Skip to main content

ஆஸ்தியா? ஆசீர்வாதமா?

ஆஸ்தியா? 

ஆசீர்வாதமா?

(


கடக்க முடியாத பாதைகளில் நம்மை கைவிடாதவரும் (ஏசா. 41:17), நடக்க முடியாத இடங்களில் நம்மை சுமந்து செல்கிறவரும் (உபா. 1:31), தினம் தினம் வார்த்தைகளினால் நம்மை வழிநடத்துகிறவரும் (ஏசா. 30:21), சத்தியத்தை நமது கரங்களிலேயே கொடுத்து நம்மை சத்துவமடையச் செய்கிறவரும் (ஏசா. 40:29) மற்றும் சத்துருவோடு போராடி வெற்றிபெறச் செய்கிறவருமாகிய (எபே. 6:14) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

'அலைகள்' என்ற பெயரில் வியாதிகள் நம்மை அவ்வப்போது அச்சுறுத்தினாலும், அலைகளின் மேல் நடந்து வருபவரும்  (மத். 14:25), பேதுருவை நடக்கச் செய்ததுபோல நம்மையும் நடக்கச் செய்வதுடன் (மத். 14:29), அமிழும்போது தம் கரம் நீட்டி நம்மை தூக்கியெடுப்பவரும் (மத். 14:31) உடன் இருக்க, வழிகளைக் குறித்து நாம் கவலைகொள்ளாமல், விழிகளை அவர் மேலேயே பதித்திருப்போமென்றால், முன் இருக்கும் தடைகளைக் குறித்தும், பின் தொடரும் சத்துருவைக் குறித்தும், எதிர் நிற்கும் தேவைகளைக் குறித்தும் நாம் கலக்கமடையாமல் இலைக்கையே நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்போம். அப்படிப்பட்ட அனுபவத்திற்குள் உங்களையும் என்னையும் கர்த்தர் வழிநடத்துவாராக! 

இன்றைய நாட்களிலும், உலக ஆஸ்திகளுக்கும் மற்றும் பரலோக ஆசீர்வாதங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தினை உணராததினாலேயே, அநேகர் இன்னும் ஆசீர்வாதங்களை மறந்து, ஆஸ்திகளை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றனர். ஆவிக்குரிய உலகிலும், ஆசீர்வாதங்கள் என்ற போர்வையில், ஆஸ்திகளே பிரசங்கபீடங்களிலிருந்தும் கூவி அறிவிக்கப்படுகின்றது. ஐசுவரியத்தை மட்டும் கணக்கில் கொண்டே, ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் ஆசீர்வதிக்கப்படாதவர்கள் என்றும் வித்தியாசப்படுத்தி, வேறுபிரித்துப் பார்க்கும் மனிதர்களும் பெருகிவரும் காலம் இது. ஆஸ்திகளே ஆசீர்வாதங்கள் என்றே தங்கள் அறிவு முழுவதையும் நிரப்பிக்கொண்ட மனிதர்கள், ஆண்டவரது ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கும் தங்களை தூரமாக்கிவிடுவது வேதனையானதே. எனவே, உலக ஆஸ்திகளுக்கும் மற்றும் ஆத்தும ஆசீர்வாதங்களுக்கும் இடையிலான போராட்டத்தினை சற்று விளக்க விரும்புகிறேன்; ஆவியானவர் உதவிச் செய்வாராக. 

ஒருமுறை, இயேசு கிறிஸ்து வழியிலே சென்றுகொண்டிருந்தபோது, 'நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும்' (மாற்கு 10:17) என்று கேட்டான் ஒரு மனிதன். வியாதிகள் நீங்கவேண்டும் என்றோ, பிரச்சனைகள் தீரவேண்டும் என்றோ, ஆசீர்வாதங்கள் வேண்டும் என்றோ அவன் அவரிடத்தில் வராமல், குறிப்பிட்டு 'நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளவேண்டும்' என்ற எண்ணத்திலேயே அவரைத் தேடி ஓடிவந்தான். நித்திய ஜீவனைக் குறித்து இத்தனை வாஞ்சையாயிருந்த அந்த மனிதனை இயேசு கிறிஸ்து நோக்கி: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்று சொன்னபோது, 'போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்' (மாற்கு 10:19,20) என்று உடனே மாறுத்தரம் சொன்னான் அவன். இயேசு கிறிஸ்துவின் பதிலினால் திருப்தியடைந்தவனாகவும், எப்படியும் நான் நிச்சயம் நித்திய ஜீவனுக்குள் பிரவேசித்துவிடுவேன் என்ற மனதுடனும் இந்த வார்த்தைகளை அவன் அவரிடத்தில் உடனே சொல்லியிருக்கக்கூடும். என்றபோதிலும், அதனைத் தொடர்ந்து, 'நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா' என்று இயேசு கிறிஸ்து சொன்னபோது, அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான் (மாற்கு 10:22) என்று வாசிக்கின்றோமே. 

