சொட்டுத் தண்ணீரையும்,
விட்டுத் தரமாட்டேன்
தேவனை நமக்கு முதலில் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும், அதன் பின்பு நமது தேவைகளைச் சந்திக்க முற்படவேண்டும். மனந்திரும்புதல் முதன்மையானது, மனம்விரும்புதல் பின்பானது. பாவிகளாகிய நமக்காக தன்னுடைய சொந்தக் குமாரனையே விலைக்கிரயமாகக் கொடுத்த தேவன், அந்த விலையினால் நாம் வாங்கப்படாதவரையில் நம்முடைய பிதாவாகப் போவதில்லை. எனவே, தேவனோடு இணைக்கப்படுங்கள்.
நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே (ரோம 5:10). இரட்சிப்புக்கு முன் வரும் ஒப்புரவாகுதலை நாம் அறிந்துகொள்ளவேண்டும். பவுலும் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில், 'இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஓப்புவித்தார்' (2கொரி 5:19) என்று ஒப்புரவாகுதலின் மேன்மையை முன்நிறுத்துகின்றார். 'தேவனோடே ஒப்புரவாகுங்கள்' (2கொரி. 5:20) என்பது பவுலின் போதனையாகவும் இருந்ததே. பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார் (எபே 2:16). இயேசு மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலேயே நம்மை பிதாவோடு ஒப்புரவாக்கினார் (கொலோ. 1:21).
தேவனைத் தேடும் நமது வாழ்க்கையில் முதன் முதல் உண்டாகவேண்டிய நிகழ்வு இதுவே. தேவனோடு ஒப்புரவாகாமல், தேவனுடையவைகள் எவற்றிலும் நமக்கு பங்கில்லை. இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று (கொலோ 1:20). தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோம 8:32). ஆனால், ஜனங்களோ தேவனோடு ஒப்புரவாகாமல், தேவனுடையவைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பங்கொள்கின்றனர். தேவனோடு ஒப்புரவாகாமல் தங்கள் தேவைகளை தேவனைக் கொண்டு பூர்த்திசெய்ய விரும்புகின்றனர். இவர்களது இந்த முயற்சியில் தோல்வியே எஞ்சி நிற்கிறது. 'கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுகு;குத் திறக்கப்படும்' (மத். 7:7) என்று இயேசு சொல்லும் செயல், தேவனோடு ஒப்புரவானபின்பு செய்யப்படவேண்டியது. தேவனை ஏற்றுக்கொள்ளாமல், தேவனுடைய வீட்டில் உள்ளவைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றால் அது நியாயமா?
ஐசுவரியவான், லாசருவின் சம்பவத்திலிருந்து ஒன்றை நாம் தெளிவாகக் கற்றுக்கொள்ள முடியும். ஐசுவரியாவான் மரித்தான், லாசருவும் மரித்தான். ஐசுவரியவான் அடக்கம்பண்ணப்பட்டான் என்று சொல்லும் வேதம், லாசருவோ தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான் என்று வர்ணிக்கிறது (லூக். 16:22). ஐசுவரியவான் தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டபோது, ஆபிரகாமை தகப்பன் என்று சொல்லும் ஸ்தானத்தை ஐசுவரியவான் இழந்திருந்தபோதிலும், 'தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினி ஜுவாலையில் வேதனைப்படுகிறேனே' என்று சொன்னான் (லூக். 16:23-25). பாதாளத்தில் இருந்துகொண்டு, பரலோகத்தில் உள்ள தண்ணீரைக் கேட்கிறான் ஐசுவரியவான். இது இந்த ஐசுவரியவானின் நிலை மட்டுமல்ல, இன்றைய அநேகரின் நிலை. தேவனுக்கு விரோதமான வாழ்க்கை, தேவனுக்கு விரோதமான வார்த்தை, தேவனுக்கு விரோதமான பாவங்கள் என்று பாதாளத்தின் வழியில் நின்றுகொண்டு, பரலோகத்திலிருக்கும் தேவனை நோக்கி அவர்கள் கூப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். பார்த்தால், ஜெபம் செய்வது போலத்தான் நமக்குக் காணப்படும், இடைவிடாமல் ஜெபிப்பது போலத்தான் தெரியும், ஆனால் அவர்களது இருப்பிடமோ தேவனுக்குத் தூரமானது. பரலோகத்தின் சொட்டுத் தண்ணீரைக் கூட பாதாளத்திற்கு விட்டுத் தராதவர் என் தேவன்;அல்லேலூயா! ஆம், அவர் வைராக்கியமுள்ளவரே, பாதாளத்திற்கு மனம் இரங்காதவரே, தன் உடமைகளில் ஒன்றையும் பாதாளத்திற்குக் கொடுக்க விரும்பாதவரே. ஆபிரகாமின் மடியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் ஐசுவரியவானுக்குச் கொடுக்கப்பட்டிருந்தால், மறுபுறம் பரலோகத்திலிருந்து பாதாளத்திற்கு தண்ணீர் சப்ளை நடக்கிறது என்று அர்த்தமாகிவிடுமல்லவா? இது எத்தனை கொடுமையான செயல், இதனைச் செய்யுமளவிற்கு என் தேவன் தரம்குறைந்துவிடுவாரோ.
