல் சத்துரு வரும்போது, அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுகிறவரும் (ஏசா. 59:19), தம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று தமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரும் (சங். 17:7), உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதில்லையென்று ஆணையிட்டவரும் (ஏசா. 62:8), எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள் (ஏசா 54:15) என்று சூழ்நிலையையே மாற்றுகிறவரும், நம்மோடு கூட இருந்து, நாளுக்கு நாள் நம்மை விருத்தியடையச் செய்கிறவருமாகிய (2 சாமு. 5:10) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

'வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக்  கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்' (மத். 28:18-20) என்ற ஆணையுடன் கூடிய அழைப்பு பெற்ற நாம், அதனை உதாசினப்படுத்தாமல், 'எழுந்து கட்டுவோம் வாருங்கள்' என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்கு (நெகே. 2:18) நமது கரங்களைத் திடப்படுத்தவேண்டிய காலம் இது. என்றபோதிலும், இயங்கும் நம்மை இருளின் ஆதிக்கம் ஒருபோதும் ஆக்கிரமித்துவிடக்கூடாது; நமது வாழ்க்கையின் அக்கினி அணைந்து அந்தகாரம் நம்மை மூடிவிடக்கூடாது; கனியைத் தேடிவரும் கர்த்தருக்கே நாம் கைவிரிப்போமென்றால் (மத். 21:19), இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருக்கவேண்டிய நாம் (சங். 1:3), மற்றவர்கள் ஒதுங்கும் நிழலுக்குக்கூட ஆகாதவர்களாகப் பட்டுப்போய்விடக்கூடாதே (மத். 21:20); அத்திமரத்தின் கீழிருப்பவர்களையும் (யோவான் 1:48) மற்றும் மேலிருப்பவர்களையும் (லூக். 19:4) ஆண்டவரின் கண்கள் காண்கின்றதே; மேலும், தோட்டத்தில் நடப்பட்டிருக்கும் நாம், கனிகொடுத்துக்கொண்டிருப்பவர்களின் நிலத்தையும் கெடுப்பவர்களாகக் கணக்கிடப்பட்டு, இருப்பிடத்தை விட்டே நீக்கப்பட்டுவிடக்கூடாது (லூக். 13:6,7) என்பதிலும் நாம் கவனமாயிருக்கவேண்டுமே! இதனை மனதில் கொண்டவர்களாக, நமது அனுதின ஆவிக்குரிய வாழ்க்கையை நகர்த்தவேண்டியது எத்தனை அவசியம்!

தேவனைப் பின்பற்றும் ஜனங்களுடைய வாழ்க்கையில், தேவைகளையும் மற்றும் தேவையில்லாதவைகளையும் விதைத்துவிட சத்துரு எடுக்கும் முயற்சிகள் அதிகமதிகம். அவர் தரும் ஆசீர்வாதங்களுக்கும், மற்றும் தங்களிடம் உண்டாகிப் பெருகி நிற்கும் ஆசைகளுக்கும் இடையிலான வித்தியாசங்களை இன்னமும் அடையாளம் கண்டுகொள்ள இயலாமல், ஆசைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, ஆத்துமாவையே அழிவின் விழிம்பிற்குக் கொண்டுசேர்த்துவிடும் மனிதர்கள் இன்றை நாட்களில் அநேகர். 'முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்' (மத். 6:33) என்பதுதான், இவ்வுலக வாழ்க்கைக்கு அவர் வகுத்துத் தந்த சூத்திரம்; என்றாலும், அச்சூத்திரத்தை நமது வாழ்க்கையில் சூன்யமாக்கவும், தேவனுடைய இராஜ்யத்தை விட்டு நமது பார்வையினை தேவைகளையும் மற்றும் தேவையில்லாதவைகளையும் நோக்கித் திருப்பி, அழைப்பையும் மற்றும் தரிசனத்தையும் சூன்யமாக்கவும், மற்றும் பிதாவின் சித்தத்தை விட்டு நம்மை விலகச் செய்து, இவ்வுலகத்தில் வீசும் சுழலில் நம்மைச் சிக்கவைக்கவும் மற்றும் நம்முடைய வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கவும், நம்முடைய ஆத்தும மற்றும் ஆவிக்குரிய எதிர்காலத்தைச் சிதைத்துவிடவும், வாழ்க்கையில் அவ்வப்போது சத்துரு கொண்டுவரும் இடைச்சொருகல்களுக்கு நாம் கவனமாயிருக்கவேண்டுமே! 

    'புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்' (எரே. 10:2) என்பது தேவன் நமக்கு விதித்திருக்கும் கட்டளைகளில் ஒன்று. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? (2கொரி. 6:14,15) என்பதுதான், அப்போஸ்தலனாகிய பவுலும் நமக்கு எழுதி உணர்த்தும் அறிவுரை; எனினும், இதனை உணராது உருவாக்கும் இணைப்பினாலேயே, இருள் அநேகருடைய வாழ்க்கையைக் கவ்விக்கொண்டது; இதற்கு நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். 

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத். 5:14-16) என்பது நமக்கான இயேசு கிறிஸ்துவின் போதனையல்லவா! அதுமாத்திரமல்ல, இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசா. 9:2) என்பதுதானே இயேசு கிறிஸ்துவின் பிறப்பினைக் குறித்தும் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம். எனவே, நம்மைச் சுற்றிலும் இருளிலிருக்கும் ஜனங்களுக்கு, நம்முடைய அகத்திலிருந்து மற்றும் அகலிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கவேண்டுமே தவிர, அவர்களுடைய அந்தகாரம் நமது அகத்தை மற்றும் அகலை ஒருபோதும் ஆக்கிரமித்துவிடக்கூடாது அல்லது அணைத்துவிடக்கூடாது; எனவே,  'உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு' (லூக். 11:35) என்ற எச்சரிப்பின் சத்தம் எப்பொழுதும் நம்முடைய செவிகளில் ஓயாது தொனித்துக்கொண்டேயிருக்கட்டும். தங்களுக்குள் பற்றியெரியும் தீயினால் இருளை வெளிச்சமாக்கப் புறப்பட்ட அநேகர், தங்கள் திரியை தூண்டிவிடவும் மற்றும் தீண்டியேற்றவும் தவறினால், அந்தகாரத்திற்குள் அவர்கள் அகப்பட்டுவிடக்கூடும்; இது நமது முதலை (Asset) இழக்காதிருக்க முதலில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சத்தியம். 

இரண்டாவதாக, 'ஒரு அங்கத்தின் இருள்' முழு சரீரத்தையும் மற்றும் அதன் அகத்தையும் இருளுக்குள் தள்ளிவிடக்கூடும். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! (மத். 6:22,23) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள், 'சரீரத்தின் ஒரு அங்கத்தினால், முழு சரீரமும் இருளடைந்துவிடக்கூடும்'; அதாவது, 'நம்முடைய வாழ்க்கையின் ஒரு பாவத்தினால் முழு வாழ்க்கையும் நரகத்திற்குச் சென்றுவிடக்கூடும்' என்ற நீதியின் செய்தியைத்தானே காதுகளில் எடுத்துரைக்கின்றது. 

'நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போது, அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை' (எசே. 3:20) என்ற வசனத்தின் பிடியில் நமது வாழ்க்கை அகப்பட்டுவிடக்கூடாதே! அப்படியிருக்க, இருளான ஒரு அங்கத்தைக் குறித்த கவலை நம்மில் எத்தனை பெரிதாயிருக்கவேண்டும். 'உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்' (மத். 5:30) என்ற வசனமும், 'அந்த ஒரு வலது கையினால், முழு சரீரமும் நரகத்தில் தள்ளப்பட்டுவிடக்கூடும்' என்ற செய்தியைத்தானே  சுமந்துவருகின்றது. 

'யூதாகோத்திரத்துச் சேராகுடைய குமாரனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது (யோசு. 7:1) என்றும், இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினபோது, அதனால் 'இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது' (எண்; 25:1,3) என்றும், இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்திலே அழைத்துக்கொண்டு வந்தான். அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து, இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது 'இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை' நின்றுபோயிற்று (எண்;. 25:6-8) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. அதுமாத்திரமல்ல, இஸ்ரவேலைத் தொகையிடும்படியாக தாவீது ஏவப்பட்டபோது, கர்த்தர் 'இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கிக் குறித்தகாலம் வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்'; அதினால் தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள் (2சாமு 24:15) என்றும் வாசிக்கின்றோமே; தாவீது என்ற ஒருவன் தவறு செய்தபோதிலும், முழு தேசத்தையும் அது பாதித்துவிட்டதே! 

''செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்' (பிர. 10:1) என்ற சாலொமோனின் வார்த்தைகளும், வலியுறுத்துவது இதைத்தானே! பிரியமானவர்களே! அவரை அறியாத அங்கங்களின் ஆளுகை அதிகரிக்குமென்றால், முழு சரீரத்தையும் ஒருநாள் அது அந்தகாரத்திற்குள் வழிநடத்திவிடக்கூடும். நம்முடைய தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையில், ஐக்கியத்தில், ஊழியத்தில், சபையில்  காணப்படும் வெளிச்த்தை இருளாக்க சத்துரு எடுக்கும் முன்முயற்சிகளை அடையாளம் கண்டுகொள்ளுவோம்! ஒன்றன் பின் ஒன்றாக, ஒற்றை ஒற்றை விதைகளாக விதைத்து, முழு வயலையுமே களைகளாக்கத் துடிக்கும் அவனது (மத். 13:27) தந்திரத்தைத் தெரிந்துகொள்ளுவோம்! 

மூன்றாவதாக, புறஜாதிகளின் வழிகள்; நமது வாழ்க்கையில் இருளைக் விதைத்துவிடும் என்பதையும் நாம் அறிந்துகொள்வது அவசியம். தேவ ஜனமாகிய நம்முடைய வாழ்க்கை பரதேசியைப் போன்றதுதான்; ஆனால், புறஜாதியாரைப் போன்றது அல்ல; நம்முடைய வாழ்க்கையின் வித்தியாசம் வழிப்போக்கருக்கும் தெரியவேண்டும். 'இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரிக்க அழைக்கப்பட்டவர்களல்ல நாம்' (ரோமர் 12:2). 'அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல (எஸ்தர் 3:8) என்று சொல்லப்பட்டதைப் போல, நம்மைக் குறித்தும் சொல்லப்படவேண்டுமே. 

மேலும், 'எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளக்கடவீர்கள். எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான்' (தானி. 3:5,6) என்ற ஆணை, அரண்மனையிலிருந்து பிறந்தபோதிலும், சாத்ராக், மேஷhக், ஆபேத்நேகோ என்பவர்களது வாழ்க்கையை அது அசைக்கவில்லையே! (தானி. 3:16,17) 

பிரியமானவர்களே! நம்மைச் சுற்றியிருக்கும் 'புறஜாதிகளின் மார்க்கங்கள்', ஒருபோதும், தேவனுக்கு நம்மை புறமுதுகு காட்டச் செய்துவிடக்கூடாது; சூழ்நிலைகள் எந்நிலையிலும் நம்முடைய வாழ்க்கையை தேவனுக்குத் தூரமாக்கிவிடக்கூடாது. கர்த்தர் எசேக்கியேல் தீர்க்கதரிசியை நோக்கி, 'மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே' என்று சொன்னதோடு, பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் அவனுடனே சொல்லி, அவனைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனபோது, இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள் (எசே. 8:12-14). அதுமாத்திரமல்ல, எசேக்கியேல் தீர்க்கதரிசியை கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனபோது, 'இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் 'முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க்' கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள் (எசே. 8:16) என்று வாசிக்கின்றோமே; இத்தகைய நிலைக்கு நம்முடைய வாழ்க்கையும் தள்ளப்படாதிருக்கவேண்டுமென்றால், புறஜாதிகளின் மார்க்கங்களுக்கு நாம் விலகியிருக்கவேண்டுமே! 

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, 'எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்' என்கிறார்கள் (யாத். 32:1). எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்கள் தேவனால் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுடைய இருதயத்தில், புறஜாதியாரின் மார்க்கங்கள் ஒட்டியிருந்தன என்பதைத்தானே இது வெளிப்படுத்துகின்றது. 'எகிப்திய தெய்வமான கன்றுக்குட்டியின் உருவம்', இன்னமும் அவர்கள் மனதை விட்டு விலகவில்லையே. தங்கள் விருப்பத்திற்கு உருக்கொடுக்கும் சிற்பியாகவும் ஆரோனை அவர்கள் மாற்றிவிட்டார்களே. அதுமாத்திரமல்ல, 'இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே' என்று அழைத்துக்கொண்டுவந்தவரை மறுதலிக்கவும் தொடங்கிவிட்டார்களே; போதாததற்கு, ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் 'கர்த்தருக்குப் பண்டிகை' என்றும் கூறுகின்றான் (யாத். 32:4,5); எத்தனை பரிதாபம்! எகிப்திலிருந்து தான் புறப்படச்செய்த இந்த ஜனத்தின் இச்செயல், தேவனை எத்தனை வேதனைக்குள்ளாக்கியிருக்கும்! 'ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டுசென்றதைப் போல' (ஆதி. 31:19), கர்த்தருக்குப் பிரியமில்லாதவைகளைத் தூக்கிக்கொண்டு செல்லுவோர் இன்றும் உண்டே! 