'தரித்திரருக்குக் கொடு' என்று இயேசு கிறிஸ்து சொன்னது ஒருபக்கமே என்றாலும், 'ஆஸ்திகளை எனக்காக விட்டுவிட்டு வா' என்ற மறுபக்கத்திற்கும் கீழ்ப்படிய அவன் மனம் மறுத்துவிட்டதே. மிகுந்த ஆஸ்திகளால் கிடைக்கும் உலக சந்தோஷத்தை விட்டுவிட்டு, சிலுவையை எடுத்துக்கொள்ள அவன் சம்மதிக்கவில்லையே. கற்பனைகளையெல்லாம் சிறுவயது முதல் கைக்கொண்டிருந்தும் (மாற்கு 10:20), கர்த்தருக்குக் கீழ்ப்படியவோ அவனுக்கு மனதில்லையே. இத்தனையாய், கற்பனைகளின்மேல் கரிசனையாயிருக்கும் அவனிடத்தில், 'அன்புகூர்ந்து' அவர் சொன்ன ஆலோசனையினையும் (மாற்கு 10:21) அவன் ஏற்றுக்கொள்ளவில்லையே. 'போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும்?' என்ற கேள்வியை மட்டுமே இயேசு கிறிஸ்துவினிடத்தில் கேட்டுவிட்டு, 'தரித்திரர்களுக்குக் கொடுக்காமலிருப்பது குறை' என்பதையும், 'தன்னிடத்திலிருக்கும் பொக்கிஷத்தை பரலோகத்தில் (அதாவது ஆண்டவரது கணக்கில்) சேர்க்கவேண்டும்' என்ற தரிசனத்தையும் இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டியபோது அவன் ஒத்துக்கொள்ளவில்லையே. ஆஸ்திகளால் தான் நிறைவாயிருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டிருந்த அவன், தன்னுடைய வாழ்க்கையில் காணப்படும் குறைவான பகுதியை சரிசெய்ய முயற்சிக்காமலும், அதை சரிசெய்து, எப்படியாகிலும் நித்திய ஜீவனுக்குள் அவனை பிரவேசிக்கச் செய்துவிடவேண்டும் என்ற  இயேசு கிறிஸ்துவின் விருப்பத்தையும் புரிந்துகொள்ளாமலும், எப்படி  ஓடி வந்தானோ, அப்படியே திரும்பிச் சென்றுவிட்டானே. சாதகமான விடை வராததினால், அவரிடமிருந்தே விடைபெற்றுவிட்டானே; எத்தனை பரிதாபம். 'மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்' (1 சாமு. 16:7) என்ற வசனத்தின்படி, 'ஆஸ்திகளின் மேல் பற்றுதலாயிருக்கும்' அவனுடைய இருதயத்தை மாற்றி, நித்திய ஜீவனுக்கு நேராக திசை திருப்ப இயேசு கிறிஸ்து எடுத்த முயற்சியில் அவன் தோற்றுப்போனானே. 'திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்' (நீதி. 27:7) என்ற சாலொமோனின் வார்த்தையின்படி, இவ்வுலக ஆஸ்திகளினாலும், செல்வங்களினாலும், பொருட்களினாலும் திருப்தியடைந்திருந்த அவன், 'தேன்கூடாகிய நித்திய ஜீவனை' தனது காலுக்குக் கீழாக்கிப்போட்டவனாக, பிதாவை விட்டே பிரிந்து சென்றுவிட்டானே.  