உலகத்தில் வாழும் நாட்களில், தேவனோடு ஒப்புரவாகி, எத்தனை வேண்டுமென்றாலும் அவரிடத்தில் கேளுங்கள், குமாரனையே கொடுத்தவர் உங்களது வேண்டுதலுக்கும் செவிகொடுத்து உங்களைத் திருப்தியாக்கப் போதுமானவர். ஆனால், பாதாளத்தின் வழியில் நின்றுகொண்டு தயவுசெய்து பரிசுத்தமான தேவனை கொடும், கொடும் என்று தொந்தரவு செய்யாதிருங்கள்; அது நிச்சயம் உங்களுக்குக் கிடைக்காது; பின்னர், நீங்கள் பெற்றுக்கொள்ளாததினால், தேவன் என்னைக் காணவில்லை என்று அவரைச் சாடாதிருங்கள். பாதாளத்தின் வழியில் நின்றுகொண்டே கேட்டுக் கேட்டுக் களைத்துக் கிடக்கும் ஜனக்கூட்டம் திரளாகிவிட்டது. உங்களுக்குத் தண்ணீர் கொடுத்தால், பாதாளத்திற்கு தேவன் தண்ணீர்கொடுத்ததாகக் கணக்காகிவிடும். பரலோகத்தின் பொக்கிஷத்தை பாதாளத்திற்குக் கேட்காதிருங்கள். தேவனோடு ஒப்புரவாகுதலே முற்படி, முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்ற இயேசுவின் போதனையை எத்தனை முறை நாம் கேட்டிருப்போம். ஆம், இதுதான் வரிசை, இதனை மாற்ற முற்படவேண்டாம். நீங்கள் பரலோகத்தின் வழிக்குள் வந்துவிட்டால், அவரது விழி உங்கள் மேலேதான் இருக்கும், சொட்டுத் தண்ணீர் அல்ல, சொர்க்கமே உங்களுக்குத் திறந்து கிடக்கும்.
அப்படியே, பாவியின் காணிக்கையையும் பரலோகத்திற்குள் விடாதவர் என் தேவன். எனவே, நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து (மத் 5:23,24) என்றார். அங்கீகரிக்கப்படாத காணிக்கைகளை ஊழியங்களுக்கும், ஊழியர்களுக்கும், சபைகளுக்கும் நாம் கொடுக்கலாம்; ஆனால், பரலோகத்தின் கணக்கில் அவைகள் வரவு வைக்கப்படுவதில்லை. கொடுப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அதனைக் குறித்துக் கவலை கொள்ளாமல் கைகளில் வாங்கிக்கொள்ளும் ஊழியர்களும், ஊழியங்களும் பெருகிவிட்டனர். ஒப்புரவானபின்னர், துப்புரவான காணிக்கை மாத்திரமே பரலோகத்தின் பொக்கிஷத்தில் நுழையும். பரலோத்திலிருந்து பாதாளத்திற்கும் எதுவும் கொடுக்கப்படுவதில்லை, பாதாளத்தின் வழியிலிருப்போரிடமிருந்து பரலோகத்திற்கும் எதுவும் வாங்கப்படுவதில்லை; தேவனுக்குக் கொடுத்துக்கொண்டேயிருக்கின்றோம் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளவேண்டாம். பரலோகத்திற்கும் பாதாளத்திற்கும் போக்குவரவும் இல்லை, கொடுக்கல் வாங்கலும் இல்லை.
Comments
Post a Comment