எகிப்தின் அடிமைத்தனத்தில் சிக்கியிருந்த மற்றும் எகிப்தின் அதிகாரவர்க்கத்தினரால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டிருந்த தன்னுடைய ஜனத்தை, மோசேயை அழைத்து அனுப்பி, அவர்களை விடுவித்து, எகிப்து தேசத்தை விட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார் தேவன்; அதன் அடையாளமாக 'பஸ்கா'வையும் ஆசரிக்கும்படிச் செய்தார். வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள் (யாத். 12:3) என்றும், அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம் என்றும், அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள் (யாத். 12:5,6,8) என்றும் கர்த்தர் சொன்னபோது, இஸ்ரவேல் ஜனங்களோ, எகிப்திலிருந்து தாங்கள் வெளியேறினதை, 'சரீரப்பிரகாரமான விடுதலையாக' மாத்திரமே பார்த்தனர். அத்துடன், அதற்கு அடையாளமாக அவர் ஆசரிக்கச் செய்த 'பஸ்கா' வையும், வெறும் ஆகாரமாக மாத்திரமே பார்த்தனர். எகிப்து என்னும் அடிமைத்தனத்திலிருந்து, விலையேறப்பெற்ற தங்கள் ஆத்துமா விடுதலைசெய்யப்படுவதற்கான அடையாளம் அது என்பதை உணர்ந்துகொள்ள இயலாதவர்களாகவும், ஆத்தும விடுதலையோடு அதனை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாதவர்களாகவுமே அவர்கள் காட்சியளித்தனர். 

சரீர விடுதலையை மாத்திரமே கண்டு சந்தோஷப்பட்டவர்களாக, தங்கள் பயணத்தைத் அவர்கள் தொடர்ந்ததினாலேயே, பயணத்தின்போது, 'நிரந்தர சந்தோஷத்தை' தங்கள் உள்ளத்தில் அவர்களால் உணர முடியவில்லை, வழிகளில் அனுபவிக்கவும் இயலவில்லை. சரீரப்பிரகாரமான தங்கள் வாழ்க்கையில், சற்று குறைவு உண்டானதும், உடனே தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்கத் தொடங்குகின்றனர். 'நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே' என்பதுதான் அவர்களது குரலாயிருக்கிறது. (யாத். 16:3) 

இன்றைய நாட்களிலும், சரீரப்பிரகாரமாக உணரும் விடுதலையை, ஆத்துமாவில் உணராத மக்கள் எத்தனை பேர்? என்னுடைய வாழ்க்கையில், கர்த்தர் இவைகளைச் செய்தார், அற்புதங்களைச் செய்தார், நோய்களைக் குணமாக்கினார், ஜெபத்திற்குப் பதில் கொடுத்தார், மரணப் படுக்கையை மாற்றினார், பிசாசின் பிடியிலிருந்து விடுவித்தார் என்று சபையார் அறிய சாட்சி கூறுகின்றபோதிலும், இன்னமும் அநேகருடைய சரீரப்பிரகாரமான சாட்சி அவர்களது ஆத்துமாவைச் சென்றடையவில்லையே! ஆவிக்குரிய வாழ்க்கையில் எதிரொலிக்கவில்லையே! சரீரத்தின் பாடுகளிலிருந்து, உபத்திரவங்களிலிருந்து, தேவைகளிலிருந்து இத்தகையோர் விடுதலையடைந்து வெளியேறியது உண்மைதான்; என்றபோதிலும், அவர்களது ஆத்துமா இன்னமும் தேவனண்டை வந்து சேரவில்லையே! பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் தேவன் அருளும் ஒவ்வொரு விடுதலைக்கும் ஆத்துமாவுடன் தொடர்பு உண்டு; இதனை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது.  