ஆஸ்திகளால் நிறைந்திருந்து ஆண்டவரை இழந்து நின்ற மற்றுமொரு மனிதனையும் வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான் (லூக்கா 16:19); என்றாலும், அவனது வீட்டின் வாசலருகே கிடந்த தரித்திரனாகிய லாசருவுக்கு, தன் கைகளினால் எதையாகிலும் கொடுத்தான் என்று வேதம் நமக்கு சுட்டிக்காட்டவில்லை. எத்தனை பெரிய ஐசுவரியாவன்! இந்த ஐசுவரியவான் வீட்டு வாசலில் கிடந்தால் நாள்தோறும் நிச்சயம் அவர்களிடமிருந்து ஏதாகிலும் உண்பதற்குக் கிடைக்கும் என்று தரித்திரனாகிய லாசரு நினைத்திருக்கக்கூடும். என்றாலும், 'மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று' (லூக்கா 16:21) என்ற வார்த்தைகள், 'ஐசுவரியவான் வீட்டார் சாப்பிடும்போது, கீழே சிந்தும் எச்சில்களைக் கொட்டும் இடத்தில் அவன் இருந்திருக்கக்கூடும்' என்பதைத்தானே நமக்கு வெளிக்காட்டுகின்றது; அவனோடு கூட இருக்கும் நாய்கள், ஐசுவரியவான் வீட்டு எச்சில்களைச் சாப்பிடும்படியாக வழக்கமாக அங்கு வருபவைகளாக இருக்கக்கூடுமே. தனது வீட்டில் மீந்ததையும், சிந்தியதையும் கூட தரித்திரனாகிய லாசருவுக்கு அந்த ஐசுவரியவான் நேரடியாக, தன் கரங்களினால் கொண்டுவந்து கொடுக்கவில்லையே. தரித்திரர்களைக் குறித்து எத்தனையாய் கரிசனையற்றவன் அவன். ஆஸ்திகள் திரளாயிருந்தும், ஐசுவரியத்தில் சுகித்திருந்தும், தரித்திரனாகிய லாசருவைக் குறித்து சற்றும் கரிசனைகொள்ளாமல், 'தன்னுடைய ஆஸ்தி தனக்கே' என்ற எண்ணத்தில் வாழ்ந்த அவன் நித்திய ஜீவனுக்கும், பிதாவுக்கும் தூரமாகிவிட்டானே. (லூக்கா 16:23)

மேலும், இயேசு கிறிஸ்துவின் 'இரண்டு குமாரர்களைப் பற்றிய போதனை' ஆஸ்திகளால் ஆட்கொள்ளப்பட்டு, பிதாவை விட்டுப் பிரிந்து செல்வதற்கான பல காரணங்களை இன்னும் தெளிவாக நமக்கு விளக்குகின்றதல்லவா. இரண்டு குமாரர்களுடன் இனிமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் தகப்பன். போதுமான ஆஸ்தியும், போஜனத்திற்கு ஆதாரமாக வயலும் உடையவர்கள். ஒரே வீட்டில் உண்டு, உழைத்து, உறவாடி, உறங்கி தங்கள் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தவர்கள்; என்றபோதிலும், குடும்பத்திலிருக்கும் இளைவனின் மனதிலோ, 'தகப்பனிடத்தில் இருக்கும் ஆஸ்திகளைக் கொண்டு துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணவேண்டும்' என்ற எண்ணம் (லூக்கா 15:13) கொஞ்சம் கொஞ்சமாகத் துளிர்விடத் தொடங்குகின்றது. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும் (யாக்கோபு 1:14,15) என்று யாக்கோபு எழுதுகிறதுபோல, சிந்தையில் படிந்திருக்கும் கறையினை செயல்வடிவமாக்க அவன் 

விரும்பியபோது, அவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான் 

(லூக்கா 15:12). பங்கினைப் பெற்றுக்கொண்ட அவன்,  சில நாட்களுக்குள்ளே எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தகப்பனை விட்டுப் பிரிந்து, தூர

தேசத்துக்குப் புறப்பட்டுப்போய்விட்டான். 

எனவே, முதலாவதாக, தகப்பனது வீட்டில், தகப்பனோடுகூட நாம் வாழும்போது, ஆஸ்திகளைக் குறித்து நமது சிந்தையில் படியத் தொடங்கும் சிறு சிறு விருப்பங்களைக் குறித்தும் நாம் கவனமாயிருக்கவேண்டும்; இல்லையேல், அது தகப்பனது வீட்டிலிருந்து நம்மை தனிமைப்படுத்திவிடக்கூடும். யூதாஸ்காரியோத்தின் சிந்தை முன்னமே கறைபட்டிருந்தது, 'அவன் திருடனானபடியினால்' (யோவான் 12:6) என்று வேதம் வெளிப்படையாகப் பேசுகின்றதே. பணத்தின் மேல் அவனுக்கு இருந்த ஆசை வளர்ந்து வளர்ந்து, 'நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்' (மத்தேயு 26:15) என்று முப்பது வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டு, இயேசு கிறிஸ்துவை விட்டும், சக சீஷர்களை விட்டும் பிரிந்து, சத்துருக்களோடு சகவாசம் கொள்ளும் அளவிற்கு அவனைத் தனிமைப்படுத்திவிட்டதே. 

  இரண்டாவதாக, தகப்பனோடு கூட இருப்பதனைக் காட்டிலும், ஆஸ்திகளின் மீதான ஆசையே இளையகுமாரனின் இதயத்தை முழுவதும் அடைத்திருந்தது. தகப்பனோடு இருக்கும் உறவினைக் காட்டிலும், ஆஸ்திகளில் தனக்கிருக்கும் உரிமையின் உயில் சீக்கிரத்தில் தன் பெயருக்கு எழுதப்படவேண்டும் என்ற குரலே அவனது மனதில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. 'எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும்' என்று கேட்டது இளையகுமாரனே; என்றாலும், தகப்பன் ஆஸ்தியைப் பிரித்தபோதோ, 'அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தான்' என்றல்லவோ வாசிக்கின்றோம். கேட்டவனுக்கு பங்கிட்டுக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் உண்டானபோது, கேட்காதவனுக்கும் பிரித்துக்கொடுக்கவேண்டிய அவசியம் உண்டாயிற்றே. அதுவரை 'தகப்பனுடையது' என்று ஒரே பங்காக இருந்த ஆஸ்தி, இளையகுமாரனுடைய குணத்தினால், மூத்தவனுடையது என்றும் மற்றும் இளையவனுடையது என்றும் இரண்டு பாகங்களாகிவிட்டதே. 

அதுமாத்திரமல்ல, 'தரவேண்டும்' என்று கேட்டபோது, தகப்பன் அவனுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்; என்றபோதிலும், பங்கைப் பெற்றுக்கொண்ட பின்னரோ தகப்பனோடு கூட வாழவும் அவன் விரும்பவில்லையே; எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, சில நாட்களிலேயே வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டானே. எனவே, 'தகப்பன் சம்பாதித்து வைத்திருப்பவைகளில் தனக்கு பங்கு வேண்டும்; ஆனால், தகப்பன் வேண்டாம்' என்ற நிலைக்கும் அவன் தன்னைத் தள்ளிவிட்டதனை வேதம் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றதல்லவா! 

இளையகுமாரனைப் போன்ற இத்தகைய ஆஸ்திகளின் மீதான ஆசையும், குணமும் நம்மிடத்தில் காணப்படுமென்றால், தகப்பன் சம்பாதித்துவைத்திருக்கும் காரியங்களையும், ஆஸ்திகளையும் இரண்டாக்கிப்போட மாத்திரமல்ல அதில் ஒரு பங்கினை அழித்துப்போடும் ஆயுதமாகவும் சத்துரு தனது கரங்களில் எடுத்து நம்மை பயன்படுத்திவிடக்கூடும்; தனது கடினமான உழைப்பினால்  தகப்பன் உருவாக்கிவைத்திருப்பவைகளை நம்மைக் கொண்டு உடைத்துவிடக்கூடும், உருக்குலைத்துவிடக்கூடும்; நமது குடும்பங்களில், சபைகளில், ஊழியங்களில் மற்றும் நாம் இருக்கும் இடங்களில் இத்தகைய பேராபத்திற்கு இடங்கொடுத்துவிடாதபடி கர்த்தர் நம்மை காப்பாராக.  

விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது (அப். 4:32) என்று அப்போஸ்தலர்களுடைய நாட்களைக் குறித்து வேதத்தில் வாசிக்கின்றோமே. துண்டு துண்டாகப் பிரிந்து ஒருவரை விட்டு ஒருவர் தூரமாகப் பயணிக்க அல்ல, ஒருமனதோடு ஒன்றாக இருந்து செயல்படவே கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்தார் (எபே. 2:14) என்று வாசிக்கின்றோமே. ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்தபோது அல்லவா, கூடியிருந்த இடத்தில் அசைவு உண்டாயிற்று (அப். 2:1). 'நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கவேண்டும்' (யோவான் 17:11) என்பதுதானே பிதாவை நோக்கி இயேசு கிறிஸ்து செய்த ஜெபம். 