மேலும், தேவைகளையே நோக்கிய பயணங்கள்;, நம்மை தேவனுக்கு தூரமாக்கி, நம்முடைய வாழ்க்கையை இருளின் ஆதிக்கத்திற்குள் அடைத்துவிடக்கூடாது. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ (ஆதி. 12:1) என்று அழைப்போடு கூடிய கட்டளையைக் கொடுக்கின்றார்; ஆபிரகாமும் அதற்கு அடிப்பணிந்து உடனே புறப்பட்டுச் செல்லுகின்றான் (ஆதி. 12:4). கானான் தேசத்திற்குப் போய்ச் சேர்ந்ததும், 'கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: 'உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்' என்று அவனது பயணத்தின் நிறைவையும் உறுதிப்படுத்துகின்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான் (ஆதி 12:7,8). என்றபோதிலும், அத்தேசத்திலே பஞ்சம் உண்டானபோது, தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபோது, ஆபிரகாமின் இருப்பிடத்தை அது அசைத்துவிட்டது; தான் போட்டிருந்த கூடாரத்தையும், கட்டியிருந்த பலிபீடத்தையும் விட்டு, எகிப்து தேசத்திற்கு நேராக அவனைப் பயணிக்கும்படிச் செய்துவிட்டது (ஆதி. 12:10). சரீரப்பிரகாரமான குறைவு வந்ததும், ஆபிரகாமின் வாழ்க்கையில் சறுக்கல் உண்டாயிற்றே! விளைவு, மனைவியையே பணயம் வைக்கும் நிலைக்கு அவனது பயணம் மாறிப்போனது; இது எத்தனை ஆபத்தானது! தேவைகள் நம்மை ஒருபோதும் இருளுக்கு நேராக நடத்திவிடக்கூடாது.   

நகோமியின் குடும்பத்தின் நிலையும் இதுதானே! நியாயாதிபதிகள், நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான். யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள் (ரூத் 1:1,2) என்று வாசிக்கின்றோமே. நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கும் மற்றும் மக்லோன், கிலியோன் என்னும் அவளுடைய இரண்டு குமாரரும் இறக்கும் வரை (ரூத் 1:3-5), நகோமியின் வாழ்க்கை மோவாபிலேயே கழிந்துபோயிற்றே! குடும்பம் காப்பாற்றப்படவேண்டும் என்று சரீரப்பிரகாரமான தேவைகளை நோக்கிக் சென்றவர்களின் நிலை, 'தனித்தவளானேன்' (ரூத். 1:5) என்று சொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதே. இத்தகைய சரீரத் தேவைகளை நோக்கிய பயணத்தினால், ஒருபோதும் நம்முடைய வாழ்க்கையை இருளாக்கிவிடாதபடிக்கும் கர்த்தர் நம்மைக் காப்பாராக! 


இருளின் ஆதிக்கம் இதயத்தின் ஒளியை அணையச் செய்யும்

இயங்கும் நம் வாழ்க்கையையும் இறுதியிலே முடங்கச் செய்யும்

புறஜாதிகளின் மார்க்கம் பிதாவுக்குப் புறமுதுகுக் காட்டச் செய்யும் 

போர்முனையில் நின்றாலும் நம்மை புறமுதுகிட்டே ஓடச் செய்யும்

தேவைகளைத் தேடும் நாட்டம் நம்மில் தேவனைக் குறையச் செய்யும்

தேவைகளையே தேடித் தேடி இன்னும் தூரமாகப் போகச் செய்யும்


அங்கங்கள் இருளடைந்ததால், ஆலயத்திற்கே சுகம் இல்லை

அவயவத்தின் தவறொன்றினால் சரீரத்திலே வெளிச்சம் இல்லை

விடுதலையடைந்தும் இன்னும் வித்தியாசமான வாழ்க்கை இல்லை

வெறும் மாம்சீக நினைவினாலே ஆத்துமாவிலும் விடுதலை இல்லை

தேவனைக் காட்டிலும் தேவைகள் ஒன்றும் பெரியது இல்லை  

தேவைகளின் பின்சென்றால் 'தனித்திருப்பதுதான்' இறுதி எல்லை


அன்பரின் அறுவடைப் பணியில்

P.  J. கிருபாகரன்


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...