இதனையே பவுலும் தனது நிருபத்தில், 'அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினை களையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்' (ரோமர் 16:17) என்று எழுதுகின்றார். நாம் இருக்கும் இடத்தினை இரண்டாக்கவும், வசிக்கும் இடத்திலே விரிசல் உண்டாக்கவும், தகப்பனை விட்டும், அவரது தரிசனத்தை விட்டும் மற்றும் அவரது பராமரிப்பினை விட்டும் தூரமாகப் பிரயாணிக்கவும் சத்துரு எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் எதிர்த்து நின்று ஜெயம் பெற, 'ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்' (எபே. 6:13) என்ற பவுலின் ஆலோசனையினையே ஆயுதமாக அனுதினமும் நமது வாழ்க்கையில் தரித்துக்கொண்டவர்களாக ஒற்றுமையுடன் முன்னேறிச் செல்லுவோம். 

  மூன்றாவதாக, தகப்பனிடத்திலிருந்துதான் ஆஸ்திகள் கிடைக்கின்றது; என்றபோதிலும், தகப்பனோடு கூட இருந்து, தகப்பனது கட்டுப்பாட்டில் வாழவும், தகப்பனது ஆலோசனையின்படி செயல்படவும், தகப்பனுடைய ஆசையின்படி அவைகளை அனுபவிக்கவும் அவன் விரும்பாமல், தன்னுடைய இஷ;டப்படி, தன்னுடைய விருப்பப்படி, தன்னுடைய நண்பர்களுடன் தனக்குக் கொடுக்கப்பட்ட ஆஸ்தியினை செலவழிக்கவும், அனுபவிக்கவும் அவன் விரும்பினதினாலேயே, தகப்பனை விட்டு அவன் தன்னைத் தூரப்படுத்திக்கொண்டான். தகப்பனிடத்திலிருந்து மாத்திரமல்ல, தகப்பனோடிருக்கும் தனது சகோதரனிடமிருந்தும் தன்னை அவன் அப்புறப்படுத்திக்கொண்டான். மூத்தவர்களுடைய, கட்டுப்பாட்டில் இயங்காமல் சுயத்தையே சார்ந்து நிற்பவர்கள், தங்களுக்கும் தகப்பன்மார்களுக்கும் இடையே இப்படிப்பட்ட பிரிவினையின் சுவர்களை கட்டியெழுப்புவது நிச்சயம். ரெகொபெயாம் முதியோர்களது ஆலோசனையைத் தள்ளிவிட்டதினால் அல்லவோ (1 இராஜா. 12:8), ஒன்றாயிருந்த தகப்பனுடைய ராஜ்யம் இரண்டாகிப்போனது. 'சுயம்' என்னும் சுவரை எழுப்பும் மனிதர்களும், அதன் மேல் ஏறி நிற்கும் மனிதர்களும், ராஜ பதவியில் அமர்த்தப்பட்டிருந்தாலும் ராஜ்யத்தை இரண்டாக்கிவிடுவது நிச்சயம்.  

நான்காவதாக, தகப்பனை விட்டுப் பிரிந்து சென்றதும், அவனுடைய ஆஸ்திக்கு அழிவு உண்டானதினையும் வேதம் வர்ணிக்கின்றதே (லூக் 15:13). 'தகப்பன் என்ற பாதுகாப்பின் வேலியை' எடுத்துவிட்டதினால் உண்டான பக்கவிளைவு அல்லவோ அது. 

தகப்பன் தரும் ஆஸ்திகள் மட்டும் இருந்தால் போதும், அவைகளைக் கொண்டு திருப்தியாய் வாழ்ந்தால் போதும், மற்றவர்களைக் காட்டிலும் மேன்மையானதோர் நிலைக்கு உயர்ந்துவிட்டால் போதும் என்ற மனநிலையோடு, தகப்பனோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ஆசீர்வாதங்களைக் குறித்து கவலைப்படாமல், தகப்பனுக்கும், தனக்கும் இடையிலான உறவை உதறிவிட்டவனாக, தகப்பனுடைய வீட்டை விட்டுப் புறப்பட்டான் இளையகுமாரன். ஆஸ்திகளை தகப்பன் தனக்கு தந்துவிட்டபோதும், ஆஸ்திகளோடு வீட்டை விட்டு அவன் கிளம்பும்போதும், அவனது மனதில் எத்தனை ஆனந்தம் உண்டாகியிருக்கும்; தகப்பனிடத்தில் நான் கேட்டது அனைத்தும் அப்படியே கிடைத்துவிட்டதே என்ற பூரிப்பினால் அவனது உள்ளம் நிறைந்திருந்திருக்கும்; வேண்டுதலினால் கிடைத்துவிட்ட வெற்றியை நினைத்து நினைத்து அவனது மனம் கொண்டாடியிருக்கும்; தான் விரும்புகின்றபடி, தன்னுடைய ஆஸ்தியை அனுபவிக்கும் உரிமையும் மற்றும் சுதந்திரமும் தனக்குக் கிடைத்துவிட்டதை எண்ணி எண்ணி அவனது உள்ளம் ஆனந்தத்தில் துள்ளியிருக்கக்கூடும்; தகப்பனிடத்தில் கேட்கவேண்டிய அவசியமில்லை, எவ்வளவு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், யாரோடு வேண்டுமானாலும் ஆஸ்திகளை விருப்பப்படி செலவழித்துக்கொள்ளலாம் என்று நினைத்து மகிழ்ந்திருக்கும். எத்தனையோ செலவுக் கணக்குகளை மாத்திரமே இதயத்தில் சுமந்தவண்ணம் தகப்பனை விட்டுப் பிரிந்து, வீட்டை விட்டுப் புறப்பட்ட அவனது வாழ்க்கையில், 'வரவின் வழியோ அடைக்கப்பட்டது.' 

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6)

என்றார் இயேசு கிறிஸ்து. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.  என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான் 14:13,14) என்பதல்லவோ இயேசு கிறிஸ்துவின் போதனை. பிதாவினிடத்தில் கிட்டிச் சேரும்படியான வழி இயேசு கிறிஸ்து ஒருவரே; அதுமாத்திரமல்ல, பிதாவினிடத்திலிருந்து நமக்கான பதில்களும், பலன்களும் இறங்கிவரும் வழியும் இயேசு கிறிஸ்து ஒருவரே. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை (யாக் 1:17)

என்று வாசிக்கின்றோமே. இத்தகைய பரத்தின் வழி, தகப்பனிடமிருந்து பிரிந்து சென்றால் நம்முடைய வாழ்க்கையில் அடைக்கப்பட்டுவிடும். 'ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டு' (வெளி. 2:4), தகப்பனுடனான உறவினையும், தகப்பனிடத்திலிருந்து கிடைக்கும் பாதுகாப்பினையும் மற்றும் பராமரிப்பினையும் அலட்சியப்படுத்தாதவண்ணம் கர்த்தர் நம்மைக் காப்பாராக.

ஐந்தாவதாக, தலைக்கல்லையே தள்ளிவிட்டு ஒருபோதும் நாம் நமது பயணத்தைத் தொடரக் கூடாது. வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது (ஆகாய் 2:8). நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே (சங். 50:12) என்றே உரைப்பவர் கர்த்தர். என்றாலும், அவரை விட்டு விட்டு, அவர் தருபவைகளை மட்டுமே நாம் பின்பற்றத் தொடங்குவோமென்றால், அவைகள் நமக்கு 'விக்கிரகங்களாக மாறி நாம் வீழ்வதற்கே வழிவகுக்கும்.' தாலந்துகளை மாத்திரமே முக்கியப்படுத்தி, தேவனையோ வாழ்க்கையிலிருந்து தூரப்படுத்தி, தேவனுக்கு சமமாக தங்களை ஜனங்கள் மத்தியில் உயர்த்தி, வாழ்க்கையின் ஓட்டத்தின் இறுதியில் தங்களை விக்கிரகங்களாகவே ஜனங்களுக்கு முன் பிரதிபலித்து விழுந்துபோன ஊழியர்கள் நமக்கு எச்சரிக்கையல்லவா! 

திராட்சத்தோட்டத்தை குத்தகைக்கு விட்டிருந்த எஜமான், கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படியாக ஊழியர்களை அனுப்பினபோது, தோட்டக்காரர்களோ, ஒருவனை கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள் (மத் 21:33-39) என்று உவமையாக இயேசு கிறிஸ்து போதித்ததை வாசிக்கின்றோமே. கொலை செய்யும்படியாக வேலைக்காரர்களைத் தூண்டியது எது? எஜமானின் ஆஸ்திகள் அனைத்தும் தங்களுடையதாகிவிடவேண்டும் என்ற ஆசைதானே. அவர்களது இந்த செயல், எஜமானிடத்திலிருந்து அவர்களைப் பிரிந்துசெல்லத் 

தூண்டியதோடு மாத்திரமல்லாமல், அவர்களையே அழிவுக்குள்ளாகவும் தள்ளிற்றே (மத். 21:41). இந்த உவமையினைத் தொடர்ந்தே, இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளினகல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? (மத்தேயு 21:42) என்று கூறுகின்றார். 

இன்றைய நாட்களிலும், ஆஸ்திகளின் மேல் ஆசைகொள்பவர்களின் நிலை இப்படித்தான் இருக்கின்றது. 'தங்களுடையதாகிவிடவேண்டும் என்ற எண்ணத்தில், தலைக்கல்லையே தள்ளிவிட்டுவிவோர் உண்டு'. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் (1கொரி 3:6,7) என்றல்லவோ எழுதுகின்றார் பவுல்.  அப்படியிருக்க, விளையச்செய்பவரை வெளியேற்றிவிட்டால், வேலிக்குள் என்ன இருக்கும்? மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப்பெறுவான் (1கொரி. 3:8) என்று எழுதப்பட்டிருக்கிற பிரகாரம், 'கூலியைப் பெறவேண்டிய நாம், வேலியையே வளைத்துப்போட விரும்பினால்' விளைவு விபரீதமாகவே முடியும் என்பதுதானே உண்மை. பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே (1கொரி. 3:5) என்ற பவுலின் வரிகள் நம்முடைய வாழ்க்கையின் வழிகளிலெங்கும் எழுதப்படுமென்றால், 'நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி' (மத் 25:23) என்ற வாழ்த்துதலோடு கூடிய வரவேற்பு விண்ணகத்தில் நமக்கு கிடைக்கும். 

ஆபிரகாமின் வாழ்க்கையிலும் ஆஸ்தியினால் பிரிவு உருவானதை நாம் வேதத்தில் வாசிக்கமுடியுமே. ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள். ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான் என்றும், அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது. அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று (ஆதி 13:1,2,6) என்றும் வாசிக்கின்றோமே. ஆபிரகாமுக்கும், லோத்துவுக்கும் எவ்வித பிரச்சனையும் எழவில்லை; ஒருவருக்கொருவர் மீதான அன்பு எவ்விதத்திலும் குறைந்துபோகவில்லை; ஆனால், அவர்களுடைய ஆஸ்திகளும், ஆடுமாடுகளை பராமரித்துவந்த மேய்ப்பருக்குள் உண்டான வாக்குவாதங்களும் அவர்களைப் பிரித்துவிட்டதே. கீழ்மட்டத்தில் தொடங்கிய பிளவு, மெல்ல மெல்ல, பரந்து விரிந்து, மேல் மட்டத்திலுள்ளவர்களையும் இரண்டாக வெட்டிவிட்டதே.  நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் உண்டாகிவிடக்கூடாதே. ஆஸ்திகளை மாத்திரமே சேர்த்துக்கொண்டுபோவதில் நாம் குறியாயிருந்தால், நிச்சயம் அது ஒருநாள் நம்முடைய வாழ்க்கையையே குறிவைத்துவிடும்.  

இவ்வுலக வாழ்க்கையை மாத்திரமே மனதில் கொண்டு, இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் (1கொரி 15:19). அநேக ஆவிக்குரிய மக்களிடத்திலும் மற்றும் ஊழியங்களிலும்கூட இத்தகைய நிலை பிரதிபலிக்கின்றதே. தங்களை உருவாக்கின, வழிநடத்தின தலைவர்களைக்கூட தள்ளிவிட்டு, அவர்களால் உருவாக்கப்பட்டவைகளின் மேல் மாத்திரம் உரிமைகொண்டாடும் மனநிலையுடைய மனிதர்கள் அநேகர் உண்டே. 'ஆஸ்திகள் மாத்திரம் போதும்' என்ற மனநிலையுடன், கர்த்தரால் அது உருவாகக் காரணமாயிருந்த மனிதர்களைக் குறித்து கவலைப்படாமல், இளையகுமாரனைப் போல தகப்பனை விட்டுப் பிரிந்து நிற்கும் மனிதர்கள் உண்டே. ஒருவேளை தலைவர்களுக்குப் பின் ஊழியத்தைத் தன்வசப்படுத்திக்கொள்ள அவர்களால் இயன்றாலும், தகப்பனைப் போல செயல்பட்ட தங்களது தலைவர்களின் ஆசீர்வாதங்களுக்கோ அவர்களது வாழ்க்கை தூரமானதாகவே காணப்படும். 

பிள்ளைகளின் வாழ்க்கையும், பின்தொடருவோரின் வாழ்க்கையும் இப்படியிருக்க, தகப்பன்மார்களாகிய அநேக ஆவிக்குரிய தலைவர்களின் வாழ்க்கையையும், இறுதி நேரத்தில் இப்படிப்பட்ட இருளான இடுக்கமான போராட்டத்திற்குள் சத்துரு தள்ளிவிட இன்றைய நாட்களில் முயற்சிக்கிறான். தான் உருவாக்கின ஊழியத்தையே, தான் உருவாக்கின மனிதர்களையே, தன்னால் உருவாக்கப்பட்ட ஆவிக்குரிய பிள்ளைகளையே ஆசீர்வதிக்காமல் இவ்வுலகத்தை விட்டுக் கடந்துசெல்லும்படியாக நிர்ப்பந்தித்துவிடுகின்றான். கர்த்தருக்காக பெரிய பெரிய காரியங்களைச் செய்த ஊழியர்கள் பலர், ஊழியத்தின் நாட்களில் எத்தனையோ ஜனங்களின் ஆசீர்வாதங்களுக்குக் காரணமாக இருந்திருந்தாலும், தாங்கள் இவ்வுலகத்தை விட்டு கடந்துசெல்லும்போது,  விட்டுச் செல்லும் பணியினைத் தொடரவிருக்கும் மனிதர்களை விருப்பமுற்று ஆசீர்வாதிக்காமல் சென்றுவிடுகின்றனர். ஊழியம் கர்த்தருடையது. எனவே, அந்த சால்வையை யாருக்காவது கர்த்தர்  கொடுப்பது நிச்சயம். 

குடும்ப வாழ்க்கையிலும்கூட இத்தகைய நிலையினை சத்துரு புகுத்திவிடுவதனால், புறம்பே தள்ளப்பட்டுப்போன பெற்றோர்கள் உண்டே. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக (யாத் 20:12) என்பதை நான்காவது கற்பனையாவே எழுதிக்கொடுத்திருக்கின்றாரே கர்த்தர். தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக (லேவி 20:9) என்ற கடுமையான சட்டதிட்டங்களையும் ஆதி நாட்களில் நாம் வாசிக்கின்றோமே. தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம் (நீதி 20:20) என்று சாலொமோனும் எழுதுகின்றாரே. என்றபோதிலும், தகப்பனுடைய ஆஸ்திகளும், சொத்துக்களும் கிடைத்துவிட்டால் போதும் என்ற மனதுடன், தகப்பனிடத்திலிருந்து கடத்தப்படவிருக்கும் ஆசீர்வாதங்களைக் குறித்து கவலையற்றவர்களாக பெற்றோரைக் கைவிட்டுவிடும் பிள்ளைகள் எத்தனை எத்தனை. இத்தகைய நிலையில் நாம் சிக்கிக்கொள்ளாதபடி கர்த்தர் நம்மைக் காப்பாராக! 

பிதாவுக்கு எதிரான விருப்பங்கள் நம்மை

பரத்திற்குத் தூரமாகத் துரத்திவிடும்

பாசம் உறவு அன்பினையும் உடைத்து

பிரிவினைச் சுவரை எழுப்பிவிடும்

முதியோர் என்னும் வேலி இல்லாமல்

முன்னேற முயன்றால் முடிவு துயரமே

விளைவிப்பவரை விட்டும் விலகியே நின்றால்

வரவின் வாசலும் விரைவில் அடைபடுமே

சுயம் என்னும் சுவராய் தோன்றுவோர்

சிகரத்தையும் சிதைத்து சிறிதாக்கிவிடுவர்

சத்துருவின் கையில் ஆயுதமாய் மாறி

சம்பத்தையெல்லாம் சீக்கிரம் அழித்தும் விடுவர்

குத்தகையாய் தோட்டம் கொடுக்கப்பட்டிருக்க

கொடுத்தவரையே கொல்லும் குணம் கூடாதே

உத்தமமும் உண்மையுமாய் ஊழியம் செய்தால்

உன்னதம் வாழ்த்துதலோடு நம்மை வரவேற்குமே



 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...